அன்று கண்ட முகங்கள்
தமிழ் நாடகக் கலைமணிகள் என்றொரு நூலைச் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் எழுதியிருக்கிறார். சிறந்த நடிகரான வெங்கட்ராமன் நாடகம் சினிமா இரண்டிலும் நீண்டகால அனுபவம் கொண்டவர். அவர் தனது நினைவுகளைத் தொடராக எழுதியிருக்கிறார். அதை அறந்தை நாராயணன் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.

இந்த நூல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது.

அந்தக் கால நாடக உலகம் மற்றும் திரையுலகம் சார்ந்த ஆளுமைகளையும் அனுபவங்களையும் வெங்கட்ராமன் சுவைபட எழுதியிருக்கிறார்.
இதில் மூன்று கட்டுரைகள் மிக முக்கியமானவை.
நாடகவுலகின் ராணியாகக் கொண்டாடப்பட்ட பாலாமணி அம்மையார் பற்றிய கட்டுரையில் அவர் எவ்வளவு புகழ்பெற்றிருந்தார் என்பதை பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது.

பாலாமணி ஸ்பெஷல் ரயில் பாலாமணி குதிரைவண்டி பாலாமணி பட்டுப்புடவை என்ற அந்தக் காலத்தில் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அவரது நாடகம் ஆரம்பமாகும் இரவு நேரத்தில் திருச்சியிலிருந்தும் மாயவரத்திலிருந்தும் ரயில்கள் கும்பகோணம் வந்து நின்று காலை மூன்று மணிக்குத் திரும்பப் புறப்படும். அதன் பெயரே பாலாமணி ஸ்பெஷல் ரயில்.
நாடகம் நடக்கும் போது ரசிகர்கள் மெய்மறந்து கையிலுள்ள் பணம் மற்றும் நகைகளைக் கழட்டி வீசுவார்கள்.
அவரது வீடு ஜமீன் மாளிகை போலிருக்கும். அங்கே நாற்பது வேலையாட்கள் இருந்தார்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் அன்னதானம் இரவு 9 மணிக்குத் தான் முடியும். நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தான் பாலாமணி போய்வருவார். அதை வேடிக்கை பார்க்க வீதி முழுவதும் மக்கள் திரண்டு நிற்பார்கள். அவரைக் காணாமல் போகமாட்டேன். என நாள் முழுவதும் வீட்டின் முன்பு காத்துகிடப்பவர்களும் உண்டு.
இத்தனை புகழுடன் இருந்த பாலாமணி கடனில் வீடு மற்றும் சொத்துகளை இழந்து மிகுந்த வறுமையில் கஷ்டப்பட்டு மதுரையில் சிறிய குடிசை வீட்டில் வசித்தார் என்பதையும், அவர் இறந்த போது அடக்கச் செய்யக் காசில்லாமல் நிதிவசூல் செய்தார்கள் என்பதையும் படிக்கும் போது வேதனையாகவே இருக்கிறது.
இது போலவே எஸ்.வி. சுப்பையா பற்றிய கட்டுரையில் கப்பலோட்டிய தமிழனில் அவர் பாரதியாக நடித்த அனுபவம். இதற்காக மும்பைக்குச் சென்ற பயணம். மற்றும் அவரது உதவி செய்யும் குணம், முன்கோபம். மூத்த கலைஞர்கள் மீது அவர் கொண்ட மரியாதை. நடிப்பில் அவர் காட்டிய தீவிரம் என அவரது ஆளுமை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

சந்திரபாபுவைப் பற்றிய கட்டுரை கண்ணீரை வரவழைக்கக்கூடியது. வீட்டின் மாடிக்கே கார் போய் நிற்கும்படியாக மிக வசதியான வீடு ஒன்றைக் கட்டுகிறார் சந்திரபாபு. இறுதிவரை அதைக் கட்டி முடிக்க இயலவில்லை. எதிர்பாராத தோல்விகள். அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை., சந்திரபாபுவின் மேற்கத்திய இசை குறித்த ஈடுபாடு. திரையுலகில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள், அவருடன் வெங்கட்ராமன் கழித்த இரவு என விவரித்து வரும் வெங்கட்ராமன் சந்திரபாபு வறுமையில் தன் வீட்டில் யாருமில்லாமல் அநாதை போல இறந்து கிடந்த நாளையும், அவரை நல்லடக்கம் செய்யத் தானும் மேஜர் சுந்தர்ராஜனும் செய்த ஏற்பாடுகள் பற்றியும் அதற்கு சிவாஜி செய்த பணஉதவி குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.
அந்தக் கால நாடக உலகம். நடிகர்களின் வறுமைநிலை. நாடகங்களில் செய்யப்பட்ட புதுமைகள். எம்ஜிஆர் செய்த நற்செயல்கள். என்.எஸ். கிருஷ்ணன் கஷ்டப்படுகிறவர்களுக்குச் செய்த உதவிகள். அவரது திருமணம், தங்கவேலு சினிமாவிற்கு வந்த கதை. கிட்டப்பா, கேபிசுந்தராம்பாளின் காதல். திருமண வாழ்க்கை, முத்துராமன் சினிமாவிற்கு வந்தவிதம் எனப் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை எழுதியிருக்கிறார் வெங்கட்ராமன்.
இவை அந்தக் கால கலையுலகின் அழியாத நினைவுகள். பின் இணைப்பாக உள்ள புகைப்படங்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த முகங்களுக்குள் சொல்லப்படாத ஆயிரம் கதைகள் இருக்கின்றன.
அவசியம் வாசிக்க வேண்டிய சிறிய நூல்.
இணைப்பு :
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
