ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்

அன்புள்ள ஜெ ,

தற்போதைய இந்த பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆகிவிட்டது.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குடும்பங்களில் திறன் பேசி இல்லாத சூழலில் அவர்களுக்கு இணைய வழி வகுப்பு கூட சாத்தியம் இல்லாத ஒன்றாகவே உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் இணையத்திலேயே இருப்பதால் உடலியக்க செயல்பாடுகள் குறைந்து விட்டதாக சமீபத்தில் செய்தித்தாளில் வாசித்தேன்.

எங்கள் பள்ளியில் சமீபத்தில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் போது மாணவர்களின் கற்றல் திறனை பார்த்த போது மிகவும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.மாணவர்களின் கற்றலை மேம்படுத்த உங்களால் ஏதேனும் எங்களுக்கு (என்னை போன்ற பல ஆசிரியர்களுக்கு) வழி சொல்ல முடியுமா.

ஆவலுடன்,

செல்வா

திசையெட்டும்தமிழ்

பட்டுக்கோட்டை

***

அன்புள்ள செல்வராஜ்,

உண்மையில் மலைப்பகுதிகளிலும் சிறு ஊர்களிலும் ஆரம்பக்கல்வி கிட்டத்தட்ட அழிந்துவிட்டதையே காண்கிறேன். ஏற்கனவே மலைப்பகுதிகளிலும் சிற்றூர்களிலும் தமிழகக் கல்வியின் தரம் மிகக்கீழிறங்கியிருக்கிறது. ஒருபக்கம் கடுமையான போட்டிக்கு குழந்தைகளைத் தயார்செய்யும் தனியார்க்கல்விநிறுவனங்கள். மறுபக்கம் அரசுப்பள்ளிகளின் கைவிடப்பட்ட நிலை.அங்கே ஏழைகள் மட்டுமே படிக்கிறார்கள்.

கோவிட் நோய்த்தொற்றால் இரண்டு ஆண்டுகளாக கல்வியே நிகழவில்லை. ஆன்லைன் கல்வி என்பதெல்லாம் சரியான கணிப்பொறி வசதியும், இணையவசதியும், வீட்டில் கண்காணிப்பதற்கு பெற்றோரும் உள்ள நடுத்தரக்குடும்பங்களிலேயே ஓரளவு சாத்தியம். அது எந்த அளவுக்கு பயன் தருவது என்பது வேறொரு வினா.

பெற்றோர் அளிக்கும் கல்வி கிராமங்களில் அறவே இல்லை என்பதை கவனித்தேன். பெற்றோர் கூலிவேலை, தோட்டவேலை செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு பிள்ளைகளுக்குக் கற்பிக்க நேரமிருப்பதில்லை. தந்தையர் குடிப்பழக்கம் கொண்டவர்கள். அன்னையருக்கு புறவேலைக்கு மேல் அடுக்களை வேலை இருக்கும். கற்பிக்கும்படி வீட்டில் வசதி இருப்பதில்லை. கணிசமானவர்கள் கல்வியறிவில்லாதவர்கள். அனேகமாக எவருக்கும் கற்பிக்கவும் தெரியாது.

ஆகவே கல்வியின் மிக அடிப்படைப் பயிற்சியான எழுத்தறிவித்தல் அப்படியே நின்றுவிட்டது. குழந்தைகள ‘பாஸ்’ ஆக்குவது எளிது. அடிப்படைகளை கற்காமல் அவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்றால் அங்கே ஒன்றுமே கற்காமல் மேலும் பின்னடைவையே அடைவார்கள்.

மூன்றாம் அலை குழந்தைகளைத் தாக்குமென்ற ஐயமிருப்பதனால் அடுத்த டிசம்பர் வரைக்கும்கூட பள்ளிகள் இருக்க வாய்ப்பில்லை. அதற்கு அடுத்த ஜூனில்தான் ஒருவேளை பள்ளிகள் திறக்க வாய்ப்பு. அதற்குப்பின் இரண்டு ஆண்டுகள் பின்னடைவு கண்ட குழந்தைகளுக்கு கல்விகற்பிக்க ஆசிரியர்களிடம் சொன்னால் அது நடைமுறையில் கல்வியை மறுப்பதுதான். அக்குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வியைத்தான் அளிக்கவேண்டும்.

இன்றைய கல்வித்துறையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பல இடங்களில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களை முழுமையாக நியமித்தாலும்கூட இந்த இரண்டாண்டு விடுபடுதலை நம் கல்வித்துறை எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் இங்கே பலசமயம் ஒரு வகுப்பில் ஐம்பது மாணவர்களுக்குமேல் உள்ளனர். ஆகவே ஆசிரியர் எந்தக்குழந்தைக்கும் தனியாகச் சொல்லிக்கொடுக்க முடியாது.

எழுத்தும் வாசிப்பும் அறிவித்தல் என்பது அடிப்படையில் ஒரு கடுமையான பயிற்சி. தனிப்பட்ட முறையில் தீவிரமாக, தொடர்ச்சியாக அளிக்கப்படவேண்டியது அது. அதை நம் கல்வியமைப்பின் குறுகிய வசதிகளைகொண்டு செய்யமுடியாது. ஆனால் அப்படி ஒரு தீவிரப்பயிற்சி அளிக்காவிட்டால் கிராமப்புறக் கல்வி தேக்கமுற்றுவிடும். நீண்டகால அளவில் தமிழகத்துக்குப் பேரிழப்பு ஏற்படும்.

அதை தவிர்க்க செய்யக்கூடுவது ஒன்று உண்டு. அதிகபட்சம் ஐந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என தமிழகம் எங்கும் எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுக்கும் ஒரு குறுகியகால எழுத்தறிவிப்பு இயக்கத்தை ஆரம்பிக்கலாம். மிகக்குறைவான செலவில் அதை நடத்த முடியும். தேவையென்றால் தனியார் நன்கொடைகளைப் பெறமுடியும்.

அவ்வியக்கத்திற்கு தற்காலிக சேவை ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். ஊதியமில்லாத தன்னார்வலர் கூடாது. அவர்கள் மேல் கல்வித்துறைக்கு கட்டுப்பாடு இருக்காது. அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அவ்வியக்கம் நிகழவேண்டும். பகுதிநேரப்பணியாக கல்லூரிமாணவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மாதம் மூவாயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கலாம்.

மூன்றுமாதம் நீண்டுநிற்கும் ஒரு அதிதீவிர எழுத்தறிவிப்பு இயக்கத்தை ஆரம்பிக்கலாம். குறைந்தது எழுபதுநாட்கள் நாளொன்றுக்கு மூன்றுமணி நேரம் வீதம் வகுப்பு நடக்கவேண்டும். கல்விக்கூடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். பிற அலுவலகங்களையும் பயன்படுத்தலாம். ஐந்து குழந்தைகள் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுத்துக்களை எழுதவும் கூட்டிவாசிக்கவும்  கற்றிருக்கவேண்டும் என்பது கட்டாயநிபந்தனை.

ஏற்கனவே  அனைவருக்கும் கல்வி என்னும் நோக்குடன் இப்படி ஓர் இயக்கம் தொடங்கப்பட்டு தமிழகத்திலும் கேரளத்திலும் வெற்றிகரமாக நடந்துள்ளது. அந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.   ஐந்து மாணவர் – ஒர் ஆசிரியர் என்றால் மிக எளிதாக கற்பிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி ஓரு திட்டம் வருமென்றால் அது இந்த அரசுக்கும் அடிப்படை மக்களிடையே மிகுந்த மரியாதையை உருவாக்கி அளிக்கும். எம்ஜிஆருக்கு சத்துணவுத்திட்டம் அளித்த மரியாதைக்குச் சமானமாக. முதல்வர் ஸ்டாலின் வரலாற்றில் வாழ்வார். கிராமப்புற அன்னையர் அந்த அளவுக்கு மனமுடைந்துபோயிருக்கிறார்கள்.

ஜெ

தேசமற்றவர்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.