நீரும் நிலமும்
Lakshmanrekha என்றொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நந்தன் சக்சேனா மற்றும் கவிதா பஹ்லி இயக்கியுள்ள இப்படம் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமத்தின் நீர்வளத்தை லட்சுமன் சிங் எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் லபோடியாவினைச் சுற்றியிருந்த 58 கிராமங்களின் விதியை மாற்றியது

படத்தின் துவக்கக் காட்சியில் டெல்லியின் குடியிருப்பு ஒன்றில் ஆழ்துளைக் கிணறு போடுவதற்காக இயந்திரம் வருகிறது. போர் போடும் பணி துவங்குகிறது ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை.. நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு போய்விட்டது.
எங்கே போனது நகரின் நீர்வளம். நிலத்தடி நீர் ஏன் பெருநகரங்களில் குறைந்து கொண்டுவருகிறது என்ற கேள்வியில் துவங்கி இந்தியா முழுவதும் பெருகி வரும் தண்ணீர் பிரச்சனையைப் பற்றிப் படம் விவரிக்கத் துவங்குகிறது.
பாதுகாப்பான குடிநீர், விவசாயத்திற்கான தண்ணீர் மற்றும், தினசரி பயன்பாட்டிற்கான நீர் கிடைக்காமல் போய்ப் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம். இந்த அபாயத்திலிருந்து விடுபடுவதற்கு உடனடியாக நீர்வளங்களைப் பேணும் மாற்றுவழிகளை மேற்கொள்ள வேண்டும். மழை நீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தலாம். மற்றும் மரபான நீர் சேமிப்பு மற்றும் விநியோக முறைகளை நாம் கைக்கொள்ள வேண்டும். லக்ஷ்மன் சிங் எப்படி இதைச் சாத்தியப்படுத்தினார் என்பதை ஆராயும் பொருட்டு லபோடியா நோக்கி பயணம் நீளுகிறது

இந்தியாவின் நீர் வளங்கள் பெருமளவு அழிக்கபட்டுவிட்டன. குறிப்பாக நன்னீர் வளங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். பல பெரிய பெருநகரங்கள் தனது நீர் தேவைக்கான சுற்றியுள்ள கிராமங்களின் நீர் ஆதாரங்களை உறிஞ்சிக் கொள்கின்றன. தண்ணீர் முக்கிய வணிகப்பொருளாக மாறிவிட்டது. இன்னொரு புறம் கிராமப்புற நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. நீர் விநியோகம் முறையாக இல்லை. இந்த ஆபத்தான சூழ்நிலைக்கு மாற்றாக ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமம் தனது நீர்வளத்தைப் பெருக்கிக் கொண்டதுடன் புதிய காடு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இதனால் மழையற்றுப் போன காலங்களிலும் விவசாயம் முறையாக நடைபெறும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்
இந்த மாற்றத்தை லக்ஷ்மன் சிங் எப்படி நிகழ்த்தினார் என்பது ஆச்சரியமானது. சிறு விவசாயியான லக்ஷ்மன் சிங் ஒரு நாள் அனுபம் மிஸ்ராவின் ““Aaj Bhi Khare Hain Taalaab” என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறார். அந்தப் புத்தகம் மரபான நீர்வளம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்துப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு சொல்லையும் தான் ஆழ்ந்து படித்து மனதில் ஏற்றிக் கொண்டதாகக் கூறுகிறார். இந்தப் புத்தகம் தந்த உத்வேகம் தான் லக்ஷ்மன் சிங்கினை நீர்வளத்தை மீட்கும் பணியில் ஈடுபட வைத்திருக்கிறது

லபோடியா விவசாயிகளை ஒன்றுதிரட்டி தங்கள் கிராமத்தின் நீர் தேவையைத் தாங்களே உருவாக்கிக் கொண்டுவிட முடியும். அதற்கு வழியிருக்கிறது என்பதைப் புரிய வைத்திருக்கிறார். வறண்ட ராஜஸ்தான் கிராமங்களில் தண்ணீர் பிரச்சனை ஒரு புறம் என்றால் மறுபுறம் பண்பாட்டுப் பிரச்சனை. ஊரின் கோவில் குளத்தில் பெண்கள் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது. குளிக்கக் கூடாது என்ற நடைமுறையிருக்கிறது. இதனால் தண்ணீர் கஷ்டத்திலும் அவர்கள் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இது போலவே வீட்டிற்குத் தேவையான குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் கொண்டுவரவேண்டியது பெண்களின் வேலை. ஆகவே ஆண்கள் அதைக் கவனத்தில் கொள்வதில்லை. படத்தில் ஒரு பெண் ஒரு வாரத்திற்கு ஒருமுறை தான் குளிக்க முடியும் என்கிறாள். இன்னொரு காட்சியில் குறைவான தண்ணீரில் தான் குளிக்க முடிகிறது என்று ஒரு இளைஞன் அலுத்துக் கொள்கிறான்.

இந்தச் சூழலில் கிராமவாசிகளின் உழைப்பில் நீர்நிலைகளைத் தூர்வாறுகிறார்கள். புதிய கால்வாய் அமைக்கிறார்கள். மழைநீரைச் சேமிக்கப் புதிய வழிவகைச் செய்கிறார்கள். மழைக்காலம் துவங்குகிறது. மழைத்தண்ணீர் முறையாகச் சேமிக்கப்படுகிறது. இதனால் கிராமக்கிணறுகள் நிரம்புகின்றன. தரிசு நிலம் வளப்படுகிறது. புதிய மரங்களை நட்டு தோப்புகளை உருவாக்குகிறார்கள். விவசாயத்திற்கான தண்ணீர், குடிநீர் இரண்டும் ஆண்டுமுழுவதும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள். விவசாயம் நன்றாக நடக்கிறது. இதனால் மாடு வளர்ப்புப் பெருகுகிறது. பால் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். லபோடியாவின் வாழ்க்கைத் தரம் உயருகிறது
இதை அறிந்த பக்கத்துக் கிராமவாசிகள் லட்சுமன் சிங்கை வரவழைக்கிறார்கள். பாடிக்கொண்டு ஒரு குழுவாக அவர்கள் அடுத்த கிராமத்திற்குப் போகிறார்கள். அங்கே மக்களை ஒன்று திரட்டி தங்கள் ஊரில் செய்த ஏற்பாடுகள் பற்றிப் பேசுகிறார்கள். கிராமவாசி ஒருவரின் நேர்காணலில் லட்சுமன் சிங் சொல்வது எல்லாம் முட்டாள்தனம். வெறும் பகல்கனவு என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் சொன்னபடி செய்து நீர்வளம் பெருகிவிட்டபிறகு அவரை எங்கள் வழிகாட்டியாகக் கருதுகிறோம் என்கிறார்
வறட்சி நிவாரணம். வெள்ள நிவாரணம் என்று அரசு பெரும்பணத்தைச் செலவு செய்கிறது. ஆனால் ஆக்கப்பூர்வமாக நீர்வளத்தைப் பெருக்க நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே மக்களே ஒன்று சேர்ந்து இந்தப் பணியைத் துவங்கி வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம் என்கிறார் லட்சுமன் சிங்.

கிராம மக்களை ஒன்று சேர்த்து நீர் வளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவது பெரிய சவாலாக இருந்தது. பலரும் அவர் தங்கள் நிலத்தை அபகரித்துவிடுவார் என்று நினைத்தார்கள். சிலரோ ஒடுக்கபட்டவர்களடன் இணைந்து கொண்டு அவர் மேற்சாதியினரை அவமதிக்கிறார் என்று கருதினார்கள். இந்திரன் தரும் கொடை தான் மழை. அந்த மழை தண்ணீரை வீணடிக்கக் கூடாது. பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஒரு கிராமதுப் பெண்

chauka system என்ற முறையில் மழைநீரைச் சேமித்து அதன் மூலம் கிராமக்கிணறுகளில் நீர்வரத்தை அதிகப்படுத்தியதோடு தரிசு நிலங்களையும் வளமிக்கதாக மாற்றியிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் கவனத்தைத் திருப்பிய சிங் அதில் வெற்றி அடைந்திருக்கிறார்.
இன்னொரு காட்சியில் லட்சுமன் சிங் வறட்சியைப் பற்றியோ பஞ்சம் பற்றியோ நாங்கள் ஒருபோதும் பயந்தது கிடையாது. அதைத் தாங்கிப் பழகிவிட்டோம். ஆனால் எதனால் வறட்சி ஏற்படுகிறது என்பதைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை என்பது தான் எனது கேள்வி. அதைத் தான் அனுபம் மிஸ்ரா புத்தகம் சிந்திக்க வைத்தது என்கிறார்.
கிராமத்தில் அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகளுக்குப் புதிய பெயர் வைத்திருக்கிறார்கள். பறவைகளுக்கான காடு. எலிகளுக்கான காடு என்று சிறப்பு மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கிராமங்களில் மரம் வெட்டுவதோ, வேட்டையாடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது

மழைக்குப் பின்னர் ஈரநிலத்தில் லட்சுமணன் சிங் நடந்து செல்லும் காட்சியும், கிராமத்துக் கிணற்றில் பெண்கள் நீர் இறைக்கும் காட்சியும், ஆடு மேய்க்கும் கிழவர் சொல்லும் உண்மைகளும். கிராமத்துப் பெண்ணின் ஆதங்கமும் மறக்கமுடியாத காட்சிகள்
நீர்வளத்தைப் பறிகொடுத்துவிட்டு எப்படி உயிர்வாழப்போகிறோம். மரபான நீர் வளப் பாதுகாப்புமுறைகளை ஏன் கண்டறிந்து உயிர்கொடுக்கக் கூடாது என்றே கேள்வியை உரத்து எழுப்புகிறார் லக்ஷ்மன் சிங்.
அது நாம் அனைவரும் சேர்ந்து யோசிக்கவும் முன்னெடுக்கவும் வேண்டிய பணியாகும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
