வெண்முரசு ஆவணப்படம்- விர்ஜீனியா

 அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

வெண்முரசு ஆவணப்படம், கடந்த வாரம் சனிக்கிழமை ஜூன் 12ஆம்  தேதி 2:30 மணிக்கு, ஃபேர்பாக்ஸ், வெர்ஜினியாவில் உங்கள் வாசகர் விஜய் சத்யா முன்னெடுப்பில் வெளியிடப்பட்டது. இதற்காக இரண்டு, மூன்று வாரங்களாக விஜய் சத்யா,நெருங்கிய நண்பர்கள், தமிழ் சங்கம் உறுப்பினர்கள், தமிழ் பள்ளி நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பலரையும் கூடி பேசி தன்னலமற்று கடுமையாக உழைத்தார். ராஜன் பரிந்துரையின் படி, ஃபேர்பாக்ஸில்  உள்ள மிகப்பெரிய திரையரங்கு ஒன்றை தேர்வு செய்து வெளியிடும் நாளும் முடிவானது. திரையரங்கு அருகில் இருக்கும் வாஷிங்டன் டி.சி மற்றும் மேரிலாந்து மாநிலத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கும் வசதியாக இருந்தது. அகண்ட திரை, ஒளி, ஒலி துல்லிய வசதிகள், சிறந்த இருக்கைகள் என மிக வசதியான தாகவும் பெரியதாகவும் அரங்கு  இருந்தது.இதற்கு நண்பர்கள் பலர் கூடி உதவி புரிந்தனர்.

மதியம் 2:00 மணி முதலே நண்பர்கள்  திரையரங்குக்கு வர ஆரம்பித்து விட்டனர். ஓராண்டுக்கு பின் மெல்ல  இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருப்பதால், படம் பார்க்கும் முன் உற்சாகம், நண்பர்கள் கூடுதல், புது நண்பர்கள் சந்திப்பு, சிரிப்புகள், வெண்முரசு பட ஆவணம் குறித்து பேச்சு, வெண்முரசு நாவல்கள் பற்றிய பேச்சுகள், விசாரிப்புகள், புகைப்படங்கள் எடுத்தல் என்று குதூகலமாய் இருந்தது. பதின் வயது குழந்தைகளும் வந்திருந்தனர். இளவேனிற் காலமானதால், திரையிடலுக்கு முன் இரு நாள் சதா இடியுடன் கூடிய மழை இருந்தது, இருப்பினும் வெண்முரசு ஆவணப்பட இசையமைப்பாளர், ராஜன் சோமசுந்தரம் வட கரோலினாவில் இருந்து  ஐந்து மணி நேரம் பிரயாணம் செய்து வந்து, நண்பர்  விஜய் சத்யா உடன் வந்தது நிகழ்ச்சிக்கு  மணிமகுடம் சேர்த்தார் போல இருந்தது. ராஜன் வந்து சிறிது நேர அளவாளவிர்க்குப் பின் திரையிடல் ஆரம்பமானது.

ஒரு  மணி நேரம் நாற்பது  நிமிடங்கள் இமைக்கணம் கூட கவனம் பிசகவில்லை. மெய்மறந்து, ரசித்துப் பார்த்தோம். இசைஞானி  இளையராஜா, கமல்ஹாசன் போன்ற சினிமாத் துறை பெரும் ஆளுமைகள் தங்களின் நாவல்களைப் பற்றி உரையாடியதை கேட்க ஆனந்தமாகவும், உவகையாகவும் இருந்தது. தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளான, ஆ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், அசோகமித்ரன் வெண்முரசு குறித்த கருத்துக்களை கூற கேட்டு அரங்கில் கர ஒலி,  உங்கள் பெரும் உழைப்பு அதற்கு பின் இருந்த உங்கள் மனநிலையும், அர்ப்பணிப்பும்  பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது .

தளத்தில் உரையாடும் பல நண்பர்களை நேரில் பார்த்த உணர்வு, அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளை ஆமோதிப்பது, நண்பர்களின் உணர்வுப் பூர்வமான பகிர்தல் எல்லாவற்றையும்விட வெண்முரசு தங்கள் வாழ்வில் உண்டாக்கிய கருத்துருவாக்கத்தை, வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தினை பார்வையாளர்கள் மெய்மறந்து  பார்த்துக் கொண்டிருந்தனர்.  உங்களை கண்ட போதும், பல நண்பர்கள் பேசும் இடத்திலும் , கண்கள் மற்றும் மனம் கசிவதை தடுக்க முடியவில்லை. இவர்கள் உரையாடல்களுக்கு ஆபரணம் சேர்த்தார்  போல் ஓவியர் சண்முகவேலின் ஓவியங்கள் காட்சிகளுக்கு மெருகூட்டியது. மிகச்சரியான இடத்தில் ராஜனின் இசையமைப்பில், நீலம் நாவலில் வரும் பாடலை கமல்ஹாசன்  ஆரம்பித்து, ஸ்ரீராம் பார்த்தசாரதி தொடர்ந்து சைந்தவி பாட, ரிஷப் சர்மாவின் சிதார்,பரத்வாஜின் புல்லாங்குழல் இசையும்  மெய்சிலிர்க்க வைத்தது. மனதை அள்ளியது ராஜனின் கூரிய,  தேர்ந்த,பிரம்மாண்டமான  இசை. இவை அனைத்தையும் இந்த கோவிட் தொற்று நோய் காலத்தில் சிறந்த  இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர் வெளி கொண்ட விதம் மிகச்சிறப்பு. காட்சி ஒருங்கிணைப்பு மிகத்துல்லியமாக இருந்தது.

வெண்முரசு எனும் பெரும் காவியத்தை, இதிகாசத்தை, அதன் பிரமாண்டத்தை, இன்றைய நவீன காலகட்டத்தில், வாழ்க்கை முறையில்  தமிழில் அதை படைத்த ஆசிரியருக்கு இது ஒரு சிறுதுளி நன்றிக்கடன் மட்டுமே.  அது செவ்வனே எங்களையும், எங்கள் நண்பர்களையும் சென்று அடைந்தது பார்க்க முடிந்தது.

திரையிடல்  முடிந்தவுடன் எங்கள் பகுதிக்கு சிறப்பு வருகை புரிந்த  ராஜனுக்கு எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி, பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார்கள். விஜய் சத்யாவின் சிறு உரையாடல், தொடர்ந்து ராஜன், அவரின் செறிவான இசை மற்றும் ஆவணப்படம் உருவாக்கிய அனுபவம், அதற்கு உதவி புரிந்த நண்பர்கள் குறித்த உரையாடல் நிகழ்த்தினார். அதன் பின் தமிழ் சங்க ஆர்வலர்கள், தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்து உரையாடினர். இதற்குப் பின்  திரையரங்குக்கு வெளியில் நண்பர்கள் பலர் ராஜனை சந்தித்து,பேசி, அவரின் இசையை  பாராட்டினார்கள். பாடல் இடம்பெற்ற நீலம் நாவலின் அழகை, தன்மை குறித்து சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தனர். பதின் வயது குழந்தைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்திருந்தால் இன்னும் புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், தமிழ் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியத்துவமும், உங்கள் பணியும், பல துறைகள் சார்ந்த ஆழ்ந்த நுண்ணறிவும், மிகப்  பிரம்மாண்டமாய் இருப்பதாகவும் கூறினர். புதிய நண்பர்கள் பலர் வெண்முரசு படித்த/படித்துக்கொண்டிருக்கும்  நண்பர்களிடம் நாவல்கள் பற்றிய தகவல்கள், சந்தேகங்கள் கேட்டு  நெடுநேரம் உரையாடிக்கொண்டு  இருந்தனர். மிகப்பெரிய வரலாற்று நிகழ்வில், மகத்தான பெரும் பணியில் துளியாய் கலந்த, கனிந்த நிறைமையுடன் வீடு சென்று சேர்ந்தோம்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமெரிக்க நண்பர்களிடம் எங்கள் அனுபவங்களையும்,சந்தோஷத்தையும், பாராட்டையும், மேற்கொண்டு சாத்தியங்களையும்  பகிர்ந்து கொண்டோம். ஆவணப்படம் பார்த்து சில நாட்கள் ஆகியும் நண்பர்கள் இதனை பற்றி பேசுவது தொடர்கிறது. சூழ்நிலையால் வர இயலாத நண்பர்கள் ஆவலாய் படம் குறித்து விசாரிப்பதும், மற்ற நண்பர்கள் நாவல் குறித்து கூறிய அபிப்பிராயங்களை கேட்டு கொண்டு, வெண்முரசு படிக்க ஆரம்பித்ததையும், ராஜன் மற்றும் ஆஸ்டின் சௌந்தர் அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக்  கொண்டு  இருக்கின்றனர்.

வெண்முரசு ஆவணப்படத்தை குறுகிய கால இடைவெளியில்  செவ்வனே சாத்தியப்படுத்திய நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர், ராஜன் சோமசுந்தரம் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி!!!

உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றியும், வாழ்த்துக்களும், வணக்கமும்!!

இந்த அற்புதமான பேர் அனுபவத்திற்கு வித்திட்ட உங்கள் வலிமையான எழுத்திற்கு மிக்க நன்றி!!!

அன்புடன்,

சுவர்ணா ரவி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.