கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நான் தங்கள் தளத்தை ஓராண்டுக்கு மேலாக வாசித்து வருகிறேன். நான் முன்பு என் மேல் நம்பிக்கை இல்லாமல் ஆஞ்சி எந்த ஒரு செயலை செய்யவும் துணிவு இல்லாமல் இருந்தேன். காரணங்கள் பல அதில் ஒன்று என் கை நடுக்கம் (இது பரம்பரை பரம்பரையாக வர அதிக வாய்ப்பு உள்ளது ). நான் மருத்துவன் ஆணதல் என் கை நடுக்கம் அனைவரின் கவனத்தையும் இர்த்தது, நோயாளிகள், செவிலியர்கள் என அனைவரும் என்னை கேட்க என் கை நடுக்கம் மேலும் அதிகரித்தது. இதுவரை மது அருந்தாத என்னை கொஞ்சம் சரக்கை நிறுத்தினாதான் என்ன என்று பலர் கேட்டது உண்டு.

மேலும் இன்னும் பல குடும்ப சிக்கல்கள்.இதனால் நான் இரண்டு வருடங்கள் எந்த மருத்துவமனைக்கும் வேலைக்கு செல்லவில்லை. Post graduate தேர்வுக்காக படிக்க துவங்கினேன். ஆனால் அது நான் என் மீது கொண்ட அவனம்பிக்கையை அதிகரித்தது என்று உங்கள் தளத்தை வாசித்த நாட்களில் தெரிய வந்தது.

என்னை நான் மீட்டு எடுக்க செயல் ஆற்றுவது ஒன்று தான் வழி என்று கண்டுகொண்டேன். என் குறையை ஏற்று கொள்ள என் மனம் விரும்பாமல் என் தாழ்வுணர்ச்சிக்கு என் குடும்ப பிரச்சனைகளையும் ம ற்றவர்களையும் காரணம் காட்டியது. அந்த சுயஇரக்கத்தில் இருந்து நான் வெளியே வந்தது உங்கள் எழுதுக்களால் தான், இல்லை உங்களால் தான்,ஆம் உங்கள் எழுத்துக்கள் மூலம் நான் உங்களுடன் நேரடியான உரையாடலில் இருக்கிறேன்.

இன்று நான் வேலூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதுக்கு இரண்டு காரணங்கள் ஒன்று நீங்கள், இன்னொன்று உங்கள் வாசகனா கிய நான்.

நீங்கள் சித்திரை திருநாள் அன்று உங்கள் குருவான நித்ய சைதன்ய யதி அவர்கள் பற்றி ஆற்றிய காணொளியை உங்கள் தளத்தில் பகிர்ந்தால் என்னை போன்ற பலர் பயன் பெறுவார்கள்.

அனைத்திற்கும் நன்றி ஜெ.

இப்படிக்கு,

குமார்

அன்புள்ள குமார்

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். செயல் உங்களை வளர்க்கட்டும். செயல் வழியாக நாம் கடந்துசெல்லும் போது மேலும் மேலும் புதிய களங்களைக் கண்டுகொள்கிறோம். அவ்வாறு அமையட்டும். வாழ்த்துக்கள்

ஜெ

அன்புள்ள ஜெ,

 

தமிழ் எழுத்துலகிற்கு உங்களின் பங்களிப்பு என்பது பிரம்மாண்டமானது. புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. நாளும் சிலமணி நேரம் உங்களை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்குள் ஒரு அறிதல் நிகழ்கிறது.  உங்களின் தீவிரமான எழுத்து , சலிப்பூட்டும் நடைமுறை வாழ்வில் இருந்து விடுபட்டு உக்கிரமான கற்பனை – நிகர் உலகில் வாழ வைக்கிறது. குறைந்த பட்சம் நடைபிணம் போல இருக்காமல் உயிர்ப்புடன் வாழ உங்கள் படைப்புகளை பற்றிக் கொண்டிருக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சித்திரை பௌர்ணமிக்கான காணொளி வாசகர் சந்திப்பில் உங்களிடம் பேசியதும் பெரு மகிழ்ச்சியில் திளைத்தேன். உங்களிடம் கேட்பதற்கு பல கேள்விகள் இருந்தும் அனைத்தும் மறந்து விட்டது. அந்த இரண்டு மணிநேரமும் உங்களை பார்த்துக் கொண்டே இருந்தது உச்சகட்ட மகிழ்வை கொடுத்தது. சுரா தீவிரமான உரையாடல்களில் பேரழகனாக மாறுவார் என நீங்கள் சொன்னதை அப்போது நேரடியாக பார்த்தேன்.

“ஒழுங்கு என்பது நாம் அறிந்த வரிசைமுறையையும் தர்க்கத்தையும் கொண்டது. ஒழுங்கின்மை என்று நாம் சொல்வது நமக்குத்தெரியாத ஒழுங்கை” என்னும் உங்களின் ஆப்த வாக்கியத்தை பின்பற்றுவதால் பெரிதாக கண்டுகொள்ளவில்லை . அது போக 45 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு நேற்று தான் தடுப்பூசிக்கான முன்பதிவு ஆரம்பித்தது.நான் பதிவு செய்து விட்டேன்.

நீங்கள் மேலும் இதே உக்கிரத்துடன் எழுத வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். மகாபாரதத்தை வெண்முரசு என மறுஆக்கம் செய்தது போல் இராமாயணத்தையும் , வேதாந்த – பௌத்த வரலாற்றை அதன் ஆசிரியர்களுடன் சேர்த்து மறுஆக்கம் செய்தால், அது தமிழிற்கு கிடைக்கக் போகும் மாபெரும் அதிர்ஷ்டம். விஷ்ணுபுரத்தில் ஒரு பகுதியாக வரும் இந்த பகுதி உங்களின் எழுத்தில் பேருருக் கொள்கையில் வாசகனுக்கு அதுவே இன்னொரு மாபெரும் பொக்கிஷம்.

இ.ஆர்.சங்கரன்

அன்புள்ள சங்கரன்

நலம்தானே?

நானும் நலம்.

இந்நாளில் இன்னொரு காலகட்டம் தொடங்கியிருப்பதாக உணர்கிறேன். புதிய களங்கள் காத்திருக்கின்றன என்றும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.