ரிதுபர்னோ கோஷின் தாகூர்

வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் மகாகவி தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். Jeevan Smriti என்ற இந்த ஆவணப்படமே கோஷின் கடைசிப்படம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் இன்று இணையத்தில் காணக்கிடைக்கிறது. 12 தேசிய விருதுகளை பெற்றுள்ள ரிதுபர்னோ கோஷ் கவித்துவமான சினிமாவை உருவாக்கியதில் முன்னோடி. இவர் தாகூரின் கதைகளை சிறந்த திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் தாகூரின் 150வது ஆண்டினை முன்னிட்டு மத்திய அரசின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதுபோலவே சத்யஜித்ரே தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை 1960ல் உருவாக்கினார். அந்தப் படம் பற்றி நான் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். அதுவும் தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது

ரே இயக்கிய படத்தின் தொடர்ச்சி போலவே இப்படத்தை ரிதுபர்னோ உருவாக்கியிருக்கிறார்.

வழக்கமான ஆவணப்படங்கள் போல நேர்காணல்கள். பழைய புகைப்படங்கள். செய்தி துண்டுகள், குடும்பத்தவர்களின் நினைவுகள் என இந்தப்படம் உருவாக்கப்படவில்லை.சுயசரிதைப் படம் போலவே உருவாக்கபட்டிருக்கிறது. தாகூரின் வாழ்க்கையை விவரிக்கும் படத்தின் இடையிழையாக ரிதுபர்னோ கோஷ் மற்றும் அவரது படக்குழுவினர் படப்பிடிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்வது. படப்பிடிப்பிற்கான களம் தேடி பயணம் செய்வது, தாகூரின் வீட்டிற்குள் செய்யும் ஏற்பாடுகள் என இருபுள்ளிகளும் அழகாக இணைந்து பயணிக்கின்றன. தாகூரின் இளமைப்பருவத்தை நேரடியாக ரிதுபர்னோ பார்வையிடும் காட்சி மிக அழகானது. காலத்தினுள் நுழைந்து நிஜத்தை காணுவது என்ற கோஷின் அணுகுமுறையே படத்தின் தனித்துவம்.

தாகூரின் வாழ்க்கை வரலாற்றைக் கால வரிசையாக இப்படம் விவரிக்கிறது என்ற போதும் வாழ்வின் முக்கியத் தருணங்களையும் அது ஏற்படுத்திய பாதிப்புகளையுமே பிரதானமாகக் கொண்டிருக்கிறது.

ரிதுபர்னோ ஆவணப்படங்கள் எதையும் இயக்கியதில்லை. ஆகவே கதைப்படம் போலவே இதையும் உருவாக்கியிருக்கிறார். நான்கு நடிகர்கள் வேறு வேறு வயதுள்ள தாகூராக நடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்திலும் வங்காளத்திலும் விவரணை தரப்படுகிறது.

தாகூரின் முதல் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தைக் கோஷ் காட்டுகிறார். எட்டு வயதான தாகூரின் படமது. அதற்கு முன்பு எப்படியிருந்தார் என்று தெரியாது என்றே விவரணை துவங்குகிறது.

கேமிராவின் வருகையும் அது உயர் தட்டு மக்களிடம் உருவாக்கிய வரவேற்பும் இந்தத் தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பிரபுக்கள். ஜமீன்தார்கள். பெரும் வணிகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் தான் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இல்லத்திருமணங்கள் தான் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தாகூரின் குடும்பம் பிரம்ம சமாஜத்தை சார்ந்தது என்பதால் பெண்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தாகூர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் யாவும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த ஆவணங்களை விடவும் அவரது படைப்பின் வழியே அவரது எண்ணங்களை, உணர்ச்சிகளை, படைப்பாற்றலை கண்டறிந்து வெளிப்படுத்தவே ரிதுபர்னோ முயல்கிறார்

தனிமை தான் தாகூரைக் கவிஞராக உருவாக்கியிருக்கிறது. சிறுவயது முதலே அவர் தனிமையைத் தீவிரமாக அனுபவித்திருக்கிறார். வாரத்தின் ஒரு நாள் தான் அம்மா அவரைக் கவனிப்பார். மற்ற நாட்களில் வேலைக்காரர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். வீட்டில் நடந்த கச்சேரிகள். வீதியில் பாடிக் கொண்டு செல்லும் யாசகர்களின் பாடல். ஒவியம், கலைகள். அரசியல், அச்சு என வீட்டிற்குள் அறிமுகமாக புதிய உலகம் அவரை உருமாற்றியிருக்கிறது.

தனது பனிரெண்டாவது வயதில் தாகூர் தனது தந்தையோடு ஒரு பயணம் மேற்கொண்டார். அது தான் அவரது முதற்பயணம். அந்தப் பயணத்தில் வழியே தான் இந்தியாவின் உண்மையான முகம் அவருக்கு அறிமுகமானது. எந்த இடத்தில் பின்னாளில் சாந்திநிகேதன் உருவாக்கப்போகிறாரோ அந்த ஷோலாப்பூருக்கு முதல்முறையாகச் சென்ற அனுபவத்தைக் கோஷ் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். வங்காள கிராமப்புற வாழ்க்கையின் இனிமையும் அழகும் மெய்மறக்கச் செய்கிறது.

அண்ணி காதம்பரி தேவியுடன் ஏற்பட்ட நெருக்கமான பழக்கம். தாகூரின் இங்கிலாந்து பயணம். தாகூரின் திருமணம் ஆகியவை முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தாகூரின் திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் காதம்பரி தேவி தற்கொலை செய்து கொண்டார். அதைத் தாகூரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவர்களுக்குள் இருந்த ரகசியக்காதலைத் தான் சத்யஜித்ரே சாருலதா என்ற படமாக உருவாக்கினார். அது தாகூரின் சிதைந்த கூடு நாவலின் திரைவடிவமாகும்

காதம்பரி தேவியின் தற்கொலை ஏற்படுத்திய வெறுமையும் துயரமும் தான் தாகூரின் படைப்பாற்றலைத் தூண்டியது. அதன்பிறகு தான் அவர் முக்கியமான படைப்புகளை எழுத ஆரம்பித்தார். ஒருவகையில் துயரிலிருந்து விடுபடவே அவர் கவிதைகள் எழுதினார் என்கிறார்.

இது போலவே தாகூரின் அம்மா இறந்த போது அவரது தந்தை செயலற்று உறைந்து போயிருக்கும் காட்சி படத்திலிருக்கிறது. தாயின் இழப்பைத் தாங்க முடியாத தாகூர் தந்தையை வெறித்துப் பார்க்கிறார். தந்தையோ இனி தனக்கு வாழ்க்கையில் பிடிப்பேயில்லை என்பது போலச் சாய்வு நாற்காலியில் இருக்கிறார். அந்தக் காட்சி தாகூருக்குள் அழியாத பிம்பமாகப் பதிந்துவிட்டது என்றும் கோஷ் கூறுகிறார்

இந்த ஆவணப்படம் சத்யஜித்ரேயிற்குச் செய்யப்பட்ட அஞ்சலி போலவே அவரது திரைப்படத்தின் முக்கியக்காட்சிகள். ரே படம் போலவே அமைக்கப்பட்ட காட்சிகோணங்கள். நடிகர்கள். இசை கலைவெளிப்பாடு என ரிதுபர்னோ தாகூரை மட்டுமின்றிச் சத்யஜித்ரேயினையும் போற்றிக் கொண்டாடியிருக்கிறார்

தாகூரின் பிள்ளைகள் என்னவானார்கள் என்ற கேள்வி இந்தப் படம் பார்க்கும் போது எனக்குள் ஏற்பட்டது. படத்தில் அது பற்றி விரிவாக பேசப்படவில்லை.

1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருணாளி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை தாகூர் மணந்தார். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். முதல் குழந்தை மதுரிலதா, இவரைப் பேலா என்று அழைத்தார்கள். தாகூரின் மகன் ரதிந்திரநாத் ஒரு கல்வியாளர். எழுத்தாளர், ஓவியர், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.

1910 ஜனவரி 27 ஆம் தேதி, ரதிந்திரநாத் தன்னை விட ஐந்து வயது குறைந்த பிரதிமா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். இது ஒரு விதவைத் திருமணம்.

பிரதிமாவுக்குப் பதினொரு வயதாக இருந்தபோது முதற் திருமணம் நடந்தது, ஆனால் அவரது கணவர் நிலநாத் சட்டோபாத்யாய் இரண்டு மாதங்களுக்குள் இறந்துவிட்டார். அதன்பிறகு விதவையாகவே வாழ்ந்து வந்தார். மறுமலர்ச்சி எண்ணங்களைக் கொண்ட தாகூர் குடும்பம் அவரை  மருமகளாக ஏற்றுக் கொண்டது. அது அன்றைய வங்காளத்தில் பெரிய புரட்சிகர நிகழ்வு.

ரதிந்திரநாத் அமெரிக்காவிற்குச் சென்று விவசாயக்கல்வி படித்தவர். சில காலம் ஜெர்மனியில் உயர்படிப்புப் படித்திருக்கிறார். அவர் கல்வியிலும்  கலைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

ரவீந்திரநாத்தின் மகள்களில் ரேணுகா தேவி தனது பதின்மூன்று வயதில் இறந்துவிட்டார். இவரை ராணி என்று செல்லமாக தாகூர்அழைத்தார். 1902 இல் ரேணுகா காசநோயால் பாதிக்கப்பட்டார். அவரது மருத்துவர்களின் ஆலோசனையின்படி, தாகூர் தனது மகளை 1903 மே மாதம் இமயமலைக்கு அழைத்துச் சென்றார். மகளுக்குத் துணையாக இருந்த நாட்களில் தாகூரின் மனம் மிகவும் சோர்ந்து போயிருந்த்து. அதிலிருந்து மீளுவதற்காக நிறைய குழந்கைகளுக்கான கவிதைகளை எழுதினார்.

தன்னுடைய வாழ்நாளில் அதிகத் துயரங்களைச் சந்தித்தவர் தாகூர். 1903 செப்டம்பரில், ரேணுகா காசநோய் முற்றி இறந்து போனார். இது நடந்து ஒராண்டில் அவரது மகன் ஷமிந்திரநாத் தனது 11 வயதில் காலராவால் இறந்தான். மனைவி, மகள், மகன் என அடுத்தடுத்த மரணங்கள் தாகூரை மிகவும் வேதனையடையச் செய்தன.

ரிதுபர்னோ கோஷ் தாகூரின் உலகைப் பார்வையாளர்கள் முழுமையாக உணர வேண்டும் என்று விரும்புகிறார். அவரை ஒரு பிம்பமாக முன்னிறுத்துவதை விடவும் எது தாகூரை உருவாக்கியது எவற்றைத் தாகூர் எழுதினார் என்பதையே அடையாளப்படுத்த முயலுகிறார்.

ஒரு காட்சியில் தாகூர் ரசித்துத் தன் கவிதைகளில் எழுதிய மழைக்காலத்தைத் தானும் அனுபவிக்க வேண்டும் என ஷோலாப்பூருக்கு காரிலே ரிதுபர்னோ கோஷ் பயணம் செய்கிறார். வழியில் நல்ல மழை. பாதையில் வெள்ளம் போகிறது. அதற்குள் இறங்கி நடக்கிறார். வாகனங்கள் போக முடியாத சூழல். வேறுவழியின்றி மாற்றுப்பாதையில் பயணம் செய்கிறார்கள். தான் கவிதையின் உலகிற்குள் மழையைத் துணைக்கு அழைத்தே செல்ல விரும்புகிறேன் என்கிறார் கோஷ்

தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்த விஷயம் எப்படித் தெரியவந்தது. அவர் அப்போது ஷோலாப்பூரில் இருந்தார். லண்டனிலிருந்து நோபல் கமிட்டி தந்தி கொடுத்திருந்தார்கள். அந்தத் தந்தியை எடுத்துக் கொண்டு ஒரு தபால்காரன் நவம்பர் மாத குளிரான காலைப் பொழுதில் கிராம சாலையில் பயணித்து அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு நோபல் பரிசை பற்றி எதுவும் தெரியாது. தந்தி வந்த நேரம் தாகூர் வீட்டில் இல்லை. அவர் தன் மகன் மற்றும் நண்பர்களுடன் வனப்பகுதிக்குக் காரில் சென்றிருந்தார். மருமகன் நாகேந்திரநாத் தபால்காரனைத் திரும்பி அனுப்பி வைத்தான். தாகூரின் கார் திரும்பி வரும்போது தபால்காரன் வழியில் அவரை மடக்கி தந்தியைக் கொடுத்திருக்கிறான். அதைப் பிரித்துப் படிக்காமல் தனது பாக்கெட்டில் திணித்து வைத்துக் கொண்டார் ரவீந்திரநாத். லண்டனிலிருந்து வந்துள்ள முக்கியமான தந்தி என்று தபால் ஊழியன் திரும்பச் சொன்னபிறகே அவர் அதைப் பிரித்துப் படித்துப் பார்த்தார்.

SWEDISH ACADEMY AWARDED YOU NOBEL PRIZE LITERATURE WIRE ACCEPTATION SWEDISH MINISTER என்ற அந்த வாசகத்தை அவரால் நம்ப முடியவில்லை. நோபல் பரிசுக்குத் தனது கவிதைத் தொகுப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதை அவர் அறிவார், என்றாலும் அந்தப் பரிசு தன்னைத் தேடி வரும் என நினைக்கவேயில்லை

சில மணி நேரத்தில் அவர் பரிசு பெற்ற செய்தி வங்காளம் முழுவதும் பரவியது. இந்திய இலக்கிய வரலாற்றில் அது மகத்தான அங்கீகாரமாக மாறியது.

தாகூரின் ஓவியங்கள் மற்றும் அவரது சர்வதேசப் பயணங்கள். சாந்தி நிகேதனில் அவர் மேற்கொண்ட முயற்சிகள். இந்திய சுதந்தரிப்போரில் அவரது பங்களிப்பு. காந்தியோடு அவருக்கு இருந்த நட்பு எனத் தாகூரின் ஆளுமையைப் படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது

ஏன் இந்தப் படம் வெளியிடப்படவில்லை என்பது புதிரான விஷயமே. ஒருவேளை இதனை மரபான ஆவணப்படமாக ஏற்க முடியாமல் அரசு நிர்பந்தம் கொடுத்திருக்கலாம். ரிதுபர்னோ கோஷ் சிறந்த ஒளிப்பதிவு. இசை, படத்தொகுப்பு நடிப்பின் மூலம் வழக்கமான ஆவணப்படத்தின் வடிவத்தை, வெளிப்பாட்டு முறைகளைக் கடந்து சிறந்த கலைப்படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறார்

ரிதுபர்னோ கோஷ் தாகூரின் கதைகளைத் தொடர்ந்து படமாக்கியவர். அவரது கடைசிப்படமாகத் தாகூரின் வாழ்க்கை வரலாறு அமைந்தது பொருத்தமானதே

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2021 05:45
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.