நன்னம்பிக்கை- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

வணக்கம். என் பெயர் சரண்ராஜ். வயது 23. கல்லூரி முடித்தவுடன் படித்த துறைக்கு செல்ல விரும்பாமல் புகைப்படகலை ஆர்வத்தினால் புகைப்படத்துறையில் சேரலாம் என்று விரும்பினேன். பெற்றோர்  திட்டுவார்கள் என்று பயந்து அவர்கள் சொன்னபடி அரசுத்துறை தேர்வுக்கு பயிற்சி செய்தேன். ஆனால் அதற்கு போதிய கவனம் என்னால் செலுத்த இயலவில்லை. வீட்டில் சண்டை போட்டு கொண்டு ஒரு போட்டா ஸ்டுடியோ வில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு வீட்டில் பிரச்சனை(என் அண்ணன் சினிமாவில் இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்) அதிகமாகவே நான் இருக்கும் பாண்டிச்சேரியிலேயே ஒரு கணினி துறையில் குறைவான வருமானதுக்கு வேண்டா வெறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

சிறுவயதிலிருந்தே எதன்மிதும் பிடிப்பில்லாத குணம், துணிவோடு எதையும் செய்ய முடியாத கோழையாகவே இருந்திருக்கிறேன். கல்லூரி வரை அக்குணத்தின்  வெளிப்பாடு என்னுள் பெருஞ்சோர்வையும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கியது. என் இறுக்கத்திலிருந்து மீட்பதற்கு புகைப்பட கலை உதவியாக இருந்தது. அண்ணாவிடம் கேமிரா வாங்கி கற்றுக்கொண்டிருந்தேன். என் வாழ்வில் கல்லூரி முடித்த பிறகு தான் நான் தனியாக வெளி ஊர்களுக்கு பயனம் செய்தேன் புகைப்படத்திற்காக. வீட்டில் சண்டை போட்டு தான் வெளியே செல்வேன். கலை பற்றிய சிந்தனை எனக்கு வாழ்வின் மீது பிடிப்பை உண்டாக்கியது என்றாலும் என் இயல்பான மனச்சோர்வு என்னை வாட்டியது.

இப்படி இருந்த நிலையில் தான் குக்கூ சிவராஜ் அண்ணாவை பார்க்கச் சென்றேன். என்னுள் இருந்த அத்தனை தவிப்புகளையும் அண்ணாவிடம் சொன்னேன். அண்ணா எனக்கு ஆறுதல் அளித்தார். நம்பிக்கை ஊட்டினார். பிறகு ‘தன்மீட்சி’ என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்து “இந்த புத்தகத்த திரும்ப திரும்ப படியுங்க சரண். எல்லாம் சரியாயிடம்” என்று சொன்னார்.

அப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். என்னுள் இருந்த கேள்விகளுக்கும், பெரும் பயங்களுக்கும் உங்கள் எழுத்து விடையாக இருந்தது. மருந்தாகவும்.

உங்கள் எழுத்து மேலும் என்னை உத்வேகபடுத்தியது. என்னுடைய நடவடிக்கைகளில், சிந்தனை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படுத்தியது. உற்சாகம் அளிக்க கூடிய சிந்தனையை சித்தித்தும், செயலை ஓரளவுக்கு செய்தும் வருகிறேன். வாழ்வின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது ஐயா. கனவுலோகத்திலிருந்து கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

மீண்டும் சோர்வு ஏற்படும்போதெல்லாம் உங்கள் எழுத்தையே மீண்டும் மீண்டும் வாசிப்பேன். யூடியூபில் உங்களது உரையாடலை கேட்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

நேற்று “இலக்கியமும் வாசிப்பும்” என்ற தலைப்பில் யூடியூபில் பேசிய உரையாடலைக் கேட்கும்போது பல புரிதல்கள் ஏற்பட்டது ஐயா. அதில்  ஒரு கருத்தை உருவாக்குவதற்கும், அதை மறுத்து வேறு கருத்தை நிலைநாட்டுவதற்கான திறன் நம்மூர் பல படித்த மனிதற்களுக்கே இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். ஆமாம் ஐயா அப்படிபட்ட கல்வி முறையில் நானும் படித்திருக்கிறேன். ஒரு படைப்பை உருவாக்குவதற்கான சிந்தனையை ஆசிரியர்களும் ஊக்கபடுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை. இப்படி உங்கள் உரையாடலும் என் சிந்தனையை மாற்றியிருக்கிறது.

தன்மீட்சியை தொடர்ந்து தங்களின் ‘அறம்’ புத்தகத்தை வாசித்தேன். அதில் வரும் கதைகள் ஏதோவொரு வகையில் மனிதர்களின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது. சக மனிதர்களிடமே நெருங்கி பேச தயங்குகிற நான் இன்று நண்பர்களிடம் நீண்ட நேரம் பேசுகிறன், புதிய மனிதர்களிடமும் பேசுகிறன். தற்போது ‘காடு’ நாவலை படித்து கொண்டிருக்கிறேன்.

கொரானா ஊரடங்கு காரணமாக எல்லாரும் வீட்டிலேயே இருக்கும் சமயத்தில் மனகசப்பை ஏற்படுத்தும் செய்தியில் மனதிற்கு இடம் கொடுக்காமல் புத்தகங்களை வாசிக்கிறேன். தங்களுடைய பொற்கொன்றை கட்டுரை மனதுக்கு நம்பிக்கை அளித்தது ஐயா.

என் வாழ்வில் நான் எழுதும் முதல் கடிதம். பிழையிருப்பின் மன்னிக்கவும் ஐயா. நன்றி.

சரண்ராஜ்

பாண்டிச்சேரி

***

அன்புள்ள சரண்,

நீங்கள் வாசிக்கும் நூல்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவுகின்றன என்பதில் நிறைவு. உங்களுடன் விளையாடும் நூல்களை அல்ல, உங்களை இட்டுச்செல்லும் நூல்களை தெரிவுசெய்து வாசியுங்கள். இக்காலகட்டத்தில் உளச்சோர்வு என்பது ஒரு வைரஸ் போல சூழலை நிறைத்துள்ளது. அதிலிருந்து உங்கள் இலட்சியங்களும் கனவுகளும் உங்களை மீட்க எழுத்து உதவட்டும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.