முகில் கடிதங்கள்- 13

ஜெயமோகன் அவர்களுக்கு,

என் வாழ்க்கையிலும் அப்படி ஒரு பயணம் இருந்தது. அவள் பயின்று கொண்டுஇருந்த ரீசேர்ச் இன்ஸ்டிடுயிலிருந்து அவளுக்கு குடை பிடித்து கொண்டு, அவள் கொலுசு ஒளியை கேட்டு கொண்டு, அவளை அவ்வப்போது பார்த்து கொண்டு, ஒன்றை கிலோமிட்டர் நடந்து அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு சென்றோம்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பல வித எதிர்ப்புகளுக்கு பிறகு, இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் அவள் என் மனைவியானாள். அதன் பிறகு அதுபோல் பல பயணங்கள். அருகில் இருக்கும் கடை முதல், நீண்ட தூரம் வரை. ஆனாலும் அந்த முதல் பயணத்தின் நினைவுகள்தரும் சுகம் வேறு வகை.

காதலினால் எவ்வளவோ இழந்திந்திருந்தாலும்,  நல்லவேளை நான் காதலை இழக்கவில்லை. இல்லை என்றல் அது ஒரு மாறாத ஏக்கமாகவே மனதிலே தங்கியிருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன் காதல் மட்டும் போதும் என்று நான் எடுத்த முடிவு, நல்ல முடிவு. தினம் தினம் காதலினால் நிறைந்த வாழ்க்கை. காதலுக்காக நான் இழந்ததை விட, என் தோழியுடன், இந்த 15 ஆண்டுகளில் நான் வென்றதே,  பெற்றதே அதிகம்.

உங்களுடைய அந்த முகில்  இந்த முகில், எங்களின் அந்த முதல் நடையை நினைவுபடுத்தியது. மீண்டும் அதே இடத்தில், அவளுடன் அதே போல் நடக்க வேண்டும் என்று தோன்ற வைத்துவிட்டது.

சு. பவளகோவிந்தராஜன்.

ஜெ

குமரித்துறைவி வந்து அந்த முகில் இந்த முகில் அலையை குறைத்துவிட்டிருக்கலாம். ஆனால் நான் இன்னமும்கூட அந்த மனநிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். சினிமா, அதனுள் ஒரு வாழ்க்கை இதெல்லாமே அடையாளங்கள்தான். நான் அதில் காண்பது அழிவின்மைக்கும் அழிவுக்குமான போராட்டம். இங்கே எல்லாமே அழிந்துகொண்டிருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கை கணந்தோறும் மறைந்துகொண்டிருக்கிறது. அதை நிறுத்திவைக்க முடியாது. ஆனால் நிறுத்தி வைக்க முயன்றுகொண்டே இருக்கிறோம். கல்லிலும் காவியத்திலும் பொறித்துவைக்கிறோம்.

சினிமா இன்றைய கல். இதிலுள்ளவை எப்படியோ நிலைத்துவிடுகின்றன. எவ்வளவோ சினிமாக்கள் மறைந்துவிட்டன. ஆனால் யூடியூப் வந்தபின் எதுவுமே அழியாது என்று தோன்றுகிறது. நான் ரசித்த ஒரு நடிகை இன்று சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரை இளமையில் அப்படி விரும்பியிருக்கிறேன். அவரைப்போல ஒரு பெண் என்று கனவு கண்டிருக்கிறேன். அவர் மாறிவிட்டார். நான் மாறிவிட்டேன். ஆனால் எண்பதுகளின் சினிமா அப்படியே இருந்துகொண்டிருக்கிறது.

முகில்கள் மறைந்துவிடும். வானம் அப்படியே இருந்துகொண்டிருக்கும்

ஜெ

அந்த முகில் இந்த முகில் அனுபவங்களால் ஆனது. அந்த எளிமையான காதலனுபவம் ஒன்றை இளமையில் அடைந்தவர்கள் பாக்கியவான்கள் அவர்களுக்கு துன்பமே இல்லை. அவர்களின் அந்தக் காதல் பிற எவருக்கும் தெரியாது. அவர்களுக்குள்ளேயே ஒரு கனவாக இருந்துகொண்டிருக்கும். ஆனால் அங்கேயே இருக்கும்.

அந்தக் கதையில் நான் பார்த்த ஒருவிஷயம் ராமராவ் அடையும் அந்த கொந்தளிப்பும் கிறுக்கும். அது ஏன்? அந்த கிறுக்கு நாட்கள் இன்னெவிட்டபிள் ஆன விதியை அவர் செரித்துக்கொள்ளும் முயற்சிதான் என்று தோன்றுகிறது. செரித்தபின் ஒரு மென்மையான வலியாக அதை மிச்சம் வைத்திருக்கிறார்

சந்திரமோகன் எம்

முகில்- கடிதங்கள் 10 முகில் கடிதங்கள்-9 முகில்- கடிதம்-8 முகில் கடிதங்கள்-7 முகில் கடிதங்கள்-6 முகில்- கடிதங்கள்-5 முகில்- கடிதங்கள்-4 முகில் -கடிதங்கள்-3 முகில் கடிதங்கள்-2 முகில்- கடிதங்கள்1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.