இசையே வாழ்க்கை.
பணீசுவர்நாத் ரேணு புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர். இவரது தேர்வு செய்யப்பட்ட கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேணு இளமையில் இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாக இயங்கியவர். பின்பு கருத்துவேறுபாட்டால் விலகிச் சென்றவர். பீகாரில் வசித்த அவரது குடும்பம் ஆர்யசமாஜத்தை சேர்ந்தது. எளிய விவசாயியாக இருந்த அவரது தந்தை காந்திய வழியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். சம்பரானில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் இதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது.

பள்ளிப் படிப்பு முடிவதற்குள்ளாகவே ரேணுவின் அரசியல் ஈடுபாடு துவங்கிவிட்டது. பனாரஸில் படித்த போது முக்கிய அரசியல் தலைவர்களுடன் பழகினார். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்.
அவரது எழுத்திற்கு ஆதாரமாக அமைந்திருப்பது இசை ஆர்வம். அதிலும் குறிப்பாக நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மற்றும் இந்துஸ்தானி இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் இசை குறித்தே அதிகம் எழுதியிருக்கிறார்
1942ல் ஏற்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் அவரை மிகவும் பாதித்தது. இந்தப் போராட்டம் பற்றி அவரது கதை ஒன்றில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். கட்சிப்பேய் என்ற சிறுகதையில் ஒருவன் இளமையில் எப்படி அரசியல் ஆர்வம் கொள்கிறான். போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போகிறான். பின்பு அவனது வாழ்க்கை என்னவாகிறது. அவனது திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் எப்படிச் சீர்கெட்டுப் போகின்றன என்பதை மிக அழகாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான கதை.
1944ல் காசநோய் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேணுவை உடனிருந்து கவனித்துக் கொண்டார் லதிகா. அவரையே பின்பு ரேணு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.. முதல் மனைவியும் பிள்ளைகளும் அவரது சொந்த கிராமத்திலே வசித்து வந்தார்கள்


1950களுக்குப் பிறகே அவரது இலக்கிய வாழ்க்கை ஒளிரத்துவங்கியது. இருபது ஆண்டுகள் அவர் தனது முக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதி பெரும்புகழ்பெற்றார். பிரேம்சந்தின் வாரிசாகக் கருதப்பட்ட ரேணுவின் கதைகள் திரைப்படமாகவும் உருவாக்கபட்டிருக்கின்றன. ராஜ்கபூர் நடித்த Teesri Kasam இவரது கதையே. இந்த கதையும் இத்தொகுப்பிலுள்ளது. 1972 தேர்தலில் போட்டியிட்டு நாற்பதாயிரம் வாக்குகள் பெற்ற ரேணு காங்கிரஸ் பிரமுகரிடம் தோற்றுப் போனார். இதன்பிறகு அவரது உடல்நலத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 1977ல் ரேணு மரணம் அடைந்தார்

ரேணுவின் சிறுகதைகளின் தனிச்சிறப்பு அபூர்வமான கதாபாத்திரங்கள். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் மறக்கமுடியாத பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இசை தான் இந்தத் தொகுப்பின் மையப்பொருள். இசையும் இசைக்கலைஞர்களும். இசையின் மேன்மையை அறிந்த ரசிகர்களுமே அவரது கதாபாத்திரங்கள்
வறுமையில் வாடும் இசைக்கலைஞர்கள். அற்புதமான குரல் கொண்ட பாடகிகள். குஸ்தி போட்டிக்கான மேளம் வாசிப்பவரின் தனித்துவம். இசைக்கருவிகளைச் சரி செய்து தரும் ஹாராதன் மேஸ்திரியின் ஞானம். ரசூல் மியானின் மருத்துவம் எனத் தொகுப்பில் மாறுபட்ட கதைகள் உள்ளன.
இன்றைய உலகோடு ஒப்பிடும் போது இவை மறைந்து போன காட்சிகள். ஆனால் அழியாத நினைவுகள்.
ரேணு நேரடியாக ஒரு கதையைச் சொல்வதில்லை. ஒரு கதையைத் துவங்கி அதன் கிளைகள் போல வேறுபல கதைளை பின்னிச் செல்கிறார். ஒரு நாவல் வாசித்து முடிக்கும் போது ஏற்படும் அனுபவத்திற்கு நிகராகச் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
உணர்ச்சிப்பூர்வமாகக் கதையைக் கொண்டு செல்வது தான் அவரது பலம். மிகத்துல்லியமாக உணர்ச்சிகளை எழுதியிருக்கிறார். வித விதமான பெண்கள். அவர்களின் தனித்துவமான பேச்சு, செயல்கள். ரசூல்மியானுக்கும் அவரது மனைவிக்குமான உறவு அழகாக விவரிக்கபட்டிருக்கிறது. ரசூல் மியானைப் போன்ற மனிதர்களை இனிக்காணமுடியாது.

முதற்கதை பயில்வானின் மத்தளம். இது லூட்டன்சிங் என்ற குஸ்திக்கலைஞனின் வாழ்க்கையைச் சொல்கிறது. தந்தையில்லாத லூட்டன்சிங் சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சிகள் செய்து குஸ்தி போடுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஒரு நாள் சந்தையில் நடக்கும் குஸ்திப்போட்டியினைக் கண்டதும் ஆர்வம் அதிகமாகி தானும் அதில் கலந்து கொள்கிறான். மன்னர் நடத்தும் போட்டியது. பெரிய குஸ்தி வீரனுக்கு எதிராக லூட்டன் களம் இறங்க முனையும் போது மன்னர் அவன் தோல்வி அடைந்துவிடுவான் என்று பயந்து சண்டையிட வேண்டாம் என்று தடுக்கிறார். லூட்டன் கேட்பதில்லை.
அவன் மத்தளம் வாசிப்பவரின் தாளக்கட்டிற்கு ஏற்ப குஸ்தி போடுகிறான்.
சட்தா கிட்தா சட்தா கிட்தா என்ற மத்தளச்சப்தம் அஞ்சாதடா அஞ்சாதடா என அவனுக்குக் கேட்கிறது தக் தினா திரிகிட தினா என்பது வெளியே வாடா பிடியை வெட்டு என்று கேட்கிறது. இப்படியாக அவன் மத்தள ஒலியைப் பாடமாகக் கொண்டு போட்டியில் வெற்றி பெறுகிறான்.
வென்றவுடன் மன்னரிடம் ஆசி பெறுவதோடு மத்தளத்தைத் தொட்டு வணங்கி ஆசி வாங்குகிறான். அவனை மன்னர் தனது ஆஸ்தான பயில்வானாக நியமிக்கிறார். பின்பு அவன் கலந்து கொள்ளும் போட்டி எல்லாம் வெற்றி. அவனது வாழ்க்கை மாறிவிடுகிறது. பதினைந்து ஆண்டுகள் நிகரற்ற வீரனாகத் திகழுகிறான்.
ஊர்மக்களும் அவனுக்குப் போட்டிபோட்டுக் கொண்டு இனிப்புகளை இலவசமாக வழங்குகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.
மனைவி இறந்துவிடவே தன் இரண்டு பிள்ளைகளையும் குஸ்திக்குப் பழக்குகிறான். இந்த நிலையில் காலம் மாறுகிறது.
அரசர் இறந்துவிடவே அவரது மகன் பதவிக்கு வருகிறான். அவன் வெளிநாட்டில் படித்தவன். நவயுக மனிதன் ஆகவே. குஸ்தி பயில்வான் லூட்டனுக்குச் செய்யும் செலவு வீண் என உணர்ந்து அவனைத் துரத்தி விடுகிறான். குஸ்தி போட்டி நடந்த மைதானம் குதிரைப் பந்தய மைதானமாக உருமாறுகிறது.
சொந்த கிராமம் திரும்பும் லூட்டன் வறுமையில் வாடுகிறான். பாதாம் பிஸ்தா எனச் சாப்பிட்டு வளர்ந்த உடலுக்கு ரொட்டியும் கஞ்சியும் போதவில்லை. அவனை ஆதரிப்பவர் எவருமில்லை. உள்ளூர் பையன்களுக்கு இலவசமாக குஸ்தி கற்றுத் தருகிறான். இதனால் ஊர்மக்கள் இரண்டுவேளை இலவசமாக உணவு அளிக்கிறார்கள். நாளடைவில் அதுவும் நின்று போகிறது. லூட்டனின் மகன்கள் கூலி வேலைக்குப் போய் சம்பாதிக்கிறார்கள். இருப்பதை வைத்து நாட்களை ஒட்டுகிறான் லூட்டன்.
இந்நிலையில் ஊரைக் கொள்ளை நோய் தாக்குகிறது. கண்முன்னே கிராமத்து மக்கள் மடிந்து போகிறார்கள். வறுமையில், தனிமையில் வாழும் லூட்டன் மத்தளம் வாசிப்பதன் வழியே தனது குஸ்தி போட்டி நினைவுகளைத் தீர்த்துக் கொள்கிறான். அந்த இசை தான் அவனது ஆசான். அவனது அருமருந்து.
இந்நிலையில் கொள்ளை நோய் தாக்கி ஒருநாள் அவனது மகன்கள் இறந்து போகிறார்கள். அவர்களை அடக்கம் செய்யும்போதும் லூட்டன் மத்தளம் வாசிக்கிறான்.
பின்பு ஒரு நாள் லூட்டனும் காலராவிற்குப் பலியாகிறான். அவன் உடலை அடக்கம் பண்ண ஊர்மக்கள் ஒன்றுகூடுகிறார்கள். தன் உடலை அடக்கம் செய்யும் போதும் மத்தளம் வாசிக்க வேண்டும் என்பதே லூட்டன் வைத்த கடைசிக் கோரிக்கை. அதை நிறைவேற்ற வரும் போது அவனது மேளத்தை நரிகள் கிழித்துப் போட்டிருப்பதை ஊர்மக்கள் காணுகிறார்கள் எனக் கதை முடிகிறது
லூட்டன்சிங் மறக்கமுடியாத கதாபாத்திரம். அவனுக்குப் பரிசாக அரசர் ஒரு பட்டு லங்கோடு அளித்திருக்கிறார். அதை அணிந்து கொண்டு தான் குஸ்தி போட்டியில் இறங்குகிறான். உடல் வளர்ந்த அளவிற்கு அவனுக்கு மூளை வளரவில்லை. சாப்பாடு, கொண்டாட்டம், சுகவாசியான வாழ்க்கை என எதைப்பற்றியும் கவலையின்றி அரசரின் தயவில் வாழ்ந்து வருகிறான். காலமாற்றம் அவனைக் கீழே தள்ளி மண்டியிட வைக்கிறது.
இசையும் குஸ்திப்போட்டியும் ஒன்று சேருவதன் தான் இந்தக் கதையின் தனிச்சிறப்பு. அந்த மத்தளத்தின் ஒலியின் வழியே தான் குஸ்தியின் ரகசியங்களை லூட்டன் கற்றுக் கொள்கிறான். அடித்தட்டினை சேர்ந்த அவனை ஆஸ்தான வீரனாக அரசர் நியமிக்க முற்படும்போது அதை உயர்வகுப்பு மானேஜர் எதிர்க்கிறார். அவனை அங்கீகரிக்க மறுக்கிறார். ரேணு கதைகளில் சாதிய ஒடுக்குமுறை அழுத்தமாக விவரிக்கபடுகிறது.
லூட்டன் சிங் ஒரு தோற்றுப்போன வீரன். இவனுக்கு நிகரான இன்னொரு கதாபாத்திரம் ஹாராதன் மேஸ்திரி. மூன்று புள்ளிகள் கதையில் வரும் இவர் எந்த இசைக்கருவியில் பழுது ஏற்பட்டாலும் சரிசெய்து தரும் ஞானம் கொண்டவர். அவருக்கும் ஒரு துயரமான கடந்தகாலமிருக்கிறது. அதில் வேட்டையும் சங்கீதமும் ஒன்று கலந்த ஒரு மன்னர் அறிமுகமாகிறார். பொய்மானைக் கொண்டு மான் வேட்டை நடப்பது விவரிக்கப்படுகிறது.
ஹாராதன் மேஸ்திரியைத் தேடி வந்து பெரிய இசைக்கலைஞர்கள் தங்கள் வாத்தியக்கருவிகளைச் சரிசெய்து தரும்படி கேட்கிறார்கள். காத்திருக்கிறார்கள். அந்தக் கதையில் வரும் இரண்டு பாடகிகளும் அவர்களின் இசைத்திறனும் மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கி குண்டு குளைத்த மான் தோலில் அமர்ந்து சங்கீதம் பாடுவது மறக்கமுடியாத காட்சி.
இன்னொரு கதையில் ரஸப்ரியா வாசித்து வாசித்து ஒரு மிருதங்ககாரனின் விரல்கள் வளைந்து போயிருக்கின்றன. அவனது திறமையை ஒரு பையன் அறிந்து போற்றுகிறான். உயர்சாதிப் பையன்கள் அவனை கேலி செய்கிறார்கள்.
ரஷ்ய இலக்கியங்களை முன்மாதிரியாகக் கொண்டே தனது கதைகளை எழுதினேன் என்கிறார் ரேணு. இந்தக் கதைகள் பீகார் மக்களின் வாழ்க்கையை உண்மையாக, நேர்த்தியாக, அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்த போதும் இன்றும் கதைகள் வைரமென ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது
வானிலிருந்து உதிரும் நட்சத்திரம் ஒன்று பூமியை நெருங்குவதற்குள் எரிந்து மறைந்துவிடுகிறது. இதைக் காணும் மற்ற நட்சத்திரங்கள் உனது ஒளியும் ஆற்றலும் இவ்வளவு தானா என்று பரிகாசம் செய்வதாகப் பயில்வானின் மத்தளம் கதையில் எழுதியிருக்கிறார். ரேணுவின் எழுத்துக் காலத்தைத் தாண்டி ஆற்றலுடன் புதுமை மாறாமல் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
