ஒரு அடியீடு மட்டும்

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற மலையாள எழுத்தாளர் என். பி. முஹம்மதுவின் ஒரு அடியீடு மட்டும் மறக்கமுடியாத சிறுகதை. பாலைவனத்தின் காட்சிகளை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இவரது வேறு கதைகள் எதுவும் தமிழில் வெளியாகியுள்ளதா எனத் தெரியவில்லை.

இந்தக் கதையை வாசித்துப் பல ஆண்டுகள் ஆகியும் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. நீதிக்கதைகளின் சாயலில் எழுதப்பட்டிருந்த போதும் கொள்ளைக்கார யூசுஃப் யாத்ரீகனை சந்திக்கும் காட்சியும் நன்மையின் பாதையில் செல்ல முற்படுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அடி தான் இடைவெளி என்பது முக்கியமான குறியீடு. நன்மைக்கும் தீமைக்குமான இந்த இடைவெளி சிறியதாகத் தோன்றினாலும் சிறியதில்லை. இதைக் கடப்பதும் எளிதானதில்லை.

•••

.ஒரு அடியீடு மட்டும்

என். பி. முஹம்மது

கனன்று எரிகின்ற வாழ்க்கையையும் பளிங்குக் குவளையில் செருகிய மஞ்சள் இலைகள் போன்ற தீ நாக்குகளையும் பின் தள்ளிவிட்டு யூசுஃப் நகர வாசலைக் கடந்தான்.

ஆகாயத்தில் முத்துமணிகள் உலரப் போடப்பட்டிருக்கின்றன. தூரத்தில் திட்டுத்திட்டாக இருள் மூடிக்கிடக்கின்ற பாலைவனத்திலிருந்து காற்று விஸிலடித்துக்கொண்டிருந்தது. பாலைவனத்தின் முகத்தில் பாலுண்ணிகள் போல நகர வாயிலுக்கப்புறத்தில் சாகக் கிடக்கும் ஒட்டகங்கள் சுருண்டு கிடந்தன.

யூசுஃப் சற்று நின்றான்.தன்னைப் பாவத்தால் வளர்த்த பட்டணத்தை இன்னுமொருமுறை அவன் நோக்கினான். அவன் பெரு மூச்சு விட்டான்.

பாவத்தில் திளைத்துப் புரளும் நகரம்.வானளவு உயர்த்திய ஸ்தூபிகளைப் போல எழுந்து நிற்கும் மசூதிகளின் கோபுரங்களில் வௌவால்களின் ரீங்காரம் கேட்கலாம்.

இனி விடை பெறட்டும்.

திறந்திருக்கும் நகர வாசல். படுக்கையறை செல்லப் பரபரக்கும் நகரம். அவனுடைய பெருவிரல்கள் நடுங்கின. வேண்டாம்.தான் இப் பட்டணத்தின் மயானத்தைச் சென்றடைய வேண்டியவன். இனியுள்ள நாட்களை இங்கேயே கழிக்கலாம்.

யூசுஃப் அந் நகரத்தை பயத்தால் ஆட்சிசெய்தான். யூசுஃபின் பரந்த மீசையும், அடர்ந்த தாடியும், சிவந்து உருண்ட கண்களும், நீண்ட அங்கியும் காண்கையில், அவனுடைய உறையில் தொங்கிய வாள் அவர்களுடைய மனத்தினுள் புகுந்து பாய்கிறது. தாய்மார் அவனைக் காண்கையில் குழந்தைகளை மார்போடணைக்கின்றனர்; ஆண்கள் பதுங்குகிறார்கள். அந் நகரத்தின் முதுகில் அறைகிற சாட்டையாக விருந்தான் அந்த ஆள்.

யூசுஃப் தலை குனிந்தான்.

தூரத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் மணற்காடுகளில் ஓரிடத்திலும் ஒளியின் மின்னல்கள் பரவுவதில்லை. எவ்வளவு தூரம் அவன் நடக்க வேண்டியிருக்கும்? அவனுக்குத் தெரியாது. பார்க்க வேண்டியவனை அவனுக்குத் தெரியாது. அவன் எங்கே இருப்பான்? தெரியாது. ஒன்று மட்டும் யூசுஃப் அறிவான். பெற்று வளர்ந்து கொழுத்த வாழ்க்கையிலிருந்து அவன் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.

அவன் பின்வாங்குகையில் கடந்த காலத்தின் நேரக் கற்களில் மனம் சென்று முட்டிக்கொண்டிருந்தது.

மசூதியின் மினாரிலிருந்து காற்றில் மிதந்து வந்த பாங் அழைப்பின் ஓசையை யூசுஃப் அப்போது கேட்கிறான்.

அல்லாஹு அக்பர்.

– தெய்வம் மகானாகிறான்.

பிரார்த்தனைக்கான அவ்வழைப்புடன் மனத்துள் எல்லாம் புகுந்தேறி வருகின்றன. எப்படி இது நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது?

விளக்குகள் அணையவும் மனிதர்களின் கண்கள் மூடவும் செய்தபோது பாலைவனத்தின் விரக வேதனையை அனுபவிக்கும் சுழற்காற்று வீசி ஒலிக் கையில் அவனுடைய சிவந்து உருண்ட கண்கள் மின்னவும், உறையில் ஒதுங்கிக் கிடந்த வாள் கையில் எழவும் செய்தது. அடைத்த வாசல் அவனுக்காக மலர்ந்தது.

படுத்துறங்கும் வீட்டுத் தலைவன்; அவனைத் தழுவிக் கிடக்கும் தலைவி. ஜமுக்காளத்தில் கட்டிப் பிடித்துக் கிடக்கும் குழந்தைகள். யூசுஃ பெட்டியைக் குத்தி உடைத்தான். இரும்புப் பெட்டியின் எதிர்ப்பைக் கேட்டுக் கணவன் எழுந்தான்.

“அட கடவுளே…”

“பேசாதே, நாக்கை அறுத்துப்போட்டு விடுவேன்”

பெட்டியில் ஒளித்து வைத்திருந்த பணம் கலகலத்துச் சிரித்தது. மூடி மறைத்த பொன் நாணயங்களின் தடுப்புப் பலகையை நீக்க யூசுஃப் ஆர்வம்கொண்டிருந்தபோது தேம்பித் தேம்பி அழுத கணவன் அவனுடைய கையில் தொங்கினான்.

யூசுஃப்பின் வாள் பளபளத்தது. பளபளத்த வாளின் நுனி சிவக்கையில்…

“அல்லாஹ்!”

கேவிய மனைவி. அலறியழுத அப்பிஞ்சு சிசுக்கள். யூசுஃபிற்கு அவர்களது முகங்களைப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

வாளை வீசி அவன் வெளியே பாய்ந்தான். எத்தனை யெத்தனை இரவுகள்; எத்தனை யெத்தனை குடும்பங்கள்! கழுத்துகள் இரத்தம் பீறிட்டுத் தெறித்து உடலிலிருந்து துள்ளி விழுந்தன. பயந்து நிற்கும் பெண்களின் ஆடைகளை அவன் கிழித்தெறிந்தான். அது ஓர் ஆவேசமாக இருந்தது. செய்ய நினைத்ததை யூசுஃப் செய்தான். அவன் செய்த போது ஜனங்கள் அவனிடம் பயந்தார்கள்.

யூசுஃப்.

அவன் நகரத் தெருக்களில் நடந்தபோது மற்றவர்கள் விலகிப் போனார்கள். அக் கொள்ளைக்காரன் முன் அரண்மனைகள் நடுங்கின. யூசுஃப் இருட்போர்வை போர்த்தி மணற்காட்டை நோக்கினான். இருள் நீங்குமோ? கதிரவன் கனன்று ஜொலிப்பானோ? யூசுஃபின் மனத்தில் கடந்துபோன நாட்கள் விழித்திருந்தன.

அந்த யாத்ரீகனும் ஒட்டகமும் நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஒட்டகத்தின் கால்கள் பாலைவனத்தில் பதிந்தன. யாத்ரீகன் கூனிக் குறுகி அமர்ந்திருந்தான். சுற்றிலும் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது. அலைகள்போல மணற்பொடிகள் வழுக்கி வழுக்கி விழ, பாலைவனப் பரப்பில் புதிய பாதைகள், ஓடைகள் உண்டாகிக் கொண்டிருந்தன.

“நில்லுடா!”

யாத்ரீகனின் கையிலிருந்த மூக்கணாங்கயிறு தளர்ந்தது. ஒட்டகம் நின்றது. சீற்றமிகு சூரியன் தகித்தது. உதடு வரண்ட அம் மனிதனின் முகம் தெரியவில்லை. நெற்றியும், மூக்கும், காதுகளும் துணியில் மறைந்திருந்தன. கண்கள்மட்டும் தெரி்ந்தன. கேள்விக்குறி செதுக்கிய கண்கள்.

யூசுஃப் கட்டளையிட்டான்.

“இறங்கு!”

யாத்ரீகன் பணிந்தான். யூசுஃப் வாளை உயர்த்தினான். ஒளி தட்டிப் பளீரிட்ட வாளில் இரத்தக்கறைகள் காணப்படவில்லை.

“எங்கே உன் பண மூட்டை? கொடு”

உலர்ந்த உதடுகளில் புன்னகை விரிந்தது.

“அதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?”

அவன் பண மூட்டையை எடுத்தான். இரண்டு கையாலும் யூசுஃபினிடம் அதைக் கொடுத்தான்.

“அல்லாவின் கருணையால் இது உங்கள் குடும்பத்திற்கு நல்லவிதத்தில் செலவாகட்டும்”

யூசுஃப் அவ் வார்த்தைகளை நன்றாகக் கேட்டான். ஒருபோதும் ஒரு வரும் அவனிடம் அப்படிச் சொன்னதில்லை. பல தடவைகள் அவர்கள் பணப் பையைக் கொடுக்கத் தயங்குவதும் யூசுஃப் அதைத் தட்டிப் பறிப்பதுமே நிகழ்ந்துள்ளன. சிலர் வாய்விட்டு அழுதிருக்கிறார்கள். சிலர் பயந்து விறைத்திருக்கிறார்கள்.

“உன் மூட்டையில் என்ன இருக்கிறது?”

“ஓஹோ, பணப் பையோடு சேர்த்து எனது மூட்டையையும் ஒட்டகத்தையும் உங்களுக்குத் தர நான் மறந்துபோனேன். மன்னித்து விடுங்கள்!”

பிரயாணி ஒட்டகத்தின்மேலிருந்து இறங்கினான். யூசுஃப் தாவியேறினான். திருட்டு ஆதாயத்தைப் பார்த்தவாறிருந்தான். விலையேறிய பட்டாடைகள்; ஜாடி நிறையப் பொற்காசுகள்; உலர்ந்த பழங்கள்; கொழுத்துத் தடித்த ஒட்டகம். எல்லாம் அவனுடைய உடமைகளாகி விட்டிருந்தன. யூசுஃப் ஒட்டகத்தின்மேலிருந்து இறங்கினான். எங்கே யாத்ரீகன்? காணவில்லை. பளீரிடும் சூரியன். நிழல் விழாத மணற் காடுகள். அவன் வலது கையை நெற்றியின்மேல் நீளவாட்டில் வைத்துக்கொண்டான். தூரத்தில், பரந்த பாலைவனத்தில், ஒரு வெள்ளைப் பிராணிபோல அம் மனிதன் நடந்து போய்க்கொண்டிருந்தான். யூசுஃபின் மனம் களவு சாமான்களிலிருந்து அம் மனிதனிடம் தாவியது. இதற்கு முன்பு ஒரு தடவைகூட யூசுஃபிற்குத் தன் இரையைக் குறித்து நினைத்துப் பார்க்கவேண்டி வந்ததில்லை. தாவியேறினான் ஒட்டகத்தின்மேல் அவன். தடியை ஆட்டினான். ஒட்டகம் நகர்ந்தது.

“நில்!”

யூசுஃப் அலறினான். யாத்ரீகன் நின்றான். யூசுஃப் அவனைக் கவனமாகப் பார்த்தான்.

கறைபிடித்த செப்புத்தகடு போன்ற அம் முகத்தில் இளநீல நிறத்தில் சிறு கண்கள். கருத்த வட்டத்தாடியைத் தடவியவாறு அவன் யூசுஃபை நோக்கிச் சிரித்தான்.

“என்ன சகோதரா, என்ன வேண்டும்?”

யூசுஃபின் முன்னால் பயமறியாது துளிர்த்த அற்புதம் மனித உருவத்தில் நிற்கிறது.

“என் மேலாடை வேண்டுமோ?”

“வேண்டாம்”

“எனது செருப்புகள் வேண்டுமோ?”

“வேண்டாம்”

“என்னை அடிமையாக்கி விற்க வேண்டுமோ?”

“வேண்டாம்.”

“உங்களுக்கு என்னதான் வேண்டும்?”

“நீ யார்?”

“நான், நான் … உங்களைப் போல ஒருவன்!”

“கொள்ளைக்காரனா?”

யாத்ரீகன் சிரித்தான்.

“ஒருவிதத்தில் . ஆட்களைப் பயமுறுத்தி உங்களைப்போல நான்

சொத்து சம்பாதிக்கவில்லை. அவர்களுக்கு ஆசைமூட்டி, பொருட்களை நல்ல லாபத்தில் விற்று சொத்துச் சேர்த்திருக்கிறேன்.”

“உன் பெயர்?”

“அது தெரிந்து என்ன பயன்? நானொரு யாத்ரீகன். மரணத்தை நோக்கி நடக்கும் மனிதன்”

யாத்ரீகன் மீண்டும் சிரித்தான்.

“உன் ஊர்?”

“குராஸ்தான்”

யூசுஃபின் நா தளர்ந்தது. மனிதர்களிடம் மென்மையாகப் பேச அவன் கற்றதில்லை. முன்னால் நிற்கும் அம் மனிதனிடம் கூற அவனுக்கு எதுவும் இருக்கவில்லை.

யாத்ரீகன் மெதுவாக, சுட்டுப் பழுத்த நிலத்தில் நடந்தபோது காலடிச்சுவட்டின் மணல்தூள்கள் நாற்புறமும் சிதறின.

யூசுஃப் அவனைப் பார்த்தான். சற்று நேரம் பாலைவனத்தில் நின்றான். ஒட்டகத்தின் மேலே ஏறினான். மெல்ல மெல்லப் பட்டணத்தை நோக்கி நகர்ந்தான்.

யூசுஃப் ஏராளமான பொருள்களைக் கவர்ந்திருக்கிறான். அப் பொன் நாணயங்கள் மதுவின்மேலே நுரைத்துப் பொங்கும் குமிழிகளோடு சேர்ந்து காணாமற்போயின. பொன் நாணயங்கள், சூதாட்டத்தில் பகடைகள் திரும்பியபோது கைமாறிப்போயின. மீண்டும் யூசுஃப் திருடினான். கொடுங்கொலை செய்தான். நாணயங்கள் நீர்போல ஓடிப் போகவும், பிணங்கள் பாலைவனத்தில் காய்ந்து பொடியாகவும் செய்தன.

நாட்கள் வாடி விழுந்தன. மனத்தின் எட்டாத மூலைகளில் அந்த யாத்ரீகன் வாழ்ந்தான். யூசுஃபின் இதயத்தினுள் ஏறியமர்ந்து அந்த யாத்ரீகன் யூசுஃபை நிம்மதியாக இருக்க விடவில்லை. பயந்து விழுந்த மனிதர்களைவிட அவனிடம் என்ன முக்யத்துவம்? யூசுஃபின் மனத்தில் பயத்தின் சிறு திரிகள் எரியத் தொடங்கின. அம் மங்கிய ஒளியில் அவன் தன் வாழ்க்கையின் இருண்ட பாகங்களைக் கண்டான். யூசுஃப் திடுக்கிட்டான். பருவமெய்திய பெண்மக்களைக் கல்யாணம் செய்து கொடுப்பதற்காகச் சேர்த்துச் சேர்த்து வைத்த குடும்பத்தலைவனை, பின்னிரவுகளில் அவன் கொள்ளை-யடித்தபோது… தலையற்று விழுந்த குடும்பத் தலைவன் முன்னால் இளஞ்சிறுவர்கள் அலறியழுதபோது… அவற்றிற்கு ஓர் புது அர்த்தம் உண்டாயிற்று. யூசுஃ பயந்துபோனான்.

யூசுஃ பேய்க் கனவுகள் கண்டான். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தால் அவன் வியர்த்து வெளுத்துப்போவான். கைகால்கள் தளர ஆரம்பித்தன. ஆட்களைக் காண்கையில் அவனைப் பச்சாத்தாபம் பீடித்தது.

யூசுஃப் தலைகுனிந்து நடந்து போவான். பரிச்சயமான நகரம் அவனைப் பார்த்துத் தலைகுனிந்தபோது யூசுஃ பெருமைகொண்டிருந்தான். புதிய யூசுஃபை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவர்கள் அறிந்திருந்தது கொள்ளைக்காரன் யூசுஃபைத்தான். மசூதிக்குள் ஏறிச்சென்றதை அவன் நினைவு கூர்ந்தான். மினாரின் உச்சியில் வெள்ளைத் தாடி காற்றில் பறந்தது. வராண்டாவில் பிரித்து வைத்த குரானை ராகம்போட்டு ஓதிக்கொண்டிருந்த முக்ரி அப்துல் ரஹ்மான் யூசுஃபைப் பார்க்கவுல்லை. அவர் கண்ணைப் பாதி மூடிக் கொண்டிருந்தார். யூசுஃப் தொண்டையைக் கனைத்தான்.

முக்ரி யூசுஃபைப் பார்த்தபோது பயந்துபோனார். இக் கொடியவன் மசூதியிலும் புகுந்துவிட்டானா?

அரண்டுபோயிருந்த முக்ரியிடம் அவன் எல்லாவற்றையும் சொன்னான். அவனால் உட்கார முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இப் பட்டணம் அவனை நெருக்கித் தொலைக்கிறது. அவன் குராஸ்தான் வியாபாரியின் கதையைச் சொன்னான்.

யூசுஃபின் நிற மாற்றம் கண்டு முக்ரி அதிசயப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் கடவுளைப் பிரார்த்தித்தார்.

“முக்ரி, என்னை நன்மைக்குள் திரும்பியழைத்துச் செல்ல வேண்டும்.”

பளபளத்தன யூசுஃபின் கண்கள். மசூதி வாசலில் மாடப்புறாக் கூட்டம் பறந்து போயிற்று. விரிந்து நிற்கும் ஈச்சை மரங்களின் நிழல்கள் மசூதி முற்றத்தில் பதிந்தன.

“யூசுஃப், உங்களுக்கு அந்தச் சக்தி இருக்கிறதா?”

“எனக்குக் கொலை செய்யும் சக்தி இருந்தது.”

“இப்போதோ?”

யூசுஃபிற்குப் பதில் சொல்ல முடியவில்லை. முக்ரி பதிலை எதிர்பார்க்கவுமில்லை. அவர் கேட்டார்:

“உங்கள் குரு யாரென்று தெரியுமா?”

“எனக்குக் குரு கிடையாது.”

“உண்டு.”

“இல்லை, முக்ரி ஸாஹேப்.”

“உண்டு. உங்களுடைய குரு குராஸ்தான் வியாபாரி? அவரைக்

கண்டு பிடியுங்கள். அப்படியானால் நீங்கள் நன்மையை அடைவீர்கள்.” கடந்துபோன நிகழ்ச்சிச் சுருள்களை, நகர வாசலின் முன்பு நின்று நிமிர்த்திக்கொண்டிருந்தபோது, இருள் மூடிக்கிடக்கும் நிலத்தையே அவன் கண்முன் கண்டான். யூசுஃபிற்கு அப்போது ஒட்டகமில்லை. குராஸ்தானின் வியாபாரி உயிரோடிருக்கிறாரோ, இறந்துவிட்டாரோ என்று தெரியாது. அவ் வியாபாரி இப்போது குராஸ்தானில்தான் இருப்பாரோ? வேறெங்காவது வியாபாரநிமித்தம் போயிருப்பாரோ?

குறிக்கோளற்றதே அப் பிரயாணம் என்பதை யூசுஃப் அறிவான் மீண்டும் அவன் நகரத்தைப் பார்த்து நெடுமூச்செறிந்தான். பாவத்தில் மூழ்கிக் குளிக்கும் நகரம். பாவத்தாலேயே தன்னை வளர்த்த நகரம். தான் இங்கே மனிதனில்லை.

“கொள்ளைக்காரன் யூசுஃப்.”

உணர்ச்சி வேகங்கள் அவன் மனத்தைக் கொக்கியிட்டு இழுத்தன. யூசுஃப் இருளில் காலெடுத்து வைத்தான்.

யூசுஃப் நடந்தான். பாதையோரங்களில் படுத்தான். கிடைத்த பண்டத்தைத் தின்றான். வயிறு காய்ந்த பகல்கள்; களைத்துறங்கிய இரவுகள். பாலைவனத்தில் சூர்யன் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக இருந்தது. சிவந்து பளபளக்கும் சூர்யன். பரந்து மயங்கிக் கிடக்கும் பாலைவனத்தில் ஒளியும் வெப்பமும் கொடுத்தது. மணற்குன்றுகள் காற்றில் குழம்பித் திரும்பின. மணற்குழிகளிலிருந்து காலைத் தூக்கி யெடுக்க யூசுஃ பெரும்பாடு பட்டான்.

காலைச்சுற்றிலும் மணல் வட்டம் சூழ்கிறது. அவனுடைய வலதுகால் மணற்குழியில் அகப்பட்டது. யூசுஃபின் முகம் வெளிறியது. உடம்பு வியர்த்தது. உடை கிழிந்து பறந்தது. குழியிலாழ்ந்தன சிவந்து இருண்ட கண்கள்.

மணற்காற்றின் விஸில் முழங்கிக் கேட்டது.

இல்லை. மணற்குழியிலிருந்து அவனுக்குக் காலைத் தூக்க முடியவில்லை.

யூசுஃ பூமிக்குள் புதைந்துபோகிறானோ? அவன் முழுச் சக்தியையும் உபயோகித்தான். காலை உதறினான். மணல் துகள்கள் காலைச் சுற்றிலும் அட்டைகள் போலப் பாய்ந்து கடிக்கின்றன.

யூசுஃபின் கண்கள் நனைந்தன. படலம் விழுந்தது. கண்களுக்குப்பின். மங்கிய வெளிச்சத்தில் வெள்ளை ஜந்துபோலக் குராஸ்தானின் வியாபாரி நடந்துபோய்க் கொண்டிருக்கிறானோ?

“நண்பா!” யூசுஃப் கடைசியாக யாசித்தான்.

“நண்பா!” மணற்காற்றிலிருந்து உண்டான விஸிலடிப்பில் அச் சப்தம் எதிரொலியில் அமிழ்ந்தது.

அலைகள்போல மணல் கர்ஜித்துப் பொங்கிச்சிதறிப் பறக்கிறது

யூசுஃபின் நெஞ்சம் துடித்தது. அவன் கத்தினான். “ஐயோ!” அத்துடன் அவன் முன்பக்கம் பாய்ந்தான். மணற்குழியிலிருந்து கதறித்தாவின விரல்கள். அம் முயற்சியில் அவன் நிலை தடுமாறி விழுந்தான்.

விழுந்த இடத்திலிருந்து அவன் கையூன்றி நகரப்பபார்த்தான். கைகள் தளர்ந்து போயின. அவன் ஓரடி ஊர்ந்தான். ஒரு அடியீடு மட்டும். ஒரு அடி ஊர்ந்ததின் நேர்க்கோடு ஒரு நிமிடம் மணலில் தெரிந்தது. காற்றடித்தது; அக் கோடு அழிந்தது. கண்ணுக்கெட்டா தூரம் பரந்து கிடக்கும் மணற்காடு மட்டும்.

யூசுஃபிற்குக் கையை ஊன்ற இயலவில்லை. உலர்ந்த மாமிசம் போல அவனுடைய உடல் பழுக்கக் காய்ந்த மணலில் பதிந்து கிடந்தது. சூர்யனின் குரூரமான ரேகைகள் அவனுடைய காதுகளில் துளைத்து நுழைந்தபோது யூசுஃப் இருமினான். அவன் செருமினான். தன் இதயத்தை யாரோ பறித்தெடுக்கிறார்கள். அவன் வாய்ப் பிளந்தான்.

கதிரவன் கனன்று ஒளி வீசினான். மணற்காற்று சப்தமிட்டது. யாரும் பார்க்கவில்லை. யாருக்கும் தெரியாது. ஆயிரம் பேரைக் கொன்ற யூசுஃ பாலைவனத்தில் ஒரு துளி நீருக்காகத் தலையை அசைத்தான். தலை சுற்றிற்று. அசைய முடியவில்லை. ஏடுபடிந்த கண்கள் உற்று நோக்கின. அவை மூடவில்லை.

வளைந்த ஆகாயம் தூரத்தில் மண்டியிட்டுக் கிடக்கிறது. அடி வானத்திலிருந்து மேகப் பாளங்கள் உதிர்ந்து விழுவதுபோலக் காட்சியளித்தன. பிளந்த ஆகாயத்திலிருந்து வெண் பறவைகளைப் போல மேகத் துண்டுகள் பறந்து வருகின்றன. அவ் வெண்பூக்கள் பாலை வனத்தில் இறங்கின. யூசுஃப் கண்ணை மூடவில்லை. விரிந்த சிறகுகளுடன் தேவதூதர்கள் யூசுஃபின் வலப்பக்கம் வந்து நின்றனர்.

யூசுஃபிற்கு அதையெல்லாம் பார்க்க முடிந்தது.

மீண்டும் ஆகாயத்திலிருந்து மேகக் கீற்றுகள் கீழே பறந்து வருகின்றன. சிறகுகளுடைய தேவதூதர்கள். அவர்கள் தரையில் இறங்கினார்கள். யூசுஃபின் இடப்பக்கம் அவர்கள் நின்றனர். நடுவில் கீழே சரிந்து கிடக்கும் யூசுஃப். இடப்புறமும் வலப்புறமும் தேவதூதர்கள்.

வலப்பக்கமிருந்த தேவதூதர்கள் அவனைத் தூக்கி யெடுக்கக் கைகளை நீட்டியபோது இடப்பக்கத் தேவதூதர்கள் தடுத்தார்கள்.

“இது எங்கள் ஆத்மா”

வலப்பக்கத் தேவதூதர்களின் தலைவன் கேட்டான்:

“நீங்கள் யார்?”

“நாங்கள் சொர்க்கத்தைக் காக்கும் தேவதூதர்கள்.”

“நண்பர்களே, உங்களுக்கு ஆள் மாறிப் போயிற்று. இவனை நரகத்திற்குக் கொண்டு போகவே நாங்கள் வந்தோம்.” இடப்பக்கத் தேவ தூதர்களின் தலைவன் சொன்னான்.

தேவதூதர்கள் அவனுடைய ஆத்மாவிற்காகத் தர்க்கமிட்டுக் கொண்டார்கள். யூசுஃபிற்கு அதைக் கேட்க முடிந்தது. பார்க்க முடிந்தது. ஆனால் அவனுடைய கைகள் உயரவில்லை. உதடுகள் அசையவில்லை. வெப்பமில்லை. தண்மையில்லை. கண் முன்னால் கண்ணாடியில் பார்ப்பது போல எல்லாம் தெரிகிறது.

“ஆயிரம்பேரைக் கொன்ற துஷ்டன் இவன். நரகப் பாவி!”

“அதெல்லாம் சரி, ஆனால் அவன் பச்சாத்தாபமுற்றிருக்கிறான்.”

“குற்றம் செய்துவிட்டு வருந்தி என்ன பயன்?”

“நல்லபடியாக வாழவே இவன் நகரத்திலிருந்து கிளம்பினான்.”

“ஒருவனுடைய செயலே முக்கியம். இவன் தீமையின் அவதாரம்.”

“யூசுஃப் தீமையிலிருந்து விடுதலையடைந்தான்.”

“இல்லை.”

“இவன் நன்மையை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருந்தான்”

“எண்ணத் தூய்மையல்ல முக்கியம்.”

“எண்ணத் தூய்மைதான் முக்கியம்.”

“இவன் நரகப் பாவி!”

“இவன் சொர்க்கத்தைச் சேரவேண்டியவன்!”

“நாம் இரு கூட்டத்தினரும் கடவுள் சேவை செய்பவர்கள். இந்நரகப் பாவிக்காக நமக்குள் சச்சரவிடவேண்டுமா?”

“சண்டை போடக்கூடாது. ஆனால், சொர்க்கத்தைச் சேர வேண்டியவனை நரகத்திற்கு விட்டுக்கொடுத்தால் எங்கள் கடமையில் தவறியவர்களாவோம்.”

“ம்ஹூம்.”

“தொலைவிலுள்ள நகரத்திலிருந்தாக்கும் இந்த ஆள் வருகிறான். பார், இவனுடைய இடுபபில் வாள் இல்லை. கையில் பணப் பையில்லை. இவன் திருந்துவதற்காகப் புறப்பட்டவன்.”

நரகத்தின் தேவதூதர்கள் யூசுஃபைப் பரிசோதித்தார்கள். சொர்க்கத்தின் தேவதூதர்கள் கூறியவையெல்லாம் சரிதான்.

“ஆனால் இவனுடைய பூர்வ சரித்திரம்!”

“பூர்வ சரித்திரம் இருளடைந்திருந்த எத்தனையோ பேர்கள் பிற்காலத்தில் மகாத்மாக்களாக ஆகியிருக்கிறார்கள்.”

“அது சரி, அவர்களுடைய செயல்தான் அவர்கள் மகத்வத்தின் சாட்சி.”

“அதுபோலவே யூசுஃபின் இந்தச் செயலும்.”

“யூசுஃப் செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள்.”

“இப் பிரயாணம். நன்மையை நோக்கிச் சென்ற இப் பிரயாணம்!”

“இவன் எங்கே போகிறான்?”

“குராஸ்தானுக்கு. அங்குள்ள வியாபாரியே இவனுக்கு நன்மையின் வாசலைக் காட்டிக்கொடுத்தான்.”

“அதற்குச் சாட்சி எங்கே?”

“சாட்சி இல்லை.”

பிடிவாதக்காரர்களாகிய நரகத்தின் தேவதூதர்கள் விடுகிற மாதிரியாகக் காணவில்லை. சொர்க்கத்துத் தேவதூதர்கள் மண்டையைக் குடைந்துகொண்டு யோசித்தார்கள்.

சூர்ய வெப்பத்தால் மணல் துகள்கள் சூடடைந்திருந்தன. யூசுஃபின் திறந்த கண்களைத் தேவதூதர்கள் பார்த்தார்கள். கண்ணீர் நிறைந்த கண்கள். சாந்தம் நிறைந்த முகம்!

“உங்கள் கையில் அளவு நாடா இருக்கிறதா?”

“இருக்கிறது.”

“நாம் ஒன்று செய்வோம். நாம் இவ்வாத்மாவிற்காக ரொம்ப நேரமாகச் சச்சரவிட்டுக்கொண்டிருக்கிறோம். நகரத்திலிருந்து யூசுஃப் இறந்து கிடக்கும் இடத்துக்குள்ள தூரத்தை அளக்கலாம். இங்கே யிருந்து குராஸ்தானுக்குள்ள தூரத்தையும் அளப்போம்.”

“எதற்காக?”

“நகரத்திலிருந்து இவ்விடத்திற்குள்ள தூரம் குறைவானால் நீங்கள் கொண்டுபோய்க் கொள்ளுங்கள். இங்கிருந்து குராஸ்தானுக்குள்ள தூரம் குறைவானால் நாங்கள் கொண்டு போகிறோம்.”

நரகத்திலிருந்து வந்த தேவதூதர்கள் கலந்தாலோசித்தார்கள். அவர்கள் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். பிரச்னையைத் தீர்க்க வேறு வழிகளை அவர்கள் காணவில்லை. ஆனால், அந்த நிபந்தனையிலிருந்து அதிக லாபமடைய அவர்கள் தயாரானார்கள்.

“ஒரு சந்தேகம்! எந்தப் பக்கமிருந்து என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.”

“யூசுஃபின் தலை கிடக்கும் பக்கத்திலிருந்து.”

“அது சரியில்லை. நாங்கள் சம்மதிக்க முடியாது.”

“பிறகு?”

“யூசுஃபின் காலடி மணலில் தொட்ட பக்கத்திலிருந்து.” சொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதர்கள் யோசித்தனர். வேறு வழியில்லை. அவர்கள் நரகத் தேவதூதர்களின் யோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.

சொர்க்கத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் வந்த தேவதூதர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்தார்கள். ஒரு பகுதி நகரத்திற்குப் போயிற்று. மற்ற பகுதி குராஸ்தானுக்குப் போயிற்று. அவர்கள் அளவு ரிப்பனால் இரண்டு பக்கங்களிலிருந்தும் அளந்தார்கள். இரண்டு பக்கங்களிலிருந்தும் அவர்கள் ஒரே சமயத்தில் வந்தனர், இரு கூட்டத்தினரும் யூசுஃப் இறந்து விழுந்திருந்த இடத்தை அடைந்தனர். ஒரே நேரம்.

இரு நாடாக்களையும் அவர்கள் நுனியைச் சேர்த்துப் பிடித்தனர். நுனியைச் சேர்த்து வைத்த நாடாக்களைச் சுருட்டி வைத்தனர் தேவதூதர்கள். நாடாக்களின் மறு நுனிகள் தெரிந்தன. இரு கூட்டத்தாரும் ஆவலுடன் நோக்கினர். இரு நாடாக்களும் ஒரே அளவா? யூசுஃபின் ஒரு பாதிச் சொர்க்கத்திற்கும் மறு பாதி நரகத்திற்கும் சேர வேண்டுமோ?

கண்ணைத் திறந்து கிடக்கிறான் யூசுஃப்.

அளவு நாடாவைச் சுருட்டி வைக்கிறார்கள் தேவதூதர்கள்.

நரகத்துத் தேவதூதர்களின் முகம் கறுத்தது.

“எவ்வளவு வித்தியாசம்?”

சொர்க்கத்துத் தேவதூதர்களின் தலைவனுடைய கேள்வி. சொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதருள் ஒருவன் கீழே பார்த்தான். அவனுடைய அழகான உதடுகளில் மனோகரமான சிரிப்புப் பரவியது. அவன் நாடாவையெடுத்து யூசுஃபின் மரத்துப்போன காலின் நீளத்தை அளக்கையில் நரகத்துத் தேவதூதர்கள் ஆகாயத்தை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்கள்.

சொர்க்கத் தூதன் அளந்தான்; அவனுடைய குரல் முழங்கியது:

“ஒரே ஒரு அடியீடு மட்டும்!”

நன்றி

சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்

தொகுப்பு : எம். முகுந்தன்

மொழிபெயர்ப்பு: ம. இராஜாராம்

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா,

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 06, 2021 20:31
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.