புறவயத்தர்க்கவாதமும் மெய்மையும்

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் ஓர் உரையில் நீங்கள் லாஜிக்கல் பாஸிட்டிவிசத்திற்கு ஆதரவாகப் பேசியிருந்தீர்கள். உங்கள் ஆசிரிய மரபு எஸென்ஷியலிசம் சார்ந்தது. அப்சல்யூட்டிசம் என அதில் இருந்து ஒன்றை உருவாக்கிக்கொண்டது. நீங்களேகூட பாஸிட்டிவிசத்தை எதிர்த்து எழுதியிருக்கிறீர்கள். ஆகவே இந்த மாற்றம் ஆச்சரியம் அளித்தது.

இந்த கேள்வியில் நான் ஆங்கிலக் கலைச்சொற்களையே பயன்படுத்தியிருக்கிறேன். தமிழில் இவற்றை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை

ஆர். மகாலிங்கம்

அன்புள்ள மகாலிங்கம்,

இரண்டு விஷயம், நான் தத்துவம் சார்ந்த விவாதங்களை எப்போதும் சிறிய வட்டத்திற்குள் நடத்த விரும்புபவன். இணையப்பொதுவெளி அதற்கு உகந்தது அல்ல. ஒரு வகையான அடிப்படை அறிதலும் இல்லாதவர்கள், கூகிள்கூட பார்க்க தெரியாதவர்கள் , வந்து கருத்துசொல்லியும் கேள்விகேட்டும் எல்லாவற்றையும் குழப்பி கொஞ்சம் தெரிந்து கொள்ள முயல்பவர்களைக்கூட பைத்தியமாக ஆக்கிவிடுவார்கள்.

சமீபத்தைய ஓஷோ உரைக்குப்பின் இணையவெளியால் ஏதாவது பயன் உண்டா என்ற எண்ணத்திற்கே சென்றுவிட்டேன். ஆகவே இது விவாதத்திற்காக அல்ல. ஒரு சிறிய விளக்கக் குறிப்பு மட்டுமே.

தத்துவம் சார்ந்த விவாதம் நிகழவேண்டுமென்றால் அதற்கான தமிழ்ச்சொற்களுடன் மட்டுமே நிகழ முடியும். ஒரு கலைச்சொல்லுக்கு தமிழ்வடிவம் இல்லை என்றால் அந்த சிந்தனை தமிழுக்கு வரவில்லை என்பதே உண்மை. இது தியடோர் பாஸ்கரன் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லும் கருத்து.

கலைச்சொல்லாக்கத்தில் நாம் கவனிக்கவேண்டிய சில உண்டு. பலமுறை இங்கே நான் இதை எழுதியிருக்கிறேன். இலக்கியம், தத்துவத்தில் எந்தக் கலைச்சொல்லும் நேரடியாக அந்த கருத்துக்கு பிரதிநிதித்துவம் கொள்வதில்லை. அதாவது அச்சொல்லை வைத்து அந்தக் கருத்தை புரிந்துகொள்ள முடியாது.

லாஜிக்கல் பாஸிடிவிசத்தை வைத்தே இதைச் சொல்லியிருக்கிறேன். பாஸிட்டிவிசம் என்றால் இறையியலில் கண்முன் காண்பதை மட்டுமே நம்புவது. அதிலிருந்து தத்துவத்திற்கு வந்தது அக்கலைச்சொல். ஆனால் தத்துவத்தில் அதற்கு புறவயமாக தர்க்கபூர்வமாக நிறுவப்பட்டவை மட்டுமே உண்மை என்று எண்ணும் தத்துவநிலைபாடு என்றுதான் பொருள்.

தத்துவத்திலும் இலக்கியத்திலும் பெரும்பாலான கலைச்சொற்கள் இடுகுறித்தன்மை கொண்டவைதான். ஒரு கருத்துக்கு ஒரு பெயர் போடப்படுகிறது. பின்னர் அக்கருத்துநிலை அப்பெயரை கடந்தும் வளரும். இன்னொன்றாக ஆகும். உடனே பெயரை மாற்றிவிடமாட்டார்கள். அந்தக் கருத்துநிலைக்கு அதுதான் பெயராக நீடிக்கும். பெரும்பாலான பெயர்கள் பெயர்கள் மட்டுமே. அப்பெயர் அச்சிந்தனையை குறிக்கவேண்டும், அவ்வளவுதான்.

ஆகவே ஆரம்பத்தில் ஒரு கலைச்சொல்லாக்கம் நிகழ்ந்துவிட்டால், பரவலாக அது ஏற்கப்பட்டுவிட்டதென்றால், அதை அப்படியே பயன்படுத்துவதே சரியானது. அந்தச்சொல்லின் பொருள்தான் அந்தக் கருத்து என எடுத்துக்கொள்வது பாமரத்தனம். எந்த அறிமுகமும் இல்லாதவர்கள் அதைச் செய்வார்கள். அதை மன்னித்துவிடலாம்.

ஆனால் அந்த கருத்து கொள்ளும் அர்த்தமாற்றத்திற்கு ஏற்ப அந்தச் சொல்லை மாற்றிக்கொள்ள வேண்டும் என முயல்வது மொத்த விவாதத்தையே தொடர்ச்சியறச் செய்து அபத்தமாக ஆக்கிவிடும். பொதுவாக கலைச்சொற்களை எடுத்துக்கொண்டு ‘சரியான தமிழாக்கத்துக்கு’ முயல்வது எந்த விவாதத்தையும் உருப்படியாக நடத்த முடியாதவர்கள் செய்யும் ஒரு பாவனையாக இங்கே உள்ளது.

தமிழ்ச்சூழலில் பொதுவாக ஐரோப்பிய தத்துவம் மார்க்ஸிய விவாதங்கள் வழியாகவே வந்தது. ருஷ்ய மொழியாக்கங்களிலேயே கலைச்சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் அவை சரியானவை. ஐம்பதாண்டுகளாக அவை புழக்கத்திலும் உள்ளன. அவற்றை எல்லா தரப்பும் கையாள்வதே சரியான வழியாகும். லாஜிக்கல் பாஸிடிவிசம், பாஸிடிவிசம் என்பது புறவயத் தர்க்கவாதம் என்றுதான் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது ஏறத்தாழ சரியான மொழியாக்கமே.

நேர்க்காட்சிவாதம் என்ற மொழியாக்கமும் சில மார்க்ஸியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அதை வேறுவேறு ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு மாற்றாக பயன்படுத்துகிறார்கள். ஆகவே அது பலவகை குழப்பங்களை உருவாக்கிவிட்டது. மேலும் இந்திய ஞானமரபில் பிரத்யக்ஷவாதம் என்று ஒன்று உண்டு. அதன் நேரடி மொழியாக்கம் நேர்க்காட்சிவாதம் என்ற சொல். ஆகவே அது குழப்பங்களை அளிப்பது.

இதில் சிலவகையான அபத்தங்கள் உள்ளன. விக்கிப்பீடியா போன்றவற்றில் இச்சொற்களை அவற்றுக்கான ஆங்கிலச் சொற்கள் அடைப்புக்குள் இல்லாமல் வலையேற்றி வைத்திருக்கிறார்கள். அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதோடு சம்பந்தமே இல்லாமல் அவற்றைப் பயன்படுத்தவும் அவை வழிவகுக்கின்றன என்னும் சிக்கலும் உள்ளது.

*

நான் பாஸிட்டிவிஸம்- புறவயத்தர்க்கவாதம்- வரலாற்றாய்வில் தேவையான ஒன்று என அம்பேத்கர் சொல்வதைப் பற்றி மட்டுமே சொன்னேன். நான் வரலாற்று ஆய்வாளன் அல்ல. என்னால் வரலாற்றாய்வை செய்ய முடியாது. உணர்ச்சிகரமான ஈடுபாடு இல்லாமல், குறியீட்டு ரீதியான விரிவாக்கமும் மீபொருண்மை [metaphysical] விளக்கமும் இல்லாமல் என்னால் எதையும் ஆராய முடியாது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

அவ்வுரையில் அம்பேத்கர் சொல்லும் வழி அது, அவர் வழியை தொடர்பவர்கள் வரலாற்றாய்வில் அதை ஒரு நிபந்தனையாகக் கொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன். அது புதிய கருத்தும் அல்ல. அம்பேத்கரின் அந்தப்பார்வை வரலாற்றாளார் நடுவே சென்ற  ஐம்பதாண்டுகளாகவே ஆதரிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருவதுதான். பி.கே.பாலகிருஷ்ணன் அந்தப்பார்வையின் கடுமையான மறுப்பாளர்.

*

நான் முன்னரே சொல்லிவருவதுபோல புறவயத்தர்க்கவாதம் [லாஜிகல் பாஸிடிவிசம்] என்பது ஒரு தத்துவக்கொள்கை அல்ல, அது தத்துவத்திற்கு எதிரான ஒரு தத்துவக் கொள்கை. தத்துவம் என்பதே பார்வைகளை தொகுத்து அவற்றிலிருந்து ஒரு புதிய தாவலை நிகழ்த்துவதுதான். தொகுத்துப்பார்ப்பது, காரணம் தேடுவது, முழுமையுடன் பொருத்துவது ஆகிய மூன்று தளங்களில் இந்த தாவுதல் நிகழ்கிறது. இதை முழுமையாகவே தவிர்த்துவிட்டு புறவயமான தரவுகள் மற்றும் தர்க்கமுறைகளின் படியே மட்டும் முன்னகரும் ஒரு தத்துவம் இருக்க முடியாது.இருந்தால் அது தத்துவம் அல்ல, அந்த தரவுகளை ந்த அறிவுத்துறை உருவாக்குகிறதோ அந்த அறிவுத்துறையின் ஒரு கிளை மட்டுமே.

தத்துவதரிசனம் என்கிறோம். தத்துவத்தில் தரிசனம் இருந்தேயாகவேண்டும். தத்துவம் அப்படி கண்டடைந்த பல தரிசனங்கள் பிற்காலத்தில் பொய்யென ஆகியிருக்கின்றன. அபத்தமாகவும் மாறியிருக்கின்றன. ஆனாலும் அந்த தரிசனவேட்கையை தத்துவம் தவிர்க்கமுடியாது. வில் டியூரண்ட்  தத்துவத்தை அறிமுகம் செய்து எழுதிய நூலின் முகவுரைக் குறிப்பிலேயே இதைச் சொல்லியிருக்கிறார். [The Story of Philosophy.Will Durant]

இல்லாத ஒன்றை கற்பனைசெய்வது, சாத்தியங்களின் உச்சத்தை கனவுகாண்பது தத்துவத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அப்படி தத்துவத்தால் கனவுகாணப் பட்டவையே ஜனநாயகம், அனைவருக்குமான நீதி, மக்கள்நலம்நாடும் அரசு போன்ற இன்றைய  பல நடைமுறை உண்மைகள். பல கனவுகள் பொருளற்றும் போயின. அந்தக் கனவை தவிர்த்துவிட்டு தத்துவத்தை  புறவயத் தர்க்கத்தை மட்டுமே நெறியாகக் கொண்ட ஒன்றாக ஆக்கினால் எஞ்சுவதென்ன?

புறவயத்தர்க்கவாதம் அறிவியல் மேல் பெரும் மோகம் எழுந்த காலகட்டத்திற்கு உரிய ஒரு பார்வை. எல்லாமே புறவயமாக இருக்கவேண்டும், புறவயமானதே உண்மை என்ற நம்பிக்கை அந்நாளில் கல்வித்துறையை ஆட்டிப்படைத்தது. அறிவியலின் ஏவல்பணி செய்ய தத்துவத்தை கொண்டுசென்று நிறுத்துவதுதான் அது. ஆனால் பின்னாளில் அறிவியலே புறவயத்தர்க்கவாதத்தை தூக்கிவீசிவிட்டு அதற்குரிய மீபொருண்மை நோக்குகளை உருவாக்கிக்கொண்டது

எந்த தத்துவ தரிசனத்தையும் புறவயமாகப் பேசு என கூச்சலிட்டே ஓய்த்துவிடமுடியும். பிரம்மம், பேருண்மை போன்ற தரிசனங்களை மட்டுமல்ல ஓருலகம், மானுடம் போன்ற தரிசனங்களையேகூட அப்படி அடித்து நொறுக்கினார்கள் புறவயத்தர்க்கவாதிகள்

[image error]ப்ரியன் மேகி

லாஜிக்கல் பாஸிட்டிவிஸம் ஒரு ‘கல்ட்’ ஆக இருந்தபோது பிரிட்டிஷ் பல்கலைகளில் தத்துவத்துறை எப்படி இருந்தது என்பதை நாம் பிரியன் மேகி எழுதிய தத்துவவாதியின் தன்வெளிப்பாடு [Confessions of a Philosopher. Bryan Magee] என்ற நூலில் காணலாம்.

நடராஜகுருவும், நித்ய சைதன்ய யதியும் புறவயத்தர்க்கவாதத்திற்கு நேர் எதிரானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதற்கு எதிராக சாராம்சவாதத்தை, முதல்மையவாதத்தைத்தான் முன்வைத்தனர். விரிவான மறுப்புகளை எழுதியிருக்கிறார்கள். நடராஜ குருவின் மேலைத்தத்துவ மரபு என்பது ஹென்றி பெர்க்ஸனுடையது. அந்தமரபு புறவயத்தர்க்கவாதத்தை மறுப்பது

நான் ஏற்றுக்கொண்டிருப்பதும், தத்துவ சிந்தனையின் சரியான பாதை என எண்ணுவதும் அதுதான். தத்துவத்தின் நோக்கம் மையங்களை உருவாக்கி நிலைநிறுத்துவதுதான்.  அதன்பொருட்டு இவ்வாழ்க்கையின், இப்பிரபஞ்சத்தின் மையத்தை உள்ளுணரவால், கற்பனையால் கண்டறிவதுதான்.

அக்கண்டடைதல் தத்துவத்தின் விளிம்பில், பெரும்பாலும் தத்துவத்திற்கு அப்பால் இருப்பதனால் தத்துவத்தில் இருந்து ஒருபோதும் மீபொருண்மைநோக்கு விலகிச் செல்ல முடியாது என நான் நம்புகிறேன். தத்துவம் அறிவியலுக்கு அல்ல, மெய்யியலுக்குத்தான் அணுக்கமானதாக இருக்கமுடியும். அம்பேத்கரின் வரலாற்றுப்பார்வை புறவயத்தர்க்கத் தன்மை கொண்டதாக இருக்கலாம். உலகப்பார்வை அப்படிப்பட்டது அல்ல என்பதற்கு புத்தரும் அவரது தம்மமும் சான்று

இன்றைக்கும் அமெரிக்கப் பல்கலைகளில் புறவயத்தர்க்கவாதமே தத்துவப்பார்வையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆகவே தத்துவம் என்பது வெறும் தர்க்கவியலாக குறுகிவிட்டது. அதில் எந்த பாய்ச்சலும் நிகழவில்லை. சொல்லப்போனால் தத்துவம் என்பதே இறந்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜிதன் அமெரிக்க புறவயத்தர்க்கப்பார்வையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராஜ ஏ.ஜே.அயர் ஒரு டிவி உரையாடலில் பேசும் யூடியூப் இணைப்பை அளித்தான். அந்த முழு உரையாடலில் புறவயத்தர்க்கவாதம் எப்படி தத்துவத்தின் மரபான வழிமுறைகளை அழித்து, மேற்கொண்டு ஒன்றும் நிகழாமல் ஆக்கியது என்பதை அயரே சிரித்துக்கொண்டு சொல்கிறார். ‘உடைத்தோம், எதையும் கட்டமுடியவில்லை’ என்கிறார்.

ஜெ

தத்துவம் மேற்கும் கிழக்கும் விவாதங்களின் எல்லை… காடு, நிலம், தத்துவம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.