சீவகசிந்தாமணி- கடிதம்

பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு

சிந்தாமணி

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இணைய சூம் நேரலையில் தங்களின் சீவகசிந்தாமணி குறித்த உரை கேட்கும் பேறு பெற்றேன். கடந்தகால ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டுக் கலாச்சார இலக்கிய பொக்கிஷங்களை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஒரு சீரிய முயற்சி இது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் சங்கச்சித்திரங்கள் உரை எழுதிய பொழுது அந்த உரைகளை படித்துவிட்டு சங்க இலக்கியங்களின் பக்கம் பார்வையை பலர் திருப்பினர். அந்த அற்புதமான உரைகள் சங்கப் பாடல்களுக்கு புதிய தலைமுறையினர் இடையே ஒரு புத்துயிர்ப்பை அளித்தது.

தாங்கள் கொற்றவை புதுக் காப்பியத்தை எழுதியதன் காரணமாக, அதைப் படித்ததால், பலருக்கு சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற உந்துதலும் கிடைக்கப்பெற்றது.

மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்து நீங்கள் படைத்த நிகழ் காவியமான வெண்முரசு ஆற்றிக் கொண்டிருக்கின்ற அளப்பரிய பணியை வார்த்தைகளினால் வடித்துவிட முடியாது. தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள விரும்புகின்ற, இந்தியப் பண்பாட்டை புரிந்து கொள்ள ஆவல் உள்ள எத்தனையோ நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு வெண்முரசை படிக்க பரிந்துரைத்து, அவர்கள் வாழ்க்கை மேம்படுவதை கண்கூடாகக் கண்டவன் என்பதனாலேயே தங்களின் படைப்புகள் ஆற்றும் பெரும்பணியை நன்கு உணர்ந்தவன் நான்.

தங்களின் சீரிய முயற்சியினால் சீவக சிந்தாமணியும் மணிமேகலையும் புதிய தலைமுறையினரின் வாசிப்பிற்கு உட்படுத்தப்படும் என்று நம்புகின்றேன். நம் தமிழகத்துக் கோயில்களைப் பாதுகாப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நமது பழம் பெரும் இலக்கியங்களை பாதுகாப்பதும் என்று தாங்கள் முன்வைத்த கருத்து மிகவும் ஆழமானது. பழம்பெரும் இலக்கியங்களை பாதுகாத்தல் என்பது அவற்றைப் படித்தல், அவற்றைக் குறித்து பேசுதல், மீளுருவாக்கம் செய்து எழுதுதல் என்கின்ற புரிதலும் உங்களால் மிகச்சிறப்பாக அனைவருக்கும் கடத்தப்பட்டது.

கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் இன்றளவுக்கும் தொடர் வாசிப்புக்கு உட்படுத்த படுவதற்கான காரணங்களை பட்டியலிட்டிர்கள். அதேவிதமாக சீவக சிந்தாமணியும் மணிமேகலையும் ஏன் வாசிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணங்களையும் மிகத் தெளிவாக முன்வைத்தீர்கள். உங்களின் இந்த உரை அளித்த வெளிச்சத்தைக் கொண்டு சரியான புரிதலுடன் இந்த இரு காப்பியங்களையும் இனி அணுக முடியும் என்ற நம்பிக்கை உருவானது.

தங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை தமிழ் சமூகத்தின் சார்பாக முன்வைக்க விழைகிறேன். நல்ல இலக்கிய நயமும் கவிதைச் சுவையும் உள்ள சில விருத்தங்களையேனும் தேர்ந்தெடுத்து தாங்கள் சீவகசிந்தாமணிக்கும் மணிமேகலைக்கும் ஒரு அடிப்படை சித்திரத்தை அளிக்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். இந்தப் பணியை செய்வதற்கு இன்று இருக்கின்ற இலக்கிய ஆளுமைகளில் தாங்களே மிகச்சரியானவர் என்பதனாலேயே இந்த வேண்டுகோளை தங்களிடம் முன்வைக்கிறோம். ஒருசில நூற்றுக்கணக்கான இளைஞ்ஞ  இளைஞ்ஞிகளையேனும் தங்களின் அந்தச் சித்திரங்கள் தமிழின் பழம்பெரும் காப்பியங்களுள் இழுத்து உள் நிறுத்தும் என்கின்ற பூரண நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

எல்லாம் வல்ல பேரியற்கை தங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் நல்கட்டும் என்ற வேண்டுதலோடும், தங்களின் சீரிய பணிகள் மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்ற நல்வாழ்த்துக்களோடும், ஒரு மிகச்சிறந்த உரையை அளித்தமைக்கு தங்களுக்கு நன்றி கூறி அமைகிறேன்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.