மலைபூத்தபோது, அறமென்ப- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

மலைபூத்தபோது கதையை ஒருவர் கதையாகச் சொல்லமுடியாது. அந்த தனித்தன்மைகொண்ட நடையில் தான் கதையே இருக்கிறது. அந்த பழங்குடியின் மொழி அல்ல அது. அவர்கள் அப்படிப் பேசுவதில்லை. அவர்களின் அகமொழிக்கு ஒரு நடை உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நடை ஒரு தனித்தன்மைகொண்ட கவிதைத்தன்மையில் அவர்களின் பிரபஞ்சதரிசனத்தையும் அதற்கு நேர்மாறான சமவெளிமக்களின் பிரபஞ்சதரிசனத்தையும் சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்த முரண்பாடுதான் அதிலுள்ள கதை என்பது

மலைமக்களுக்கு விளைச்சல் அல்லது பொன் என்பது இயற்கையின் கொடை. அவர்கள் மண்ணிலுள்ளவர்களிடம் கேட்பது மலைக்கான பங்கை. மலைதெய்வங்களுக்கான படையலை. ஆனால் மண்ணிலுள்ளவர்கள் அதை பிச்சை என நினைக்கிறார்கள். இந்த முரண்பாட்டைத்தான் கதை சொல்கிறது.
மண்ணிலுள்ளவர்களின் தெய்வங்கள் வீதிகளில் குடியிருக்க அவர்களின் அன்கான்ஷியஸின் இருண்ட பாதைகளில் நடமாடுகின்றன மலைத்தெய்வங்கள்.

சரவணன் குமார்

அன்பு ஜெ,

ஓர் அற்புதமான புனைவின் காட்டை கட்டி எழுப்புவதற்கு ஏதுவான கதையைப் பரிசளித்திருக்கிறீர்கள். மீள முடியாத பாரவசத்தை அது அளித்தது. காட்டின் மக்களைப் பற்றி, அவர்களின் உள்ளுணர்வைப் பற்றி பல கதைகளில் சொல்லியிருக்கிறீர்கள். இன்று அந்த உள்ளுணர்வின் தெய்வங்களின் வழி தெய்வம் ஏறப்பட்டு, காடேயாகி கதை சொல்வதாகப் பட்டது எனக்கு. கதை முடிபில் ஒரு கலக்கம் நிறைத்துக் கொண்டது. ஏதோ சில வரிகள் மீண்டொலித்தது என்னுள்.

”ஊரை பசியுடன், உடைமைவெறியுடன் காடு உற்றுநோக்கிக் கொண்டே இருந்தது. ஊ என்பது ஒரு பிழை என, ஓர் அத்துமீறல் என காடு எண்ணியது. ஊர்கள் பகலில் மட்டுமே தனித்து திகழ்ந்தன. இரவில் அவை காட்டுடன் இணைந்துகொண்டன.”

இந்த வரிகள் ஏன் எனக்குள் வர வேண்டும் என்று சிந்தித்திருந்தேன். இந்த வரிகளின் கதையான முதலாமன் சிறுகதையை மீண்டும் படித்தேன். குலத்தின் தெய்வமாக, முதலாமனாக காளியன் மாறும் ஒரு தருணத்தை மீட்டியிருந்தேன். அதே கரடிக் காடு. அதே மக்களை காலத்தில் பின் சென்று இந்தக் கதையில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. அழியாமையில் எஞ்சியிருக்கும் அனைத்தையும் இங்கு கண்டேன்.

எங்கள் தாத்தாவின் காடு மேற்குத் தொடர்ச்சிமலையின் கிழக்குப் பக்கம் செண்பகத்தோப்பைத் தாண்டிய குட்டதட்டி மலைக்கு அருகில் உள்ளது. மலையை ஒட்டி அது வழிந்து உருவாகிய வயல் தான் அது. இன்று செண்பகத்தோப்பை சுற்றியிருக்கும் பெரும்பாலான பகுதிகளை, மேகமலை மற்றும் திருநெல்வேலி சரணாலயத்துடன் இணைத்து புலிகள் சரணாலயமாக மாற்றும் திட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் சரணாலயமாக திருவில்லிபுத்தூர் மாறியிருக்கிறது.

வைகை தன்னை அதன் பிறக்கும் இடத்திலேயே புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக அமையுமென சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  காடு மீண்டும் தன்னுடன் மண்ணை இணைத்துக் கொண்டது என நினைத்தேன். இன்று புனைவின் வழி அங்கு அந்த வயலில் நின்று கொண்டு அந்த மலையைப் பார்க்கிறேன். அதன் கொடையை, தெய்வங்களை, ஆசிர்வாதங்களை என அனைத்தையும் காண்கிறேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொல்லிக் கொள்கிறேன்.

”நூறாண்டுகளாக, நூறுநூறு ஆண்டுகளாக, அப்படி ஏராளமான நூறாண்டுகளாக… இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும்.” என்று சொன்னீர்கள். இந்த வரிகளின் வழி காலம் முழுமைக்கும் சென்று அந்த வயல்காடுகளின் மண்ணின் மக்களை தரிசிக்கிறேன்.

காட்டிலிருந்து வளங்கள் வருவது போலேயே ”காட்டிலிருந்து நோய்களும் வந்தன” என்றும், கொடுநோய்களை கொண்டுவரும் குளிகன் பற்றியும், ஒவ்வொன்றுக்குமான காட்டின் தெய்வங்களையும் நீங்கள் முதலாமன் கதையில் கூறியது நினைவில் எழுந்தது. இங்கு இந்தக் கதையின் தெய்வங்களும் அதனோடு இணைந்து கொண்டன. நோயின் காரணமாகவோ, விளைச்சலின்மையின் காரணமாகவோ, வறுமை, பசியின் காரணமாகவோ மனிதர்கள் தங்கள் தெய்வங்களை மறந்து புலம் பெயர்கிறார்கள். மேலும் மேலும் காட்டிலிருந்து விலகி தெய்வங்களை மறந்து தங்களுக்கான தெய்வங்களை சமைக்கிறார்கள்.

இன்று அதிகாலை இதைப் படித்துவிட்டு தான் நடை சென்றேன். அங்கு அந்தக் கடற்கரையில் நின்று கொண்டு என் காட்டைப் பற்றி நினைத்துப்பார்த்தேன். காட்டிலிருந்து நான் வெகு தொலைவில் வந்துவிட்டேன். அது உருகி வழிந்து தந்த மண்ணைப் பற்றிய எந்த சிந்தையுமின்றி ஒரு தலைமுறை வேறெங்கோ சென்றுவிட்டது. இன்னும் பல்லாண்டுகள் கழித்து அவையும் காடாகிவிடும். சில பூதத்தான்களும், பர்வத ராஜன்களும் மட்டும் இந்நாடு நமக்கு வேண்டாம் ராஜாவே, இந்த மண்ணு வேண்டாம் ராஜாவே! நமக்கு ஆனப்புல்லு மண்ணுண்டு எனக்க பொன்னு ராஜாவே!” என்று மீளமுடியாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள் என்று நினைத்தேன்.  “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று யாரோ சொல்வது போல இருந்தது.

மீளமுடியவில்லை ஜெ. இந்த கதை தந்த சித்திரப் புனைவும், எண்ண அலைகளும் அது தந்த கையறு நிலையும், தத்தளிப்புமென இன்று முழு நாளையும் நிறைத்துக் கொண்டது. இன்னும் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அவையாவற்றயும் என் இந்த எழுத்துக்களால் சொல்லிவிட முடியுமா என்று வியக்கிறேன். இந்த அனுபவத்திற்காக நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

அன்புள்ள ஜெ

அறமென்ப கதை நம்மை நோக்கி பேசுகிறது. அறம் என்கிறீர்களே, அது உண்மையில் என்ன என்று. அறமென்பது ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல. கொடுக்கப்பட்டவன் அப்படியே அதை திரும்ப தரவேண்டுமென்பதில்லை. கொடுப்பவன் எதையும் விலையாக எதிர்பாக்கவும் வேண்டாம். கொடுப்பவனின் நிலை மட்டும்தான் அறம். நாம் அறத்தை வியாபராமாக மாற்றிக்கொள்கிறோம். அந்தக்கதையில் சட்டென்று தன்னுடைய வியாபாரத்தை செல்வா உணர்கிறான். அக்கணமே அவன் விடுதலை அடைந்துவிடுகிறான்

மதன்

அன்பு ஜெ….வணக்கம். அறமென்ப….

இந்தச் சிறுகதை நாளை நமக்கே நேரலாம் எனும் அனுபவம்…அல்லது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிச் செல்ல உதவும் அனுபவம். சராசரிகளின் இரக்கச் சிந்தை இங்கே மதிக்கப்படாது என்பதற்கு இது சான்று. கழுகுகள் கொத்திக் கொதறக் காத்துக் கொண்டிருக்கும் உலகம். பொய்யும் புனை சுருட்டும் வெற்றிகரமாய் வலம்வர சட்டம் பாங்காய் துணை நிற்கும் அவலம். நல்ல உள்ளம் படைத்தோரையும் நமக்கெதற்கு…என்று ஒதுங்கி ஓட வைக்க,ஏனடா இதில் தலையைக் கொடுத்தோம் என்று கலங்கடிக்க, எப்படியேனும் மீளணும் என்று ஏற்படும் நஷ்டத்திற்கு இணங்க…என்று எளிய மனிதனை ஆட்டிப் பார்க்கும் அவலம்…

எத்தகைய வளமானவனெனினும் தனக்கு நம்பிக்கையான ஒருவனைக் கூடவே வைத்துக் கொண்டால்தான் இந்த உலகில் ஜுவிக்கவே முடியும் என எடுத்துக் காட்டும் சோகம். தனியொருவனின் நியாயம் எதுவுமே இங்கு செல்லுபடியாகாது என்கிற யதார்த்தம், வறுமையை,ஏழ்மையைச் சாதகமாக்கி  அதைக் காசு பண்ணத் துடித்து அதுவும் ஒரு வாழ்வுதான் என்று அலையும் மோசடி…அதற்கு மோசம் போகும் ஏழ்மை…இப்படி எத்தனையெயோ கற்பிக்கும், மறக்கக் கூடாத கதை…

அருமை…உரையாடல்கள் விறுவிறுப்பாய்,கச்சிதமாய், யார் யார் எவரெவரிடம் எந்த அளவுக்கே பேச வேண்டும் என்பதை கதையின் கருவுக்கேற்றதுபோல் நன்குணர்ந்து, அளவான, பொருத்தமான, பூடகங்களோடு அமைந்த அளந்தெடுத்த வார்த்தைகளால் வடிவமைத்த சிறப்பு….ஒரு நல்ல படைப்பைப் படித்த திருப்தி யோடு, இந்தப் பாழும் உலகில் நாளைக்கு நமக்கே நேர்ந்தால் நிச்சயம் உதவும் என்ற எச்சரிக்கையுடன் கூடிய சேகரிப்பை உணர்த்திய அதி முக்கியமான படைப்பு.

நன்றி

உஷாதீபன்

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.