பாணனின் நிலம்

அன்புள்ள ஜெ,

இது ஒரு பத்தாண்டுக்கு முன்பு நடந்த சம்பவம். அன்றைக்கு நான் கல்லூரி மாணவன். தமிழ் எம்.ஏ. என் ஆசிரியருக்கு புதுக்கவிதை பிடிக்காது. அதை கேலிசெய்துகொண்டே இருப்பார். ஆனால் அவர் மேற்கோள் காட்டும் கவிதைகள் எல்லாமே அப்துல் ரகுமான், வைரமுத்து வகையானவர்வள் எழுதியவை. அல்லது பிரம்மராஜன் எழுதும் எழுவாய் பயனிலை இல்லாத கவிதைகள்.

தமிழ்ப் புதுக்கவிதைக்காக நான் வாதம் செய்வேன். தமிழ் புதுக்கவிதைக்கு தமிழ்நாட்டில் வேர் இல்லை என்று சொல்வார். குரோட்டன்ஸ் செடிகள் என்று சொல்வார். ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வெள்ளை எலிகள் என்று சொல்வார். அவற்றுக்கு பயனும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்காது.

அவர் சொன்னவற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்று எனக்கும் தோன்றியதனால் நான் பெரியதாக வாதம் செய்ததில்லை. ஒரு நாள் விக்ரமாதித்யனின் ஐந்திணை என்ற கவிதைகளை வாசித்தேன். உடனே கொண்டுபோய் ஆசிரியரிடம் காட்டினேன். வழக்கம்போல கேலியாக “என்ன இது? மளிகைக்குறிப்பா?” என்று கேட்டார்.

ஆனால் நாலைந்து நாட்களுக்குப் பிறகு “ஆமாம், இதிலே ஒரு கவித்துவம் இருக்கிறது. இதை நம் மரபிலே உள்ள ஆசிரியப்பாவில் ஒருவகையாக நினைக்கமுடியும்” என்று சொன்னார்.

”வெறும் வர்ணனை அல்ல அவை. இவற்றில் ஒரு பழங்கால பாணனின் பார்வையும் இருக்கிறது. இந்த நிலத்தை அவன் நேரில் பார்க்கவில்லை. கற்பனையிலே பார்க்கிறான். இந்த நிலங்கள் இன்றைக்கு இல்லை. ஆனால் நம் கவிதையிலே இருக்கின்றன. அவன் காலூன்றி நின்றிருக்கும் மண் என்பது நம் மொழிதான்” என்றார்.

அவர் பாணன் என்று சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. நான் விக்ரமாதித்யனின் வாழ்க்கையைப்பற்றி அவரிடம் சொன்னேன். அவர் “ஆமாம், பெரிய கள்பெறினே…” என்று சொல்லி சிரித்தார்.

அவர் இன்றைக்கு இல்லை. நானும் என் மண்ணிலே இல்லை. ஆனால் இந்த விஷ்ணுபுரவிருது அளிக்கும்போது என் நினைவுகள் அந்தக் கவிதைகளை தொட்டுச்செல்கின்றன. விக்ரமாதித்யன் அவர்களுக்கு வணக்கம்

பாலகுரு சண்மும்

***

ஐந்திணை

விக்ரமாதித்யன்

குறிஞ்சி

கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத் தேன் கூடுகள்
அதிசயமாய்
துலங்கும் அருவிகள்
மெளனமே
இருப்பான சித்தர்கள்
முன்னை
பழங்குடிகள்
வானம்
தொடும் மஞ்சுக்கூட்டம்
தண்ணீர் பட்டுத் தெறிக்கும்
தேக்குகள் மூங்கில்கள்
பக்கத்திலேயே
பாக்குமரங்களும்
ஏலக்கொடிகளில்
எச்சமாய் மணம்
சிந்திக் கிடக்கும்
மலை முந்திரி
படர்ந்து தழுவும்
மிளகுக் கொடிகள்
வேரில் பழுத்துக்
கிடக்கும் பலாக்கள்
தேன் கதலிகள்
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்

முல்லை

காதைக் குடையும்
சிள்வண்டுகள் சப்தம்
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறக்காடு
இருள் நிறைத்திருக்கும்
தாவரங்கள்
உலாவும்
உயிர்பிராணிகள்
குழிபறித்து விளையாடும்
குறுமுயல்கள்
காற்று கொண்டுவரும்
செண்பக மணம்
கொடிவலைப் பின்னல்களில்
காட்டுக் குயில்கள்
ஆகாயம் மறைத்துக்
கிடக்கும் இலையடர்த்தி
பூமியே தெரியவிடாத
புதர்கள் புல்காடுகள்
கலகலப்பாய்த் திரியும்
காடை கெளதாரிகள் மலையணில்கள்
வழிமறிக்கப் பார்க்கும்
நரிக்கூட்டம்
அலைபாயும் மயில்கள்
மிரண்டோடும் மான்ஜாதி
ஆடுமாடுகளுக்கு
அற்றுப்போகாத இரை
ஆயர்கள் மனம் போல
அழகுபட்ட முல்லைக்காடுதான்

மருதம்

காடு திருத்துகிறார்கள்
கழனி யாக்கிறார்கள்
அருவி வந்து விழுந்து
ஆறாய்ப் பெருகிப் பெரும்
பேறாய் நயத்தக்க நாகரிகம்
விதைத்தது
முளைத்தது கண்டு
பசேலென்று
வயல் வைத்தார்கள்
வாழை நட்டார்கள்
கரும்பு போட்டார்கள்
கொடிக்கால் செய்தார்கள்
ஆணும் பெண்ணும்
நாளும் பாடுபட்டார்கள்
கோடையில் உழுந்து
பயறுச் செடிகள்
கூடவே வெள்ளரியும்
இஞ்சி மஞ்சள் கிழங்கென்று
வகைவகையாய்ச் செய்வித்தார்கள்
ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல
பாதி மனிதன் முழு மனிதனான்
தலை வாழை இலையிட்டு
சோறு கறி பரிமாறினாள் திலவி
பந்தியில் பாலும்
பலாச்சுளையும் இட்டார்கள்
நெய்போட்டார் மோர் விளம்பினார்
பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார்
கூட்டென்றார் பொரியலென்றார்
பச்சடியில் பத்து தினுசு செய்தார்
சொதியில் தனி ருசி சேர்த்தார்
வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு
வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும்
விருந்துகள் விழாக்கள் தோரணங்கள்
தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள்
ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள்
பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க
போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு
கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும்
கலைவண்ணமாய் சிலை வடித்தார்
கண்பார்த்ததைக் கைசெய்யும்
வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும்
கொட்டி முழக்குகிறார் ஓய்வில்
சொல்கொண்டு எழுத்தாக்கினார்
பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார்
நதி கொண்டு வந்த பண்பாடு தேறி
காதலோடு கற்புக்கும் வகைசெய்தார்
இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த
சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக
சைவத்தால் தமிழ் வளர்த்தார்
தமிழால் சைவம் வளர்த்தார்
மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து
மானுடத்தின் உச்சம் காட்டும்
மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம்
எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்

நெய்தல்

திரண்டு வரும் தண்ணீர்
எங்கே போகும்
தெறித்து விழுந்த
தண்ணீரோடு சேரும்
வந்துபோகும் அலைகளின்
வருத்தமென்ன வாட்டமென்ன
தொடுவானம் சொல்லும்
இரகசியமென்ன விஷயமென்ன
அடிவானத்துக்கப்பால்
இருக்கும் மர்மமென்ன மாயமென்ன
கடல் நடுவே பூமியா
பூமிக்கு மத்தியில் சமுத்ரமா
எப்படி வகைபடுத்த
கடல் என்னது
கடல்குதித்துச் சூடாற்ற
கண்ணதாசன் கவிதைவரி
நடுக்கடலில்
நாளும் நெய்தலின் மக்கள்
திரண்டிருக்கும்
தேக்கு உடம்பும் ஆதிமனசும்
எதன் கைவண்ணம்
கடல்மீன்கள் நண்டுகள்
முத்துகள்
தோன்றுவதெப்படி
பவளம் விளைவது
எந்த முகூர்த்தத்தில்
வலம்புரிச் சங்குகள்
வடிவுகொள்வது எங்ஙனம்
வருணதேவன்
வகுத்து வைத்ததா காலமழை
உப்பு நீரில்
ஒரு கொள்ளைத் திரவியம்
யார் செய்த
மாயம்
கடல்
ஒரு அதிசயம்
கடல்
கொண்டிருப்பது போதிசயம்
அது
வைத்திருப்பது நிறைய அற்புதம்
நெய்தல் நிலமே
நிரம்ப அற்புதம்தான்

பாலை

வேரோடும்
பிரண்டைக் கொடிகள்
சப்பாத்தி கள்ளிகள்
கானலெரிக்கும் வெயில்
கையவு நீர்
காணக்கிடைக்காத மண்
புழுதி
பறக்கிறது
பேய்கள்
இராஜ்யம் செய்கின்றன
என்ன
செய்வார்கள் ஜனங்கள்
எப்படி
வாழ்வார்கள் இந்த வெக்கையில்
காளி மாதாவின் கருணை
இப்படியா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.