உரைகள்,கடிதங்கள்

ஐயா

உங்களது பல வீடியோக்களை பார்த்தேன்.நான் கொரோனா தமிழன்.தமிழை தாய்மொழியாகக் கொண்ட நான் கம்பனையும் என்முப்பாட்டன் வள்ளுவனையும் என்னுடைய 68 வது வயதில்தான். அதுவும் இந்த கொரோனா காலத்தில்தான் படிக்க அறிந்துகொள்ள தொடங்கியிருக்கிறேன்  நானும் வாசகன்தான். விகடன் குமுதமென்று வாலிபத்தை கிடந்தேன்.ஆனால் யாருடைய கதையும் நான் படித்ததில்லை.

கடந்த  மூன்று நாட்களாக கேட்ட ஆதி சங்கரர்,கீதை பேருரைஇரண்டும் திரும்ப திரும்ப கேட்கிறேன். ஒரு எழுத்தாளனிடம் (கம்பனையோ வள்ளுவனையோ கடந்து நான் உங்களை சிந்திக்கவில்லை) புனைவு செய்கிற உங்களிடம் ஆற்றல் இருப்பதை கண்டு வரிந்து போனேன்.

தொடர்ந்து கம்பவாரிதி  ஐயா வீடியோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு நுண்ணிய மேடைப்பேச்சு என்பது அடுக்குமொழி இல்லையென்றாலும் மிக மிக அற்புதம்.

தெற்கே தலை வைத்து எடுக்கக்கூடாது என்பார்கள்.ஆனால் நேற்று முதல் தெற்கே தலை வைத்துதான் எடுக்கிறேன். (உங்கள் ஊர் நாகர்கோவில்என்பதால்) .மொழியறிவும் எழுத்துக்கலையும் இல்லாததால் ஒரு சினிமா ரசிகன் மாதிரி புகழ்ந்து விட்டேன். பரவாயில்லை அதற்கு தகுதியானவர்தான்.

பவா செல்லத்துரைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். *எனக்கு பரமபதத்தை அடைய* *வைத்த ஆழ்வார் அவர்தான்.*

இங்ஙனம்

சு.திருவேங்கடகிருஷ்ணன்.

ஆழ்வார் பேட்டை

சென்னை

அன்புள்ள திருவேங்கட கிருஷ்ணன்

தாமதமாவது இல்லாமலிருப்பதைவிட மேல்தான். வாசிப்பு ஓர் அகவைக்குப்பின் கடினம். ஆனால் கேட்கலாம். நான் நூறு உரைகளுக்குமேல் பேசியிருக்கிறேன் என நினைக்கிறேன். உரைகள் அடுக்குமொழி மற்றும் சொல்லாற்றலுடன் இருக்காது. குரல்வளமும் குறைவுதான். ஆனால் பயனுள்ளவையாக இருக்குமென உறுதியாகச் சொல்வேன்

நன்றி

ஜெ

திரு‌‌.ஜெமோ அவர்களுக்கு

உங்கள் எழுத்துக்களை பற்றிய முழு புரிதலில்லாமல் சமகால அரசியல் வெளியில் தனிப்பட்ட உங்களை ஒரு வலதுசாரியாக பரவவிடப்பட்ட கருத்துக்களை‌ உள்வாங்கி கொண்டு இவ்வளவு காலம் மூர்க்கமாக உங்கள் எழுத்துக்களை புறக்கணித்து வந்திருந்தேன். முன்பொருமுறை ஏழாம் உலகம் வாசித்திருந்தேன், பின்னர் இன்றைய காந்தி யும், சில மாதங்களாக பவா அவரது யூட்யூப் சானலில் எடுத்துரைந்திருந்த அறம் சிறுகதைகள் என்னை உங்கள் பால் லேசாக திருப்பதுவங்கியிருந்த தருணம் நண்பனிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஊமைசெந்நாயும் இன்னும் நெருங்க செய்தது…

எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று மதியம் கிண்டில் வழியாக வாசிக்க தொடங்கி இன்று அதிகாலை 4:30க்கு முடித்திருக்கும் “காடு” என்னை கொடூரமாக உலுக்கியிருக்கிறது. சென்னையின் ஒரு உயர் அடுக்ககத்தின் 12 மாடி வீட்டில் இந்த அதிகாலையில் அனைத்து விளக்குகளையும் எரிய விட்டுக்கொண்டு உங்களுக்கு இதை தட்டச்சு செய்ய வைத்துவிட்டாள் நீலி. இப்பொழுது உங்கள் மீது ஒரு சந்தேகம், சொல்லுங்கள், உண்மையில் நீங்கள் ஒருவர் தானா? அல்லது ஆயிரமாயிரம் க்ளோன் களை செய்து மண்ணில் உலவ விட்டு அனுபவங்களை கிரகித்து கொண்டே‌ இருக்கிறீர்களா?? எப்படி அந்த அய்யர், குட்டப்பன், ரெசாலம், நீலி, சினேகம்மை என எல்லாரையும் வடிக்கிறீர்கள்.. உண்மையில் ஒற்றை ஆயுளில் இத்தனை அனுபவங்கள் சாத்தியமா?

பெண்களின் சடை பின்னல்களை மேலிருந்து கீழ் அளக்கையில் எந்த கற்றை அடுத்ததென தெரியாதோ அந்த சுவாரசியத்தை வேறு வேறு காலத்தையும் இடத்தையும் வைத்து பின்னியிருக்கிறீரகள்.. என் மனமென்னவோ நீலிக்கற்றை வெளிவரும் இடத்தையே எண்ணி கவனத்தை குவித்து கொண்டிருந்தது. சமீபத்தில் ஒரே‌அமர்வில் இவ்வளவு பெரிய வாசிப்பை உறங்காமல் வாசிக்க வைத்தது நீங்கள் தான்.  இன்று இனி நான் உறங்க முடியாது, ஜன்னல் வெளியே நீலி ‘தம்புரானே’ என்றே அழைத்து கொண்டிருக்கிறாள். அசைபோட எவ்வளவோ அடுக்குகள் மனதில் உதித்து கொண்டே இருக்கிறது. நேற்று மதியம் காட்டுக்குள் எட்டு வைத்த நான், பேச்சிமலையில் நின்று இப்போது காட்டை பார்த்து கொண்டிருக்கிறேன்.. இப்பேரணுபவததை தந்தமைக்கு நன்றியும், முந்தைய என் அனுமானத்திற்க்கு மன்னிப்பும் கோரி.

இப்படிக்கு

ந. சௌந்தரராஜன்

சென்னை

அன்புள்ள சௌந்தர ராஜன் அவர்களுக்கு,

பொதுவாகவே தமிழ்ச்சூழலில் எதையேனும் பொருட்படுத்தும்படிச் சொல்லியிருக்கிற, செய்திருக்கிற எவரைப்பற்றியானாலும் எதிர்மறை விமர்சனங்களும் வசைகளுமே முதலில் வந்தடையும். எவரைப் பற்றிவேண்டுமென்றாலும் கவனித்துப் பாருங்கள். அவர்களை அணுகுவதற்கான தடைகளைத் தான் சூழல் அளிக்கும். அதைக் கடந்து வந்து அணுகுபவர்களே உண்மையான இலக்கியத்தையும் சிந்தனையையும் அடையமுடியும்.

அந்தத் தடையை உருவாக்குபவர்கள் எவர்? மேலோட்டமான சிந்தனையும் ஆழமற்ற கலைத்திறனும் கொண்டவர்கள். அவர்களின் இருப்பை தரமான கலையும் சிந்தனையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஆகவே அவர்கள் ஒன்றாகக்கூடி தரமான அனைத்தையும் பொதுவாசகர்களிடமிருந்து மறைக்க முயல்கிறார்கள். அவர்களே திரிபுகளை உருவாக்குகிறார்கள். அவதூறுகளையும் வசைகளையும் சூழலில் நிரப்புகிறார்கள். முன்முடிவுகளையும் காழ்ப்புகளையும் பரப்புகிறார்கள்.

வேறுவழியில்லை, கடந்துவந்தே ஆகவேண்டும். கடந்து வந்துகொண்டும் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர். நன்றி

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.