வாக்கியங்களின் சாலை
– வாசிப்பனுபவம்
முனைவர் ப . சரவணன் , மதுரை
உலக மொழிகளுள் எழுதப்பட்ட எந்த வகையான இலக்கியமானாலும் அது மனிதனின் அகமனவோட்டத்தை நிச்சயமாகக் காட்சிப்படுத்தத்தான் செய்யும். அந்த இலக்கியத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் அந்த மனவோட்டங்களுள் ஏதாவது ஒன்றைத் தன் வாழ்வில் தனக்கு நிகழ்ந்த அனுபவத்தோடு பொருத்திப் பார்ப்பார். அப்போது அந்த இலக்கியப் படைப்பு அவருக்கு நெருக்கமானதாக அமைந்துவிடும்.

சில வாசகருக்குத் தன்னனுபவத்தோடு இலக்கியம் முன்வைக்கும் மனவோட்டத்தைப் பொருத்திப் பார்ப்பதில் பயிற்சி இருக்காது. அந்தப் பயிற்சியை அளிக்கும் ஒரு கையேடுதான் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகம்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உலக இலக்கியங்களைத் தன்னுடைய சுய அனுபவப்பதிவுகளோடு மெல்ல உரசிப் பார்க்கிறார். அந்த உராய்வில் பிறக்கும் தீத்துளிகளின் ஒளியால் உலக இலக்கியம் நமக்குப் புதுவகை அனுபவத்தையும் புதிய புரிதல்களையும் புதுவிதமான மனவோட்டத்தையும் அளிக்கிறது.
‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகம், உலக அளவில் எழுதப்பட்ட மிக முக்கியமான புனைவு, புனைவல்லாத இலக்கிய வகைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் எழுதப் பெற்ற 19 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவலைகளின் வழியாகவே தொடங்குகின்றன. அவரின் ஒவ்வொரு நினைவலையும் ஒரு சிறுகதைக்குரிய அல்லது தன்வரலாற்றுப் புதினத்துக்குரிய பாய்ச்சலோடுதான் விரிகின்றன. அந்த நினைவலை வாக்கியங்களால் பெருக்கெடுக்கும் ஒரு சிற்றோடையாக மாறிவிடுகிறது.
வாசகர்கள் அந்த நினைவோடையில் மகிழ்ந்து, சறுக்கிக்கொண்டு செல்லும் போதே எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஓர் உலக எழுத்தாளுமையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். பின்னர், அந்த எழுத்தாளர் படைத்த படைப்பினை விவரிக்கிறார். அந்தப் படைப்பு பற்றிய பல தகவல்களைப் பலகோணங்களில் நமக்குக் காட்டுகிறார். பின்னர் அந்தப் படைப்பினை நாம் எவ்வாறெல்லாம் புரிந்துகொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றி நமக்குக் கற்பிக்கிறார். இறுதியாக அந்தப் படைப்பு குறித்த தன்னுடைய ஒட்டுமொத்த மனப்பதிவினை மிகச் சுருக்கமாக நம் முன் வைத்துவிட்டு, மெல்ல விலகிக்கொள்கிறார்.
அடுத்த விநாடியே வாசகர்களின் மனம் அந்தப் படைப்பின் பின்னாலும் அந்த எழுத்தாளுமையின் மீதும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சுய அனுபவத்தின் முன்னும் சென்று குவிந்து நிற்கிறது. பிறகென்ன? அந்த எழுத்தாளுமையின் முழுப் படைப்புகளையும் நாம் தேடி தேடிப் படிக்க வேண்டியதுதான்.
‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகம், ‘உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் புத்தகம்தானே?’ என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘இல்லை’ என்பதுதான். இந்தப் புத்தகத்தை நூலறிமுகப்புத்தக வரிசையில் வைக்கலாமா? என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘கூடாது’ என்பதுதான்.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் அனைத்துப் புத்தகங்களும் தேர்ந்த வாசகரின் ‘அறிவுச்சிந்தனைப்பசி’க்கு நல்விருந்தாகக் கிடைக்கப் பெற்ற எத்தனையோ புத்தகங்களுள் இருந்து, தேர்ந்தெடுக்கப் பெற்றவையே. அந்தத் தேர்ந்த வாசகர் சிறந்த எழுத்தாளராகவும் இருப்பதால் அவரின் தேர்ந்தெடுப்பு மிகவும் சிறப்பாகவே அமைந்துவிட்டது.
‘இதனால் யாருக்கு லாபம்?’ என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘எளிய தமிழ் வாசகர்கள் ஒவ்வொருவருக்குமே’ என்பதுதான் என்னுடைய அசைக்க முடியாத பதில். ‘அதெப்படி?’ என்றும் நீங்கள் கேட்கக்கூடும்.
எளிய தமிழ் வாசகர்களுக்குத் தமிழில் இதுவரை எழுதியுள்ள எண்ணற்ற மகத்தான ஆளுமைகளைப் பற்றி முழுமையாகத் தெரியாது. அவர்களின் படைப்புகளைப் பற்றியும் முழுதும் தெரியாது. இந்த நிலையில் அவர்களுக்கு உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எத்தகைய புரிதல் இருக்கக்கூடும்?
அவர்கள் அறிந்த உலக இலக்கிய ஆளுமைகள் பெரும்பாலும் நமது இலக்கிய விமர்சகர்கள் நமது இலக்கிய ஆளுமைகளை உலக இலக்கிய ஆளுமைகளோடு ஒப்பிட்டு எழுதும் குறிப்புகளைக் கொண்டுதானே ஒழிய, உலக இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து, வெளியிடப்பட்ட புத்தகங்களைப் படித்து அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இன்றும்கூட உலகின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் முழுப் படைப்புகளும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதையும் நாம் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், சூழலிலிருந்துதான் நாம் இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகத்தை அணுக வேண்டும்.
இந்தப் புத்தகத்தின் வழியாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எந்த உலக இலக்கிய ஆளுமைக்கும் ‘நன்நெறிச்சான்றிதழ்’ வழங்கவில்லை. அந்த ஆளுமைகளின் எந்தப் படைப்புக்கும் மதிப்பெண் இடவில்லை. அயல்மொழி இலக்கியப் படைப்புகளைப் பெருமைபட பேசும்போதும்கூட எந்தத் தருணத்திலும் நம் மொழிப் படைப்புகளை ஒப்பிடவுமில்லை. இந்த மூன்றுமே இந்தப் புத்தகத்தின் ‘தரமும் பலமும்’ என்பேன்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள், இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகத்தின் வழியாக, ‘நான் இந்த அயல் இலக்கியப் புத்தகத்தைப் படித்ததன் வழியாக, என்னுடைய சுய அனுபவமான ஒன்றினை நினைத்துப் பார்த்துக்கொண்டேன்’ என்றும் ‘இந்த அயல் எழுத்தாளரின் படைப்பாளுமையைப் புரிந்துகொள்வதன் வழியாக, நான் என்னுடைய வாசிப்பு அனுபவத்தையும் எழுத்தின் தரத்தையும் புத்தொளிகொள்ளச் செய்தேன்’ என்று தன்னுடைய தரப்பினை விரிந்த மனத்தோடு நம் முன் வைக்கின்றார்.
ஒரு புத்தகத்தைப் படிப்பதன் வழியாக நம் வாழ்வில் நாம் அடைந்த அனுபவங்களை எவ்வாறெல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்துத் தொகுத்துக்கொள்ளலாம் என்பதையும் ஒரு படைப்பாளரை மனத்தளவில் அணுகுவதன் வழியாக நாம் நமது சிந்தனை விரிவையும் கற்பனைத் திறத்தையும் எவ்வாறு புதுமையாக்கிக் கொள்ளலாம் என்பதையும் நாம் இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகத்தைப் படிப்பதன் வழியாகக் கற்றுக்கொள்ளலாம்.
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ‘படைப்பாக்கத் திறன்’ சார்ந்த பாடத்திட்டத்தில் இந்தப் புத்தகத்தைத் துணைநூலாக அல்லது மேற்பார்வைநூலாக வைக்கலாம். அதற்குரிய முழுத்தகுதி இந்தப் புத்தகத்துக்கு உள்ளது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

