ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3 ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2 ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.

ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’என்னும் நாவல் ஒரு உதாரண புருசனை, நீட்ஷேயின் அதிமனிதனை (சூப்பர்ஹ்யூமன்) நம் சமூகச் சூழலில்  நிகழ்த்திக்காட்ட முற்பட்டது போல் இருக்கிறது. அவனொரு தாய் தந்தை இல்லாத அனாதை. மணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ நேரும் ஒரு தம்பதியினர் அவனைக் கண்டெடுத்து, ஹென்றி என நாமகரணம் சூட்டிவளர்க்கிறார்கள்.

பப்பா இந்து, சைவர், மம்மா கிருத்துவர். பப்பா மனைவியைப் பறிகொடுத்தவர், மம்மாவின் இறந்துபோன கணவரின் நண்பர். ஹென்றியை அவர்கள் தமது அன்பால், நல்லறங்களால், உன்னத குணங்களால் எந்தத் தீமையும் அண்டாமல் வளர்க்கிறார்கள். பப்பா அவனை முன்னால் வைத்துக்கொண்டே தினமும்  குடிக்கிறார். அவர்களிடையே ஒளிவுமறைவு இல்லை. அவன் விருப்பப்படி பள்ளிக்கு செல்லவேண்டாம் என்றும் முடிவாகிறது.

பப்பாவும் மம்மாவும் கடந்துவந்த பாதை, அவர்களுக்கு ஒன்றைப் உணர்த்தி இருக்கலாம். மனிதர்களாகிய நாம் மிக எளியவர்கள், எதிர்காலத்தில்  நடக்கவிருக்கும் எதன்மேலும் நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. வாழ்க்கையில் நாம் போடும் திட்டங்களுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே, அவனை எந்தவித சமூக நிர்பந்தங்களும் இன்றி வளர்க்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், வளர்ந்து வாலிபனாய் நிற்கும் ஹென்றி, அவர்களது இறப்புக்குப்பின், தன் வாழ்வைத் தனியாய், எதிர்கொள்ளத் தயாராகுகையில் கதை தொடங்குகிறது. சாகும் முன்னர், பப்பா தன் பூர்வீகத்தைப் பற்றி சொல்கிறார். அத்தோடு, அங்கே உள்ள வீட்டையும் நிலபுலங்களை அவன் பெயருக்கு எழுதிவைக்கிறார். அங்கு செல்லும் ஹென்றியை, அந்தப் பின்தங்கிய கிராமமும் மக்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை.

நீட்ஷே-வின் அதிமனிதன், நிகாஸ் கஸன்ட்ஸாகிஸ்-ன் ஸோர்பா, ஹெர்மன் ஹெஸ்ஸெ-வின் சித்தார்த்தன் போன்ற பாத்திரங்கள் இந்திய 70களில் மிகவும் பிரசித்தமாக இருந்திருக்கக் கூடும். இவர்கள், அன்றாட உலகியல் சாராமல், இவ்வுலகத்தை, இவ்வுலக வாழ்வைத் தம் போக்கில் அணுகும் மனிதர்கள்.   மண்ணில் சொர்க்கம் கண்டவர்கள். மனிதர்களை, விலங்குகளை, பாகுபாடின்றி நேசிப்பவர்கள், நம்புபவர்கள்.  அப்படி நம்புவதால் நேரக்கூடிய சாதகபாதகங்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். இவர்களால் யாரையும் எதையும் வெறுக்கமுடியாது. ஒரு விதத்தில், குழந்தையைப் போன்றவர்கள்.

ஏசு தன் சீடர்களுக்கு உரைப்பதாக ஒரு வசனம் வரும், “நாம் குழந்தைகளைப் போல மாறினால் மட்டுமே நமக்கு தேவனது ராஜ்ஜியத்தில் இடம் உண்டு”. ஜெயகாந்தனின் ஹென்றி அப்படிப்பட்டவன். அக்கம்மாள் அவனைப் பார்த்தவுடன் காலண்டரில் இருக்கும் ஏசுவைப் போல் உள்ளதாகக் கூறுகிறாள். அவன் நமக்கு அறிமுகம் ஆகும்பொழுது, ஒரு ஆளரவமற்ற மலைப்பாதையில் தனியாக சுமையுடன் நடந்து செல்கிறான். அவ்வழியே வரும் லாரியைக் கூட அவன் தன் தேவைக்காக அல்லாமல், ஒரு சுவாரஸ்யத்துடனேயே திரும்பிப்  பார்த்து கையசைக்கிறான். அவர்கள் ஏறிக்கொள்ளச் சொல்ல, அவர்களுடன் பயணிக்கிறான்.

தான் யார் என்ற கேள்விக்கு “for those who meet me on the way, I am a stranger. I am a stranger even to myself, when I am alone” என்றும் விளக்கம் அளிக்கிறான். அந்தப் பதிலில் அவன் எங்கோ கற்று அடைந்த  அறிவைவிட அவன் தன்னுள் உணர்ந்த உண்மையை உரைப்பதாகவே தெரிகிறது. அனைத்தையும் குழந்தையின் ஆர்வத்துடன் பார்க்கிறான், பேசுகிறான். அவனுடைய குழந்தைத்தனமும் குதூகலமும் உடனே மற்றவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது.

ஹென்றியை அணுகி அறிபவர்கள் மெல்ல உணர்கிறார்கள், அவன் எந்தச் சட்டகத்திலும் அமைவதில்லை. அவன் கிருத்துவனில்லை, இந்துவுமில்லை. ஆத்திகனில்லை, நாத்திகனுமில்லை. மற்றவர்களின் ஆச்சாரங்களில் ஈடுபடுவதில் அவனுக்குத் தயக்கங்கள் இல்லை. மூன்று நாட்களுக்கு முன் தன் பப்பா அவனை அனாதையாக விட்டுப்போன பின்னும் அந்த இழப்பின் சுவடே அவனிடம் இல்லை.

அதற்காக அவன் துறவியோ ஞானியோ இல்லை. தன் பப்பாவின்மேல் உள்ள பிரியத்தாலேயே அவர் வாழ்ந்த வீட்டைத் தேடி வருகிறான். தன் பப்பா தினமும் குடித்தபோதும் அவனிடம் குடிப்பழக்கம் இல்லை. ஆயினும், தேவராஜன் குடிக்க அழைக்கும்பொது,  ஏற்றுக்கொள்கிறான், தேவராஜனுக்காக, அவன் மகிழ்ச்சிக்காக.

பாரதி படத்தில் ஒரு காட்சி வரும். அவர் யாரிடமோ கோவித்துக்கொண்டு எங்கோ செல்ல ரயிலடியில் நிற்கும்போது ஒருவர் வந்து அன்று நடைபெற இருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி அறிவிப்பார். பாரதி உடனே உற்சாகமடைந்து தன் பயணத்தை மறந்துவிட்டு நண்பருடன் செல்வார். ஹென்றியும் அதுபோலதான். இலகுவாக இருக்கிறான். எங்கும் எதிலும் அவனுக்கு தயக்கமில்லை. மற்றவர்கள்முன் உடைகளைந்து நிற்பதற்குக்கூட.

இந்தக் கதையில் வரும் அனைவருக்கும் பின்னணியில் ஒரு சோகம், இழப்பு உள்ளது. மண்ணாங்கட்டி முதல் துரைக்கண்ணு வரை. பெரும்பாலும் கணவன்/மனைவி, தாய்/தந்தை இறப்பு அல்லது பிரிவு என. நல்லவேளை, யாருக்கும் குணப்படுத்த முடியாத பணக்கார நோய்கள் இல்லை. அவர்கள் தங்கள் மேன்மையான குணங்களால் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்து, நம்பிக்கையூட்டிக்கொண்டு தத்தமது வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொள்கிறார்கள்.

இப்படி இவர்கள் அனைவரும் சொல்லிவைத்தாற்போல் நல்லவர்களாக இல்லாமல் இருந்தால் (இப்போதுள்ள சூழலில் அதற்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று உறுதியாக சொல்ல நினைத்து, அது என்னுடைய போதாமையோ என்ற ஐயத்தில், அடைப்புக்குறிக்குள் இட்டிருக்கிறேன்) அவன் அதை எவ்விதம் எதிர்கொண்டிருப்பான் என்ற கேள்வியும் எழுகிறது. கண்டிப்பாக ஹென்றி போன்றவர்களுக்கு அந்த தத்துவச் சிக்கல் இருக்காது.

இந்த நாவலில் ஒரு விசயம் உங்களுக்கு உறுத்தக்கூடும். கிருஷ்ணராஜபுரத்து மனிதர்கள் அனைவரது சாதியும் வெளிப்படையாகக் தெரிவிக்கப்படுகிறது. அவர்களது குணநலன்களும். காவல் நிலையத்தில் ஏற்பட்ட அவமானத்தால், மணியக்காரக் கவுண்டர் தற்கொலை செய்துகொள்கிறார்.

துரைக்கண்ணு பிள்ளை முரடனாக இருந்தாலும் பாசத்தில் பரதனை மிஞ்சிவிடுகிறார். தேவராஜ நாயக்கர், புத்திசாலியாக முற்போக்குச் சிந்தனைகளுடன், தயாள குணத்துடன் திகழ்கிறார். நடராஜ ஐயர் தன் பேரின் பிற்பாதியைத் துறக்கிறார். கிராமணி வேலு முதலியார், வயிற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், பஞ்சாயத்தில் தன் ஊர்க்காரனுக்குப் பரிந்து பேசுகிறார். பின்னர், நியாயத்தை ஏற்றுக்கொள்கிறார்.

இப்படி, கிருஷ்ணராஜபுரம் ஒரு உடோபியா போல் தோற்றமளிக்கிறது. ஆனால், சின்னான், தையநாயகி, மண்ணாங்கட்டி பொன்றவர்களது சாதி தெரியவில்லை. அவர்களது உலகமும். அவர்களது குடும்பம், வாழ்வியல் பிரச்சனைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் எப்போதும் தமக்கு இடப்பட்ட ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். பைத்தியத்தை குளிப்பாட்டுவதிலிருந்து, முகம் கழுவ தண்ணீர் எடுத்து வைப்பதுவரை. ‘பரியாரி’ பழனி கூட ஒழுக்கம் மீறி நடந்து அந்தக் குற்றவுணர்ச்சியில் தற்கொலையும் செய்துகொள்கிறான்.

டீக்கடையில் தனித்தனி டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹென்றி அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. இதையெல்லாம் சரிசெய்யும் நோக்கமோ லட்சியமோ ஹென்றிக்கு இல்லை. அவன் ஒன்றும் சூப்பர்மேன் அல்லவே. எனினும், அவனுக்கு மணியக்காரக் கவுண்டரும் மண்ணாங்கட்டியும் ஒன்றுதான்.  இருவரையும் அவன் சமமாகவே பார்க்கிறான், மரியாதையுடன் நடத்துகிறான். அவன் உலகில் எதுவும் எற்கத்தக்கதே. ஏனெனில், அவன் பார்வையில், அனைத்திற்கும் ஒரு காரணம் அர்த்தம் உள்ளது.  நாம் தான் அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது புரியாமல் இருக்கிறோம். அவன் உலகில் அனைத்தும் நல்லதே, அனைவரும் நல்லவரே.

ஜேகே-வின் ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது.  “ஹிந்து சமூகத்தில் ஏற்பட்ட குறைகளை அதன் வளர்ச்சியின் மூலமாகவே தவிர்ப்பதற்கான வாய்ப்பு நமக்குத் தடுக்கப்பட்டது. அந்நிய ஆட்சி முறைகளும், இங்கு புகுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளாதார வாழ்க்கை முறைகளும் நம்மை மேலும் அலைக்கழித்துச் சீர்குலைத்தன”

ஸோர்பா-வும், சித்தார்த்தனும், சாண்டியாகோ-வும் தமது இருப்பிடத்தைவிட்டு வெளியுலகைத் தேடிச் செல்கிறார்கள். இந்த கதையில் வரும் நிர்வாணப் பெண் கூட அப்படித்தான். தன் விடுதலையைத் தேடி அனைத்தையும் விட்டுச் செல்ல அவளுக்கு தயக்கம் ஒன்றும் இல்லை. ஆனால் ஹென்றியோ தன் இருப்பிடம் தேடிச் செல்கிறான். தன் மக்களைத் தேடிச் செல்கிறான். தன் பெயரையும் ஹென்றிப் பிள்ளை என்று சாதியையும் அவர்கள் சேர்க்கும்போது, மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறான்.

அவனால் அப்படித்தான் இருக்கமுடியும். ஏனெனில் அவன் அதையும் அவர்களுக்காகவே ஏற்றுக்கொள்கிறான். அந்தப் பேரால் அவனுக்குப் பெருமையும் இல்லை இழிவும் இல்லை. ஸோர்பாவும் மற்றவர்களும் தம் விடுதலையை புறத்தில் தேடுகிறார்கள். ஹென்றி தன் அகத்துக்குள் தேடுகிறான். அவ்விதத்தில் அவர்களிலிருந்து வேறுபடுகிறான்.

ஆயினும், சிலசமயங்களில் ஹென்றி ஒருவித தன்னுணர்வோடு இருப்பதாகத் தோன்றுகிறது. அது அவனது பாத்திரப் படைப்பில் ஒரு குறையோ எனவும் தோன்றுகிறது. பெண் நிர்வாணமாகக் குளிப்பதைப் பார்க்கிறாயே, அது தவறில்லையா என்ற கேள்விக்கு, இதற்கு முன் சாலையில் தான் ஒரு குரங்கை அவ்வண்ணம் பார்த்தபோது இந்தக் கேள்வி உங்களுக்கு ஏன் எழவில்லை என்று திருப்பிக் கேட்கிறான். அதேப்போல, தனக்கு மின்விளக்கின் தேவை இல்லை, லாந்தர் விளக்கே போதும் என்கிறான். அவனுக்கு ஏழைகள் சாப்பிடும் கூழ் பிடித்த உணவாக இருக்கிறது. இதனால், ஹென்றிக்குத், தான்-பிறர் என்னும் வேறுபாடு, தான் தனித்தவன், அவர்களிடமிருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நீட்ஷே-யின் அதிமனிதன் அப்படி உணரமாட்டான் என்றும் தோன்றுகிறது.

இந்த நாவலை முடித்த பின்னும், அந்த வீடு இல்லையென்றால், கிருஷ்ணராஜபுரத்து மக்கள் அவனை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் ஹென்றி உலகை எப்படி எதிர்கொண்டிருப்பான், அவன் உலகம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. நிச்சயமாக அந்தக் கிழங்கு விற்பவளும் அந்த சேரி மக்களும் அவனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். பின்னர், ஏசு கிறுஸ்துவுக்கு நேர்ந்தது அவனுக்கும் நேர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

 

பார்த்தா குரு

ஜெயகாந்தன் வாசிப்புகள்- கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.