முடிவில்லாத அறைகள்

1924 ஆம் ஆண்டில், ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பர்ட் ஒரு விசித்திரமான கேள்வியை எழுப்பினார்  அதாவது சில முடிவிலிகள் மற்றவற்றை விடப் பெரியதா? (are some infinities bigger than others?)  அவர் தந்த பதில் ஆம் என்பதே. அதை விவரிப்பதற்காக எண்ணிக்கையற்ற அறைகள் கொண்ட ஒரு ஹோட்டலைக் கற்பனை செய்து கொள்ளும்படியாக செய்தார். அதன் எல்லா அறைகளிலும் விருந்தினர்கள் இருந்தார்கள். அங்கே அறை காலியில்லை என்ற பலகை தொங்குகிறது. ஆனால் புதிதாக ஒருவரை தங்க அனுமதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற கேள்வியில் துவங்கி முடிவின்மையின் எல்லையற்ற சாத்தியங்களை விவரிக்கத் துவங்கினார்.

மிகச்சிக்கலான இந்த ஆய்வினை மிக சுவாரஸ்யமான காணொளியாக உருவாக்கியிருக்கிறார்  டெரக் முல்லர். இந்த வீடியோ ஒரு புனைவின் வசீகரத்துடன் விவரிக்கபடுகிறது. முடிவற்ற அறைகள் கொண்ட ஹோட்டல் என்பது தானே இந்த பிரபஞ்சம். இங்கே மனிதன் உள்ளிட்ட புதிய உயிரினங்களுக்கு எப்படி இடம் கிடைக்கிறது என்பதன் விளக்கமாகவும் இதைக் காணலாம்.

முடிவில்லாத அறைகளைக் கொண்ட ஹில்பர்ட் ஹோட்டல் மிகச்சிறந்த படிமம். அதன் வரவேற்பாளர் எவ்வளவு சிறந்த அறிவாளி என்பதை அவர் அறைகளை ஒதுக்கி தரும் முறையில் கண்டுகொள்ள முடிகிறது.

முடிவில்லாத பயணிகள் வந்து கொண்டேயிருந்தால் என்ன நடக்கும் என்பதை படம் விவரிக்கிறது. அதிலும் முடிவற்ற பேருந்துகள் மூலம் முடிவில்லாத பயணிகளின் வருகை என்பது போர்ஹெஸின் கதையைப் படிப்பது போலவே இருக்கிறது

மிகச்சிறந்த காணொளி. புனைவின் விநோத விளையாட்டு இப்படி தான் செயல்படுகிறது. அறைகளுக்குப் பதிலாக சொற்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2021 23:33
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.