முன்செல்லும் பறவை

இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவரான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் குறித்து The Seer Who Walks Alone என ஆவணப்படம் ஒன்றை இயக்குநர்: ஜி.அரவிந்தன் இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் ஜேகே உருவான விதம், மற்றும் அவரது சொற்பொழிவுகளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. 1985 ஆண்டுத் தயாரிக்கப்பட்ட இப்படம் 50 நிமிஷங்கள் ஓடக்கூடியது.

சென்னையில் ஜே.கிருஷ்ணமூர்த்திப் பேசுவதைக் கேட்கத் திரளும் விதவிதமான ஆட்களையும் தரையில் அமர்ந்து உரையை ஆழ்ந்து கேட்கும் அவர்களின் ஈடுபாட்டினையும் காணும் போது வியப்பாக இருக்கிறது. புத்தர் நம் காலத்திலிருந்தால் இப்படித்தான் உரையாற்றியிருப்பார் என்று ஹக்ஸ்லி சொல்கிறார். பேச்சின் வழியே மக்களைச் சிந்திக்க வைப்பது எளிதானதில்லை. அதுவும் வாழ்க்கையின் ஆதாரமான, அரூபமான விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்வது அதை அசலாக, தெளிவாக முன்வைப்பது. எதிர்க்கருத்துகளை அனுமதித்து அதனுடன் வாதம் செய்வது என ஜே.கிருஷ்ணமூர்த்திப் பேச்சின் வழியே அதியசங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

எனது கல்லூரி நாட்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களைத் தீவிரமாகப் படித்திருக்கிறேன். இன்றும் அவரைப் படிப்பது பிடிக்கும். அவரது எழுத்தில் காணப்படும் எளிமை, தெளிவு. ஞானம் நிகரற்றது. எண்பதுகளில் ஜேகேயை படித்து விவாதிக்கும் இளைஞர்கள் நிறைய இருந்தார்கள். ஜேகேயின் கருத்துகளை உள்வாங்கி ஆழமாக விவாதிப்பார்கள். இன்றோ தத்துவ ஈடுபாடு கொண்டவர்களைக் காணுவது அரிதாகிவிட்டது.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரைகளைக் கேட்கும் போது மெய் மறந்துவிடுகிறோம். அவரது பேச்சு ஒரு அலையைப் போல நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. நிறைய நேரங்களில் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே போதும் போலிருக்கிறது.

இளமையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தோற்றம் ஒரு இளவரசனைப் போலிருக்கிறது. மிக அழகான மனிதர். விவரிக்கமுடியாத ஈர்ப்பு அவரது முகத்திலிருக்கிறது. ஆழ்ந்து நோக்கும் கண்கள், புன்னகை படிந்த முகம். அழகான கேசம். பேசும்போது அவரது கைகள் லயத்துடன் அசைகின்றன. தடையில்லாத பேச்சு, ஏதோ எழுதி முடித்து வைத்த விஷயத்தைச் சொல்வது போலிருக்கிறது. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல யோசிப்பதில்லை. கேட்பவரை நோக்கியே கேள்வியைத் திருப்பி விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி. அதுவே அவரது பலம். ஆவணப்படத்தில் கல்வி, மரணம் மற்றும் வாழ்க்கை பற்றிய அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்

இந்த ஆவணப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஜே.கிருஷ்ணமூர்த்தி நீண்ட தூரம் நடந்து சென்று அந்திச் சூரியனை ரசிப்பது. இதற்காகவே திறந்த வெளியில் ஒரு இருக்கை அமைத்திருக்கிறார்கள். அங்கே அமர்ந்தபடி சூரியன் மறைவதை துளித்துளியாக ரசிக்கிறார். அப்படி என்ன சூரியனிடம் காணுகிறார் என்று கேட்கிறார்கள். தெரியவில்லை என்று புன்முறுவலுடன் பதில் சொல்கிறார். அவர் மட்டுமின்றி அவரது பள்ளி மாணவர்களும் ஒன்றுகூடி அஸ்தமனத்தை ரசிக்கிறார்.

கடற்கரையில் சூரிய அஸ்தமனம் காண்பது பேரனுபவம். நான் ஒரு முறை பாலைவனத்தின் நடுவே கண்டிருக்கிறேன். பரவசத்தில் கைகள் நடுங்கியது. ஜே.கிருஷ்ணமூர்த்தி நடப்பதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். நடைக்குறிப்புகள் எழுதியிருக்கிறார். இதிலும் அவர் மிக வேகமாக நடக்கிறார். பாலத்தைக் கடந்து வரும் காட்சி மனதில் உறைந்து போய்விட்டது

உலகை மீட்க வந்த இரட்சகர் என்ற பெரும் பொறுப்பைத் துறந்த ஜேகே எந்த அடையாளங்களும் பதவிகளும் அதிகாரச்சுமைகளும் இல்லாமல் இருப்பதே சரியானது என எண்ணினார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவரை ஒரு ஆசிரியராக மட்டுமே சொல்லிக் கொள்கிறார்கள்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் நித்யாவை அன்னி பெசன்ட் தத்து எடுத்து அமெரிக்கா அழைத்துப் போய்ப் படிக்க வைத்தார். வளர்ந்து பெரியவனாக மாறி அன்னி பெசன்ட் கனவுகளிலிருந்து விலகி தனக்கான உலகை, பாதையை ஜேகே உருவாக்கிக் கண்டார். அவர் தனது கடந்தகாலத்தை முற்றிலும் மறந்துபோனார். பெற்றோரைப் பிரிந்த ஏக்கம் அவரிடம் வெளிப்படவேயில்லை. ஒரேயொரு முறை நோயுற்ற நாளில் தெலுங்கில் ஏதோ புலம்பியதாகப் படித்திருக்கிறேன். மற்றபடி அவர் மனதில் அவரது வீடு. அப்பா அம்மா, சொந்த ஊர் மொழி எது குறித்தும் ஏக்கமில்லை. அப்படி எவ்வாறு இருக்க முடிந்தது என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன். கடந்தகாலத்தின் நிழல் இல்லாமல் ஒருவரால் வாழ முடியுமா.

ஜே.கிருஷ்ணமூர்த்தி மனிதனின் அகத்தை ஆராய்கிறார். அவனது செயல்களின் அடிப்படைக் காரணங்களை ஆராய்கிறார். சந்தோஷம். துயரம். வாழ்க்கை, மரணம், வெற்றி தோல்வி, அன்பு வெறுப்பு என்ற எதிர்நிலைகளைக் கேள்விகேட்கிறார். ஒரு நுண்ணோக்கி வழியாக ரத்தத்துளிகளை ஆராய்வது போல நமது எண்ணங்களை அவர் நுணுக்கமாக ஆராய்கிறார்.

அவராகத் தீர்வு தருவதில்லை. மாறாக அதை நோக்கி நம்மைக் கொண்டு செல்கிறார். யோசிக்க வைக்கிறார். முன்சொல்லும் பறவை போல வழிகாட்டுகிறார். நாம் தான் இணைந்து பறக்க வேண்டும்

முதுமையில் அவரது தோற்றத்தில் வெளிப்படும் கனிவும் வசீகரமும் அசாதாரணமானது.

ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி அமைப்பினர் நடத்திய புத்தகக்கடைக்குச் சென்று ஒரு நண்பர் தன் வீட்டில் வைத்துக் கொள்ள ஜேகேயின் புகைப்படம் வேண்டும் என்று கேட்டதற்கு அப்படிப் புகைப்படம் வைத்து அவரை வழிபடக்கூடாது. அது அவரது சிந்தனைக்கு எதிரானது என்று தர மறுத்து விட்டார்கள் என நண்பர் ஆதங்கமாகச் சொன்னார். அவர்கள் செய்தது சரியே.. ஜேகே தன்னை ஒரு பிம்பமாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றேன்.

இந்த ஆவணப்படத்திலும் அவரை ஒரு பிம்பமாக்க அரவிந்தன் முயலவில்லை.

நீண்ட தூர நடையின் பின்பு சிறிய கதவு ஒன்றைத் திறந்து ஜேகே உள்ளே செல்லும் காட்சி ஒன்று இப்படத்திலிருக்கிறது. அது அவரது வாழ்க்கையின் குறியீடு போலவே இருக்கிறது.

அரவிந்தன் மிகச்சிறப்பாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதனை ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஷாஜி. பிலிம் டிவிசன் இதை உருவாக்கியுள்ளது..

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 04:55
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.