நூல் பேசுவோம்
மஞ்சுநாத் எழுதியுள்ள கர்னலின் நாற்காலி குறித்த சிறிய அறிமுகம்.
***
நூல் பேசுவோம் – கர்னலின் நாற்காலி
பூங்காவிற்குள் நுழைந்தவுடன் ஊஞ்சலில் அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம்
கை நிறைய கலர் மிட்டாய்கள் வைத்திருக்கும் சிறுவனின் கொண்டாட்டத்திற்கு ஈடாக சொல்லியிருக்கலாம்
ஆபூர்வ வைரக்கற்கள் கண்டடைந்த பூரிப்பை முகத்தில் காட்டியிருக்கலாம், வியாபாரியாக இருந்திருந்தால்

என்றைக்குமில்லாமல் பாதி பூக்களுடன் திரும்பி செல்லும் பூக்காரம்மாவிற்கு இன்று ஒரே ஒரு மனிதன் முழுவதையும் சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி கொண்டால், அந்த நிம்மதியான மகிழ்ச்சி போலிருந்தது என்று சொல்லியிருப்பேன் ஒரு வேளை பூ விற்றுக்கொண்டிருந்தால்
வயதானவர்கள் தங்கள் வாழ்வியல் நினைவலைகளை காற்றிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த தனிமையின் வெறுமை சில சமயம் யாரோ ஒரு தோழமையால் நிரம்பி விடும்போது நிலவைக் கண்ட குழந்தை போல் குதூகலமாகிறது. நான் முதுமைக்கு செல்லும் போது சொல்கிறேன்.
பதின்பருவ இளைஞனுக்கு தனது முதல் காதலியின் முதல் பார்வை, முதல் குரல், முதல் ஸ்பரிசம் தந்த இரசயாண வெடிப்பின் தெறிப்பு போலிருந்தது என்று சொல்லலாம்.., ஆனால் நமக்கு கேள்வி ஞானம் மட்டுமே.
இந்த புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய வர்ணஜாலத்தின் ஓவியத்தை எப்படி உங்களுக்கு காட்டுவது.. ?
ஒரு முறை இமயத்தில் துங்கநாத் மலை ஏறிக் கொண்டிருந்த போது வழி தவறி ஒரு சரிவின் விளிம்பிற்கு வந்து விட்டேன்.
பள்ளத்தாக்கின் முடிவில்லாத ஆழம் மலையின் பிரமாண்டத்தை உணர்த்தியது. எனது மூச்சுக்காற்று எதிரொலித்தது. அந்த பேரமைதி அதுவரை உணராதது .
அந்த சமயம் எதிரே இருந்த பனிமலை முகட்டில் சூரிய ஒளிகள் பட்டு
ஒரு தங்க ஜுவாலையாக மின்னியது. மனதில் மிகப் பெரிய ஆனந்த தாண்டவம்.
அந்த தனிமை, அமைதி, குளிர்ந்தக்காற்று அனைத்தும் பேரானந்தத்தின் உச்சம். அது வார்த்தைகள் கடந்த அனுபவம்.
வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட எஸ்.ரா வின் இந்த கர்னலின் நாற்காலி கூட அது போலத்தான்.மகிழ்ச்சிக்கு எந்த ஒப்புவமையை தர முடியும். மாட்டு வண்டி வாங்கியவன் மகிழ்ச்சியும் விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கியவன் மகிழ்ச்சியும் ஒரே மாதிரி தான் . அதில் எந்த வித்தியாசமும் கிடையாது.
தொகுப்பில் மொத்தம் 125 குறுங்கதைகள்.
வாசிப்பின் துவக்கத்தில் ஒவ்வொரு கதைக்கும் சிறு விமர்ச்சனக் குறிப்பு எழுதி வந்தேன். ஒன்றைக் கூட தவிர்க்க முடியாது. 125 கதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் அது புத்தக விமர்சனத்தில் சாத்தியமில்லை.
இது ஒரு சிறுவனின் கையில் இருக்கும் பூந்தி போன்றது . ஒவ்வொரு பூந்தி துனுக்கின் சுவைப் பற்றி தனித்தனியே கூறமுடியாது .அதை அப்படியே அள்ளி முழுவதுமாய் வாயில் போட்டுக்கொண்டால் அதன் சுகமே அலாதிதான்.
ஒரு வாசகன் உள்ளீடற்ற வேய்ங்குழலாய் மாற்றிக் கொள்ளும் போது எஸ் ரா என்கிற எழுத்தாளனின் உயிர் காற்று பெரும் மாயாஜாலத்தை வாசித்து விடுகிறது.
இன்பம், துன்பம், ஆசை ,நிராசை, கோபம், தாபம், போராட்டம், புரட்சி,தோல்வி, வெற்றி, ஏக்கம், அரவனைப்பு, புகழ், மாயை, அழுகை, சிரிப்பு, இழப்பு,உணர்வு, உணர்ச்சி, காமம், காதல், திண்டாட்டம்,திகைப்பு, தெய்வீகம், கலை, கொண்டாட்டம், அமைதி, தியானம்.., என முடிவில்லாத பயணத்தின் திறவுகோலாய் இத்தொகுப்பு இருக்கிறது.
வறுத்த வேர்கடலையின் சுவை ஒரு கொழுப்பு படலமாய் நாவில் ஒட்டிக் கொண்டு அடுத்தடுத்து என வேர்க்கடலையை நோக்கியே நமது கையை நகர்த்தும். ஒவ்வொரு கதையும் அடுத்த கதையின் சுவைக்கு நம்மை இப்படித்தான் நகர்த்துகிறது.
எஸ்.ரா சொல்கிறார் *”புத்தகம் என்பது வாசிப்பவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது அதில் எந்த எழுத்தாளனும் தலையிட முடியாது.”* என்று
ஆனால் இந்த புத்தகம் வாசகனை தன் வசமாக்கி கொள்கிறது.
இனி எப்போதும் நீண்ட பயணங்களில் என்னை அமர்த்தி கொள்ள கர்னலின் நாற்காலியை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
நன்றியும் வாழ்த்துகளும்.
அன்புடன்
மஞ்சுநாத்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
