கதாநாயகி- கடிதங்கள் 3

அன்புள்ள ஜெ

கதாநாயகி படித்து முடிப்பது ஒரு பெரிய சவாலான அனுபவம். ஒரே மூச்சில் படித்திருந்தால் திணறடித்திருக்கும். ஆனால் பகுதி பகுதியாக வாசிக்கும்போது கடைசியில் மொத்தமாக மனதுக்குள் திரட்டிக்கொண்டு அர்த்தம் எடுக்கவேண்டியிருந்தது.

பதினைந்து அத்தியாயம் கடக்கும்போது ஃப்ரான்ஸெஸ் பர்னியின் வாழ்க்கைக்குறிப்பில் இருக்கும் உள்ளோட்டங்கள் எல்லாம் மறந்துவிட்டன. அவள் இளமையில் அடைக்கலாமாக கிரிஸ்பை நாடியது, அவரை தாண்டிச்சென்றது, இலட்சியவாதத்தால் ஈர்க்கப்பட்டது, அதன் கடைசி எல்லையை கண்டபின் ஒரு சினிக் ஆக மாறியது, தன் பெண்மையின் அடையாளங்களை அவள் துறப்பது ஆகியவை முக்கியமானவை. அவற்றைக்கொண்டுதான் அந்த நாவலை புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் அது ஒரு டிஸ்டன்ஸ் பயாக்ரஃபி. அந்த வாழ்க்கை வரலாற்றில்தான் ஹெலெனா தன்னை பொருத்திக் கொள்கிறாள். அவள் அதில் இருவரையுமே காண்கிறாள். இருவரையுமே தொந்தரவுசெய்தது விர்ஜீனியாவின் கதை. அதையும் பார்க்கிறாள். அந்த மூன்றுகதைகளும் இணைந்துதான் அவளுடைய மனநிலையை தீர்மானிக்கின்றன.

இந்நாவலில் மிகக் கவனமாக வாசிக்கவேண்டிய பல இடங்கள் உள்ளன. அவை சுழன்றுசுழன்று வருகின்றன. விர்ஜீனியாவை அவள் அப்பா சந்தித்துப் பேசும் இடம், கிரிஸ்ப் அந்நாடகத்தை எழுதிவிட்டு ஃப்ரான்ஸெஸ் பர்னியிடம் பேசும் இடம், அந்நாடகத்தைப் பற்றி ஹெலெனாவிடம் கர்னல் சாப்மான் பேசும் இடம், மூன்று இடங்களும் ஒன்றுதான். ஒரே நிகழ்வின் சிறிய வேறுபாடுகள். சரித்திரம் முழுக்க நடிக்கப்படும் ஒரு விஷயம் அது. அதில் மூன்றுபேருமே எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது முக்கியம். மூவருமே ஒரேபோல எதிர்வினையாற்றுகிறார்கள். கிண்டலாகவும் அதேசமயம் புதிராகவும் இருக்கிறார்கள். மூன்றுவகையில் இருக்கிறார்கள். அந்த வேறுபாடு, ஒற்றுமைவழியாகவே இந்நாவலைப் புரிந்துகொள்ள முடியும்

 

ஸ்ரீனிவாஸ்

 

வணக்கம் ஜெ

அரிதாக சில கதைகள் நம் ஆழத்தைத் துருவி வெளியே எடுத்துவிடும். அப்போதுதான் நாம் அவற்றை விழிப்புணர்வுடன் கவனித்திருப்போம். இல்லாத ஒன்றை கதைகளால் துருவ முடியாது. ஏனெனில் கற்பனை அனைத்தும் உண்மையே. நம் ஆழத்தில் நாம் சேர்த்துவைத்திருக்கிற குரோதங்கள், இச்சைகள், ஏமாற்று வித்தை, பழி உணர்ச்சி யாவையும் கதைகள் நமக்குக் காட்டிவிடுகின்றன. பல நேரங்களில் நாம் அவைகளைக் கண்டு பதற்றமடைகிறோம். உண்மையில் பித்து நிலை என்று தனியே ஏதுமில்லை. நாம் வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை சூழலுக்கு உதவாத/பொருந்தாத உளநிலைகளை நாம் கோளாறு என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். கற்பனை அளிக்கும் உளச்சிக்கல்களில் இருந்து விடுபட நாம் எதார்த்தத்தைப் பற்றுவது ஒரு சமநிலையை அளிக்கிறது.

கற்பனையை அளிக்கும் கலை, இலக்கியம் உள்ளிட்ட நாகரிக சமாச்சாரங்கள் கள்ளமின்மையின் அழகைச் சிதைத்துவிடுகின்றன. அக்கற்பனையே அனைத்து அதிகாரத்துக்கும், வன்முறைக்கும், ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும் காரணமாகிறது. கோழி; ‘ஞாகுஞ்சுடன் இருக்கும் கோழி. ‘நாற்காலி; ‘டாமேசையுடன் இருக்கும் நாற்காலி…. கள்ளமின்மையின் ஞானமும் அழகும் இது. இதை நாம் அறிவையும் நாகரீகத்தையும் கொண்டு அழித்துவிடுகிறோம். நூலில் உள்ள ஏதாவது ஒரு வரி போதும். நம் அகத்தில் ஏதோவொன்றை அது தூண்டிவிடும். அதன்பிறகு நம் விருப்பப்படி அதை விரித்துக் கொள்வோம். கதைசொல்லியும் அவ்வாறே அடைகிறான்.

கதாநாயகி; கதாநாயகர்களே கிடையாது. அவளே அத்தனையையும் தீர்மானிக்கிறாள். ஆண்களை சவாரிக் குதிரைகளாக்கி அவள் வென்றுவிட்டாள். ஆண்களின் சிருஷ்டியாகக் கருதப்படும் அதிகாரக் கட்டமைப்பை அவள் ஆண்களின் கைகளைக் கொண்டே கட்டச் செய்தாள். தன்னைச் சுமப்பவனாகவும் காப்பவனாகவும் அவனை நிறுவிவிட்டாள். தமக்காக ஆண்களை மோதிக்கொள்ளச் செய்வதிலும் அவளுக்கு வெற்றியே. அவள் இது அனைத்தையும் அவள் உடலைக் கொண்டு செய்தாளா அல்லது அருவமான ஒன்றைக் கொண்டு செய்தாளா? எதுவாயினும் அதை ஆண்களால் முழுதாகப் பிடிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய அதிகார-ஆதிக்கக் கட்டமைப்பு, போர்கள், பொன், பொருள் என எதன்மூலமும் ஆண்கள் வெற்றியைப் பெற முடியவில்லை.

நாகரிக உலகின் கறைபடாத ஒருத்தி, நாகரிக சீமான்-சீமாட்டிகளின் அபத்த உலகினை அடைகிறாள். எண்ணற்ற சம்பிரதாயங்கள், ஆசாரங்களாலேயே மனிதன் தன்னை மேம்பட்டவனாக பாவனை செய்கிறான். இக்கதை நிகழும் களமும் அந்த அபத்த நாகரிக உலகில்தான். ஆண்கள் அதிகாரத்தையும் பெண்கள் ஏமாற்று வித்தையையும் கைகொள்கிறார்கள். விலங்குகளிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் தன்னை மேம்பட்டவனாகக் காண்பிக்க அவன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் அவ்வாறான அபத்தத்தைத் தோற்றுவிக்கின்றன. இது ஐரோப்பியச் சூழலில் தெளிவாகத் தெரிகிறது. தான் இயற்கையின் அதிபதி என்ற எண்ணம். அசிங்கமான ஆணாதிக்கத்தையும் அபத்தமான பெண்ணியத்தையும் உருவாக்குகிறது.

அதையும் தாண்டி இந்த ஆண்-பெண் மோதல் விளையாட்டு ரசிக்கும்படியாக உள்ளது. தனது உடல், மனம் , அழகு, கற்பு என அனைத்து கூழாங்கற்களையும் ஆண்களிடம் வைரங்களாக நம்பச் செய்துவிட்டாள். தந்தையும் கணவனும் மட்டுமல்ல, மகனும் அவளுக்குச் சவாரிக் குதிரைதான். அனைத்தையும் தனது ஆணவத்தின் பொருட்டே செய்கிறாள். அந்த ஆணவத்திற்கென்று தனியான கருத்தோ செயலோ கிடையாது. வாய்க்கும் சூழலுக்கேற்ப அதை பொருத்திக் கொள்ளமுடியும். உடலே அவளது ஆயுதம்; அழகே அவளது ஆணவம். தனது இச்சையின் பொருட்டும், ஆணவத்தின் பொருட்டும் அவள் கற்பையும் சாபத்தையும் உருவாக்கிக் கொண்டாள். கற்பு என்பது ஆண்களால் தயாரிக்கப்பட்டு பெண்கள் தலையில் சுமத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டே உள்ளது. ஆணுக்கு அதன் தேவை இருப்பதனால் அதைப் பயன்படுத்திக் கொண்டான். வெளிப்பார்வைக்குத் தெரியாத அவளது ஆணவம் அவளது மெல்லுணர்ச்சி. அதுவே ஆண்களைச் சீண்டும் விஷயம்.

தன்னை முழுமையாக வெளிப்படுத்தாத தன்மையுடன், ‘நான் உன் கையில் சிக்கமாட்டேன்’ என்று ஆணுக்கு அறைகூவல் விடுக்கிறாள். தான் ஒரு புதிர், ஒரு ரகசியம் என்பதே அவள் ஆணவத்தின் கச்சாப்பொருள். காதலிலும் காமத்திலும் தன்னை முழுமையாகக் காட்டிகொள்ளாத தன்மையை நன்கு பயின்றிருக்கிறாள். ஆண் தன்னை முழுமையாக அறிந்துவிட்டால், அது தன் தோல்வி என்று எண்ணுகிறாள். நம் உடலுறவின் உச்சத்தை ஆண்கள் அறிந்துவிடக் கூடாது என்று கற்பிக்கிறாள். ஒரு ஆணை பார்வையாளனாக அமரச் செய்து, அவனை நகரவிடாமல் கட்டிப்போட்டு, அவன் முன்னிலையில்  இரண்டு பெண்கள் லெஸ்பியன் உறவு கொண்டால், அதை பார்க்கும் அந்த ஆண் ஏக்கமும், ஏமாற்றமும், வயிற்றெரிச்சலையும் அடைவான். அக்கணம் ஆணாய் இருப்பதன் போதாமையை உணர்வான். அப்போதாமையே அவனை வன்முறையாளனாய் ஆக்குகிறது. மேலும் மேலும் பெண்களை அடையத் தூண்டுகிறது. வெறும் உடல் மட்டும் போதாது. அவளின் மனமும் வேண்டும். இரண்டையும் முழுதாகக் கைப்பற்ற வேண்டும். இரண்டையும் தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று விழைகிறான். ஆனால் அவனால் முழுதாக வெல்ல முடியவில்லை. அவள் நழுவும் தந்திரத்தை ஒவ்வொரு கணமும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறாள்.

அவளும் சீண்டப்படும் இடம் ஒன்றுண்டு. அது அவளின் மன நிர்வாணம். அவள் உடல் நிர்வாணத்தை அஞ்சுவதில்லை. உண்மையில் பெண் தன் உடலை வெளிப்படுத்தவே விரும்புவாள். அது அவளது ஆயுதம் என்று உள்ளூர விழிப்புணர்வற்ற நிலையில் அறிந்து வைத்திருப்பாள். ஆணின் பார்வை தன் உடலைத் தொட வேண்டும். ஆனால் கைகள் தொட்டுவிடக் கூடாது. அப்படித் தொடவேண்டுமெனில் அவன் வாழ்வில் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். இந்த நுட்பமான விளையாட்டையே அவள் விளையாடுகிறாள். இந்த விளையாட்டை மீறும் ஆணை இன்னொரு ஆணைக்கொண்டே கழுவிலேற்றுவாள். பெண் தன்மையுள்ள ஆணே அவளை உண்மையில் அச்சுறுத்துகிறான்.

அழகு, கற்பு, மனம் என்ற அருவமான கூழாங்கற்களை மட்டுமல்லாது, பிள்ளை என்ற உருவ கூழாங்கல்லையும் ஆண் கையில் வைரமாக ஒப்படைத்துவிட்டாள். அவன் வாழ்நாள் முழுக்க அதை ‘வாரிசாக’ சுமப்பவனாகிறான். மனிதப் பரிணாமத்தில் இதுபோன்ற எண்ணற்ற வைரங்கள் உருவாகி விட்டன. இவ்வைரங்கள் இல்லையெனில் நாகரிகம் என்பதே இல்லை. விலங்குகளாகத்தான் இருக்க வேண்டும். விலங்குகளில் ஆண் இனத்தின் வேலை என்ன ? பெண் இனத்திடம் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ பிள்ளை வரம் அளிக்கும் சடங்கை முடித்துவிட்டு, துண்டை தோளில் போட்டுக்கொண்டு ‘வரட்டுமாடி கண்ணு…’ என்று கிளம்பிவிடுவதுதானே ! இந்த மனித ஆணுக்குத்தான் எவ்வளவு சுமை !

குமரித்துறைவி கதையும் இக்கதையும் ஒரு இடத்தில் தொட்டுக் கொள்கின்றன. ஒன்று பெண்ணிடம் சரணடைவது, இன்னொன்று அவளை அதிகாரம் செய்வது, வெல்வது. இந்த இரு தன்மைகளும் ஆணுக்குள் இருக்கின்றன. இந்தப் போராட்டத்திலேயே அவன் இருக்கிறான்.

எவ்வளவுதான் வாசித்தாலும் கற்பனையை விரித்துக் கொண்டாலும் இந்தப் பேய் உலகிற்கு முடிவே கிடையாது என்று எண்ணி, கதைசொல்லி எதார்த்த வாழ்விற்கு வந்துவிடுகிறான். மலைவாழ் மக்களுக்கு வாத்தியார் வேலை பார்க்கும் வாழ்வையே தேர்வு செய்கிறான். இனி இதுவே என் வாழ்க்கை என முடிவு செய்கிறான். கிட்டத்தட்ட பித்து தெளிந்த நிலை. இரவு, கனவு, கற்பனை, மனதின் காம குரோதம் என அனைத்தையும் கழுவிய நிலை. மனிதனின் தேவை என்ன ? பசியும் நோயும் சுரண்டலும் இல்லாத வாழ்வே என்ற எளிய (பிரம்மாண்ட) உண்மையை ஏற்றுக்கொள்கிறான். ஒரு உலுப்பு உலுக்கி எடுத்து பின்னர் லேசாகச் சிரித்து அமைதியாக அமரச் செய்த கதை.

விவேக் ராஜ்

 

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

 

விர்ஜினியாவாக, ஃப்ரான்ஸெஸாக, ஃபேன்னியாக, ஹெலனாவாக, ஈவ்லினாவாக அந்த கானகத்தில் யக்ஷிகளென அந்தப் புத்தகத்தில் உலவுகின்றனர். மெய்யன் பிள்ளை புத்தகத்தின் உலகில் சென்று மனப்பிறழ்வு கொள்கிறார். மற்றவர்கள் உலகில் நல்ல ஆசிரியரென அமைகிறார். மனப்பிறழ்வு பொதுவாக நமக்கான தனித்த உலகமும் மற்றவர்களின் உலகில் நமக்கான இடமும் இணையும் புள்ளியில் உருவாகும் நிலை. அத்தகைய இணையும் புள்ளி வராத வரை அனைவரும் தெளிவானவர்களென்றே இச்சமூகத்திற்குத் தெரிவோம். ஒவ்வொருவருக்குமான தனித்த உலகில் விர்ஜினியா, ஈவ்லினா போன்ற கதாநாயகிகளும் கதாநாயகர்களும் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களின் உரைகள் அந்த பிரேஸ்லெட்டைப் போல தவிர்த்து வீசப்படுகின்றன அல்லது கிளர்ச்சியில் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த 15 நாட்களும் அடர்வனமும் கோரனும் துப்பனுமென்றும், காலனிய உலகமென்றும் இருவேறு கற்பனைகளில் வீட்டுத்தனிமையுடன் பயணித்தேன். மெல்லிய உடல்சோர்வில் கதாநாயகி கலைடாஸ்கோப் மாய ஆடிகளையொத்த உணர்வை அளித்து சற்று ஆற்றுப்படுத்தியது. அத்துடன் இன்று instagramஇல் துளாவியபோது ஆதித்யாவால் வரையப்பட்ட இந்த ஓவியம் கிடைத்தது. விளையாடும் வேங்கையுடன் ஊஞ்சல் கட்டியாடுகிறாள் கதாநாயகி!

உங்கள்

வெண்பா

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.