பாமர வாசகர் என்பவர்…

“வாசகரில் பாமரன் இல்லை”.[கடிதங்கள்].  வாசகர் கடிதத்தில் இப்படி ஒரு வரி. போகிற போக்கில் ஒரு சதம் அடித்து விட்டிருக்கிறீர்கள்.  இரசிகனை பாமரனாக எண்ணும் எந்த கலைஞரும் தன் கலையை நீர்த்துப் போகச் செயகிறார்கள். செவ்வியல் இசையில் பாமர இரசிகர், தேர்ந்த இரசிகர் என்று தரம் பிரிக்கும் வழமை உண்டு. உண்மையில் இசை என்பது ஒன்று தானே?  சில நேரங்களில் தேர்ச்சி என்பது பெரும் மனத்தடை. தேர்ச்சி சுவையை கூட்டும் என்ற உத்திரவாதத்தை எந்த கலைஞனும் எந்த ரசிகனுக்கு அளிக்க முடியாது.

ஒரு வகையில் தேர்ச்சி என்பது வாசிப்பு, அல்லது ரசனையையும் தாண்டி விவாதத்திற்கான கருவியோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வேளை ஒரு ரசிகனின் தேர்ச்சியை வைத்து கலைஞர் அவருடைய சிலாகிப்பையோ விமர்சனத்தையோ தீவிரமாக எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தால், கலைஞன் சிலாகிப்பது யாராக இருந்தாலும் அதை உந்து சக்தியாகக் கொள்ளும் மனிதன் என்று தோன்றுகிறது. பின் தேர்ச்சியின் பயன் என்ன? யார் தேர்ந்த வாசகர்/இரசிகரை அடையாளம் காண்பது? தேர்ச்சி என்பது தொடர்ச்சி, பயிற்சி, உள்ளத்தை, பார்வையை விரிவுபடுத்தும் முயற்சி. எப்படி கலைஞன் தன்னைத் தான் அடையாளம் காண்கிறாளோ, இரசிகனும் அவ்விதமே. இரசனை கலையாகும் இடத்தை தானே நிலைநாட்டிக்கொள்ள முடியும், அதற்கு பட்டமமும் விழாவும் தனியாகத் தேவை இல்லை, அதன் பாதையும் இலக்கும் வேறல்ல. இதனால் தானே இரசிகர்கள் கலைஞர்களுக்கு மேல் தொட்டால் சிணுங்கியாக இருக்கிறார்கள்? கலைஞர்களுக்காக அரண் இட்டு, கொடி பிடிக்கிறார்கள்?

ஒரு சின்ன சிக்கல். இன்றைய தேதியில் புகழின் வெளிச்சத்தில் இருக்கும் ஒரு கலைஞருக்கு வாசக/இரசிகராய் இருப்பது என்பது உள்நோக்குடைய ஒன்றாக காணப்படுகிறது. சந்தேகப் பட்டியலில் பெயர் வந்துவிடுகிறது. வலைவீசி தேடுகிறார்கள் இணைய காவலர்கள். கலைஞர்களை மரபார்ந்தவர், புதுமைவாதி, கோட்பாடுபவர், தளைகளற்றவர், ஆத்திகர், நாத்திகர், பெண்ணியவாதி,  அரசு சார்பாளர், கலகக்காரர், வலது/இடது சாரி, களப்பணி ஆற்றுபவர், சாய்வு நாற்காலி நிபுணர் என்று பலவிதமாக அவரின் கலை அரசியல் நிலைப்பாடுகள் அடிப்படையில் பிரிக்கிறோம். பிரிப்பதன் சிக்கல், அந்த கலைஞரின் நிலைப்பாடுகளோடு தன்னையும் யாரவது அடையாளப்படுத்தி விடுவார்களோ என்ற பயம். சமூக வலைத்தளத்தின் பிடியில் நம்முடைய பொதுமதிப்புகள் சிக்கி இருப்பதால் வரும் மரண பீதி.

வெண்முரசு படிக்கிறேன், ஆனால் நான் இந்து அடிப்படைவாதி அல்ல என்று தன்னிலை விளக்கம் தர வேண்டும். டி எம் கிருஷ்ணாவும் பிடிக்கும் சஞ்சய் சுப்பிரமணியனும் பிடிக்கும் ஆனாலும் நான் கலகக்காரியோ, ஆரிய மேலாதிக்கவாதியோ அல்ல என்று நீட்டி முழக்கி பதிவு இட வேண்டும். எப்படி எழுதினாலும், போலி, கொண்டை தெரிகிறது என்று வண்டை வண்டையாக பின்னூட்டம் இடுவார்கள். அல்லது நாம் யாராக இல்லையோ அவர் நம்மைப் புகழ்ந்து தள்ளி “இப்படி தான் இருக்க வேண்டும் (ஆ)பொம்பளை” என்ற தொனியில் நாம் சொல்லாதவற்றை சேர்த்துக் கொள்வார். இல்லை அதெப்படி எனக்குப் பிடித்த கலைஞரை நீ இப்படிச் சொல்லலாம் என்று பிறப்புச் சான்றிதழ் முதற்கொண்டு ஆதார் அட்டை வரை கேட்பார்கள், இல்லை சுருக்கமாக தேசத்துரோகி, சமூக விரோதி என்பார்கள்.

இதற்கு அப்பால் நாம் விரும்பும் கலைஞர், பாலியல் வன்முறையாளரா, ஆணாதிக்க சிந்தனையாளர் வகுப்புவாதி, அடிப்படைவாதி, மதவாதி, சாதியவாதி,  (சத்தியவதி என்று இருமுறை திருத்துகிறது கூகிள்)பொய்யரா, இளம் வாசகர்களை அதைர்யப்படுத்துபவரா, தவறான பாதையில் வழி நடத்துபவரா என்று வேறு எண்ண வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் ரசனையின் அடிமடியில் கைவைத்த பதற்றத்துடன் அன்னாரின் மீது அது நாள் வரை முதலீடு செய்த மரியாதையை ஒரு நொடியில் பின் வாங்க வேண்டியுள்ளது. ஐந்து வருடங்கள் முன்னர் “வானம் எனக்கொரு போதி மரம்” என்று தலைப்பிட்ட புகைப்படத்தை வம்புக்கிழுத்து முதிர்ச்சியை, முரண் என்பார்கள். “உங்காள் தானே?” என்பார்கள். (யாரு அந்த ஆளா? என்று கேட்கமுடியுமோ?) தமிழகத்தில் பிறந்து தமிழ் பேசுவதால் கணியன் பூங்குன்றனாரின் சொல்லுக்கு பொறுப்பேற்பேனே அன்றி, காழ்ப்பை அள்ளிக்கொட்டும் கேவலவாதிகளின் சொல்லிற்கேல்லாம் பாத்தியதை ஏற்க சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

சில நேரம் நம்மைப் போல் மனிதப் பதர் தானே, முரண்பாடுகளுக்கு இடம் தந்தால் என்ன என்று பச்சாதாபம் தோன்றாமல் இல்லை. பேசாமல் கலையை கலைஞனிடமிருந்து துண்டாக வெட்டி எடுத்துவிடலாம் என்று வேறு தோன்றும், ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா? மொத்தமாக விலகி இருந்தால் வேறு அறிவு தளத்தில் நிற்க தகுதி இல்லாதவர்கள், தீவிரமாக கலை ரசனையில் ஈடுபட முடியாதவர், சோம்பேறி அரைவேக்காடு அல்லது பெண் என்று ஒரு பாட்டு.

ஆனால் இந்தப் பாமர இரசிகர் என்பது எல்லாம் வல்ல அருமருந்து, தற்காப்புச் சொல். உணர்ச்சிப்பூர்வாமாக பாராட்டலாம், மறுதலிக்கலாம், தன்னிலை விளக்கங்கள் தேவை இல்லை, எந்த வட்டத்தில் உள்ளோம் அல்லது இல்லை என்று சொல்லும் அளவு முதிரவைல்லை என்பதனால். பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லையாம், ஆட்டத்தில் சுவைக்காக சேர்த்துக் கொள்வார்களாம்.  இன்னும் அந்த கலைஞரின் அறையிலிருக்கும் எலும்புக் கூடுகளை கண்டடையவில்லை என்று மேன்மக்கள் மன்னிப்பர். தவறுகளுக்கு இடம் உண்டு, தண்டனைக் காலம் சொற்பம். நேரமிருந்தால் கலையை கூட இரசிக்கலாம், கலைஞர்களின் குறை-நிறை, முரண், உட்பூசல், வேறுபாடுகளை, குதர்க்கங்களை கணக்கில் கொள்ளாமல். இத்துணை சமூக மதிப்புள்ள சொற்களை மதிப்பிழப்பு செய்யப் பார்த்தீர்களே? சரியான ஜெயமோகன் சார் நீங்க.

பார்கவி

***

அன்புள்ள பார்க்கவி

இசையில் பாமர ரசிகர் இருக்கமுடியும், நானே சாட்சி. ஆனால் இலக்கியத்தில் அவ்வாறு இருக்க முடியாது. இலக்கியம் வாசிப்பதே ஒருவரை பாமரர் அல்ல என்று ஆக்கிவிடும். ஏனென்றால் அது ஓர் அறிவுச்செயல்பாடு.

மனிதவரலாற்றிலேயே இலக்கியமும் அறிவுச்செயல்பாடும் முற்றிலும் சம்பந்தப்படாத பெருந்திரளின் முன் நிகழவேண்டிய கட்டாயம் இப்போது சமூகவலைத்தளச் சூழலில் அமைந்துவிட்டது. ஒன்றுமே தெரியாதவர்கள்கூட, எதிலும் அக்கறையோ பயிற்சியோ அற்றவர்கள்கூட, எங்கும் நுழைந்து எதுவும் சொல்லலாம் என்னும் சூழல். அதன் சிக்கல்களில் சிக்கியிருப்பவன் வாசகன்.

ஒருபோதும் பாமரர்களுடன் வாசகன் விவாதிக்க முடியாது. “ஆமாங்க, மன்னிச்சிருங்க” என்று சொல்லி தாண்டிச்செல்வதையே செய்ய முடியும். என் வாசகர்கள் பல அதைச் சொல்வார்கள். ”ஆமாங்க, அவரு ஃபாஸிஸ்டுன்னுதான் ஊரிலே சொல்லிக்கிறாங்க, நமக்கு என்னங்க தெரியும்? நாம கதை படிக்கிறவனுங்க” என்று சூதானமாகச் சொல்லி தப்பிச்சென்றுவிடுவார்கள். வேறென்ன செய்ய முடியும்?

பழைய நகைச்சுவை. பிள்ளைவாள் அசலூர் சென்றார். நள்ளிரவு, நிலவு. எதிரே இரு மறவர்கள் குடிபோதையில் பூசலிட்டபடி வந்தனர். ஒருவர் கேட்டார். “வேய் இன்னிக்கு பௌர்ணமி, மேலே தெரியுறது நிலான்னு நான் சொல்றேன். இவன் சொல்றான் இன்னிக்கு அம்மாசை மேலே நிலா இல்லேன்னு. நீரு சொல்லும்வே நியாயம். இன்னிக்கு பௌர்ணமியா அம்மாசையா?”

பிள்ளைவாள் சொன்னார்,.”தெரியலீங்க, நான் வெளியூரு”

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.