கீதையைச் சுருக்கலாமா?

[image error]


திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,


உங்களுடைய கீதை உரையை நான் திரு.அரங்கசாமி அவர்களின் உதவியோடு முழுமையாகப் படித்திருக்கிறேன்.  அதில் நீங்கள் கர்மயோகத்தை விளக்குவதற்காக எழுதிய பல பக்கங்கள் எனக்குப் புரியவைக்காத  அந்த ஒட்டுமொத்தப் பார்வையை, உங்களின் உலோகம் நாவலில் வரும் ஒரு சிறு பகுதி புரியவைத்தது.


ஒரு இயந்திரம் ஆயிரக்கணக்கான உறுப்புகளாலான நூற்றுக்கணக்கான தனிக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டு ஒரு தருணத்தில் ஒன்றிணைக்கப்பட்டு மின்சாரம் அளிக்கப்பட்டதும் சரசரவென செயல்பட ஆரம்பிப்பதைப்போல எத்தனையோ பேர் என்ன நடக்கிறதென்றே அறியாமல் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆணைகளை நிறைவேற்ற ஒவ்வொன்றும் அதற்குரிய பங்களிப்பாற்ற அது நிகழ்ந்தது. என்ன நடந்தது என்று அறிந்தவர்கள் அதை வடிவமைத்தவர்கள் மட்டுமே.


கர்மயோகத்தின் அந்த ஒட்டுமொத்தப் பார்வைக்குரிய மிக்சச்சிறந்த உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாமா?


என் புரிதல் சரிதானே?


பூபதி


அன்புள்ள பூபதி,


முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன், சற்று இதைப்பற்றி யோசித்தீர்கள் என்றால் நான் சொல்ல வருவது என்ன என்பது புரியவரும்.


இந்து மதத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. நாட்டார் பண்பாடு சார்ந்த  வழிபாடுகள் மற்றும் சடங்குகளின் மரபு, பெருமதம் சார்ந்த பக்திமரபு அல்லது கர்ம மரபு, தத்துவமும் யோகமும் அடங்கிய ஞான மரபு.


இவற்றில் எதைக் கடைப்பிடித்தாலும் அவரவர் தளத்தில் அது பயனுள்ளதே. இவற்றைப் புரிந்துகொள்ள முயல்வோம் என்றால்  குழப்பங்கள் இல்லாமல் தனித்தனியாக வரலாற்று நோக்கில் புரிந்துகொள்வதே சிறந்த வழி.  ஒன்றை இன்னொன்றைக்கொண்டு புரிந்துகொள்ள முயல்வது நிறைய சிக்கல்களை உருவாக்கும்.


உதாரணமாக நாட்டார் மரபு சார்ந்த ஒரு சடங்குக்கு பக்தி மரபின் நம்பிக்கைகள் சார்ந்து விளக்கம் கொடுப்பது அதைத் திரிப்பதாகவோ அல்லது எளிமைப்படுத்துவதாகவோதான் ஆகும்.


அதைப்போல ஞானமரபு சார்ந்த ஒரு தத்துவத்தை அல்லது யோகமுறையை பக்தி மரபுக்குள் கொண்டுவந்து நிறுத்திப் புரிந்துகொள்வதும் திரிபுகளையும் எளிமைப்படுத்தல்களையும் உருவாக்கும்.


நெடுங்காலமாக நமக்குத் தத்துவ-யோக மரபை பக்திமதச்சூழலுக்குள் கொண்டுவந்து நிறுத்தி விளக்கும் ஒரு வழக்கம் இருந்து வந்துள்ளது. அதைத் தவிர்க்கமுடியாது. ஏனென்றால் அப்படித்தான் தத்துவத்தையோ யோகத்தையோ பெரும்பாலானவர்கள் அறிமுகம் செய்துகொள்கிறார்கள்.


பெரும்பாலும் இந்த அறிமுகமானது மேடைப்பேச்சுகள், கதா காலட்சேபங்கள், பக்திக் கட்டுரைகள் ஆகியவை வழியாக நிகழ்கிறது.  அந்த வெளிப்பாட்டுமுறைகளுக்கென்றே சில மேலோட்டமான வழிமுறைகள் உள்ளன.


அப்படித் தத்துவத்தையும் யோகத்தையும் அறிமுகம் செய்யும்போது இன்றியமையாமல் ஓர் எளிமைப்படுத்தல் நிகழ்ந்துவிடுகிறது. எந்த சிக்கலான நூலையும் மிக மிக எளிமைப்படுத்தி ஓரிரு சொற்களில் 'மொத்தத்திலே இவ்வளவுதான்யா விஷயம்' என ஒருவர் ஓங்கிச் சொல்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் அது எளிதாக இருக்கிறது. உழைப்பைக் கோருவதில்லை. அந்த மக்களால் அவர் தெளிவாகப் புரிந்துகொண்டவர் என நம்பப்படுகிறார்.


ஆனால் அந்த மூலநூலை எழுதியவருக்கு இப்படி எளிமையாகச் சொல்லத் தெரியாமலா இருக்கும்,அவரை விட இவர் இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டவரா என்று யோசித்தோமென்றால் எங்கே பிழை உள்ளது என்று புரியும்.


தமிழ்நாட்டில் உள்ள மேடைப்பேச்சு மரபு  வீச்சு மிக்கது. நம் சிந்தனை முறை பெரும்பாலும் எழுத்து-வாசிப்பை நம்பி உருவாகவில்லை. பேச்சு-கேட்பை நம்பியே உருவாகியிருக்கின்றது. மேடைப்பேச்சின் இந்த வழிமுறை நம்மை நூல்களுக்குள் ஆழமாகச் செல்லமுடியாதவர்களாக ஆக்குகிறது. சிக்கலான விஷயங்களைக் கவனிக்க முடியாதவர்களாக வடிவமைக்கிறது.


எந்த ஒரு விஷயத்தையும் சுருக்கமாக, ஓரிரு சொற்களில், மிக எளிமையாகச் சொல்லியாகவேண்டும் என்ற கட்டாயம் உருவாகி விடுகிறது. பெரும்பாலும் நுட்பமான, ஆழமான விஷயங்களை அப்படிச் சொல்லமுடிவதில்லை. அந்நிலையில் அவற்றைத் தவறாக எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளும் போக்கும் உருவாகிறது.


அறிமுக நிலையில் பலவற்றை எளிமையாகப் புரிந்துகொள்வது தவிர்க்கமுடியாதது.  ஆனால் இந்த செவிவழிக் கல்வி பொதுப்போக்காக ஆகும்போது என்னாகிறதென்றால் எல்லா விஷயங்களைப் பற்றியும் 'நெத்தியடி'யாகச் சொல்லப்பட்ட ஒற்றைவரிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு எங்கும் அவற்றைச் சொல்பவர்கள் அதிகரிக்கிறார்கள். அவர்கள் மேலே எதுவும் தெரிந்துகொள்ளமுடியாத மன அமைப்புக் கொண்டவர்களாக ஆகிறார்கள். அவர்களின் பேச்சுக்களால் பிறரும் எதையும் தெரிந்துகொள்ள முடியாதவர்களாகிறார்கள்.


சிந்தனைகளைப் புரிந்துகொள்ளக் குறுக்கு வழி ஏதுமில்லை. சிந்தனைகள் எப்போதுமே சிக்கலான வடிவில்தான் இருக்கும். எந்த ஒரு சிந்தனைக்கும் முன்னும் பின்னும் தொடர்ச்சி இருக்கும். அது ஒரு பெரிய ஒட்டுமொத்தப் பரப்பில் பொருத்தப்பட்டிருக்கும். அதைவிட முக்கியம் என்னவென்றால் எந்த சிந்தனையும் ஓரு முரணியக்கத்தில் இருக்கும். அதாவது அதை மறுத்தும், தாண்டியும் செல்லும் இன்னொரு சிந்தனையுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்தே அது இருக்கும்.


சிந்தனைகளை அவ்வாறு ஒட்டுமொத்தமாக, முழுமையாகப் புரிந்து  கொள்வது என்பது தொடர் முயற்சி மூலம்தான் நிகழ முடியும். அதற்கான உழைப்பையும் கவனத்தையும் கொடுத்தாகவேண்டும். சுருக்கிப் புரிந்துகொள்ளுதல் என்பது சிந்தனைகளைக் கற்றுக்கொள்வதற்கு நேர் எதிரான வழி. ஆகவே சுருக்கிப் புரிந்துகொள்ள முயலாதீர்கள். ஒரு மூலச்சிந்தனையைச் சுருக்கிச் சில சொற்களில் சொல்கிறேன் என ஒருவர் சொன்னார் என்றால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை எனத் தெரிந்துகொள்ளுங்கள்.


ஆனால் நினைவில்  நிறுத்துவதற்காக ஒரு சிந்தனையின் சாரத்தைச் சில சொற்களில் சுருக்கிக்கொள்ளும் வழக்கம் நம்மிடம் உண்டு. அதன் நோக்கம் அச்சிந்தனையைச் 'சொல்வது' அல்ல. அச்சிந்தனையை 'நினைவுறுத்துவது' மட்டுமே. அச்சொற்களை மீளமீள மனதில் ஓட்டிக்கொள்வதன் வழியாக ஏற்கனவே கசடறக் கற்ற அச்சிந்தனையை விரிவாக்கிக்கொள்ள முடியும்.


கீதையைச் சுருக்கமுடியாது. அது ஏற்கனவே ரத்தினச்சுருக்கமானது.  அது உருவான நாள் முதல் இன்றுவரை வந்தபடியே இருக்கும் உரைகளும் விளக்கங்களும் எல்லாம் அதன் ரத்தினச்சுருக்கத்தை புரிந்துகொள்வதற்கான முயற்சியே.  குறள், சூத்திரம் போன்ற வடிவங்களே ரத்தினச்சுருக்கமாகச் சொல்வதற்கானவை.


நீங்கள் சொல்லும் அந்த வரி கீதையின் சாயல் கொண்டது, அவ்வளவுதான். கீதை சொல்வது அதை அல்ல. உண்மையில் கீதை 'ஒன்றை'ச் சொல்லவில்லை. கீதை சொல்வது இது என எந்த வரியையும் கீதையில் இருந்தே சுட்டிவிடமுடியாது. அப்படிச் சொல்வது கீதையை எளிமைப்படுத்துவதும், தவறாகப் புரிந்துகொள்வதும் ஆகும்.


கீதை சொல்வது கருத்துக்களின் ஒரு வளர்ச்சிப்போக்கை. ஒன்றை இன்னொன்று நிராகரித்துச் செல்லும் முரணியக்கத்தை. அது ஒரு 'முடிவை' நோக்கிச் செல்லவோ இறுதியாக 'ஒன்றை'ச் சொல்லி நிற்கவோ இல்லை. அந்தப் போக்கில் எல்லா கருத்துப்புள்ளிகளுமே முக்கியமானவைதான்.


ஆகவே கீதையைச் சுருக்கிக்கொள்ள வேண்டாம். அது உருவாக்கும் மெய்ஞான விவாதத்தின் பாதை வழியாக நம் கற்பனையையும், நம் தர்க்கத்தையும், நம் உள்ளுணர்வையும் பயன்படுத்திக்கொண்டு பயணம் செய்யவேண்டும். நம் அனுபவத்திறப்புகள் வழியாக அதன் ஒவ்வொரு புள்ளியையும் நம்முடையதாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்
இந்திய சிந்தனை மரபில் குறள்.1
அரதி
செயலே விடுதலை:சாங்கிய யோகம்
ஆத்மாவும் அறிவியலும்:ஒரு விவாதம்
கீதை கடிதங்கள்,விளக்கங்கள்
கீதை எதற்காக?
மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்
கீதைவெளி
பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்
கோயிலுக்குச் செல்வது ஏன்?
நான் இந்துவா?
தத்துவம், தியானம்-கடிதம்
உணவும் விதியும்
ஹனீஃபா கடிதம்
அனலும் அணுவும்
கூடங்குளம்-கடிதம்
அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்
தூக்கு- எதிர்வினை
அண்ணா ஹசாரே-கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2012 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.