குமரித்துறைவி [குறுநாவல்] – 1
[ 1 ]
சித்திரை மாதம், வளர்பிறை நாலாம் நாளாகிய இன்று, வேணாட்டின் இரண்டாம் தலைநகராகிய இரணியசிங்கநல்லூரில் இருந்து அரசர் கொடிகொண்டிருந்த தலைநகரான திருவாழும்கோட்டுக்கு ஒற்றைக்குதிரையில் தனியாகச் சென்றுகொண்டிருக்கும் என் பெயர் தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன். என் முன்னோர்கள் இரணியசிங்கநல்லூரின் அரசன் பூதலவீர உதயரவி பாஸ்கர ரவிவர்மனின் படைத்தலைவர்களாக இருந்தனர். பதினெட்டு படைநிலங்களில் முதல்நின்றனர், பட்டனர், வென்றனர்.
சோழர்களால் இரணியசிங்கநல்லூர் வெல்லப்பட்டு பாஸ்கர ரவிவர்மன் கொல்லப்பட்டபோது நாங்கள் வேளிமலை வழியாக தென்மலைகளுக்கு குடியேறினோம். மலைக்குடிகளாகவே எழுபதாண்டுகள் வாழ்ந்தோம். சோழன் குலோத்துங்க நிருபதியின் ஆட்சிக்காலத்தில் எங்களுடன் அவர்கள் சமரசம் செய்துகொண்டார்கள். இரணியசிங்கநல்லூர் அருகே நட்டாலத்தில் எங்களுக்குரிய குடிநிலமும் ஆலய உரிமைகளும் திரும்ப அளிக்கப்பட்டன. நாங்கள் இரணியசிங்கநல்லூருக்கே திரும்பி சோழர்களுக்குக் கீழே செண்பகராமன் என்னும் பட்டத்துடன் ஆட்சியதிகாரிகளும் கோயிலதிகாரிகளும் ஆனோம்.
பின்னர் சோழர்கள் மறைந்தனர். பாண்டியர்கள் வந்தனர். மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனையும் தென்காசியை ஆண்ட வீரபாண்டியனையும் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவர் மாலிக் காஃபூர் வென்றார். தென்னகத்தை அவருடைய படைகள் சூறையாடின. பாண்டியர் கோல்கொண்ட மாநகர் மதுரை எரியூட்டப்பட்டது, மீனாட்சியும் அவள் உளம்கவர்ந்த அழகனும் குடிகொண்ட பேராலயம் கற்குவியல்களாக ஆகியது. திருநெல்வேலி தென்காசி திருக்கணங்குடி வழியாக வந்த அவர்களின் படைகளில் ஒரு பிரிவு ஆரல்வாய்மொழி வழியாக உள்ளே நுழைந்து தெக்கன்கூர் என்னும் இந்த வேணாட்டை ஓராண்டுக்காலம் முழுமையாக கொள்ளையடித்தது.
பொலிவுகொண்டிருந்த இரணியசிங்கநல்லூரும் திருவாழும்கோடும் கேரளபுரமும் அழிந்தன. திருப்பாப்பூர் நாடும் சிறவா நாடும் வீழ்ச்சி அடைந்தன. அனந்தபுரியில் மக்கள் குடியொழிந்து மீண்டும் காடு படர்ந்தது. ஆலயங்களில் அன்னப்படையலும் தீபமும் இல்லாமலாகி வௌவால்கள் மண்டி அவை புதர்மேடாயின. திருக்கணங்குடியிலும் திருநெல்வேலியிலும் சீவில்லிப்புத்தூரிலும் காவல்படைகளை நிறுத்திக்கொண்டு மதுரையை சுல்தான்கள் ஆட்சிசெய்தனர். சிராப்பள்ளி அரசே அவர்களுக்குரியதாகியது. அவர்கள் தஞ்சையையும் செஞ்சியையும் தாக்கிப் பிடித்துக் கொண்டனர். காஞ்சியையும் அப்பால் வேலூரையும் அவர்கள் பிடித்து அங்கெல்லாம் படைநிறுத்தி ஆட்சி செய்தனர்.
ஆனால் அவர்கள் தங்களுக்குள் போரிட்டு போரிட்டு கொன்றழித்துக் கொண்டனர். ஏனென்றால் அவர்கள் அனைவருமே சமமான குலமும் குடியும் கொண்டவர்கள். நாழி நாழிக்குள் நுழைவதில்லை என்பது அரசநீதி. மாமனை மருகன் கொன்றான். அவனை மைத்துனன் கொன்றான். மதுரையின் ஆற்றல் குன்றியபோது திருப்பாப்பூர் அரசு முதலில் கப்பம் அளிப்பதை நிறுத்தி தனியரசாகியது. சிறவா அதன்பின் தனியரசாகியது. சேரன்மாதேவி முதல் நெடுமங்காடு பாறசாலை வரை நிலம்விரிந்துகிடந்த வேணாடும் தனியரசாக மாறியது. எல்லைகளைக் காக்கும்பொருட்டு எட்டு படைகள் உருவாக்கப்பட்டன. இரண்டு படைகள் அனந்தபுரியில் சிறவா நாட்டு எல்லையிலும் இரண்டு படைகள் பாறசாலையில் திருப்பாப்பூர் எல்லையிலும் நின்றன.
பாண்டிநாட்டு எல்லைகளை பேணும்பொருட்டு நான்கு படைகள் அமைக்கப்பட்டன. ஒன்று சேரன்மாதேவி எல்லையிலும் இன்னொன்று திருக்கணங்குடி கூன்மலை அடிவாரத்தில் அழகியநம்பி ஆலயத்தின் அருகிலும் நிலைகொண்டது. இரண்டாம் தலைநகரான இரணியசிங்கநல்லூரில் இருந்துகொண்டு அந்த இரண்டு படைகளையும் நான் தலைமை தாங்கினேன். கோட்டாறிலும் களக்காட்டு எல்லையிலும் மணக்குடி காயல் கரையிலும் சிவீந்திரத்திலும் புலியூர்க்குறிச்சி உதயகிரிக் கோட்டையிலும் நூற்றுவர் கொண்ட விரைவுக் குதிரைப்படைகள் காவலிருந்தன. புதருக்குள் புலியின் வாடையை அறிந்துவிட்ட யானைபோல் வேணாட்டு மண் விழிப்புற்று காத்திருந்தது.
மதுரை வீழ்ச்சியடையும்போது வேணாட்டை ஆட்சி செய்த மகாராஜா ராமவர்ம குலசேகரன் பிரியதர்சன உடையவர் மகாவீரர். சங்காரமித்திரன் என்று பாண்டிய மன்னரால் பட்டம் அளிக்கப்பட்டவர். மாறவர்ம குலசேகர பாண்டியனின் மகள் நூபுரவல்லி சுந்தரத்தாள் பெருந்தேவி நாச்சியை மணந்தவர். அவர் ஆண்ட காலகட்டத்தில் இங்கே பாண்டியர்களின் கோல் ஓங்கி நின்றது. அவருக்குப்பின் அவர் மருமகன் பரசுராமப்பிரியன் வீரமார்த்தாண்ட வர்மன் கோல்கொண்டு அமர்ந்தார். அவருடைய ஆட்சியில் மதுரை சுல்தான்களுக்கும் அவர்களின் பெயர் சொல்லி வந்த அத்தனைபேருக்கும் கப்பம் அளித்து நாடு வறண்டு பஞ்சத்தில் ஆழ்ந்தது.
அவருக்குப் பின்னால் ஆட்சி செய்ய வந்த மகாராஜா சக்ரவாகன் பிரியநந்தனன் வீரகேரள வர்மனின் ஆட்சிக்காலத்தில் இங்கே உட்பூசல்களே நிறைந்திருந்தன. கோயிலதிகாரிகள் அரசர்கள்போல நடந்துகொண்டனர். மாடம்பிகள் அவர்களுடன் சேர்ந்துகொண்டு கப்பமும் வாரமும் அளிக்காமலாயினர். திருப்பாப்பூரும் சிறவாயும் தொடர்பற்றுச் சென்றன. திரும்பாம்பரம் நாட்டைக் கைப்பற்ற மகாராஜா அனுப்பிய சிறியபடை நெடுமங்காடு செல்லும் வழியிலேயே தோற்கடிக்கப்பட்டது. அதில் தப்பியவர்கள் நெடுமங்காடு மலையில் ஏறி மறைய திருப்பாம்பரம் அம்மராணி வலிய சிருதை தம்புராட்டியின் படைகள் பாறசாலை ஆலயம் வரை வந்து கொள்ளையடித்துவிட்டு சென்றன.
மகாராஜா வீரகேரள வர்மா தனிமையானவர். தோல்வி அவரை மேலும் தனிமையாக்கியது. ஆகவே குடியில் விழுந்தார். அவரை அரண்மனையில் எவரோ நஞ்சூட்டி கொன்றனர். அவர் மருமகன் ரவிவர்ம குலசேகரன் ஆட்சிக்கு வந்து முப்பத்துமூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஆட்சி செய்தார் என்று சொல்லமுடியாது, திருவாழும்கோட்டு அரண்மனைக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டார் என்று சொல்லவேண்டும். அவர் சூலை நோய் கண்டு மறைந்தபோது அவர் மருமகன் வீரகேரளன் வரகுணன் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு அப்போது இருபத்தொரு வயதுதான். அவர் எட்டாண்டுகளே ஆண்டார். அவர் மறைந்தபின் அவருடைய நான்கு மருமகன்களும் தங்களுக்குள் போரிட்டு ஆற்றலழிந்தனர். நாடு எருமை பூசலிட்ட ஆம்பல்குளமென கிடந்தது.
மதுரையில் சுல்தான்களின் அரசு சீரழிந்திருந்தது. திருக்கணங்குடியில் நின்றிருந்த சுல்தான்களின் படைத்தலைவன் அன்வர் கான் மதுரைக்கே சென்றுவிட்டான். அவனுக்கு சுல்தானாக வேண்டுமென ஆசையிருந்தது. செல்லும்வழியில் அவனுடைய வாள்தாங்கியாகிய சொந்த மருமகன் அகமதுகான் கழுகுமலை பாளையத்தில் வைத்து சங்கறுத்துக் கொன்று படைத்தலைமையைக் கைப்பற்றிக் கொண்டான். அவனை எதிர்த்து அன்வர்கானின் தளபதி அஸம் கான் போரிட்டான். திருக்கணங்குடி படைகள் இரண்டாகி ஒன்றோடொன்று போரிட்டன.
ஆறுமாதப் போருக்குப்பின் சிதறியழிந்த படைகள் திண்டுக்கல்லுக்கும் சிவகங்கைக்குமாக பரவின. ஆங்காங்கே எஞ்சிய உதிரி சுல்தான் படைகளை கயத்தாறுப் பாண்டியர்களும் தென்காசிப் பாண்டியர்களும் களக்காடு பாண்டியர்களும் தாக்கி அழித்துக் கொண்டிருந்தனர். அதன்பின் அவர்களுக்குள்ளே பூசல் வந்தது. அத்தனை பாண்டியர்களும் அவர்களே முதன்மைப் பாண்டியர்கள் என நினைத்தனர். ஆகவே பூசல் உச்சமடைந்து ஒருவரை ஒருவர் கொன்றழித்தனர். களக்காடு பாண்டியன் அதிராஜவீர பாண்டியனை கயத்தாறு பாண்டியர்கள் நால்வர் சூழ்ந்துகொண்டு சிறைப்பிடித்து கழுவிலேற்றினர். களக்காடு எரியூட்டப்பட்டது. தென்காசிப் பாண்டியன் சூரப்புலிப் பாண்டியன் கொல்லம் ஜெயத்துங்க நாட்டின் உதவியுடன் கயத்தாறு பாண்டியர்களை தாக்கி மூவரை கொன்றான். எஞ்சியவர்கள் மலையேறி தப்பினார்கள்.
இவ்வண்ணம் ஒவ்வொன்றும் சீரழிந்து கிடக்கும்போது சிவீந்திரம் ஆலயத்தின் தலைமை நம்பி சிறமடம் ஸ்ரீகண்டன் நம்பூதிரி வலிய திருமேனி தேவப்பிரஸ்னம் வைத்துப்பார்த்து வேணாட்டுக்கு ஒற்றை அரசர் வேண்டும் என்று தாணுமாலையன் ஆணையிடுவதை தெரிவித்தார். ஒற்றை அரசன் ஒருமுடிதாங்கி ஒருகோல் ஏந்தி வந்து பூஜை அளித்தாலன்றி இனி அன்னம் கொள்ளப்போவதில்லை என்று தாணுமாலையன் அறிவித்தார். முன்னுதித்த நங்கை சன்னிதியில் வேலேந்தி துள்ளிய பெருவண்ணான் அச்சுதன் மலையன் இனி ஒருகோலேந்திய முடிமன்னன் அளித்தாலொழிய படையல் ஏற்பதில்லை என அம்மை சொல்லிவிட்டதை கூறினார்.
வேணாடெங்கும் பலவகை நிமித்தைங்கள் தோன்றலாயின. ஊருக்குள் இருமுறை புலி புகுந்தது. திருவட்டாறு ஆதிகேசவன் சன்னிதியில் படமெடுத்த ராஜநாகம் தோன்றியது. கொடுங்கோடையில் வள்ளியாற்றிலும் தாமிரவர்ணியிலும் பெருவெள்ளம் வந்து ஊர்களைச் சூழ்ந்தது. ஆங்காங்கே தேவப்பிரஸ்னமும் நாட்டுகுறியும் வைத்துப் பார்த்தபோதும் அதுவே திரும்பத்திரும்ப தெய்வங்களால் சொல்லப்பட்டது. ஆகவே வேணாட்டின் நூற்றெட்டு கரைமாடம்பிகளும் ஏழு ஸ்வரூபங்களின் அம்மச்சிகளும் திருவாழும்கோடு ஆலயத்தின் அரசமர முற்றத்தில் கூடி மறைந்த மன்னரின் மருமகனாகிய ஆதித்ய வர்மனை அரசன் என தேர்வுசெய்து வில்லடையாளம் அளித்து முடிசூட்டினர். அவர் ஆதித்ய வரகுணன் சர்வாங்கநாதன் என்னும் பெயரில் அரசரானார்.
மகாராஜா ஆதித்ய வரகுணன் ஏழே மாதங்களில் போரிட்டுக் கொண்டிருந்த மருமகன்களை சிறைப்பிடித்து நாட்டில் அமைதியை உருவாக்கினார். அவர்களுக்கு ஆளுக்கொரு அரண்மனை கட்டிக்கொடுத்து என் தந்தையின் தனிப்பொறுப்பில் விட்டார். அரண்மனையில் அச்சிகளுடன் அவர்கள் அரசமுறைப்படி சிறையிருந்தனர். திருவட்டாறு கோயிலில் சுல்தான் படைகள் இடித்தழித்த பகுதிகளை மகாராஜா மீண்டும் கட்டினார். வடசேரிக் கிருஷ்ணன்கோயிலையும் திருவாழும்கோடு மகாதேவர் ஆலயத்தையும் எடுத்துக் கட்டி முழுமை செய்தார். கேரளபுரம் ஆலயத்தை பழுது நீக்கினார். ஆலயங்களுக்கு நிவந்தக் கொடைகள் வழங்கி அன்றாட பூசைகளும் நாளொழுங்குகளும் முறையாக நடைபெற வழிவகுத்தார். வள்ளியாற்றிலும் தாமிரவர்ணியிலும் உடைந்த கரைகள் சீரமைக்கப்பட்டன. நூற்றைம்பது குளங்கள் தூர்வாரப்பட்டன.
வேணாட்டு மகாராஜா வலிய உடையது ஆதித்யவர்ம பொன்னுதம்புரான் முப்பத்தாறு ஆயுதங்களை இரண்டு கைகளாலும் ஏந்திப் போரிடும் பெருவீரர். சவ்யசாஜி என அவரை படைக்குறுப்புகள் புகழ்ந்தனர். கல்விதேர்ந்து, மலையாண்மையிலும் தமிழிலும் அழகிய செய்யுட்களை இயற்றுபவர். ஆதிகேசவப்பெருமாளைப் பற்றிய கேசவபதாம்புஜம் என்னும் நூறு பாடல்களை இயற்றி சென்ற ஆண்டு ஆலயத்தின் ஸ்ரீமுகமண்டபத்தில் அறிஞர் நடுவே அரங்கேற்றினார். சொல்விளங்கும்பெருமாள் என்றும் படைதிகழ்ந்த பெருமாள் என்றும் புலவர்களால் பாடப்பட்டார்.
அவரை பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் வலிய சர்வாதிக்காரர் தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் என்னும் நான் அவர் சற்றும் விரும்பாத ஓலை ஒன்றை என் கையில் வைத்திருந்தேன்.
[ 2 ]
திருவாழும்கோடு நகரைச் சுற்றி ஓடும் பெரிய கோட்டை காலஞ்சென்ற மகாராஜா ராமவர்ம குலசேகரன் பிரியதர்சனன் காலத்தில் கட்டப்பட்டது. சரிவான பரப்பு கொண்ட கோட்டைச்சுவர் கீழே எட்டடி அகலமும் மேலே ஆறடி அகலமும் கொண்டது. இரண்டு ஆள் உயரமானது. அதன்மேல் ஓலைக்கூரை கவிந்திருந்தது. நூறடிக்கு ஒன்று என பெருந்தேக்கு மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு, அவற்றின்மேல் காவல்மாடங்கள் அமைந்திருந்தன. அவற்றில் இருந்து நூலேணி தொங்கியது. மேலே ஈட்டியுடனும் வில்லம்புகளுடனும் காவலர்கள் அரைத்தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். கோட்டையின் பின்பக்கம் வில்லவர் ஏறி நின்று வெளியே பார்த்து அம்புவிடுவதற்கான படிக்கட்டுமேடைகள் இருந்தன.
அந்த ஒளி பொருந்திய காலை வேளையில் தொலைவில் இருந்து பார்க்கையில் கோட்டைக்குள் இருந்து வீடுகளின் சமையல்புகை எழுந்து வானில் கரைந்துகொண்டிருந்தது. புகை கரைவதிலிருந்த நிதானம் அந்நகரமே அமைதியில் ஆழ்ந்திருப்பதாக தோன்றச் செய்தது. உள்ளே செறிந்திருந்த தென்னை மரங்களால் அக்கோட்டை வளாகம் ஒரு பசும்புல் நிறைந்த கூடை போல தோன்றியது. வீடுகள் எல்லாம் அந்த பசுமைக்குள் மறைந்திருந்தன. கோட்டைக்குள் எல்லாமே ஓலைக்கூரைகொண்ட இல்லங்கள்தான். அரண்மனை மட்டும்தான் மரப்பட்டைக்கூரை கொண்ட இரண்டு அடுக்கு மாளிகை. அதைக்கூட அணுகிய பின்னரே காணமுடியும்.
நான் குதிரையை பெருநடையில் செலுத்தி கோட்டையை அணுகினேன். அதன்பின் கோட்டையின் மாறாத தன்மை என் விசையை குறைத்தது. பொதுவாகவே மலைகள், கோட்டைகள், ஏரிகள் போன்ற அசைவிலாப் பேரிருப்புகள் நம்மருகே இருக்கையில் நாம் கொள்ளும் விரைவு ஒருவகை அறிவின்மை என்று தோன்றிவிடுகிறது. கோட்டை ஒரு மாபெரும் இல்லத்தின் சுவர் போல என் இடப்பக்கம் வந்துகொண்டே இருந்தது. சிலதருணங்களில் அது சேறுமூடிய காட்டுயானையின் உடல் என்று தோன்றியது. அரைக்கண்ணால் பார்த்தபோது அங்கே கலங்கிய நீருடன் ஓர் ஆறு ஓடுவதுபோல தோன்றியது.
வெறுஞ்சேற்றைக் குழைத்து உருட்டி வைத்துக் கட்டும் இந்த ஊரின் சுவர்களை அன்னிய நாட்டார் கண்டு வியப்பதுண்டு. குளங்களில் இருந்து களிமண்ணை வெட்டி எடுத்து மணலுடன் சேர்த்து மிதித்துப் பிசைந்து, எட்டுநாள் ஊறவைத்து, கொஞ்சம் சுண்ணாம்புடன் கலந்து மீண்டும் பிசைந்து உருட்டி மேலே மேலே வைத்து, விளிம்புகள் வெட்டி ஒதுக்கி கட்டப்படும் இந்தச் சுவர்கள் இங்கே நாநூறு ஐநூறு ஆண்டுகளாக அசைவிலாமல் நின்றிருக்கின்றன. சுவர்களின்மேல் மழைநீர் வழிந்தாலும் பெரிதாகக் கரைவதில்லை. மேலே ஓலைக்கூரை போட்டு ஆண்டுக்காண்டு புதுப்பித்தால் கட்டியதுபோலவே காலாகாலமாக நீடிக்கும். மண் கல்லாகிக்கொண்டே இருப்பது. அப்படியே விட்டுவிட்டால் மேலும் மேலுமென இறுகி மணற்கல்லாகவே மாறிவிடும். இரணியசிங்கநல்லூரின் பழையகோட்டை கல்லாக மாறிவிட்ட ஒன்று.
நான் கோட்டை வாசலை அடைந்தபோது காவல்மாடத்தில் இருந்தவன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். கொடிக்காரனும் கோல்காரனும் காவலர்களும் இல்லாமல் நான் தனியாக வந்தமை அவனை திகைப்புறச் செய்திருந்தது தெரிந்தது. அது நான்தானா என அவன் இன்னொருவனிடம் கேட்பதைக் கண்டேன். கோட்டைவாசல் திறந்து கிடந்தது. கோட்டையின் கதவுகள் இருபக்கமும் விரிந்து மண்ணில் புதைந்து கிடந்தன. அவற்றை மூடி இருபது முப்பதாண்டுகள் இருக்கலாம்.
கோட்டைக்கதவின் முகப்பில் இருந்த கஜலட்சுமிகள் மழையில் கருமைகொண்டிருந்தனர். கதவின் மேல் விளிம்பிலிருந்த நாகபந்தமும் யாளியும் கல்லென்றே தோற்றம் கொண்டிருந்தன. பித்தளை பிறைவடிவ பிடிகளும் இரும்புச் சங்கிலிகளும் எல்லாமே கல்லால் ஆனவைபோல மாறியிருந்தன. அந்தக் கதவே மெல்லமெல்ல கல்லாகிக்கொண்டிருந்தது என நினைத்துக்கொண்டேன்.
முன்பு கதவே இருக்கவில்லை. மகாராஜா வீரமார்த்தாண்ட வர்மா உடைய தம்புரான் காலத்தில்தான் அந்தக் கதவு அமைக்கப்பட்டது. ஆனால் அதை மூட வாய்ப்பே வரவில்லை. வேணாட்டின்மேல் படைகொண்டுப் வருபவர்கள் சேரன்மாதேவி கோட்டையைத்தான் முதலில் கைப்பற்றுவார்கள். போர் நடக்கும் அல்லது சமாதானம் உருவாகி கப்பம் வழங்கப்படும். பெரும்பாலும் இரண்டாவதுதான் நடக்கும். ஆனால் எல்லாமே அங்கேயே முடிந்துவிடும். ஆரல்வாய்மொழி மலைக்கணவாய் தாண்டி ,அத்தனை ஆறுகளையும் ஓடைகளையும் கடந்து, திருவாழும்கோடு வரை வந்தும் பயனில்லை. திருவாழும்கோட்டில் ஆறுமாதம் உண்பதற்கான நெல் அன்றி எதுவும் இருப்பதில்லை.
கோட்டைக்குள் நெல்லும், விளைபொருட்களும் கொண்டுசெல்லும் காளைவண்டிகள் சகடங்கள் ஓசையிட வெட்டுகல் பரப்பப்பட்ட பாதையில் அசைந்தசைந்து சென்றுகொண்டிருந்தன. நாலைந்து சோம்பேறிக் கிழவர்கள் அப்பால் ஓர் அரசமரத்தின் அடியில் இடப்பட்ட கற்களில் அமர்ந்து ஆர்வமின்றி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுங்க மாளிகையின் முகப்பில் நின்ற குந்தக்கார நாயர்கள் இருவர் ஒவ்வொரு வண்டியிலும் இருக்கும் சரக்குகளை கைகளால் தொட்டுப்பார்த்து தீர்வையை அறிவித்தார்கள். அவற்றை செம்புநாணயங்களாக பெற்றுக்கொண்டு வண்டிகளை மேலே அனுப்பினார்கள்.
தீர்வை எல்லாம் இங்கே ‘கண்டுசொல்லல்’ முறையில்தான். தீர்வை மிகக்குறைவு. மணக்குடி சந்தையில் பாண்டியர்களின் கோலதிகாரம் கொண்ட அரையர் தலைவர்கள் வண்டிக்கு நான்கு செம்பு பெற்றுக்கொள்கையில் இங்கே இரண்டுதான். மகாராஜா ஆதித்ய வரகுணன் குறைவாக விதிக்கப்படும் வரியே கஜானாவை நிரப்பும் என்ற கொள்கைகொண்டவர். அது உண்மையாகவும் இருந்தது.
வரி நிறைய விதிக்கப்பட்டால் குடிமக்கள் தங்கள் செல்வத்தையும் ஊதியத்தையும் மறைப்பார்கள். ஆகவே அவற்றை வாங்கும் அதிகாரிகள் அவர்களை தேடித்தேடி கண்காணிக்கவும் வேட்டையாடவும் வேண்டும். அதற்கு நிறைய அதிகாரிகள் வேண்டும். அந்த அதிகாரிகள் மெல்ல மெல்ல ஆற்றல் பெற்றவர்களாக ஆவார்கள். அவர்கள் ஆற்றல்பெற்றதும் தாங்களும் மாடம்பிகளோ கரைநாயர்களோ ஆகவேண்டுமென ஆசைப்படுவார்கள். வரிப்பணத்தை திருடத் தொடங்குவார்கள். அவர்களைப் பிடிக்க மேலும் தீர்வைநாயகங்களை நியமிக்கவேண்டும். விளைவாக எட்டுபணம் திரட்ட பத்துபணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
தீர்வைக்காரர்களின் எண்ணிக்கை பெருகினால் அவர்கள் ஒரு தனி ராஜாங்கமாக ஆகிவிடுவார்கள். படைதிரட்டுவார்கள். இடங்களைப் பிடித்துக் கொண்டு கலகம் செய்து போரிடுவார்கள். அவர்களை வெல்ல மேலும் போர்ப்படைகள் வேண்டும். அந்தப் படைகளுக்கு ஊதியம் கொடுக்கவேண்டும். அவர்கள் மேலும் அதிகாரம் கொண்டவர்களாக ஆனால் அவர்களும் திருடவும் கொள்ளையடிக்கவும் தொடங்குவார்கள்.
‘திருடன் மூத்தால் திருவுடை அரசன்’ என்ற சொல் ஏற்கனவே இருந்தது. அதை மகாராஜா சொன்னபோது நான் சிரித்துக் கொண்டிருந்தாலும் அது எத்தகைய உண்மை என்று அறிந்துமிருந்தேன். வேணாட்டில் அரசாங்கம் இருப்பதே தெரியாது. ஆகவே வரிகொடுப்பதும் தெரியாது. வேணாடு என்று ஒன்று இருப்பதே வேணாட்டினருக்கு பொதுவாக தெரியாது. திருவட்டார் ஆறாட்டுவிழாவில் வாளுடன் முன்னால் செல்லும் கூன்விழுந்த மனிதர்தான் அரசர் என்பதை மூத்தவர் சொல்லி இளையோர் அறிந்துகொள்வார்கள்.
அப்பால் எட்டு காவல்படைவீரர்கள் மடியில் ஈட்டிகளுடன் மரநிழலில் வெற்றிலை போட்டு வாயை பூட்டிவைத்தபடி அமர்ந்திருந்தனர். காற்றில்லாத வானில் கொடிகள் துவண்டு கிடந்தன. அங்கே எல்லாமே அரைத்தூக்கத்தில் என நடந்துகொண்டிருந்தன. தலையில் பனைநார்க் கடவங்களில் காய்கறிகளுடன் சென்ற பெண்கள்கூட நீந்தும் மீன்கள் போல காலையின் ஒளியில் அசைந்தனர். நானறிந்தவரை திருவாழும்கோடு எப்போதுமே அப்படித்தான். அதற்கு எதுவுமே ஒரு பொருட்டல்ல. அது யானை, அதன் செவியாட்டலும் உடலூசலாட்டமும் மிகமிக நிதானமானவை. ஏனென்றால் அதைச்சுற்றி செழித்த காடு இருந்தது.
எனக்காக சங்கொலி எழுந்தது. உடனே வேறு இரு இடங்களில் சங்கொலிகள் எழுந்து அச்செய்தியை பெற்றுக்கொண்டமையை அறிவித்தன. சுங்கமாளிகையிலிருந்து தீர்வைநாயகம் அருமந்தூர் செல்லக்குட்டிப் பிள்ளை வெளியே வந்து என்னை கண்டு தலைவணங்கினான். நான் அவனிடம் “என்னடே?” என்று கேட்டு புன்னகைத்துவிட்டு மேலே சென்றேன். அவன் கண்களில் வியப்பு இருந்தாலும் எதையும் கேட்கக்கூடாது என்று அறிந்திருந்தான்.
நான் சிவந்த வெட்டுகல் பாவியிருந்த சாலையில் குதிரையின் குளம்புகள் நிதானமாக தாளமிட நடந்தேன். எனக்குப் பின்னால் குதிரையின் வாலில் சுழலல் எனக்கே ஒரு சிறிய சிறகு முளைத்ததுபோல உணரச்செய்தது. சுண்ணம்பு பூசப்பட்ட சுவர்களின் மேல் மழையில் கருகிய ஓலைக்கூரை சரிந்து இறங்கி வந்து தாய்க்கோழி முட்டையை அடைகாப்பதுபோல மூடியிருந்தது. தெருக்களில் நாலைந்து பால்காரிகள் சென்றனர். ஒரு குதிரைவீரன் வந்து என்னை கண்டதும் பணிந்து முகமன் உரைத்தான்.
நான் அரண்மனையின் உள்கோட்டை வாசலை அடைந்தேன். அதன் முகப்பிலிருந்த கொட்டியம்பலத்தின் மரப்பட்டைக் கூரையின்மேல் தேன்மெழுகு பூசப்பட்டு கருமையாக மின்னியது. காவலர்கள் என்னை கண்டதும் தலைவணங்கினர். அவர்கள் முகத்தில் சற்றுமுன்பு வரை பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தமை தெரிந்தது. ஒருவன் வாயில் வெற்றிலையை தேங்கவைத்திருந்தான்.
நான் வருவதை முன்னரே சங்கோசையால் அறிந்திருந்த சம்பிரதி முண்டத்தூர் செல்லப்பன் பிள்ளை கொட்டியம்பலத்தில் இருந்தார். எழுந்து வந்து என்னை வரவேற்றார். வாளில் தொட்டு தலைவணங்கி “இரணியசிங்கநல்லூர் வாழும் வலிய சர்வாதிக்காரர் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் அவர்கள்க்கு சுஸ்வாகதம்” என்றார்.
நான் குதிரையை படைவீரனிடம் அளித்துவிட்டு இறங்கி அருகே சென்று வழக்கமாக கேட்பதுபோல “என்னடே?” என்று அவர் தோளில் தட்டியபின் “தம்புரான் சவிதம் வேணுமே” என்றேன்.
“திருக்கண் பார்க்கணுமானா உச்சியாகணும்… காலைநேரத்துள்ள பூஜாசம்பிரதாயங்கள் சபாவந்தனங்கள் முடிச்சுட்டு திருக்கண் வளரணும்னு இப்பதான் பள்ளியறைக்குப் போனார்” என்றார் சம்பிரதி செல்லப்பன் பிள்ளை.
“எழுப்பணும்” என்றேன். “பெரிய வார்த்தை உண்டு”
“அசுபமோ?” என்றார் சம்பிரதி.
“அசுபம் அல்ல, சுபவார்த்தைதான். ஆனா அஹிதம் என்று சொல்லலாம்.”
“ஓ” என்றார். “நான் கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையர் சவிதம் காரியம் என்னதுன்னு சொல்லுறேன். அவரு பாத்து ஏற்பாடு செய்யலாம்… பள்ளியறையிலிருந்து தம்புரானை எழுப்புறது இங்கே அபிகாம்யம் இல்லைன்னு தெரியுமே?”
“தெரியும், வேற வழியில்லை.”
“பூமுகத்தில் இருந்து கொஞ்சம் சம்பாரம் குடிச்சு தாம்பூலம் போட்டு இளைப்பாறணும்.. அதுக்குள்ளே நான் ஏற்பாடு செய்றேன்.”
”நல்லது, கொஞ்சம் க்ஷீணம் இருக்கு” என்றேன். “காலமே, புலரிக்கு முன் இரணியசிங்கநல்லூரிலே இருந்து கிளம்பினேன்… நேற்று ராத்திரியும் தூக்கமில்லை.”
பூமுகத்தில் மரத்தாலான திண்ணையில் அமர்ந்தேன். குளிர்ந்த சம்பாரம் வந்தது. கருப்பட்டியுடன் பழம்புளி சேர்த்து சுக்கும் மிளகும் சேர்த்து கலக்கியது. அதை குடித்தபின், தாம்பூலத்தை வாயில் அதக்கியபடி கண்மூடி அமர்ந்தவன் தூங்கிவிட்டேன். காலடியோசை கேட்டு எழுந்தேன். தாம்பூலம் என் மார்பில் சொட்டியிருந்தது.
சம்பிரதி செல்லப்பன் பிள்ளை “சொல்லியாச்சு. அங்கே தம்புரான் வந்து ஆசனத்தில் இருந்ததும் அழைப்பு வரும்” என்றார். பின்னர் சற்று தயங்கி “அவ்வளவுக்கு முக்கியமா செய்தின்னு ராயசம் கேட்டார். அப்டீன்னு சொல்லியிருக்கார்னு நான் சொன்னேன்.”
நான் தலையசைத்தேன். வாயை கழுவ நீர் கொண்டுவரும்படி ஏவலனிடம் சைகை காட்டினேன். வாய் கழுவி முகத்தையும் கழுவி மேலாடையால் துடைத்துக்கொண்டிருக்கும்போது ஏவலன் வந்து தலைவணங்கி “ஸ்ரீவாழும்கோடு எழுந்தருளும் மகாராஜா சவிதம் ஹிதம்” என்றான்.
[ 3 ]
நான் மேலாடையை சீராகப் போட்டுக்கொண்டு நடந்து இடைநாழியை கடந்து சிறிய வாசல் வழியாக நன்றாகக் குனிந்து உள்ளே சென்றேன். ஒற்றைச்சாளரம் மட்டுமுள்ள பெரிய அறையில் கிழக்குநோக்கி போடப்பட்ட மஞ்சக்கட்டிலில் மெத்தைமேல் சாய்ந்தபடி மகாராஜா ஆதித்ய வர்மா வரகுண சர்வாங்கநாதப் பெருமாள் உடைய தம்புரான் அமர்ந்திருந்தார். அவர் அருகே கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையர் நின்றிருந்தார். தோள்களை குறுக்கி சால்வையை நன்கு போர்த்திக்கொண்டு என்னை சந்தேகம் நிறைந்த கண்களால் பார்த்துக்கொண்டிருந்தார்.
மகாராஜா பாதி தூங்கி எழுந்தமையால் நன்றாகக் களைத்திருந்தார். வெண்ணிற வேட்டி அணிந்து வெள்ளிச்சரிகை இட்ட மஞ்சள்பட்டுச் சால்வையை போர்த்தியிருந்தார். கண்களுக்குக் கீழே தசைகள் சுருங்கி மடிந்திருந்தன. வெற்றிலைபோட்டு சிவந்த உதடுகள் சற்று மடிந்து தொங்கியிருந்தன. தொங்குவது போல புடைத்த மூக்கின் உள்ளிருந்து சிறிது முடி எட்டிபார்த்தது. முன்குடுமி நெற்றியின் மேல் சரிந்து நின்றது. ஓரிரு நரைமுடிகள் ஓடிய தாடியை கைகளால் வருடிக்கொண்டிருந்தார்.
நான் அருகே சென்று உடைவாள் மேல் கையை வைத்து “ஸ்ரீவாழும்கோடும் பாண்டியமும் இருந்தருளும் சேரகுலாதிப, கேரளகுலோத்துங்க, குலசேகர கிரீடபதி, ஆதித்ய வர்ம வரகுணன் சர்வாங்கநாதப் பெருமாள் சவிதம் பூர்ணாங்க சேவிதம்” என்று சொல்லி வணங்கினேன்.
“சுபமஸ்து” என்றார் மகாராஜா. அவர் குரல் தளர்ந்தது. பேசிப்பேசிக் களைத்திருப்பதுபோல.
நான் ராயசம் கிருஷ்ணப்பையரைப் பார்த்ததும் மகாராஜா கைகாட்ட கிருஷ்ணப்பையர் தலைவணங்கி விலகிச்சென்றார். மகாராஜா கைகாட்ட நான் எனக்குரிய தாழ்வான பீடத்தில் அமர்ந்தேன்.
“பெரிய காரியமாக்குமா?” என்றார்.
“அடியேன், அனர்த்தம் ஒண்ணுமில்லை. ஆனால் அஹிதம் பிரதீக்ஷிதம்” என்றேன்.
“பாண்டிநாட்டு வார்த்தையோ?”
“அடியேன், ஆமாம்”
“வேணுமானால் திவானும் பெரிய தளவாயும் வரட்டும்” என்றார் மகாராஜா.
“அடியேன், அவங்களும் வரவேணும். அதுக்கு முன்னாலே தம்புரான் சவிதம் சில விஷயங்கள் உணர்த்திக்க வேணும்” என்றேன். “என் கையிலே ஒரு ஓலை இருப்புண்டு. இது என்னுடைய ஒற்றுகாரன் சேவுகப்பெருமாள் செட்டி சிராப்பள்ளியிலே இருந்து கொடுத்தனுப்பியது… இதிலுள்ள விஷயங்கள் சுபசூசகமானவை. ஆனால் மகாராஜா சவிதம் அது அஹிதமாகவும் கூடலாம்… அதனால் சுருக்கமாகச் சொல்லிடறேன்.”
“ம்ம்” என்று மகாராஜா கைகாட்டினார். அவர் உடல் வெயில்படாத வெளிறல் கொண்டிருந்தது. முதுமையின் தொடக்கம் மார்புத் தசைகளின் தொய்வில் தெரிந்தது. பெரும்பாலும் அமர்ந்தே இருக்கிறார். அரியணையில், பீடங்களில், மஞ்சல்களில், பல்லக்குகளில், வண்டிகளில். அவர் அதிகமான நேரம் அமர்ந்திருப்பது தெய்வங்களுக்கு முன்னால்தான். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அவர் செய்யவேண்டிய பூசைகளும் சடங்குகளும் பலநாழிகைப் பொழுது நீள்பவை. திருவாழும்கோட்டில் அரசப்பதவி என்பது ஒருவகை பூசக வேலைதான். அவருடைய கூன் விழுந்த தோள்களில் இருந்து மணிமாலைகள் தொங்கி ஊஞ்சல்போல் ஆடின.
“அடியேன், எழுபது வர்ஷம் முன்பு மதுரையின் ராஜ்யநிலைமை எப்படின்னு தம்புரான் சவிதம் அறிந்திருக்குமென்று அடியேன் அறியுக உண்டு. மதுரை சுல்தான்கள் ஒரு கூண்டில் அடைச்சுப்போட்ட ஓநாய்கள் மாதிரி ஒருவரை ஒருவர் கடிச்சு கீறி ரத்தம்குடிச்சு கிடந்தார்கள். அவர்களின் க்ரூர கிருத்யங்களாலே அங்கே ராஜ்யம் நானாவிதமாகி நாசமாகிக்கொண்டிருந்தது. அது அடி உளுத்த மரம் போலே ஆடிக்காற்றிலே விழுமுன்னு ஊர்ஜிதமாகி இருந்தது.”
“ம்” என்று மகாராஜா சொன்னார்.
“அடியேன். அதே நேரம் அங்கே வடக்கே துங்கபத்ரை நதிக்கரையில் ஸ்ரீவிஜயநகரம் என்று ஒரு சாம்ராஜ்யம் உருவாகி ஸ்திரப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி பலவாறாக தம்புரான் சவிதம் அடியேன் உணர்த்தியதுண்டு என்றாலும் மறுபடியும் அதையெல்லாம் உணர்த்துவதுக்கு அருளப்பாடு உண்டாகணும்” என்றேன். அரசரிடம் எதையும் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும் என்பது அவைநெறி. அவர் தனக்கு நினைவிருக்கும் என்றால் சொல்லவேண்டாம் என்று சொல்வார்.
மகாராஜா கையசைத்ததும் சொல்லலானேன். “அடியேன், சுல்தான்படைகளால் ஆனைக்குந்தி என்கிற யாதவநிலத்திலிருந்து வடக்கே பிடித்துக்கொண்டு போகப்பட்ட இரண்டு யாதவப்பிள்ளைகள் முஸ்லீம்களாக மாறியதனாலே டில்லி சுல்தான் அல்லாவுதீன் கிலிஜியின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறினாங்க.. அவங்க பூர்விக நிலம் அப்போ நானாவித கலகங்களுக்கு உள்ளாகி டில்லி சுல்தானுக்கு கிஸ்தியும் வாரமும் வராமலிருந்த காரணத்தால் அந்நிலத்தை அவங்களே ஆட்சி செய்தால் நல்லது வேணுமென்று சொல்லி சுல்தான்கள் அவங்களை அங்கேயே திருப்பி அனுப்பினாங்க. ஆனைக்குந்தியின் சுல்தான்களாக அவங்களையே நியமனம் பண்ணினாங்க. மதம் மாறி தொப்பியிட்டு பேரும் மாற்றி ரெண்டு பேரும் அவங்க பூர்விகர் ஆட்சி செய்த ஆனைக்குந்தி ராஜ்யத்துக்கே திரும்பி வந்தாங்க”
“அடியேன், அவ்வண்ணம் ஆனைக்குந்தி ராஜ்யத்துக்கு திரும்பி வந்தவங்களை சிருங்கேரி மடத்து ஜகத்குரு வித்யாரண்ய சங்கராச்சாரிய மகாஸ்வாமிகள் சந்திச்சு மறுபடி தீக்ஷை பண்ணுவித்து யுக்தமான முறையிலே வைஷ்ணவாச்சாரத்திற்கு கொண்டுவந்தார். அவர்களுக்கு பூர்விகர்களின் ஒரு பெரிய புதையலையும் எடுத்துக்கொடுத்தார். அவர்கள் அந்த மகாசம்பத்தைக் கொண்டு துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு கல்கோட்டையை கட்டி அதுக்குள்ளே ஒரு ராஜ்யத்தை நிர்மாணிச்சாங்க. அதுக்கு ஸ்ரீவிஜயநகரம்னு பேரு போட்டு பரிபோஷிச்சாங்க…”
“ம்” என்றார் மகாராஜா.
“அடியேன், அவ்வண்ணம் திரும்பிவந்து ராஜ்யஸ்தாபிதம் பண்ணின ரெண்டு சகோதர்களின் நாமங்கள் இவ்விதமாகும். மூத்தவர், ஹரிஹரர் இளையவர் புக்கர். புக்கரின் மகன் குமாரகம்பண உடையார்” என்றேன். ”குமாரகம்பண உடையார் கிரீடதாரணம் செய்த காலம் முதல் மதுரையை சூக்ஷ்ம வீக்ஷணம் பண்ணி வந்தார் என்பது தீர்த்தும் ஸ்வாபாவிகமே. மதுரை சுல்தான்கள் இவ்வண்ணம் க்ஷீணித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் சிராப்பள்ளி மதுரை எல்லைகளை ஆக்ரமித்து அனேகம் கோட்டைகளை கைப்பற்றிக்கொண்டார். செஞ்சியும் வேலூரும் அவருக்கு வசமாகும்வரை மதுரை சுல்தான்கள் தங்களுக்குள் யுத்தம்செய்து கொண்டிருந்தாங்கள். செஞ்சியும் வேலூரும் கைவிட்டு போனபின்னால் குமார கம்பண ராஜாவை எதிர்க்க அவர்களாலே முடியாமலாகிப் போச்சுது.”
“அடியேன், இவ்வண்ணம் ஒரு கதை சொல்லுகிறாங்க. குமாரகம்பண பெரிய நாயக்கர் காஞ்சிபுரத்திலே தன் மகாபத்னியாகிய கங்கம்மா தேவியுடன் வாசம் செய்கிற நேரத்திலே மகாராணி கங்கம்மாதேவி ஒரு மதுரசொப்பனம் கண்டார். அதில் எட்டுமங்கலங்கள் கொண்ட சாரதவர்ணியான சின்னப்பெண் ஒருத்தி சிற்றாடை கட்டி தோளிலே கிளியுடன் வந்து முற்றத்திலே நின்று என் வீட்டுக்கு நான் போவதெப்போ என்று கேட்டாளாம். சொப்பனம் கலைஞ்ச மகாராணி அமாத்யர்களை விளித்து எல்லாம் சொல்லி விசாரிச்சாங்க.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

