அ.முத்துலிங்கத்தின் கலை

அன்புள்ள ஜெ

தற்போது உங்களின் ‘அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்’  கட்டுரையை வாசித்தேன். அ.முத்துலிங்கம் எனக்கும் பிடித்தமான எழுத்தாளர். அவரது கதைகளிலும் கட்டுரைகளிலும் ஒரு மனிதனால் இத்தனை அனுபவங்களை அடைய முடியுமா என்கிற கேள்வியே மேலோங்கி இருக்கும். சமயங்களில்  கதைக்கும் கட்டுரைக்கும் ஊடாக அவர் எழுதியிருப்பதை ரசித்தும் வாசித்துள்ளேன்.

இங்கு எனது நண்பர் ஒருவருக்கு அ.முத்துலிங்கம் கதைகள் பற்றி பேசினேன். ஆனால் அதனை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. சில மாதங்களில் நீங்கள் அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தீர்கள். அதன் பின்னரே அந்நண்பர் அவரின் கதைகளை  வாசிக்க ஆரம்பித்தார். அதோடு நில்லாமல் தானே அ.முத்துலிங்கம் என்கிற எழுத்தாளரை கண்டுகொண்டதாக பேசவும் செய்தார். அதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. தன்னை முன்னிலைப்படுத்தும் பலரும் இப்படி செய்வதைப் பார்த்து  பழகிவிட்டது.

ஆரம்பத்தில் எனக்கும் ஒரு கேள்வி இருந்தது, இவரின் கதைகளில் ஈழப்போர் குறித்தும் அச்சூழல் குறித்தும் அதிகமாக இருக்கவில்லை. ஆனால் தன் நிலம் விட்டு வேறொரு நிலத்தில் குடிப்புகும் மக்களின் சிக்கல் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்தும் எழுதியிருப்பதைப் புரிந்துக் கொண்டேன். அதில் அவர் காட்டும் அங்கதம், வாசித்தப்பின் ஒரு வெறுமையை விட்டுச்செல்வதாக இருந்தது. அன்றைய என் கேள்விக்கு இன்றைய உங்கள் பதிலில் முழுமையான பதில் கிடைத்தது. நன்றி.

உங்கள் பதிலை வாசித்ததில் ஓரிடத்தில் எனக்கு சின்னதாய் நெருடல் ஏற்பட்டது. அது குறித்து கேட்க நினைக்கிறேன்.

‘அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் முதன்மையானவர். பிற எவரும் அவரைவிட பல படிகள் கீழேதான்’. இப்படி சொல்லத்தான் வேண்டுமா? ஒருவரை முதன்மையானவர் என சொல்வதற்கு, பிற எவரும் பல படிகள் கீழேதான் என சொல்லத்தான் வேண்டுமா? அப்படிச் சொல்வதால்தான் நாம் சொல்லவந்ததை முழுமையாகச் சொல்ல முடியுமா? இது சாதாரண கேள்வியாக இருக்கலாம். ஆனால் இதனை வாசித்ததும் என் மனதில் ஏதோ சுருக்கென்றதை மறைக்க விரும்பவில்லை.  மேற்கொண்டு நீங்கள் ஆ.முத்துலிங்கத்தின் கதைகளில் இருப்பது முதன்மையான பண்பாடுகளுக்கு இடையேயான முரண்பாட்டை என சொல்லி சிறு தெளிவை கொடுத்துள்ளீர்கள்.

சமீபத்தில் அகரமுதல்வனின் ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ என்கிற சிறுகதை தொகுப்பை வாசித்தேன். இதுவரை செய்திகளாக பார்த்து கேட்டறிந்தவற்றை ஆழமான கதைகளாக்கியிருந்தார். எனக்கு தெரிந்த செய்திகளில் இருந்து தெரியாத களத்தையும் மனித அவலத்தையும் அகரமுதல்வனின் கதைகளில் வாசித்தேன். அப்படியான கதைகளும் அவசியம் தானே. புலம்பெயர்வு எவ்வளவு முக்கியமோ அவ்வாறே அந்நிலத்திலேயே உயிர் விட துணியும் மனிதர்களின் வாழ்வை பதிவு செய்வதும் முக்கியம் தானே?

இவற்றை உங்களிடம் பகிர நினைத்தேன். பகிர்ந்துள்ளேன். பதில் கிடைக்குமா என தெரியவில்லை. இருந்தும் உங்கள் கவனத்திற்கு வந்தாலே போதும். அன்பும் நன்றியும்.

– தயாஜி

அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்

அன்புள்ள தயாஜி,

பொதுவாக இலக்கிய உரையாடல்களில் சொற்கள் அச்சூழலின் உளநிலைகளை ஒட்டியே கூறப்படுகின்றன. அவற்றை நேர்ச்சொல்லாகப் பொருள்கொள்ளலாகாது. அ.முத்துலிங்கத்தைப் பற்றிய என் கருத்தை 1992ல் அவர் எவரென்றே தெரியாத காலம் முதல் அழுத்தமாக முன்வைத்துவருகிறேன். என் கூற்று அம்மதிப்பீட்டின் இன்னொரு வெளிப்பாடு.

இலக்கியத்தில் இரண்டு வகைமை உண்டு. புறவயமான, திட்டவட்டமான அரசியலையோ சமூகஉண்மையையோ உணர்வுகளையோ சொல்பவை ஒருவகை. அன்றாடவாழ்க்கையில் சாதாரணமாக நிகழாத, ஆனால் கனவுள்ளத்தில் திகழ்ந்து நம்மை ஆட்டிவைக்கும் நுண்மைகளை முன்வைப்பவை இன்னொரு வகை.

முதல்வகை கதைகளுக்கே வாசகர்கள் மிகுதி.ஏனென்றால் அவை அத்தனை வெளிப்படையானவை. அவற்றுக்குக் கூர்ந்த கவனம் தேவையில்லை. ஏற்கனவே பேச்சில் இருந்துகொண்டிருப்பவற்றைத்தான் அவை மீண்டும் சொல்கின்றன. அந்த அரசியலை அல்லது சமூகவியலை அல்லது உணர்வுநிலைகளை நாம் முன்னரே நன்கறிந்திருக்கிறோம். ஆகவே எளிதாக ரசிக்கிறோம்.

இரண்டாவது வகை கதைகள் பூடகமானவை. அப்படித்தான் அவற்றைச் சொல்லவே முடியும். மேல்தோற்றத்துக்கு அவற்றில் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். அவற்றை கூர்ந்து வாசிக்கவேண்டும். அவற்றிலுள்ள கவித்துவக் கூறுகளை கருத்தில்கொள்ளவேண்டும். அவற்றைக் கற்பனையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கான கவனத்தை வாசகர்களிடம் உருவாக்கவே இலக்கியவிமர்சனம் எப்போதும் முயல்கிறது.

ஆனால் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நுட்பமான கதைகள் புரிவதில்லை. அவர்களுக்கு இவை உதவியானவையும் அல்ல. அவர்களுக்குப் பிடித்தவை ’தரப்பு’ உள்ள கதைகள். [தரப்பு இல்லை என்றாலும் அவற்றை உருவாக்கி எடுத்துக்கொள்வார்கள்] அப்பட்டமான கதைகள். ஆகவே அவர்கள் அப்பட்டமான பிரச்சாரம், ஏளனம், பகடி , உணர்வெழுச்சிகள் கொண்ட கதைகளை முன்வைப்பார்கள்.

அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அவர்கள் ‘கொத்திக் கொத்தி முறத்திலிருப்பதையும் கொத்த’ ஆரம்பிக்கும்போது எதிர்வினையாற்றியே ஆகவேண்டும். இல்லையேல் இலக்கியமென்னும் கலை அழிந்துவிடுவிடும். எச்சூழலிலும் இலக்கியத்தில் முதன்மையான கதைகள் இரண்டாம் வகைக் கதைகளே. ஏனென்றால் இலக்கியமென்னும் கலையே இந்தவகையான அகநுண்மைகளை எழுதும்பொருட்டு உருவானதுதான். இலக்கியத்தில், கலையினூடாக மட்டுமே இவற்றைச் சொல்லமுடியும்.

இலக்கியத்தில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு. வெறும்சித்தரிப்புகளும் அரசியல்வெளிப்பாடுகளும் இலக்கியமே. அவை சுவாரசியமாக, கூர்மையாகச் சொல்லப்பட்டிருந்தால் அவற்றுக்கு இலக்கியமதிப்பும் உண்டு. ஆனால் இலக்கியத்தின் படிநிலைகளில் நுண்மைவெளிப்பாடு கொண்ட கதைகள் மிக மேலே நிற்பவை. நான் சுட்டுவது அதையே.

யோசித்துப் பாருங்கள், போரின் கொடுமையை எந்தக் கதையைவிடவும் இன்று ஓர் ஆவணப்படம் அழுத்தமாகக் காட்டிவிடமுடியும். ஒரு செய்தியிலேயே நம்மை வெடித்துச்சிரிக்கவைக்கும் பகடி வெளிப்படமுடியும். அதற்குமேல் இலக்கியம் என்ன செய்கிறது?

ஆனால் இலக்கியம் நிகழ்வது அகத்தில் என்றால், வாசகனின் கற்பனையில் என்றால், அது தனக்கே உரிய வழியினூடாக வேறெந்த ஊடகமும் தொடாத ஓர் இடத்தை தொட்டுவிடுகிறது.

ஓர் உதாரணம், அ.முத்துலிங்கத்தின் ‘விருந்தாளி’ என்னும் சிறுகதை. கதை வெறும் ஒரு நிகழ்வு என்று தன்னை பாவனை செய்கிறது. ஆப்ரிக்கநாடொன்றில் மரமறுக்கும் தொழிற்சாலையில் ஈழத்தமிழர் ஒருவர் பணிபுரிகிறார். அவ்வழியாகச் செல்லும் நாடோடி ஒருவர் அவருக்கு விருந்தாளியாக அமைகிறார். ஒருநாள் தங்கிச் செல்லும் அவருக்காக தன் விலையுயர்ந்த ஒயினை எடுத்து உபசரிக்கிறார் ஈழத்தவர்.அந்நாடோடிக்கு மதுவின் அருமை தெரிய வாய்ப்பில்லை என அவர் நினைக்கிறார், ஆனால் அவருக்கு அவ்வாறு அளிப்பது நிறைவளித்தது.

விடைபெற்றுச் செல்லும் நாடோடி திரும்ப அருகே வந்து சொல்கிறார். “இதுதான் உங்களைப் பார்ப்பது கடைசித்தடவை என்று நினைக்கிறேன். இனிமேல் இதைச் சொல்வதற்குச் சந்தர்ப்பமும் கிடைக்காது. பலவருடங்களுக்குப் பிறகு உங்கள் தயவில் ஓர் உயர்ரக வைனைப் பருக முடிந்தது. முகம் தெரியாத எனக்கு நீங்கள் செய்த இந்த மரியாதை மிக அதிகமானது. என் நிதிநிலைமையில் இப்படியான வைனை நான் இனிமேல் அருந்துவது சாத்தியமில்லை. சாகும்வரை இதை மறக்கமாட்டேன்”

இவ்வளவுதான் கதை. ஆனால் இக்கதையினூடாக ஒரு நுட்பமான வாசகன் செல்லும் தொலைவு மிக அதிகம். ஒயினை அளிப்பவரும் புலம்பெயர்ந்தவர். பெறுபவரும் அவ்வாறே. அவர்கள் மிக அந்தரங்கமாக பரிமாறிக்கொள்ளும் மிகமென்மையான, மிக உயர்வான ஒன்று அந்த ஒயின். இரு உள்ளங்கள் தொட்டுக்கொண்டு ஒன்றையொன்று அறிகின்றன. ஆறுதலோ தேறுதலோ சொல்லும் இடத்தில் அவர்கள் இல்லை. அதற்கப்பால் ஓர் உரையாடல் நிகழ்கிறது. ஒயின் என்னும் ஒற்றைச் சொல்கொண்ட ஒரு மொழியில். அவ்வாறு ஒன்று நிகழவேண்டுமென்றால் நிலத்தை, மொழியை, உறவை இழந்து வெறும் மனிதர்களாக இருவரும் எங்கோ அயல்மண்ணில் சந்தித்துக்கொள்ளவேண்டும்.

அந்த ஒயினை நாம் வேறொன்றாக உணர்கிறோமே, அந்த தருணத்தில் நாம் அடையும் உயர்நிலை ஒன்றிருக்கிறதே, அதுதான் இலக்கியத்தின் உச்சம். அதை திரும்பத்திரும்பச் சுட்டியாகவேண்டும். அதை எய்துவதை உச்ச இலக்காகக் கொள்ளவேண்டும். அதன்முன் அரசியலும் சமூகவியலும் எல்லாம் மிகமிகச் சாதாரணமானவை. அதை நமக்கு நாமே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கியமென்பதே அந்த உச்சத்தை சென்றடைவதற்காகத்தான். இலக்கியம் ஒரு பண்பாடு தன் மிகநுண்மையான ஒன்றை நிகழ்த்திக்கொள்ளும் தருணம். ஓங்கி எழுந்த மாபெரும் மரத்தின் தளிர்நுனி மிகமிக மென்மையானது. அதைப்போல.

அந்நிலையில் நுண்ணுணர்வில்லாதவர்கள் அந்த உச்சத்தின்மேலேயே தாக்குதல் நடத்தும்போது, அதை மறுத்து வெறும் அப்பட்டங்களை முன்வைக்கும்போது ஆணித்தரமாக அந்த வேறுபாட்டைச் சொல்லவேண்டியிருக்கிறது. என் சொற்களை நான் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன். அ.முத்துலிங்கம் எழுதும் கதைகளின் கலைத்தளம் பிறர் எழுதும் கதைகளின் கலைத்தளங்களை விட பல படிகள் மேலானது. அதுவே என்றும் இலக்கியத்தின் இலக்கும் கனவும்.

ஜெ

அ முத்துலிங்கம் இணையதளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.