எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்: பகுதி 1

அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்.(ஏப்ரல் 2021)

எஸ்.ராவின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் நண்பர் கணேஷ் பாபு நடத்திய நேர்காணல் .

அரூ குழுவின் சில கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராவின் எழுத்து பயணம், வாசிப்பு, வரலாறு, பெண் கதாபாத்திரங்கள், மொழியாக்கம், உலக இலக்கியம், உலகத்தின் மீதுள்ள புகார்கள், காந்தி, கோணங்கி என நீளும் உரையாடல் கணேஷ் பாபு கொடுக்கும் அறிமுகத்துடன் துவங்குகிறது

•••.

எஸ்.ராமகிருஷ்ணன் தனியொரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஓர் இயக்கமாக வளர்ந்துள்ளவர். நடமாடும் நூலகம் என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர். இன்றைய நவீன வாசகன் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அள்ளித் தரும் வற்றாத ஞான ஊற்று. உலக சினிமா, பயணம், சிறார் இலக்கியம், வரலாறு, நுண்கலைகள், வாசிப்பு, நாடகம் என இல்லாதது ஒன்றில்லை இவரிடம் இருந்து அறிந்துகொள்ள.

தமிழ் இலக்கியம் மற்றும் உலக இலக்கியம் இந்த இரண்டில் மட்டுமே மையம் கொண்டிருந்த எழுத்தாளர்கள் மத்தியில் இந்திய இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய எழுத்தாளர். இந்தியாவின் பிற மொழி இலக்கியங்களைக் குறித்து விரிவாக எழுதியவர். மட்டுமல்லாமல், சமகால இந்திய இலக்கியச் சிகரங்களைக் குறித்தும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருபவர். ஒரு இலக்கியவாதியாக அனைத்து திசைகளின் சாளரங்களையும் திறந்து வைத்து விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்துக் கொண்டும் இருப்பவர்.

நவீன இலக்கியத்தில் மட்டுமே நிலைகொள்ளாமல், மரபிலக்கியங்களையும் ஆழக் கற்றவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் என இவரது மரபிலக்கிய வாசிப்பும் அவை சார்ந்து இவர் தரும் பல புதிய தகவல்களும் வியப்பினை அளிப்பவை

தன் படைப்புகளின் வழியே வரலாற்றைத் தொடர்ந்து விசாரணை செய்து அதன் இடைவெளிகளை நிரப்ப முயல்வதனாலேயே இவர் இலக்கியத்தைத் தாண்டி பண்பாட்டுப் பங்களிப்பையும் ஆற்றிச் செல்கிறார். முதல் நாவலில் மகாபாரத மீள்புனைவு, அடுத்த நாவலில் வெயில் எரியும் நிலத்தின் கள்ளர் வரலாறு, அதன் பின் சென்னையின் வரலாறு, இசைக் கலைஞர்களின் வரலாறு, டெல்லி சுல்தான்களின் வரலாறு எனத் தொடர்ச்சியாக வரலாறும், பண்பாடும், இலக்கியமும் சந்திக்கும் புள்ளிகளைத் தன் நாவல்கள் மூலம் கவனப்படுத்தியபடி இருக்கிறார்.

இவரிடம் எதைப் பேசுவது எதை விடுப்பது எனத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாக விடையளித்தார்.

தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணியை போல இவரிடம் கேள்விகள் கேட்கக் கேட்க பதில்கள் வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. வெறும் பதில்கள் மட்டுமல்ல அவை. நமக்கான புதிய அறிதல்கள். புதிய வெளிச்சங்கள்.

••••

உங்கள் முதல் கதையான ‘பழைய தண்டவாளம்’ கதையிலிருந்து சமீபத்தில் எழுதிய ‘எளிதானது கோபம்’ வரையிலான உங்கள் பயணம் பல்வேறு திசைமாற்றங்களை உள்ளடக்கியதாக உள்ளது. யதார்த்தவாதக் கதைகளில் துவங்கிப் பின்நவீனத்துவக் கதைகளில் புதிய பாய்ச்சலை உண்டாக்கி மீண்டும் நவீன யதார்த்தமுறைக்கு மாறியிருக்கும் இப்பயணம் உங்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?

இதுவரை இருநூறு சிறுகதைகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறேன். எதை எழுதுவது என்று முடிவு செய்கிறேனோ அதுவே வடிவத்தை, கதை சொல்லும் மொழியை, கதை கூறும் முறையைத் தீர்மானம் செய்கிறது. கதை எழுதும் முன்பு இதை ஓர் யதார்த்தக் கதையாக எழுதுவது அல்லது பின்நவீனத்துவக் கதையாக எழுதுவது என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். ஒரு கதை எழுதி முடிக்கப்படும்வரை என்ன மாற்றங்களை அடையும் என யாராலும் கணிக்க முடியாது.

சிறுகதை ஒன்றை எழுதி முடித்தவுடன் அதே விஷயத்தை வேறு பாணியிலும் எழுதிப் பார்ப்பேன். சில சமயம் இரண்டு வடிவத்தையும் ஒன்று சேர்ப்பேன். சில சமயம் இரண்டிலும் திருப்தியில்லாமல் மூன்றாவது விதமாக எழுதுவேன். ‘பால்யநதி’ என்ற சிறுகதையைப் பன்னிரெண்டு முறை திருத்தி எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சில பத்திகள் கூடும் அல்லது நீக்கப்படும். பெரும்பாலும் கதையை அச்சிற்கு அனுப்பும் வரை திருத்தம் செய்துகொண்டு தானிருப்பேன். அபூர்வமாகவே ஒன்றிரண்டு கதைகள் ஒரே தடவையில் எழுதி அவ்வளவுதான் என்று உணர்ந்திருக்கிறேன்.

குவார்னிகா (Guernica) வரைந்த பிகாசோதான் ஆடு ஒன்றையும் வரைந்திருக்கிறார். இரண்டிலும் அவரது முத்திரையிருக்கிறது. அவரே தன் கோடுகள் எவ்வாறு அரூபத்தை நோக்கிச்ச் செல்கிறது என்பதை வரிசையாக வரைந்தும் காட்டியிருக்கிறார்.

‘சிற்பியின் நரகம்’ எழுதிய புதுமைப்பித்தன்தான் ‘திருக்குறள் செய்த திருக்கூத்து’ சிறுகதையும் எழுதியிருக்கிறார். ‘செல்லம்மாள்’ கதையும் பெண்ணைப் பற்றியதுதான். காஞ்சனையும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் அதற்கிடையில் எவ்வளவு வேறுபாடு. பிகாசோவின் ஓவியங்களை early work, the Blue Period, the Rose Period, the African Period, Cubism, Neoclassicism, Surrealism, என வகைப்படுத்துகிறார்கள். வண்ணங்களைப் பயன்படுத்தும் விதத்திலிருந்தும் உருவங்களை வரையும் முறையிலும் இந்த மாற்றங்களைக் கண்டறிகிறார்கள். எழுத்தும் இது போன்றதே. நல்ல படைப்பாளியிடம் இது போன்ற நாலைந்து எழுத்து மாற்றங்களைக் காண முடியும், இதை ஒரு கலைஞனின் இயல்பான வளர்ச்சியாகவே நினைக்கிறேன்.

 நான் எழுத துவங்கிய எண்பதுகளில் சிறுபத்திரிக்கைச் சூழல் வலிமையாக இருந்தது. அதில் வெளியான சிறுகதைகளுக்கும் பெரிய இதழ்களில் வெளியான கதைகளுக்கும் உள்ள வித்தியாசம் மிகப்பெரியது. அந்த நாட்களில் புதுமைப்பித்தன், வண்ணநிலவன், வண்ணதாசன், கு.அழகிரிசாமி கதைகளை மிகவும் விரும்பிப் படித்தேன். என் முதற்தொகுப்பிலுள்ள கதைகளில் அவர்களின் சாயல் இருக்கும். அந்தக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். நானும் கோணங்கியும் ஊர் ஊராகப் போய் இலக்கியவாதிகளைச் சந்தித்து லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றிப் பேசினோம். விவாதித்தோம். ஓர் எழுத்தாளர் எங்களை லத்தீன் அமெரிக்க ஆவிகள் பிடித்து ஆட்டுவதாகத் திட்டி அனுப்பி வைத்தார். இன்னொருவர் எங்களைச் சந்திக்க மாட்டேன். நீங்கள் என்னைக் குழப்பிவிடுவீர்கள், அதன்பிறகு என்னால் கதை எழுத முடியாது என்று வீட்டின் வாசலோடு துரத்திவிட்டார். நாங்கள் எழுத்தாளர்கள் வீட்டுக் கதவைத் தட்டி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி மிரட்டுவதை நிறுத்தவில்லை. வேடிக்கையான அனுபவங்கள். அப்போதே லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் பற்றி திருவண்ணாமலையில் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.

அந்த நாட்களில் திருவண்ணாமலைதான் எங்களின் மையம். நானும் கோணங்கியும் எந்த இரவில் பவா. செல்லதுரை வீட்டிற்குச் சென்றாலும் வரவேற்று உணவு தருவார். நாட்கணக்கில் தங்கி இலக்கியம் பேசுவோம். ‘ஸ்பானிய சிறகுகளும் வீரவாளும்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பு தயாரித்தோம். அதில் பாதி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகள். மீதி பாதி தமிழ்ச் சிறுகதைகள். இப்படி ஒரு தொகுப்பு வேறு இந்திய மொழிகளில் வெளிவந்திருக்குமா என்று தெரியாது. திருவண்ணாமலைக்கு ஜெயமோகன் வருவார். பாவண்ணன் வருவார். சுந்தர ராமசாமி வந்திருக்கிறார். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வந்திருக்கிறார். அன்றும் இன்றும் அது முக்கியமான இலக்கிய மையமாகவே இருக்கிறது.

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் புதிய கருப்பொருட்களைக் கண்டறியவும், புதிய கதை மொழியையும் கற்றுத்தந்தது. காப்காவின் ‘உருமாற்றம்’ கதையை வாசித்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், அது தன் பாட்டி சொல்லும் கதையைப் போல விநோதமாக இருப்பதாகச் சொல்கிறார். அப்படித்தான் மார்க்வெஸை வாசித்தபோது நம் ஊர் கதைச் சொல்லியின் குரல் போல ஒலிப்பதாக உணர்ந்தேன். அவரது மேஜிகல் ரியலிசக் கதை சொல்லும் முறையின் மீது ஆர்வம் கொண்டு சிறுகதைகள் எழுதினேன். ‘தாவரங்களின் உரையாடல்’ கதை சுபமங்களாவில் வெளியானது. இன்று வரை அந்தக் கதை எனது முக்கியமான கதையாகக் கொண்டாடப்படுகிறது. அந்தக் கதையை வெளியிட்ட கோமலை இந்தத் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். வேலையில்லாமல் அலைந்த என் மீது அவர் காட்டிய அன்பு மறக்க முடியாதது.

‘பால்யநதி’ மாறுபட்ட சிறுகதைகளைக் கொண்டது. ‘மழை மான்’ இன்னொரு விதம். இப்படி இருபது சிறுகதைத் தொகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கதை முறைகளைக் கையாண்டிருக்கிறேன். ‘நூறு கழிப்பறைகள்’ கதையை வாசித்திருக்கிறீர்களா. அது புதுவகைச் சிறுகதை. ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’, ‘அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது’ முற்றிலும் புதியவகைச் சிறுகதைகள். ‘அவளது வீடு’ என்ற எனது சிறுகதையைப் படித்துவிட்டுச் சென்னையிலுள்ள ஒரு நிறுவனம் இருபதாயிரம் ரூபாய் எனக்குப் பரிசாக அனுப்பி வைத்தார்கள். ஒரு சிறுகதையை எப்படி வரவேற்கிறார்கள் பாருங்கள்.

இப்படி நான்கைந்து கதாகாலங்கள் எனக்குண்டு. அதை என் எழுத்தில் காணமுடியும். இன்று ஒரே தொகுப்பில் இந்த நான்கைந்துவிதமான எழுத்துமுறை கொண்ட கதைகளும் இடம்பெறுகின்றன.

ஒரு கதையைச் சொல்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. புதிய வழிகளை, புதிய கதை மொழியை, புதிய வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்க்கிறவனாகவே எப்போதும் இருக்கிறேன். அதே நேரம் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போலச் சிறுகதைக்கெனச் சில மாறாத வடிவங்கள் இருக்கின்றன. அதையும் அவ்வப்போது எழுதுகிறேன். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களும் தேவையாகத்தானே இருக்கின்றன.

ஒரு கதைக்குள் கதை என்று எதைச் சொல்கிறோம். நிகழ்வுகளை, அனுபவத்தை. அது பிரதிபலிக்கும் சமூக விஷயங்களைத்தானே. அதைத்தான் யதார்த்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் கதை என்பது அது மட்டுமில்லையே. இதுதான் சிறுகதை என்று எவராலும் வரையறை செய்துவிட முடியாது.

உள்ளூர் இசைக்கலைஞர் வயலினைப் பயன்படுத்தும் விதமும் நோக்கமும் வேறு. மொசார்ட் வயலினைப் பயன்படுத்தும் விதம் வேறு. ஒரே இசைக்கருவிதான், ஆனால் நீங்கள் யார் என்பதே உயர்ந்த இசையினை முடிவு செய்கிறது.

கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை, முன்பின்னான காலத்தை, நினைவுகளின் சிதறடிப்பை, ஆழமான மனவிகாரங்களை, பயத்தை, விசித்திரத்தை, விநோதமான கற்பனையைச் சொல்ல முற்படும்போது கதையின் சொல்முறை மாறிவிடுகிறது.

வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை எழுதுவது சவாலான விஷயமே.

‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ தொகுப்பில் பல்வேறு விதமான பின்நவீனத்துவக் கூறுமுறைகளைக் கொண்ட கதைகள் இருந்தன. ‘ஏழு இறகுகள்’, ‘சோர் பஜார்’, ‘சாக்கியனின் பல்’, ‘நாளங்காடி பூதம்’ போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். இப்போதும் அது போன்ற ஒரு தொகுதியைக் கொண்டுவரும் திட்டமுள்ளதா?

இந்த லாக்டவுன் நாட்களில் அப்படியான குறுங்கதைகளாக 125 கதைகளை எனது இணையதளத்தில் எழுதினேன். அந்தக் கதைகள் தற்போது ‘கர்னலின் நாற்காலி’ என்ற பெயரில் தனி நூலாக வெளிவரவுள்ளது. குறுங்கதைகள் மீது எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம். பெரும்பாலும் தீர்க்கதரிசகள், ஞானிகள், துறவிகள்தான் குறுங்கதைகளை அதிகம் சொல்லியிருக்கிறார்கள். அது ஓர் உபதேச வழி. ஆனால் அந்த வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய கதைக்கருவை, புதிய கதைமொழியை நான் முயன்று பார்த்திருக்கிறேன். ஜென் கதைகளில் அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள் சிக்கல்கள் கிடையாது. பெரிய மாயமும் கிடையாது. இரண்டினையும் கலந்து ஜென் கதையின் மாற்றுவடிவம் போலச் சில குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன்.

முன்பு ‘நகுலனின் வீட்டில் யாருமில்லை’ என்று குறுங்கதைகள் மட்டுமே கொண்ட தொகுப்பினை வெளியிட்டிருக்கிறேன். அது சிறந்த வரவேற்பைப் பெற்றது.

மாயமும் யதார்த்தமும் ஒன்று சேர்ந்த சிறுகதைகளை இப்போது எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன். ‘போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்’ அப்படியான கதைதானே. ‘தண்ணீரின் திறவுகோல்’ சிறுகதையில் போர்ஹெஸ் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். அமெரிக்கப் பல்கலைகழகத்தில் கவிதை வகுப்பெடுக்கும் அவரைத் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் கேள்வி கேட்கிறான். புனைவின் புதிய சாத்தியம் என்பது இது போன்றதுதானே.

நீங்கள் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு வாசிப்புத் திட்டம் தீட்டி அதைக் கண்டிப்பாகச் செயல்படுத்துபவர் என்று அறிவோம். தற்போது உங்களின் வாசிப்புத் திட்டம் என்னவாக இருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையில்லை. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டில் என்ன படிக்கலாம் என்று ஒரு துறையை, பிரிவைத் தேர்வு செய்வேன். ஓர் ஆண்டு கிரேக்க இலக்கியம் படித்தேன். ஓர் ஆண்டு சீன இலக்கியம் படித்தேன். இன்னோர் ஆண்டு அடிப்படைத் தத்துவங்களை வாசித்தேன். இப்படிப் படிப்பதை Study என்று நான் கருதுகிறேன். கல்லூரியோடு Study முடிந்துவிடக்கூடாது என நினைப்பவன். ஆகவே வாழ்க்கை வரலாறு, பயணநூல்கள், ஜென் இலக்கியம், பௌத்த தத்துவம், ஐரோப்பிய இலக்கியம் என ஆண்டிற்கு ஒரு விஷயத்தைத் திட்டமிட்டு அதன் ஆதாரமான, அடிப்படையான புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிப்பேன். எத்தனை புத்தகம் என்று வரையறை கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் முக்கியமான ஐம்பது புத்தகங்களை அந்த வகையில் படித்துவிடுவேன். இது தவிர, விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்கள், அனுப்பி வைக்கப்படும் புத்தகங்கள், கண்காட்சி தோறும் வாங்கும் புத்தகங்கள் என நிறைய வாசிப்பேன்.

எனது காரில், வீட்டில், படுக்கை அறையில், எழுதும் மேஜையில் எங்கும் புத்தகங்கள்தான். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. கிண்டில், இணையதள நூலகம் என எல்லா வழிகளிலும் படிப்பேன். மல்லாங்கிணர் என்ற சிற்றூர்வாசியான என்னைப் புத்தகங்கள்தானே இந்தப் பெரிய உலகினைப் புரிந்துகொள்ளச் செய்தது. என்னை எழுத்தாளராக்கியது.

ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் என்று நேரம் வகுத்துக்கொண்டு படிப்பதில்லை. கிடைக்கும் நேரமெல்லாம் படிப்பேன். படிக்க வேண்டிய புத்தகங்கள் சேர்ந்துவிட்டால் மாதம் ஒரு முறை சனி ஞாயிறு என இரு தினங்களை ஒதுக்கிச் சாப்பிடுவது படிப்பது என்று வாசிப்பிலே நாளைக் கழிப்பேன்.

பழைய புத்தகக் கடைகளை தேடிப் போவது எனக்கு விருப்பமான விஷயம். நிறைய பழைய புத்தகக் கடைக்காரர்கள் எனது நண்பர்கள். நல்ல புத்தகங்களை மிக குறைந்த விலைக்குத் தருவார்கள்.

தினமும் ஒன்றோ இரண்டோ கவிதைகள் படிப்பேன். ஒரு நாளைக்குத் தேவையான மகிழ்ச்சி அதிலிருந்து கிடைத்துவிடும்.

புத்த பிக்‌குணியின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு நாவல் எழுதும் திட்டம் இருப்பதாக ஒரு நேர்ப்பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கான உந்துதல் பற்றிச் சொல்லுங்கள். அந்த நாவல் எப்போது வெளிவரும்?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘தமயா’ என்றொரு நாவலை எழுதினேன். அது புத்தபிக்குணிகள் பற்றியது. பாதி எழுதிக் கொண்டிருக்கும்போது நாவல் நின்றுவிட்டது. அதை என் விருப்பத்திற்காக உடனே முடிக்க விரும்பவில்லை. ஆகவே அப்படியே விட்டுவிட்டேன். சில நாவல்களை எழுதுவதற்கு நாம் விரும்பினால் மட்டும் போதாது. அதற்கான மனநிலையும் அனுபவமும் ஞானமும் கிடைக்கும் போதுதான் எழுத முடியும். தமயாவிற்காக நானும் காத்திருக்கவே செய்கிறேன்.

‘நூலக மனிதர்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான கட்டுரைத் தொடரை தங்கள் வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நூலகத்தை மையமாக வைத்து, விசித்திரமான மனிதர்களும், விசித்திரமான அனுபவங்களும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. கிட்டத்தட்ட ‘துணையெழுத்து’ கட்டுரைத் தொடர் வழங்கிய அதே அனுபவத்தை இந்தத் தொடரும் அளிக்கிறது. பத்திரிக்கைகளில் வாராவாரம் பத்தி எழுதுவதற்கும் உங்கள் தளத்திலேயே இது போன்ற சிறந்த கட்டுரைத் தொடரை வெளியிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என நினைக்கிறோம். ஒவ்வொரு வாரமும் காத்திருக்காமல் வாசகர் உடனடியாக இக்கட்டுரைகளை வாசித்து விடமுடிகிறது. உங்களுக்கும் அதிகம் எழுதுவதற்கான ஒரு வெளியை இது உருவாக்குகிறது என நம்புகிறோம். எதிர்காலத்திலும், இதைப் போன்று கட்டுரைத் தொடர்களை உங்கள் வலைத்தளத்திலேயே பிரசுரிப்பீர்களா?

விகடனில் அதிக கட்டுரைத்தொடர்கள் எழுதியது நானாகத்தான் இருக்ககூடும். சுஜாதா நிறைய தொடர்கதைகள் எழுதியிருக்கிறார். ‘கற்றதும் பெற்றதும்’ போல நீண்டகாலப் பத்தி எழுதியிருக்கிறார். ஆனால் ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’, ‘சிறிது வெளிச்சம்’, ‘கேள்விக்குறி’, ‘எனது இந்தியா’ என மாறுபட்ட பத்துக் கட்டுரைத் தொடர்களை எழுதியிருக்கிறேன். இதில் சில தொடர்கள் ஒன்றரை ஆண்டுகள் வெளியாகியிருக்கின்றன. ‘துணையெழுத்து’ மிகப்பெரிய அடையாளத்தை எனக்கு உருவாக்கித் தந்தது. இது போலவே தமிழ் இந்துவிலும் மூன்று கட்டுரைத்தொடர்கள் எழுதியிருக்கிறேன். இதற்கெனத் தனியே வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கு வாசிப்பதற்கென்றே ‘நூலக மனிதர்கள்’, ‘காந்தியின் நிழலில்’, ‘காலைக்குறிப்புகள்’ என்று மூன்று கட்டுரைத் தொடர்களை எனது இணையத்தில் எழுதி வருகிறேன். இணையத்தில் வாசிப்பதற்கென்றே தனி வாசகர்கள் இருக்கிறார்கள். படித்துவிட்டு உடனே மின்னஞ்சல் எழுதுகிறார்கள்.

சராசரியாக ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பேருக்கும் மேலாக அந்தக் கட்டுரைகளை வாசிக்கிறார்கள். என்னுடைய இணையதளத்தில் எழுதுவது கூடுதல் சுதந்திரமாகவே உள்ளது. எனது இணையதளத்தைப் புதிதாக வடிவமைப்பு செய்துள்ளார்கள். ஆகவே புதிய தொடர்களை அதிலும் எழுதவே செய்வேன்.

‘நம் காலத்து நாவல்கள்’, ‘விழித்திருப்பவனின் இரவு’ போன்ற நூல்கள் பல்கலைக்கழகப் பாடங்களாக இடம்பெறும் தகுதிவாய்ந்தவை. உலக இலக்கியத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமுடைய எவரும் இந்த நூல்களிலிருந்தே தங்கள் வாசிப்பைத் துவங்கலாம். இது போன்ற நூல்கள் எழுதுவதற்கான உந்துதல் என்ன?

நான் படித்த உலகின் சிறந்த புத்தகங்களை, எழுத்தாளர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன். என் நோக்கம் இளம்வாசகனை புதிய விஷயங்களை வாசிக்க வைப்பது மட்டுமே.

சென்ற ஆண்டுகூட விகடன் தடம் இதழில் சமகால உலகக்கவிஞர்கள் பற்றி ‘கவிதையின் கையசைப்பு’ என்ற தொடர் எழுதினேன். அது தனி நூலாக வந்துள்ளது. அதிலுள்ள கவிஞர்கள் சமகாலத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள். அவர்களின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகளையும் சமயவேல் அவர்களின் உதவியோடு மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளேன்.

கொரியாவின் கோ யுன் கவிதைகளை விரும்பி வாசித்தேன். அவரை அறிமுகம் செய்து கட்டுரை எழுதினேன். இன்று அவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தமிழில் கொண்டுவரப்போகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். வாசிப்பு இப்படித்தான் தொடர்செயலாக மாறும்.

‘உலகை வாசிப்போம்’, ‘மேற்கின் குரல்’, ‘நிலவழி’, ‘வீடில்லாப் புத்தகங்கள்’ என நிறைய நூல்கள் வெளியாகியுள்ளன. இவை தமிழ் மட்டுமே வாசிக்கத் தெரிந்த ஓர் இளம்வாசகனுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து வைப்பவை. அந்த வகையில் க.நா.சுவே எனது முன்னோடி.

அவரது பரந்த வாசிப்பினை நினைத்து நினைத்து வியக்கிறேன். எப்படி அவரால் செல்மா லாகர்லெவைக் (Selma Lagerlöf) கண்டுபிடிக்க முடிந்தது. எப்படி அவரால் ரோஜர் மார்டின் தூ கார்டு (Roger Martin du Gard) எழுதிய தபால்காரனைக் (Vieille France) கண்டறிந்து மொழியாக்கம் செய்ய முடிந்தது. இன்றுள்ள எந்த வசதியும் இல்லாத நிலையில் படிப்பதற்காகவே அவர் பல நகரங்களுக்குப் போயிருக்கிறார். கிடைத்த பணத்தில் எல்லாம் புத்தகம் வாங்கியிருக்கிறார். பாரீஸிற்குச் சென்று ஆல்பெர் காம்யூவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். க.நா.சு நாம் கொண்டாட வேண்டிய மிகப்பெரும் ஆளுமை.

புதுமைப்பித்தன் தன் காலத்தின் முக்கியமான உலக எழுத்தாளர்களைத் தேடிப்படித்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். சி.சு.செல்லப்பா, க.நா.சு, அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, பிரம்மராஜன் என முக்கிய படைப்பாளிகள் பலரும் உலகின் சிறந்த புத்தகங்களை வாசித்து அறிமுகம் செய்திருக்கிறார்கள். மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆகவே என் முன்னோடிகளின் வழியில்தான் நானும் செல்வதாக நினைக்கிறேன்.

இப்போது Annie Ernaux என்ற பிரெஞ்சு எழுத்தாளரை விரும்பிப் படித்து வருகிறேன். என்ன அற்புதமாக எழுதுகிறார். இவரது The Years, A Woman’s Story, A Girl’s Story முக்கியமான புத்தகங்கள். சமகாலத்தின் முக்கிய படைப்பாளி இவர். இப்படி தேடிப்படிப்பது வெறும் ஆசை மட்டுமில்லை. என்னை வளர்த்துக் கொள்ள இது போன்ற புத்தகங்களே உதவுகின்றன

தொடரும்….

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 19:23
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.