‘குருதிச்சாரல்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 16 ஆவது நாவல் ‘குருதிச்சாரல்’. ‘சாரல்’ என்பதைத் ‘தெறித்தல்’, ‘சிதறுதல்’ என்று பொருள்கொள்ளலாம். மழைத்துளிகள் சிதறுவதை ‘மழைச்சாரல்’ என்போம். அதுபோலவே, ‘குருதிச்சாரல்’ என்பதை, குருதித்துளிகள் சிதறுதலை, குருதித்துளிகள் விலகுதலை, குருதித்துளிகள் ஓர்மையறுவதைக் குறிப்பதாகக் கருதலாம்.

இந்த நாவலில் இரண்டு முதன்மையான கூறுகள் உள்ளன.

ஒன்று – அரசக் குருதியுறவுகள் சிதறுதல்.

இரண்டாவது – அரண்மனை அகத்தளங்களில் வாழும் அரசகுடிப் பெண்களின் எழுச்சி.

குருவம்சத்தின் குருதி சிதறுகிறது. அதிலும் திருதராஷ்டிரரின் குருதிவழியினர் அவரை விலக்குகின்றனர். கௌரவர்கள் பாண்டவர்களை விலக்குகின்றனர். பாண்டவர்களின் பிறப்பும் அது சார்ந்து குந்தியின் கற்பும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

திருதராஷ்டிரர் இசையைக் கேட்பதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, நாற்கரம் ஆடக் கற்றுக்கொள்ளுதலும் தனக்குத் தானே ஆடி மகிழ்தலும் ஒரு குறியீடாகவே படுகிறது. அவர் இசைகேட்ட காலங்களில் அவர் உள்ளத்தளவில் முழுமையாகவே அஸ்தினபுரியைவிட்டு விலகியே இருந்தார். அவர் நாற்கரம் ஆடத் தொடங்கியதும் அவரின் உள்ளம் முழுமையாகவே அஸ்தினபுரிக்குள் புகுந்துகொண்டது.

அதன் பின்விளைவாகவே அவர் சஞ்சயனை மறைமுகமாகப் பாண்டவர்களிடம் தூது அனுப்புகிறார். அது ‘மன்றாட்டு’ என்ற போர்வையில் விடுக்கப்பட்ட ஆணைதான். அந்த ஆணையின் முதன்மைநோக்கம் தன் குருதிவழியினரைக் காப்பதே. அதன் துணைமை நோக்கம் அஸ்தினபுரியின் ஆட்சிக்குட்பட்ட பெருநிலத்தை எவ்வகையிலும் பங்கிடுவதைத் தடுத்தலே.

அந்த ஆணையைப் பீமன்,

எந்தை இட்ட ஆணை என்னை முழுக்க ஆள்வதே. குலமூதாதையெனத் தருக்கி நின்று அவர் சொல்லியிருந்தால் அதை உதறி முன்சென்றிருப்பேன். குலத்தின்மேல் சொல்லாண்மை அற்றவர் குலமூதாதை என்று ஆணையிடும் உரிமையற்றவர். குடிமூத்தார் என்றும் அவர் நின்று ஆணையிடமுடியாது , ஏனெனில் , குடிநெறியனைத்தையும் கைவிட்டுவிட்டு அங்கு அமர்ந்திருக்கிறார். ஆனால், மைந்தரை முன்வைத்து எளிய தந்தையென்று அவர் கூறிய சொல் என்னை முற்றிலும் ஆள்கிறது. எந்தையின் கண்ணீரை அருகிலெனக் காண்கிறேன். அதற்கப்பால் ஒரு சொல்லும் என்னுள் இல்லை

என்று கூறி ஏற்கிறான். அந்த ஆணைப் பாண்டவர்களுக்கு எத்தகைய இழப்பினை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் எந்த நிலையிலும் திருதராஷ்டிரருடனான குருதியுறவைப் பேணவே விரும்புகிறான்.

இளைய யாதவரின் முதற்தூதால் திருதராஷ்டிரரின் அந்த மறைமுகத் தூது வெட்டவெளிச்சமாகிறது. அப்போது திருதராஷ்டிரர் தன் மகன்களிடம்,

“என் மைந்தரே , உங்கள் உடன்குருதியினரிடம் எந்நிலையிலும் பூசலிடாதிருங்கள். எதன்பொருட்டும் அவர்களுக்கு எதிராக உங்கள் படைக்கலங்கள் எழக்கூடாது. உங்கள் கையால் அவர்களின் குருதி சிந்தக்கூடாது. அவர்களின் மைந்தரும் மைந்தர்மைந்தரும் உங்களுடையவர்களென்றே ஆகுக! அதுவே , விண்ணமைந்த நம் மூதாதையர் உகக்கும் செயல். நம் குடியினருக்கு நலம்பயப்பது. நம் கொடிவழியினர் தழைக்க அடிகோலுவது. அளி கூர்க! தந்தைக்குப் புன்கொடையென இதை அளியுங்கள் , என் குழந்தைகளே !

எனறு மன்றாடுகிறார். ‘பிறர் கேட்டும் கொடுக்கவில்லை’ என்ற நிலையில் அந்தக் கொடையைப் ‘புன்கொடை’ என்று சொல்லலாம். துரியோதனனிடம் பலவகையிலும் பலரும் மன்றாடியும் அவன் கொடுக்கத் தயங்கும் கொடையினைத் தனக்குப் புன்கொடையாகத் தருமாறு திருதராஷ்டிரர் வேண்டுகிறார்.

சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே நிகழ இருந்த பெரும்போரைத் தவிர்ப்பதற்காகக் கோவூர்கிழார் முயன்ற செயலை நாம் இங்கு ஒப்புநோக்கலாம்.

“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன் ;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!

நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ; நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ;

ஒருவீர் தோற்பினும் , தோற்ப நும் குடியே ;   

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே ; அதனால் ,

குடிப்பொருள் அன்று , நும் செய்தி ; கொடித்தேர்

நும்மோர் அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும் , இவ் இகலே! ” (புறநானூறு, பாடல் எண்- 45.     

இந்தப் பாடல் முற்றுகை இட்டிருக்கும் நலங்கிள்ளிக்கும் முற்றுகைக்குள்ளே இருக்கும் நெடுங்கிள்ளிக்கும் கூறும் அறிவுரையாக அமைந்துள்ள பொதுப் பாடல். உன்னை எதிர்ப்பவன் பனம்பூ மாலை சூடிய சேரனும் அல்லன். வேப்பம்பூ மாலை சூடிய பாண்டியனும் அல்லன். உன் கண்ணியும் உன்னை எதிர்ப்பவன் கண்ணியும் சோழர் குடிக்கு உரிய ஆத்திப்பூ. இருவரில் யார் தோற்றாலும் தோற்பது உன் குடியே என்கிறார் புலவர் கோவூர்கிழார்.

கௌரவரோ, பாண்டவரோ இருதரப்பில் யார் அழிந்தாலும் அழிவது ‘குருவம்சத்தின் குருதியினரே!’ என்பதால்தான் திருதராஷ்டிரர் இந்த மன்றாட்டினைத் தம் மைந்தரிடம் முன்வைக்கிறார்.

துரியோதனன், ‘பெருநிலத்தைத் தானே முழுதாள வேண்டும்’ என்ற மண்ணாசையால், தன் நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் தன் தந்தையின் குருதியுறவைத் தன்னிலிருந்து முற்றாக விலக்கவும் கலிதேவனுக்குத் தன்னை முழுதளிக்கவும் முன்வருகிறான்.

திருதராஷ்டிரர் தனக்கும் தன் மகனுக்குமான குருதியுறவைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகவே துரியோதனன் செய்த, செய்கிற, செய்யவுள்ள அனைத்துக் கீழ்மைகளுக்கும் அனுமதியளிக்கிறார். பாண்டவர்களைக் கொன்றொழிக்கவும் நாட்டைத் துரியோதனனே முழுதாளவும் உளம்விரும்பி ஆணையிடுகிறார்.

ஆனாலும், துரியோதனன், ‘திருதராஷ்டிரர் தனக்குத் தந்தை அல்லர்’ என்ற நிலைப்பாட்டினை எடுத்து, தன்னைக் கலிதேவனுக்கு முழுதளித்தவுடனேயே திருதராஷ்ரர் வேறு வழியின்றி, தன் தம்பி பாண்டுவின் குருதிவழியினரைக் காப்பதற்காக, சஞ்சயன் வழியாக மறைமுகமாகப் பாண்டவருக்கு அளித்திருந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்.

ஆக, இறுதிக்காலத்தில் திருதராஷ்டிரர் ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய ஏதாவது ஒரு குருதிவழியினரைப் பேணிக்கொள்ளவே விரும்புகிறார். அவரின் முதன்மை நோக்கம் கௌரவர்களைக் காப்பது. துணைமை நோக்கம் பாண்டவர்களைக் காப்பது.

இறுதிக்காலத்தில் திருதராஷ்டிரரிடம் ‘அறம்’ என்பது, கானல்நீராகிவிடுகிறது. ‘பெருந்தந்தை’ என்ற நிலையில் இருந்து அவர் சறுக்கிவிடுகிறார். தன்னைத் ‘தந்தை அல்லர்’ என்று புறக்கணித்த துரியோதனனைப் பழிவாங்கவே தான் பாண்டவருக்குச் சஞ்சயன் வழியாக விடுத்திருந்த ஆணையைத் திரும்பப் பெறுகிறார் என்றே கருதவேண்டியுள்ளது. அதனை நாம் பாண்டவர்களின் மீதான பாசம் என்று எந்த நிலையிலும் கருதவேண்டியதில்லை.

‘பெருந்தந்தை’ என்ற நிலையிலிருந்த திருதராஷ்டிரர், குருதிப்பற்றால் சிறுமையடைந்து ‘வெறுந்தந்தை’யாகிவிடுகிறார்.

இதுநாள்வரை அரண்மனை அகத்தளங்களில் ஒருவகையில் அடிமைகளாகவே இருந்துவந்த அரசகுடிப் பெண்கள், தங்களின் மைந்தர்களின் உயிரைக் காப்பதற்காகப் போர்ரைத் தவிர்க்கவேண்டிப் பலவகையில் அரசுசூழ்கின்றனர்.

விழாக்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே அரசவையில் அமர்ந்தவர்கள், தம் கருத்தாக எதையுமே இதுவரை பேசாதவர்கள் போரை முன்னிட்டுத் தம் கருத்துகளை முன்வைக்கத் துணிகின்றனர். அன்னையருக்குத் தம் மைந்தர் மீதிருக்கும் ‘பெரும்பற்று’ இதன் வழியாக நிறுவப்படுகிறது.

மற்றொரு வகையில், தம் மைந்தருக்கு நிலங்களைப் பெற்றுத்தரும் போராட்டத்தையும் அவர்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த நாவலில் பேருருக் கொள்பவர்களாகத் தேவிகை, அசலை, துச்சளை, தாரை, பலந்தரை, விருஷாலி, சுப்ரியை, பிந்துமதி, கரேணுமதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் பேரன்னையராக உருவெடுக்க விரும்புகின்றனர். அதனை முன்னிட்டே தம் கணவன்மார்களைப் புறக்கணிக்கவும் தன் மைந்தர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு அளிக்கவும் அவர்கள் பின்னாளில் ஆள்வதற்குரிய நிலத்தை உறுதிசெய்யவும் துடிக்கின்றனர்.

தேவிகை பூரிசிரவஸிடம்,

“அன்னையராகிய நமக்கு நிலமில்லை , குலமும் குடியும் நகரும் கொடியும் ஒன்றுமில்லை. நாம் பெண்கள் , அன்னையர். பிறிதெவருமில்லை. அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதோ இந்திரப்பிரஸ்தத்தின் முடியுரிமைப்போரில் என் மைந்தன் களமிறங்குகிறான். நான் இந்திரப்பிரஸ்தத்தை j தெரிவு செய்யவில்லை. அவனை ஆக்கிய உயிர்த்துளியை விரும்பி ஏற்றுக்கொள்ளவுமில்லை. பானுவும் அசலையும் அவ்வாறே. இந்தப் போர் எங்களுடையதல்ல. ஆனால், இழப்புகளனைத்தும் எங்களுக்கே. எவர் வென்றாலும் தோற்பவர் அன்னையரே!”

என்கிறார்.

இரண்டாம்முறை தூதாக இளைய யாதவர் ஷத்ரிய அவைக்குச் செல்லும்போது, துரியோதனனால் பாண்டவர்களின் பிறப்பும் அது சார்ந்து குந்தியின் கற்பும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இதுகுறித்து, விகர்ணன் விருஷாலியிடம்,

ஷத்ரிய அவையில் இழிவுபடுத்தப்பட்டது நம் அன்னை மட்டுமல்ல, ஒரு குலமகள். இனிப் பிறக்கவிருக்கும் அஸ்தினபுரியின் அனைத்துப் பெண்டிரும் அவைச்சிறுமை கொண்டிருக்கின்றனர். இனி எந்த மன்றிலும் எந்த ஆணும் அன்னையையும் துணைவியையும் அவைக்கு வந்து தன் கருப்பைமுளைக்குப் புறச்சான்று சொல்க என்று ஆணையிட முடியும். எந்த மைந்தனையும் தாயைச் சொல்லி அவைவிலக்கு செய்ய முடியும். கீழ்மையை மானுடருக்குக் கற்பிக்க வேண்டியதில்லை. அதை அவர்களே நன்கறிவார்கள். அதைச் செய்யலாகாது என முன்னோர் அளித்த ஆணையை மட்டும் சற்று வேலியுடைத்துவிட்டால் போதும், திரண்டு பெருக்கெடுக்கும் நம் சிறுமதியும் தன்னலமும் பெருவிழைவும்.

என்று கூறுகிறான். மானுட மனங்களில் ததும்பும் கீழ்மைகளைப் பற்றிய விரிவான விளக்கமாகவே இதனைக் கொள்ள முடிகிறது. கீழ்மையுடையோர் மட்டுமே பேராசை கொள்கின்றனர். அவர்கள் தம் பேராசையை நிறைவுசெய்துகொள்ள எத்தகைய கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர் என்பதை இதன் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான இந்த மண்பங்கீட்டுச் சிக்கலில் இளைய யாதவர் தாமே விரும்பித் தலைகொடுக்கிறார். இதன் வழியாக அவர் தான் இந்த உலகில் வேதமுடிபு மெய்மைக் கொள்கையை நிலைநாட்ட விரும்புகிறார். தன்னுடைய வேதமுடிவுக் கொள்கை பற்றி,

இமயத்திலிருந்து எழுந்ததே கைலை மலைமுடி. ஆனால் புலரிப்பொன்னொளியில் வான்விரிவு அதை தான் எடுத்து மடியில் வைத்திருக்கிறது. வேதமுடிபு வேதமே. ஆனால் முழுமையின் மெய்யொளியில் அது வேதங்களுக்கும் மேல் விண்ணில் எழுந்து நிற்கிறது. வேதங்களை , வேதக்கூறுகளை , துணைவேதங்களை மதிப்பிடும் துலாவின் நடுமுள் அது. அறிவனைத்தும் வேதத்தின் ஒளியால் துலங்குபவை என்கின்றனர் முன்னோர். எனவே மானுட மெய்மை அனைத்தையும் அளவென்றாகி மதிப்பிட்டு , மையமென்றமைந்து தொகுத்து , ஒளியென்றாகி துலக்கி , வானின் ஒலியென்றாகி வழிகாட்டிச் செல்லும் தகைமை கொண்டது வேதமுடிபு

என்று கூறியுள்ளார் இளைய யாதவர்.

பாண்டவர்களின் பக்கம் நின்று கௌரவர்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில், பாண்டவர்கள் இளைய யாதவரையே விரும்பித் தேர்கின்றனர்.

இளைய யாதவர் பாண்டவர்களின் சார்பாகக் கௌரவர்களிடம் மும்முறை  தூதுசெல்கிறார். இது குறித்து அவர் பலந்தரையிடம்,

அரசி , எனக்கு மூன்று முகங்கள் என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள். யாதவக் குடிப்பிறந்தவன் என்ற வகையில் என் அத்தையின் மைந்தருக்காக முதலில் சொல்லுடன் சென்றேன். படைமுகம் நின்றவன் , நாடாண்டவன் என்னும் முறையில் ஷத்ரிய அவையில் சென்று சொல்சூழ்ந்து மீண்டுள்ளேன். இன்று சாந்தீபனி குருநிலையில் வேதம் முற்றோதிய முதலாசிரியன் என்ற முறையில் செல்ல எண்ணுகிறேன். இதுவே , என் முதன்மை முகம். என் முழு ஆற்றலும் இதிலேயே. இது வெல்லும்

என்று கூறுகிறார்.

இளைய யாதவர் பாண்டவர் சார்பாக மேற்கொள்ளும் மூன்றாவது தூதின் போது, வேள்வியில் வேள்விக்காவலராகத் துரியோதனன் அமரும்போது அவருக்குத் வேள்வித்துணைவராகக் கர்ணனை அமர்த்த வேண்டும் என்று சூழ்ச்சி  செய்கிறார்.  அந்தச் சூழ்ச்சியின் பின்னணியாக இளைய யாதவர்,

“வேதம் காக்கும் வில்லுடன் எழுந்து நின்றிருக்கும் அங்கநாட்டரசர் அவ்வண்ணம் இங்கு எழவிருக்கும் பல்லாயிரம் புதிய ஷத்ரியர்களின் முதல் வடிவம். அவர் அவையமர வேண்டும். வேள்விச்செயல் முடிக்கவேண்டும். அது பாரதவர்ஷத்திற்கே இப்பெருவேள்விநிலை அளிக்கும் செய்தியாக அமைய வேண்டும்”

என்று கூறுகிறார். ஆனால், இளைய யாதவரின் உள்ளத்தையும் அவரின் சூழ்ச்சியையும் நன்குணர்ந்த சல்லியர்,

இளைய யாதவர் மிகச் சிறப்பாகச் சொல்நகர்த்தி, சரியான புள்ளிக்குக் கொண்டுவந்துள்ளார். இன்று இந்த அவைக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. நாம் அங்கநாட்டரசரை வேள்வியவையிலிருந்து வெளியேற்றுவது. அதனூடாக நாம் நம் தரப்பில் வில்லேந்தவிருந்த மாபெரும் வீரர் ஒருவரை இழக்கிறோம். அல்லது அவரை அவையமரச் செய்யலாம். அதனூடாக நாம் ‘வேள்விக்காவலுக்கென முன்னோரால் அமைக்கப்பட்ட தொல்குடி ஷத்ரியர்களின் உரிமைக்காக எழுந்துள்ளோம்; வேதநெறி மாறாது காக்க உறுதிகொண்டுள்ளோம்’ என்பதை நாமே மறுக்கிறோம். அதன்பின் ஷத்ரியப் படைக்கூட்டே பொருளில்லாமலாகும். இரண்டில் எதைத் தெரிவு செய்தாலும் நாம் தோற்றவர்கள்; அவர் வென்றவர். இதில் அங்கர் வெளியேற்றப்பட்டால், நாம் இழப்பது சிறிது. போரில் எந்தத் தனிமனிதனும் இன்றியமையாதவன் அல்லர். பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமர், ஜயத்ரதர், துரியோதனர் என்னும் பெருவீரர்கள் நமக்கிருக்கிறார்கள். ஷத்ரியப் பெருவீரர் உடனிருக்கிறார்கள். கரையிலாப் பெரும்படை உள்ளது. நாம் வெல்வோம் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவரை வேள்விக்கு அமர்த்தினோமென்றால், நம் படை மெல்ல மெல்ல சிதறுவதை நம்மால் தடுக்கவே முடியாது. ஏனென்றால், தென்றிசை அரசர்கள் இப்போதே சைந்தவ, சாரஸ்வத, காங்கேய நிலத்தின் தொல்குடி ஷத்ரியர்கள் படைமுதன்மை கொள்வதை எண்ணி கசப்பும் அச்சமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இது வேத உரிமைகொண்ட ஷத்ரியர்களின் படைக்கூட்டு என்னும் சொல்லே நாம் சொல்லும் மறுமொழியாக உள்ளது. அதை மறுத்தால் இக்கூட்டைக் கட்டியமைத்திருக்கும் சரடு அறுபடுகிறது. பாண்டவர் தரப்பின் மிகப் பெரிய படைக்கலம் இளைய யாதவரின் நாக்கே என்பதில் ஐயம் தேவையில்லை

என்கிறார். வேள்வியிலிருந்து கர்ணன் வெளியேற்றப்படுகிறார். அவரின் இடத்தில் கௌரவர்களின் மச்சினன் ஜயத்ரதன் அமர்த்தப்படுகிறார்.

இளைய யாதவர் தான் பாண்டவர்களின் சார்பாக மேற்கொண்ட மூன்று தூதிலும் தோற்றவராகித் திரும்புகிறாரா? என்ற நமக்கு எண்ணத் தோன்றும். இல்லை. இந்த மூன்று தூதுகளின் வழியாகப் பாண்டவர்கள் எந்தநிலையிலும் போரை விரும்பவில்லை என்பதும் மண்மீதான கௌரவர்களின் பேராசையும் உலகறியச் செய்யப்படுகின்றன. கௌரவர்களின் படைத்தலைமையிலிருந்து கர்ணனை முற்றொதுக்கவும் முடிகிறது.

ஆனால், இளைய யாதவரால் தன்னுடைய வேதமுடிபுக்கொள்கையை நிலைநாட்ட இயலவில்லை. ஆனால், அதனை அவர் நிகழவுள்ள குருஷேத்திரப் போரின் வழியாக நிலைநாட்டிவிட இயலும்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் இந்த நாவலிலும் தம்முடைய மிகச்சிறந்த உவமை வரிகளைப் பயன்படுத்தியுள்ளார். அதற்குச் சான்றாக,

“ஒற்றை ஓநாய் கால்தடம் நூல்தையல் வரி என ஓடிச்சென்று, பிணைத்த செவ்வலை ஏடுகளாலான பாலை மணல்வெளி. இமயமலைச்சரிவு மீது மெல்ல நகர்ந்து செல்லும் மலைமுகில் நிழல். குளிர்நீர்க் கோதையின் மீது அசைவற்று நின்றிருக்கும் முதலைவடிவப் படகுகள். ஏடுகளை அடுக்கி வான் வரை நிறுத்தியது போன்று அங்குள்ள கற்தட்டு மலைகள்”

என்ற இந்தப் பகுதியினைக் காட்டலாம்.

இந்த நாவலில் இடம்பெற்றுள்ள அரசகுடிப் பெண்களிடம் இரண்டு பொதுநலன் சார்ந்த கருத்துகளும் இரண்டு தன்னலம் சார்ந்த கருத்துகளும் இருப்பதைக் காணமுடிகிறது.

திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தம் கணவன்மார்களைப் புறக்கணித்த பெண்களையும் நிகழவுள்ள பெரும்போரைத் தவிர்ப்பதற்காகத் தனிப்பட்ட முறையில் தூதினை மேற்கொள்ளும் பெண்களையும் போரில் தன் மைந்தரின் குருதிசிந்தப்படலாகாது என்றும் போருக்குப் பின்னர் தன் மைந்தர் ஆள நிலம் தேவை என்பதற்காகவும் பல வகையில் போராடும் பெண்களையும் இந்த நாவலில் காணமுடிகிறது.

இந்த நாவலில் முழுக்க முழுக்க அகத்தளப் பெண்களைப் பேச வைத்திருக்கிறார் எழுத்தாளர். அவர்களின் விழைவுகளின் வழியாகவே, அவர்களை அன்னையர் நிலையிலிருந்து பேரன்னையராக்க எழுத்தாளர் முனைந்துள்ளார்.

முனைவர் . சரவணன், மதுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.