ஓநாயின் பயணம்

மாங்கா எனப்படும் ஜப்பானிய கிராபிக் நாவல்களை விரும்பி வாசிப்பேன். அதன் சித்திரங்களும் கதை சொல்லும் முறையும் வியப்பூட்டக்கூடியவை. இன்றைய ஹாலிவுட் சினிமாவில் இதன் தாக்கம் அதிகமிருக்கிறது. குறிப்பாக வித்தியாசமான கேமிரா கோணங்களை இந்த வகை மாங்காவிலிருந்தே உருவாக்குகிறார்கள். படக்கதை என்ற சம்பிரதாயமான வடிவத்தின் பெரிய பாய்ச்சலாகவே இது போன்ற சித்திரக்கதைகள் உருவாக்கப்படுகின்றன.

Lone Wolf and Cub இந்த வரிசையில் மிக முக்கியமானது. இதன் 28 தொகுதிகளையும் வைத்திருக்கிறேன். இந்தத் தொகுதியிலிருந்து ஆறு திரைப்படங்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சி தொடரை உருவாக்கியிருக்கிறார்கள். ஜப்பானில் மிகவும் புகழ்பெற்ற மாங்காவாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

ஜப்பானுக்குச் சென்றிருந்த போது ஒரு புத்தகக்கடைக்குப் போயிருந்தேன். அங்கே வயது வாரியாக இது போன்ற சித்திரக்கதைகளை வைத்திருக்கிறார்கள். விலை மிகவும் அதிகம். ஆனாலும் அதை மக்கள் விரும்பி வாங்கி வாசிக்கிறார்கள். ரயில் பயணத்தில் இது போன்ற சித்திரக்கதைகளை பலரும் வாசிப்பதை கண்டேன். இந்த கதைகள் கிண்டில் வடிவிலும் வாசிக்க கிடைக்கின்றன.

இளைஞர்கள் அதிகம் வாசிக்கும் சித்திரக்கதைகளில் வன்முறையும் பாலுறவு விஷயங்களும் மிக அதிகம் இடம் பெறுகின்றன. இந்தக் கதைகள் திரைப்படமாகவும் வெளியாகின்றன.

1970 ஆம் ஆண்டில் Lone Wolf and Cub மாங்காவின் முதற்தொகுதி வெளியிடப்பட்டது. கசுவோ கொய்கே உருவாக்கிய இந்தத் தொடருக்குச் சித்திரங்கள் வரைந்தவர் கோசேகி கோஜிமா.

எடோ-காலகட்ட ஜப்பானில் கதை நிகழுகிறது. சாமுராய் ஒருவனின் பழிவாங்கும் கதையை மிகச் சுவாரஸ்யமாகக் கொண்டு போகிறார்கள். அவன் தன் குழந்தையுடன் பயணம் செய்கிறான். வழியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். தாக்குதல்கள். பழிவாங்கத் துடிக்கும் குல எதிரிகள். இவற்றின் ஊடாக பௌத்த சாரம் போன்ற கருத்துக்களும் இடம்பெறுகின்றன. தனது மூன்று வயது மகன் டைகோராவைக் ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளியபடியே பயணிக்கிறான். இந்த கதைத்தொடரில் படுகொலைகளின் சித்தரிப்பு மிக அதிகம். ஒவ்வொரு ‘சாகசமும்’ முக்கிய கதைப்போக்குடன் இணையக்கூடியது.  17 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் இயற்கை அழகு மற்றும் நம்பகமான வரலாற்று விவரங்கள் இரண்டையும் கதை வழியாகஅழகாக இணைத்திருக்கிறார்கள். இந்த சாகசப்பயணத்தின் ஊடே மாறுபட்ட கதாபாத்திரங்கள், வாழ்க்கை முறைகள் விவரிக்கபடுவதால் நாம் சாமுராய்களின் விசித்திர உலகையும் அதன் போராட்டங்களையும் துல்லியமாக அறிந்து கொள்கிறோம்

இளம் திரைப்பட இயக்குநர் இந்த மாங்காவிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது குறிப்பாக இதன் காட்சிக்கோணங்கள். ஆக்ஷன். மற்றும் காட்சிகளைத் துண்டிக்கும் விதம் தனித்துவமானது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2021 00:10
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.