ஆமென்பது, நகை – கடிதங்கள்

நகை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

முதலில் நகை என்ற கதை ஆழமான ஒவ்வாமையை அளித்தது. எங்கிருந்து ஏங்கே தாவுகிறது இந்தக்கதை என்று நினைத்தேன். அதெப்படி போர்ன் நடிகையுடன் ஒரு கௌரவமான பெண்ணை ஒப்பிடுவது என்று நினைத்தேன். ஆனால் எண்ண எண்ண வேறுவேறு நினைப்புக்கள். என் அம்மா நர்ஸாக இருந்தார். 1980 கள் வரை எல்லா பத்திரிகைகளிலும் நர்ஸ் ஜோக்குகள் பிரபலம். நர்ஸ்களை ஒருவகையான போர்ன் ஸ்டார் கணக்காகத்தான் அன்றைக்கு எழுதிக்கொண்டிருந்தார்கள். செகரெட்டரி ,டைப்பிஸ்ட் எல்லாரைப்பற்றியும் அப்படித்தான் ஜோக்குகள் வந்தன

ஆனால் பெண்கள் அந்த அடையாளங்களை மீறித்தான் எழுந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பொதுவெளிக்கு வந்ததுமே தோற்றம் சார்ந்த கிண்டல், ஒழுக்கம் சார்ந்த அவதூறு எல்லாம் வந்துசேரும். அதைக் கடந்து அவர்கள் வெற்றிபெற்றாகவேண்டும். அந்த வெற்றியைப் பெறும்போது நெகெட்டிவ் ஆகாமலிருக்கவும் வேண்டும். இந்தக்கதையின் கதைநாயகியைப்போல

 

ஆர். சித்ரா

அன்புநிறை ஜெ,

நகைப்பு எனும் இயல்பான நகையை  தன்னம்பிக்கையின் வெவ்வேறு படிக்கட்டுகளில் நிற்பவர்கள் அணிந்து கொள்ளும் விதங்களின் அவதானிப்பாக இக்கதையை வாசிக்கலாம்.

கதையில் ஒவ்வொருவரும் எவ்விதம் நகைக்கிறார்கள் எனப் பார்த்தால் ஷிவ் வெற்றி பெற்றவன், அதை ஒவ்வொரு கணமும் காட்டிக் கொள்ளக்கூடிய சிரிப்பைக் கொண்டிருக்கிறான். பதினைந்தாயிரம் ரூபாய் சட்டை அணிந்தவர்களுக்கு உரிய முதுகைத் தட்டிய ஆர்ப்பாட்டமான சிரிப்பு.

அனந்தகிருஷ்ணனைச் சுற்றி நின்று கொண்டிருப்பவர்களின் சிரிப்பு – சமூக அளவுகோல்களில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரை மூலவராக்கி அவரைக் குளிர்விப்பதற்காக செய்யும் அபிஷேகச் சிரிப்பு. அவரோ கருவறை பீடத்தில் நிற்பது போல மென் புன்னகையுடன் ஏற்று அருள்கிறார். அவர்களது துலாத்தட்டில் வெற்றி பெறாதவர்களைக் குறித்த ஏளனச் சிரிப்புகள். கதைசொல்லியைப் பார்த்து புன்னகை செய்து அங்கீகரித்து விட்டதாகக் கூட இருந்து விடக்கூடாதென அவரது இழுபடும் உதடுகளின் இகழ்ச்சிச் சிரிப்பு. இவனை மட்டம் தட்டியதும் ஒத்து ஊதுபவர்களின் கேலிச் சிரிப்பு.

கதைசொல்லி யாருமில்லாத தனிமையில் சுயமுன்னேற்றப் பொன்மொழிகளில் ஆறுதல் அடைவது போல, அந்தக் கழிவறையின் தனிமை தரும் ஆசுவாசத்தில் ஷீலா ஒர்டேகாவைத் தேடி ஒரு புன்னகை – முதல் முறையாக கதை சொல்லி எளிதாகிறான். அதன் பிறகும் தெரிந்தவர்களைக் காணும் தன்னம்பிக்கையின்றி புறக்கடை வழிகளைத் தேடும் கதைசொல்லி எதேச்சையாக பிரபா அத்தையைப் பார்க்கிறான்.

பற்கள் பெரிதாக, பளிச்சென்று, சீரான வரிசையாக இருக்கும், அவளது திறந்த வாய் சிரிப்புக்காகவே ஜிப் எனப் பெயர் பெற்ற, போர்ன் நடிகை போன்ற சாயலில் இருக்கும் பிரபா அத்தை.

அவளை அணுகி அந்த போர்ன் நடிகை போல இருக்கிறாள் எனச் சொல்லும் போது கதைசொல்லி முகத்தில் எழும் ஒரு கோணல் புன்னகை. அவன் கிட்டத்தட்ட பொன்மொழி தரும் தற்காலிக தன்னம்பிக்கை போல அந்தக் காணொளி தந்த ஒரு சிறு கெத்தில் அந்த தருணத்தில் நடந்து கொள்வதால் வரும் கோணல் சிரிப்பு அது. அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் அத்தையின் வாய்விட்டு சிரிக்கும் பெரிய பற்கள் தெரியச் சிரிக்கும் சிரிப்பு.

அந்த மனம்திறந்த வெளிப்படையான சிரிப்பில் அவனும் எளிதாகி மலர்ந்து சிரிக்கிறான். இதற்கு முன்னர் ஷிவ் கல்லூரி தினத்தில் அறிமுகமான ஒரு பெண் மற்றொரு போர்ன் நடிகை போலிருக்கிறாள் என்றதற்கு வெட்கப்பட்டு சிரித்ததை சொல்வான். அது வேறு விதம், தன் அழகின் வெளிப்பாட்டுக்கான புகழுரையாக அதை ஏற்கும் புன்னகை அவளுடையது. இங்கு பிரபா அத்தை நம்பிக்கை மிகுந்தவர்களுக்கு உரிய சிரிப்போடு அதைக் கடக்கிறாள். அதன் பிறகான கைகுலுக்கலில் அவள் உணர்த்துவது அவளது வலிய தன்னமபிக்கையை. அவளுக்கு இவ்வகையான சொற்கள் ஒரு பொருட்டுமல்ல.

இக்கதை முழுவதும் வரும் ஷீலா ஒர்டேகாவின் அழகான பல்வரிசை சிரிப்பு. அவளுக்கு இவ்வுலகைப் பார்த்து சிரிக்க விஷயங்களா இல்லை.

மிக்க அன்புடன்,

சுபா

ஆமென்பது… [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆமென்பது கதை ஓர் அமைதியின்மையை உருவாக்கியது. ஏனென்றால் நானே சென்ற ஆறேழு மாதமாக இன்றைய அரசியல்சூழலுக்கு ஆவேசமாக எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறேன். என் சிந்தனை முழுக்க அதிலேயே இருக்கிறது. சொல்லப்போனால் வேறு ஞாபகமே இல்லை. ஏதோ போர்க்களத்தில் நிற்பவன் போல உணர்கிறேன். அந்த ஆவேசத்தின் பயனின்மையைச் சொல்லும் கதையாக ஆமென்பது இருந்தது. இப்படித்தான் ஜயானன் என்ற எழுத்தாளர் இருந்திருக்கிறார். பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விண்ட்மில் யுத்தத்தின் அபத்தம் புரிவதே இல்லை. கொஞ்சகாலம் இப்படியே ஓடும். அடுத்த விண்ட்மில் வந்துசேரும். அப்படியே வாழ்க்கை ஓடிவிடும். இந்த ஆவேசமெல்லாம் வேறெங்கோ எதற்கோ செலவிடவேண்டியது. வேறெதையோ பேலன்ஸ் செய்வதற்குரியது. அதை சட்டென்று உணரவைத்த கதை இது. இந்த தேர்தல்காலத்துக்கு, உச்சகட்ட உணர்வுகள் பகைமைகளாக மாறிவிட்டிருக்கும்போது மிக அவசியமான கதை. ஆனால் அரசியல் வெறியுடன் கூவிக்கொண்டிருப்பவர்கள் படிக்க வாய்ப்பில்லை

 

ராஜேந்திரன் எம்

 

அன்பிற்குரிய ஜெயமோகன்

 

கதையின் மீதான R இன் கடிதமும் அதற்கு உங்களின் பதிலும் கதையை விட வெகு அருமை. அந்த டோபமைன்/செரட்டோனின் எழுத்தாளர் ஜெயமோகனை விட எனக்கு நித்ய சைதன்ய யதியின் அன்பு மாணவர் ஜெயமோகனேயே எப்போதும் நிரம்ப பிடிக்கிறது. என்ன செய்வது நம்ம வார்ப்பு இப்படி.

 

நித்ய சைதன்ய யதி போன்ற ஒரு நவீன ஞானி இன்று இருந்தால் எப்படி எழுதுவாரோ அப்படியே இருந்தது உங்களின் பதில்.

 

ஆமென்பதைக் குறித்து எழுத நிறைய உள்ளது. நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக எழுதப் பார்க்கிறேன்.

 

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.