மழையின் கடவுள்

பாலுமகேந்திரா அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையைத் திரும்ப வாசித்தேன். டேவிட் லீனைச் சந்தித்த நிகழ்வு அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாகச் சினிமா படப்பிடிப்பைப் பார்த்த நினைவு பலருக்குள்ளும் இப்படி வியப்பாகவே பதிந்து போயிருக்கும்.

••

சினிமாவும் நானும்.

பாலுமகேந்திரா

13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் கால கட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன்.

எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர் நிலைப்பள்ளி லைபரேரியிலும் இருந்த அனைத்து ஆங்கில நாவல்களையும் கரைத்துக் குடித்திருந்தேன்.

அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். இயேசு சபைப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்தது. எங்கள் வகுப்பு ஆசிரியராக ஃபாதர் லோரியோ. அமெரிக்கர். மசேச்சுசேட்ஸ் மாகணத்தைச் சேர்ந்த பொஸ்டனைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.பயங்கர சினிமாப் பைத்தியம். சொந்தமாக ஒரு சினிமாப் புரஜெக்டர் வைத்திருந்தார். நன்றாகத் தமிழ் பேசுவார். A.R. ரஹ்மான் பாடல்களைப் போல, ஆங்கில நெடி கலந்த தமிழ்.

தனது 16 mm புரஜெக்டரில் ஒவ்வொரு வெள்ளியன்றும் எங்களுக்கு சினிமா காண்பிப்பார். அப்பொழுது பார்த்தவைதான்  ‘Lushiyana story’, ‘The Glass’, ‘The Post’ , ‘ Bicycle Thieves’, ‘Battleship potemkin’ போன்ற படங்கள்.

எங்கள் ஆறாம் வகுப்புக் கும்பல், ஏழு, எட்டு என்று மேலே போகப் போக ஃபாதர் லோரியோவும் எங்களுடன் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் வரை அவரே எங்கள் கிளாஸ் டீச்சர். அதுகாரணம் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை உலக சினிமா பார்ப்பது தொடர்ந்தது. கூடவே ஃபாதர் லோரியோவின் சினிமாப் பைத்தியம் எனக்கும் தொற்றிக் கொண்டது. வருடங்கள் உருள உருள என்னுள்ளே மொட்டாக முளைத்த அந்த சினிமாப் பைத்தியம் பூவாகி, காயாகி, கனியாகி, விதையாகி, விழுந்து முளைத்த செடியாகி, விரிந்து படர்ந்த விருட்சமாகி விட்டிருந்தது.

இதற்கிடையில் ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. ஆறாம் வகுப்பின் தொடக்கத்தில் ஃபாதர் லோரியோ எங்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துப் போயிருந்தார். பள்ளிக்கூடப் பேருந்தில் ஃபாதர் லோரியோவுடன் நான்கு நாட்கள் ஊர் சுற்றியதை மறக்க முடியாது. ஸ்கூல் பஸ்ஸில் கை தட்டிப் பாட்டுப் பாடி கும்மாளம் போட்டுக் குதூகலிக்கும் நேரம் போக, சற்று ஓய்வான தருணங்களில் பள்ளிக்கூடத்தில் அவர் காண்பித்த சினிமாக்களைப் பற்றி ஃபாதர் லோரியோவுடன் அரட்டையடிப்பது எனக்கு வழக்கமாயிருந்தது. சினிமா பற்றிய எனது ஆர்வம் அவருக்குப் பிடித்திருந்தது. எனது தொடர் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லுவார்.

அன்று கண்டி என்ற ஊரில் முகாமிட்டிருந்தோம். கொழும்பிலிருந்து அறுபது மைல் தொலைவில் இருந்த அந்த மலை நகரம் பௌத்த மதத்தினரின்

புனிதத் தலங்களில் ஒன்று. நாங்கள் போன சமயம் அங்கு ஆங்கிலப் படமொன்றிற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கேள்விப்பட்டதும் ஃபாதர் லோரியோ குஷியாகிவிட்டார்.அடுத்த நாள் காலை எங்கள் இருபது பேரையும் அழைத்துக்கொண்டு அந்தப் படப் பிடிப்பு நடக்கும் இடத்திற்குப் போயிருந்தார். அங்கு ஏகப்பட்ட வெள்ளைக்காரர்கள். இடையிலே ஒன்றிரண்டு நம் ஆட்கள். எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அனைவரையும் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரு வெள்ளைக்காரர். அரைக் காற்சட்டை, கையில்லாத பனியன், கேன்வாஸ் ஷூஸ் என்று படு கம்பீரமாக இருந்தார். அவ்வப்போது அவர் அருகே வந்து ஆளாளுக்கு ஏதோ கேட்டுப் போனார்கள். எல்லோரும் அவரை

டேவிட் என்று பெயர் சொல்லி அழைத்தார்கள். அந்தப் படப்பிடிப்புக் குழுவின் தலைவர் அவர்தான் என்றும் அவர் பெயர் டேவிட் என்றும் என் மனதில் எழுதிக் கொண்டேன்.

பின்னாளில் தான் தெரிந்தது – “டேவிட்” என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர்தான் “டாக்டர் ஷிவாகோ”, “லாரன்ஸ் ஆஃப் அரேபியா”,”ரையன்ஸ் டாட்டர்”, போன்ற திரைக் காவியங்களை இயக்கிய இங்கிலாந்து இயக்குனர் டேவிட் லீன் என்று! நாம் பார்க்கப்போயிருந்த படப்பிடிப்பு “Bridge on the River Kwai” என்ற அவரது படத்திற்கானது என்றும் தெரிந்தது.

டேவிட் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி மூன்று கால்களைக் கொண்ட ஒரு தினுசான ஸ்டாண்டில் எதோ ஒன்று.. கருப்புத் துனியால் மூடப்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே நின்று கொண்டிருந்த இன்னுமொரு  வெள்ளைக்காரர் மூடியிருந்த கறுப்புத் துணியை நீக்க, உள்ளே நான் அது வரை பார்த்திராத ஒரு கருவி. அது தான் “மோஷன் பிக்சர் கெமரா” என்று ஃபாதர் லோரியோ எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எனது உடம்பு பூராவும் ஜிவ்வென்று ஏதோ ஒரு உணர்வு. அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கை குறுகுறுத்தது. மனசு ஏங்கியது. அசாத்தியமான ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எனது ஆசையை ஃபாதர் லோரியோவிடம் தெரிவித்தேன்.

” அவரைக் கேள் ” என்று டேவிட்டை சுட்டிக் காட்டினார். நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். எல்லோரையும் விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரரிடம் பேசக் கூச்சமாக – இல்லை – பயமாக இருந்தது. எனது பயத்தைப் புரிந்து கொண்ட ஃபாதர் லோரியோ என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு டேவிட் அருகே போகிறார். தன்னை அறிமுகம் செய்து கைகுலுக்கியபின் அவர் காதருகே ஏதோ பேசுகிறார். முடிவில் sure! why not..! என்ற டேவிட்டின் கம்பீரமான குரல் மட்டும் எனக்குக் கேட்கிறது. ஃபாதர் லோரியோ என்னைப் பார்த்து ” போ போய் தொட்டுப் பார் ” என்று சிரித்தபடி சைகை காண்பிக்கிறார்.

கெமிரா அருகே செல்கிறேன். அதன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரருக்கு என் விருப்பம் தெரிவிக்கப்படுகிறது. அவர் சற்று விலகிக் கொள்ள அந்தப் பெரிய கெமிராவை நான் தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். தொட்ட மாத்திரத்தில் என் உடல் பூராவும் ஒரு தடவை உதறிப் போடுகிறது.

எங்கள் வீட்டு வாழைத் தோட்டத்தின் மறைவில், என் பிரியப்பட்ட பால்ய சினேகிதி அன்னலட்சுமியின் இள மார்பகங்களைத் தொட்டு தடவிப்பார்த்த பொழுதும், பின்னொரு நாள் அதே வாழைத் தோட்ட மறைவில், அவளைப் படுக்கவைத்து, பாவாடை உயர்த்தி அவள் பிறப்புறுப்பைத் தொட்டுத் தடவிய பொழுதும் என் உடம்பில் ஏற்பட்ட அதே உதறல் – அதே புல்லரிப்பு…

காலையில் படப்பிடிப்புக்குச் சென்று, கறுப்புத் துணி நீக்கி, முதல் முதலாக எனது கெமராவைத் தொடும்பொழுது அந்த உடல் உதறலும் புல்லரிப்பும் இப்பொழுது கூடத் தொடர்கிறது. படப்பிடிப்பு பார்ப்பதற்கென்று நாங்கள் போயிருந்த நாள் ஒரு சாதாரண நாள். மேக மூட்டம் கூடக் கிடையாது.அதுவரை கசமுச என்று பேசிக் கொண்டும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டுமிருந்த படப்பிடிப்புக் குழுவினர் அமைதியாகிறார்கள். நிசப்தம். Total silence…! அந்த இடத்திற்கான

குருவிச் சத்தங்களைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை. அதைப் பார்த்து நாங்களும் மௌனமாகிறோம். சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த டேவிட் கெமிரா அருகே நின்றுகொண்டிருந்த அந்த வெள்ளைக்காரரைப் பார்த்து ஏதோ சைகை செய்கிறார். கெமிரா அருகே நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரர் கெமிராவை on செய்கிறார்… Rolling…. என்று குரல் கொடுக்கிறார்.. டேவிட் ஒரு வினாடி

தாமதித்து உரத்த சத்தத்தில் – மிக உரத்த சத்தத்தில் ” RAIN ” ! என்று கத்துகிறார்… அந்தக் காட்டுக் கத்தல் என்னைத் திடுக்கிட வைக்கிறது… டேவிட் ” RAIN ” என்று கத்தியதும், மழை கொட்டுகிறது. பெரிய மழை….. ஆச்சரியத்தில் நான் உறைந்து போகிறேன். RAIN என்று கத்தியதுமே மழை பெய்கிறதென்றால், இந்த டேவிட் என்ற மனிதரிடம் எதோ கடவுள்தன்மை இருக்க வேண்டும்…!

ஆறாம் கிளாஸ் படிக்கும் போது கண்டியில் பார்த்த அந்தப் படப்பிடிப்பை, அந்த மழைக்காட்சியைப் பத்தாம் கிளாஸ் படிக்கும்போது எங்களூர் தியேட்டருக்கு வந்த BRIDGE ON THE RIVER KWAI என்ற ஆங்கிலப் படத்தில் பார்த்த போது எனக்குள்ளே ஒரு எண்ணம் வலுத்தது.

பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராகத்தான் வருவேன்…

 ” RAIN ” என்று நான் கத்தினால் மழை பெய்யும்…..! 

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2021 05:33
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.