புதிய எழுத்தாளர்களுக்கு…

அன்புள்ள ஜெ

நான் எழுதிய முதல் கதையை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நீங்கள் படித்துப்பார்த்து உங்கள் கருத்தைச் சொன்னால் நான் என் இலக்கியவாழ்க்கையில் முன்னகர்வதற்கு உதவியாக இருக்கும்.

ஆர்.

***

அன்புள்ள ஆர்

இலக்கியவாதிகளுக்கு எழுத ஆரம்பிப்பவர்கள் தங்கள் தொடக்ககாலப் பயில்முறைப் படைப்புக்களை இப்படி அனுப்பக் கூடாது. அவற்றை வாசிப்பதற்கான நேரம் அவர்களுக்கு இருப்பதில்லை. அதைச்செய்ய ஆரம்பித்தால் வேறெதற்கும் நேரமிருக்காது.

நான் புதிய படைப்புக்களை கவனிப்பதுண்டு. ஆனால் அவை எங்கேனும் பிரசுரமாகியிருக்கவேண்டும். அதுவே முதல் சல்லடை. அதில் தேறுவதே முதல் அறைகூவல். அதை மேற்கொள்ளுங்கள். தரமான இதழ் ஒன்று அக்கதையை வெளியிடட்டும். அது வெளியிடும் வரை உங்கள் எழுத்தை செப்பனிட்டுக்கொண்டு முன்னகருங்கள். அது ஒரு போராட்டம். அந்த போராட்டம் வழியாகவே நீங்கள் முன்னகர்கிறீர்கள். அப்படித்தான் நாங்கள் அனைவருமே வந்திருக்கிறோம்,

அந்த இதழ்கள் உங்கள் படைப்புக்களை நிராகரித்தால் உடனே அந்த இதழ்கள் மேல் விமர்சனங்களை வளர்த்துக்கொள்ளாதீர்கள். வேண்டியவர்களைத்தான் வெளியிடுவார்கள், ஆள்பிடிக்கவேண்டும் என்றெல்லாம் உங்களை நீங்களே வெளியே தள்ளிக்கொள்ளவேண்டாம். அதை அறைகூவலாக எடுத்துக்கொண்டு இலக்கியம் வாசித்து, எழுதி பயிற்சி எடுத்து மேம்படுபவர்களே எழுத்தாளர் ஆகிறார்கள்.

அதன்பின் இரண்டாவது சல்லடை, வெளியானபின் அந்தக்கதை சிலரை பாதிக்கவேண்டும். அவர்கள் அதைப்பற்றிப் பேசவேண்டும். அப்படியாக அது என் வரை வரவேண்டும். என் வாசகர் வட்டம் பெரிது. உண்மையாகவே மதிப்புள்ள படைப்பு நான் மதிக்கும் சிலர் கண்களுக்குப் படும். அதன்பின்னரே நான் வாசிக்கமுடியும். அதுதான் எனக்கு இயல்வது.

சரி, ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் என்ன செய்யவேண்டும்? எப்படி தன் படைப்புக்களைச் செப்பனிட்டுக் கொள்ளவேண்டும்?

இலக்கியப் பயிலரங்குகள் உதவியானவை. நானே அவ்வப்போது புதுவாசகர்களுக்கான பயிலரங்குகள் நடத்துகிறேன். அதில் இரண்டு நாட்களை இதற்காகவே ஒதுக்குகிறேன். அங்கே அனைத்து ஆக்கங்களையும் வாசித்துக் கருத்துரைத்து வழிகாட்டுகிறேன். அங்கே வந்து விவாதிக்கலாம், கற்றுக்கொள்ளலாம்.

தன் தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் படைப்புக்களை கொடுத்து அவர்களிடம் விவாதிப்பது, தொடர்ச்சியாக அவற்றைச் செய்வது மிக அவசியமானது. மூத்த படைப்பாளிகளின் வழிகாட்டலை விட ஒரு படி மேலாக பயனளிப்பது. தமிழகத்தின் பல நகரங்களில் அத்தகைய இளம்படைப்பாளிகளின் கூடுகைகள் நடைபெறுகின்றன. இன்று அமெரிக்காவிலும் பிரிட்டனிலும்கூட தமிழ் இலக்கியக் கூடுகைகள் நிகழ்கின்றன. அவற்றைப் பற்றிய செய்திகள் இந்த தளத்தில் உள்ளன.

[அவ்வண்ணம் எவற்றிலுமே கலந்துகொள்ள முடியாதவர்கள்,எவரிடமும் விவாதிக்க முடியாமல் வாழ்பவர்கள் என்ன செய்ய என்று கேள்வி ஒருமுறை வந்தது. அவர்கள் இலக்கியம் பக்கம் வரவேண்டாம் என்பதே என் பதில். வாழ்க்கையில் தான் முதன்மையாகக் கருதும் ஒன்றுக்காக சற்றும் பணமோ, நேரமோ செலவிட முடியாதபடி வாழ்பவர் அறிவார்ந்த உள்ளடக்கமோ தீவிர ஆர்வமோ இல்லாதவர். அவரெல்லாம் எழுதவோ வாசிக்கவோ கூடாது. வேறு ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன.]

ஜெ

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.