புதிய எழுத்தாளர்களுக்கு– கடிதங்கள்

புதிய எழுத்தாளர்களுக்கு…

மதிப்பிற்குரிய ஜெ. அவர்களுக்கு அன்பு வணக்கம்.

என் பெயர் சரவணன். நான் எழுதிய ஒரு சில கதைகள், கட்டுரைகள் பிரசுரமானபோதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று இவ்வளவு நாளும் நின்று யோசித்ததில்லை.

உங்களது இந்த சிறு கட்டுரை நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னைப் பிடித்து உலுக்கி தெளிவாக்கி விட்டது.நான் படித்த கல்லூரி ஆண்டு மலரில் 2000 வது ஆண்டு முதல் கதை பிரசுரமானது. 2003ஆம் ஆண்டு திருச்சி மாலைமுரசு பொங்கல்மலர், 2003, 2007 தினமலர் டிவிஆர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு,2010ல் இரண்டாம் பரிசு, 2018 ல் முதல் பரிசு,தமிழக அரசு குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு மையமும், ராணி வாரஇதழும் நடத்திய போட்டியில் 2006 மே மாதத்தில் முதல் பரிசு,அமுதசுரபி வார இதழில் முத்திரை சிறுகதையாக தேர்வு பெற்ற சிறுகதை 2006 ஆம் ஆண்டு இலக்கியச்சிந்தனை சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் வானவில் பண்பாட்டு மையம் நடத்திய பாரதி சிறுகதைப்போட்டியில் பிரசுரத்திற்கு உரிய கதையாக தேர்வு பெற்ற சிறுகதை கல்கி வார இதழில் வெளிவந்துள்ளது.இந்த சிறுகதைகள் எல்லாம் ஏதோ ஒரு விஷயம் இருப்பதால்தான் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் அவற்றை பிரசுரத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஆக, இனி நான் செய்ய வேண்டியது தங்கள் கட்டுரையில் கூறியுள்ள மேற்கூறிய வரிகளை மனதில் கொண்டு செயல்படுவதுதான் எனக்கும், இலக்கியத்துக்கும் நல்லது என்பதை புரிந்து கொண்டேன்.

நான் எதைப்பற்றி சிந்திக்க வேண்டும், என்ன செய்யவேண்டும் என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

 

அன்புடன்

ஆரூர் சரவணா

(க.சரவணன், திருவாரூர்)

 

அன்புள்ள ஜெ

புதிய எழுத்தாளர்கள் செய்யவேண்டியதென்ன என்பதைச் சொல்லியிருந்தீர்கள்.முக்கியமான கருத்து அது. பலபேர் பிளாக்கில் எழுதிவிட்டு அதன் இணைப்பை அனுப்புகிறார்கள். ஃபேஸ்புக்கில் போட்டு லிங் அனுப்புகிறார்கள். தெரிந்த சிலபெர் வாசிக்கலாம். ஆனால் இலக்கியத்தின் உண்மையான சவால் சரியான வாசகர்களிடம் செல்வதுதான். அதற்கு பலரும் வாசிக்கும் இதழ்கள் தேவை. சு.வேணுகோபாலோ யுவன் சந்திரசேகரோ எழுதும் ஒரு இதழில் அருகே நம் கதை வெளியானால்தான் அதை இலக்கிய உலகம் கவனிக்கும். அதுதான் நமக்கு மரியாதை. நாம் அந்த வரிசையில் வருகிறோம் என்று பொருள்.

அவ்வாறு வெளியாவது ஒரு தடையை தாண்டுவதுதான். இதழ் நல்ல இதழாக இருந்தால் அவர்களுக்கு தடை அதிகம். தமிழினி அதிகம் கவனிக்கப்படுவது ஏன் என்றால் அவர்கள் நிறைய கதைகளை வெளியிடுவதில்லை. தேர்ந்தெடுத்த ஒன்றிரண்டு கதைகளைத்தான் வெளியிடுகிறார்கள். ஆகவே அந்தக்கதைகளுக்கு இயல்பாகவே ஒரு முக்கியத்துவம் வந்துவிடுகிறது. யாவரும் தளம் ஏராளமான கதைகளை வெளியிடுகிறது. பல கதைகள் அமெச்சூர் கதைகள். அங்கே ஒரு கதை வெளிவந்தால் வாசகர்கள் எவராவது சுட்டிக்காட்டாவிட்டால் வாசிக்க மாட்டார்கள்.

இன்றைய எழுத்தாளன் இந்த இதழ்களில் வெளிவருவதை தனக்கான ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளவேண்டும். அந்தக்கதை கவனிக்கப்படுவதை இன்னொரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தச்சவால்கள் அவனை பண்படுத்தும். கதையின் உள்ளடக்கம் பற்றிய அரசியல் விவாதங்களை தவிர்க்கவேண்டும். உள்ளடக்கம் அவனே கண்டுபிடிக்கவேண்டியது. விவாதித்து பொதுக்கருத்தாக உண்டாக்கபப்டும் உள்ளடக்கம் இலக்கியத்தில் எந்த அர்த்தமில்லாதது. ஆகவெ கதையின் அரசியல், சமூகவியல் பற்றி பேசுவதை அவன் செவிகொள்ளக்கூடாது. ஆனால் கதையின் வடிவம் பற்றிய பேச்சு அவனில் இருந்துகொண்டே இருக்கவேண்டும். கதை சரியாகச் சென்று சேர்கிறதா என்று கவனிக்கவேண்டும். மற்ற மாஸ்டர்கள் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பர்க்கவேண்டும். கதையை தன்னைப்போன்றவர்களுடன் விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

நான் என்னைப்பற்றிச் சொல்கிறேன். நான் ஒரு வாசகன் மட்டுமே. ஓர் ஆசிரியனின் நான் வாசித்த இரண்டு மூன்று கதைகள் அமெச்சூர்த்தனமாக இருந்தால் அதன் பின் அவனை வாசிக்கவே மாட்டேன். என் நேரம் வீணாகிறதென நினைப்பேன். என் வாசிப்புக்கு நல்ல கதைகள் மாத்திரமே வரவேண்டும். இதை எல்லா எழுத்தாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்

ஸ்ரீனிவாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.