இன்றிருந்தேன்…

இன்றிருத்தல்…

இன்று காலை வழக்கம்போல ஏழுமணிக்கு எழுந்து காபி போட்டுக் குடித்துவிட்டு ‘கதாநாயகி’ நாவலை எழுத ஆரம்பித்தேன். அது நாவல் என்று தெரியாமலேயே ஆரம்பித்து விட்டேன். எழுதிய முதல் அத்தியாயம் எட்டாம் தேதி இரவு 1130க்கு முடிந்தது. அரைமணி நேரத்தில், ஒன்பதாம் தேரி 05 மணிக்கு வெளியாகிவிட்டது. அது ஒரு சவால், எனக்கு நானே விடுத்துக்கொண்டது, என்ன வருகிறதென்று பார்ப்போம் என்று நினைத்து.

கே.எஸ்.புணிஞ்சித்தாயா என்ற மங்களூர் ஓவியரை என் 25 வயது காலத்தில் பார்த்திருக்கிறேன். திரையில் வண்ணங்களை கலந்து விசிறியடிப்பார். அவை வழிந்து வரும்போது அந்த வழிதலையே ஒரு கத்தியால் நீவி நீவி ஓவியமாக்குவார். அவரும் அந்த வண்ணங்களின் வழிதல்களில் உள்ள ஒரு மாயக்கரமும் இணைந்து ஓவியத்தை உருவாக்கும்.

அன்று அவர் மேடையிலேயே ஓர் ஓவியத்தை வரைந்து காட்டினர். திகைப்பாக இருந்தது. அன்று பலர் கேள்விகள் கேட்டனர். அதில் ஒரு கேள்வி கவிஞரான வேணுகோபால் காசர்கோடு கேட்டது. ‘இது உங்கள் இன்ஸ்பிரேஷனுக்கு தடையாக இல்லையா? இந்த வண்ணங்களின் சாத்தியங்களை மட்டுமே நீங்கள் வரைய முடியும் என்று தோன்றவில்லையா?”

அதற்கு புணிஞ்சித்தாய சொன்ன பதில் மிக ஆழமானது. “எது இன்ஸ்பிரேஷன் என நம்மால் சொல்லிவிடமுடியாது. எனக்கு இந்த வண்ணங்கள் வழிவதிலுள்ள முடிவில்லாத சாத்தியக்கூறுகள்தான் தூண்டுதல். அவை என் கனவை கிளறுகின்றன. பலநூறு ஓவியங்கள் தோன்றுகின்றன. அவற்றிலொன்றை நான் வரைகிறேன். வரையாதவை கைநழுவிப்போகின்றன”

“இந்த ஓவியம் ‘ஆர்கானிக்’ ஆனாது, இது மேகங்களைப்போல, இத்தருணத்தில் உருவானது. இது நேரடியாக என் ஆழ்மனதில் இருந்து வருகிறது. என் ஆழ்மனதை இந்த வண்ணங்களின் வழிதல் தூண்டுகிறது. இயற்கையிலுள்ள எந்த தன்னிச்சையான அசைவையும் கூர்ந்து பார்த்தால் நாம் மெஸ்மரைஸ் ஆகிவிடுவோம். நம்மிடமிருந்து கலை உருவாகும். சிந்தனைசெய்து, திட்டமிட்டு, வடிவங்களையும் உருவகங்களையும் உருவாக்கி வரைவதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார் புணிஞ்சித்தாய.

பின்னர் மோகன் லால் தன்னிடம் சொன்னதாக மணிரத்னம் சொன்னார். காட்சியை முழுக்க ‘கம்போஸ்’ செய்து அளிப்பது லாலுக்குப் பிடிக்காது. அப்படி அளித்தாலும் அவர் கொஞ்சம் கலைத்துக்கொள்வார். தற்செயல்கள் நடக்கவேண்டுமென நினைப்பார். ‘கடவுளுக்கும் ஒரு ரோல் அதில் வேண்டும்’ என்று லால் சொன்னார். சாலையில் செல்லும் ஒரு கூட்டத்தை பாடியபடியே முறித்துக் கடந்து மறுபக்கம் செல்லவேண்டும். அதற்கு திட்டமிட்டு கொடுத்த இடத்துக்கு சற்று அப்பால் லால் முறித்துக் கடந்தார். நடிகர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அந்த குளறுபடியின் எல்லா அசைவுகளையும் இயல்பாக அவர் சமாளித்து கடந்துசென்றார். அந்த எதிர்பாராத தன்மையே அதன் அழகாக ஆனது.

நாவல் அன்றன்று வருவதைப்போல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருநாளும் என்ன வருகிறதோ அதை எழுதிய பின்னரே நான் அறிகிறேன். ஆனால் வடிவம் திரண்டபடியே வருகிறது. ஒத்திசைவும் முழுமையும் கொண்ட வடிவம். ஏனென்றால் கலை என்பது கைகளில், தர்க்கத்தில் இல்லை. அது கனவில் இருக்கிறது. வடிவமுழுமை இல்லாத கனவுகளே இல்லை.

ஓர் அத்தியாயம் எழுதினேன். மூவாயிரம் வார்த்தைகள். அச்சில் என்றால் 15 பக்கம். பின்னர் அ.வெ.சுகவனேஸ்வரனின் பிரம்மசூத்திரம் உரையை இன்னும் இரு உரைகளுடன் ஒப்பிட்டேன். சங்கரர், ராமானுஜர், மத்வர் உரைகளை சேர்த்துப் படித்தேன். அதைப்பற்றிக் கொஞ்சம் எழுதினேன் ஆயிரம் வார்த்தைகள்.

இன்று முதல் வாசகர்களிடம் ‘லைவ் சேட்’ உரையாடுவதாகச் சொல்லியிருந்தேன். ஒரு வாசகருக்கு நாற்பது நிமிடம் வீதம் நான்கு வாசகர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகம். ஒருவருக்கு ஆலோசனைகள். ஒருவரிடம் விவாதங்கள். இருவரிடம் அனுபவப்பதிவு. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம். உற்சாகமான பேச்சு, சிரிப்பும்.

முடிந்ததுமே சூம் மீட்டிங்கில் நண்பர்கள் சந்தித்தோம். ராஜகோபாலன், ஸ்டாலின் பாலுச்சாமி ஆகியோர் பேசினார்கள். அரங்கசாமி ஓர் தன்நடிப்பு நாடகத்தை நடத்தினார். சிரிப்பு வேடிக்கை என்று இரண்டு மணிநேரம்.

இந்த வகையான சந்திப்புகளில் நான் உத்தேசிப்பது ‘தன் வெளிப்பாடு’ என்பதை. அதாவது கற்பனையில் சென்று தன்னை முன்வைப்பதை. அன்றாட உரையாடல்களை அல்ல. நாம் வெளியே செய்வனவற்றை அல்ல. அரங்கா அந்த நாடகத்தை பயிற்சி எடுத்து மனப்பாடம் செய்து தயாராவதற்கு எடுத்துக்கொண்ட நேரமே தன்னுடைய பெரும் கொண்டாட்டம் என்றார். மனநிலையே மாறிவிட்டது. முகம் மலர்ந்துவிட்டது. அதைப் பார்த்ததுமே சந்திப்பின் பொதுவான உற்சாகமே பலமடங்காக ஆகிவிட்டது.

ஆம், நடுவே அத்தனை பிரச்சினைகள். பண உதவி செய்த சிலருக்கு சென்று சேரவில்லை, அவர்களின் தொடர் அழைப்புகள். மருத்துவமனைக்கு உதவ சிலர் ஓடிக்கொண்டிருந்தனர். சாவுச்செய்தியும் ஒன்று இருந்தது. அதனாலென்ன?

இன்னுமிருக்கிறது நாள். இனி சாப்பாடு, அதன்பின் குடும்ப அரங்கம். அதில் சிரிப்பு மட்டுமே. அதன்பின் பத்தில் இருந்து பன்னிரண்டு மணிவரை மேலும்  கொஞ்சம் வேதாந்தம். ஓரிரு பாடல்கள். ஒரு நாள் நிறைவுறும்.

வீணடிக்காமலிருந்தால் ஒரு நாள் எத்தனை பெரிதாகிறது, எவ்வளவு செய்தாலும் நேரம் மிஞ்சுகிறது. முடியும்போது ஒரு முழு வாழ்க்கையை முடித்த நிறைவு உருவாகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தனிவாழ்வென வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறார்கள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.