விசை,கேளி – கடிதங்கள்

கேளி [சிறுகதை]

ஜெ,

கேளி கதையில் அந்த மேளம் ஆட்டம் நிகழவிருக்கிறது என்ற அழைப்பு. திருவிழா முடிந்துவிட்டது. ஆனால் ஒரு சின்ன முனகலில் இருந்து இன்னொரு திருவிழா தொடங்குகிறது. அதற்கான கேளிகொட்டு ஆரம்பிக்கிறது

எல்லா கலையனுபவமும் அப்படித்தானே?

ராஜன் குமாரசாமி

 

அன்புள்ள ஆசானுக்கு

முன்பெல்லாம்  ‘கேளி’  போன்ற எதுவுமே நிகழாத கதைகளை எதிர்கொண்டால்  அப்படியே சத்தமில்லாமல் கடந்து சென்று விடுவேன்.  அல்லது ஆணவம் சீண்டப்பட்டதன் எரிச்சலுடன் “சரிதான்… தீவிர இலக்கியம் போல இருக்கிறது  ஒன்றும் புரியவில்லை” என்று உள்ளுக்குள் கிண்டல் அடிப்பேன். இப்போது நம் வாசகர் குழுமத்தில் நடக்கும் விவாதங்கள் கூட்டு  வாசிப்பை சாத்தியமாக்கி  என்னுடைய வாசிக்கும்  பழக்கத்தை  ஒரு மாதிரி வாசிப்பு  பயிற்சியாக  தரம் உயர்த்தி  தந்துள்ளது (“..என நினைக்கிறேன்” என்று  எச்சரிக்கையாக ஒரு பிற்சேர்க்கையையும்  இட்டுக் கொள்கிறேன்)

பெரிதாக ‘ஒன்றும் நிகழாத’ கதைகள் வாசகனுக்கு விடும் சவால் அளவுக்கே அவன் பங்களிப்புக்கும் இடம் தந்து அந்த கதையிலிருந்து தனக்கே தனக்கான ஒரு பிரதியை/கதையை  உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரத்தையும் அளிக்கின்றன என்ற assumption உடன் கதையை வாசித்தேன் .  ‘கேளி ‘வாழ்க்கையின் சாரமான ஒன்றை துல்லியமாக சித்தரித்து வாசகனை கதை சொல்லியின் அகத்தில் இறக்கி வைத்து விட்டு பொருள் கொள்ளும் சுதந்திரத்தை முற்றாகவே அவனுக்கு அளித்துவிடுகிறது. முழு  கதையும் கவித்துவம் கொண்ட  ஒரு படிமமாக என்னுள் நிகழ்ந்தது

திருவிழா முடிந்துவிட்டது. நண்பர்கள் முந்தைய தினமே கிளம்பிவிட்டார்கள் ஆனால் “அவனால் கிளம்ப முடியவில்லை. கிளம்பியபின் அங்கே மேலும் தித்திப்பாக ஏதோ நடக்கக்கூடும். முக்கியமான எதையாவது அவன் தவறவிட்டுவிடக்கூடும்”.  நாற்பது வயதை கடந்து வாழ்வின் மறுகரை கண்ணுக்கு தென்பட துவங்கிய நிலையில் அதைப்பற்றிய பிரக்ஞை இருப்பவர்களுக்கு இந்த கதையில் திருவிழா எதற்கு ஈடாக வைக்கப்பட்டுள்ளது என்று சட்டென்று புலப்படும்.  அல்லது எனக்கு அப்படி புலப்பட்டது.

போன வருடம் எங்கள் குடும்பத்தில் என் தலைமுறையின் முதல் இயற்க்கை மரணம் நிகழ்ந்தது. (மாரடைப்பை இந்தியாவில் இப்போதெல்லாம் இயற்கை மரணம் என்று தானே வகைப்படுத்துகிறோம்). பெரியம்மாவின் மகன். கோடை விடுமுறைகளில் முழு நாட்களையும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி கழித்திருக்கிறோம். ஆமாம் என்னுடைய நண்பர்களும் கிளம்பி செல்ல துவங்கி விட்டார்கள்.  என் வருடாந்திர மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவு என்று கண்டுபிடித்தார்கள்.  கூடவே இதை ரத்த புற்று நோய்  உடன் சம்பந்தப்படுத்தி குழப்பிக்கொண்டு இணையத்தில் தேடவேண்டாம் அதெல்லாம் இன்னொரு பரிசோதனைக்கு அப்புறம் வைத்துக்கொள்ளலாம்  என்று சொல்லி கிட்டத்தட்ட என் திருவிழாவின் முடிவை கண்ணில் காட்டினார்கள்.

“திருவிழா முடிந்துவிட்டதோ. அது வெறும் மாயை மட்டும்தானோ என்ற பதற்றம் வந்து நெஞ்சை அடைக்கும். உடனே கணக்கிட்டு அது எத்தனையாவது நாள் திருவிழா என்று உணர்ந்ததும் உள்ளம் இனிப்படையத் தொடங்கும்.”

இரண்டாவது பரிசோதனை நல்ல செய்தியை சொன்னதும் அப்படித்தான் உணர்ந்தேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஒரு சாதனையை ஆற்றி முடித்திருக்கிறீர்கள். வெண்முரசு தான் உங்கள் திருவிழாவின் கேளியா? அலெக்ஸ். வேதசகாயகுமார் என நண்பர்களை சமீபமாக இழந்திருக்கிறீர்கள். அது தான் உங்களை இந்த மாதிரி திருவிழா முடிந்து நண்பர்கள் கிளம்பி செல்வதை பற்றி கதையை எழுத வைக்கிறதா? அல்லது நான் அப்படி எல்லாம் கற்பனை செய்து கொள்கிறேனா?

இப்படி மரணத்தை எல்லாவற்றிலும் காண்பது ஒருவகை எதிர்மறை சோர்வு மனநிலை என பலரும் கருதலாம் ஆனால் மரணம் முன்வரும் போது தானே பலருக்கும் வாழ்க்கை இனிக்க துவங்குகிறது. மரணம் திடீரென்று முன்னே வருவதில்லை அது எப்போதும் முன்னேயே இருக்கிறது நாம் தான் அதை தவற விட்டுவிடுகிறோம். அதன் மூலம் வாழ்க்கையின் இனிமையையும் தவற விடுகிறோம்.

‘இருத்தலின் வாதை’  என்கிற ஒரு பிரயோகத்தை நீங்கள் நவீனத்துவ இலக்கியம் என்று வகைப்படுத்தும் படைப்புகளில் அடிக்கடி  தட்டுப்படும்(Woody Allen : The food at this restaurant is terrible. and such small portions. just like life. which is full of misery and too short ). இருத்தல் பெரும் ஆனந்தம் அல்லவா?  புற்று நோயா என தீர்மானிக்கும் பரிசோதனைக்கு முந்திய நாள் ஒரு பவுர்ணமி. அவ்வளவு அழகான நிலவையும் இரவையும் என் வாழ்வில் கண்டதே இல்லை. அன்று உண்ட ஒவ்வொரு கவளம் உணவும் அமுதென சுவைத்தது. எல்லாமே  இனிமையாக இருந்தது.

“….சோம்பல்முறிக்கையில்தான் உடலில் அத்தனை இனிமை இருப்பதை உணரமுடிகிறது. உடலினுள் ஆழங்களில் ஆங்காங்கே சிறுசிறு இனிப்புகள் ஒளித்துவைக்கப்பட்டிருப்பதுபோல தோன்றுகிறது…”

இப்படி ஒரு கதை எழுதி வாழ்வை இனிக்க வைத்ததற்கு நன்றி ஆசானே

 

அன்புடன்

ஷங்கர் பிரதாப் 

அன்புள்ள ஷங்கர் பிரதாப்,

கேளி என்ற சொல்லுக்கு கொண்டாட்டம் என்றும் வாழ்க்கை என்றும் பொருள் உண்டு

ஜெ

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விசை கதை சென்ற தலைமுறையின் பல அன்னையரை நினைவில் எழுப்பியது. கதைகளில் அவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நீங்கள் எழுதிய கண்ணீரைப் பின் தொடர்தல் என்ற நூலில்கூட இந்திய நாவல்களே அன்னையரின் கண்ணீரை எழுதியவை என்று சொன்னீர்கள். உழைத்து உழைத்து குழந்தைகளை ஆளாக்கிய எத்தனை அன்னையர். ஆடுமாடு மேய்த்து, சாணி பொறுக்கி, வீட்டுவேலைசெய்து, கல்லுடைத்து, செங்கல் சுமந்து வாழ்ந்தவர்கள். அவர்கள் அத்தனைபேருக்குள்ளும் இருக்கும் விசை இந்தக்கதையில் ஓலைக்காரியிடம் வெளிப்படுவது

சிவக்குமார் எம்

 

ஆசிரியருக்கு வணக்கம்.

தினமும் எட்டு முதல் பத்துமணிநேரம் கடும் பணிக்குப்பின்னர் தூங்கி எழுந்து அதிகாலை கதைகளை வாசிப்பது ஓருவகை ரிலாக்ஸ் என்று நினைத்திருந்தேன்.சில நேரம் தானாய் பேசிக்கொள்வதும்.சில வரிகளை படிக்கையில் சப்தமாக தனியறையில் சிரிப்பதும் சிலவரிகளில் கடந்து செல்ல முடியாமல் தொண்டை வலிக்க கண்நிறைந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்து.முகம் கழுவி பின்னர் தொடர்வேன்.படிப்பது கதைன்னாலும் அது உள்ள என்னமெல்லாமோ செய்கிறது .

ஆனாலும் சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு வாசித்த ஓலைக்காரி இன்று செவ்வாய்கிழமை வரை அவ்வப்போது எண்ணமாய் வந்து செல்கிறார்.வாழ்வின் பதின்பருவ நினைவுகளை தட்டி எழுப்பியமையால் முப்பது ஆண்டுகளுக்கு பின் சென்று மீண்டும் அந்த வாழ்வை சிலகணங்கள் வாழ்ந்துவந்தேன்.

என் கிராமம் மணவாளக்குறிச்சியை சுற்றிலும் உள்ள கிராம பகுதிகளில் தென்னத்தோப்புகளே அதிகம்.அப்போது நிறைய வீடுகளும் இருந்தன. ஓலையில்.மேற்கூரை மட்டும் அல்லது முழு வீடும் ஓலையால் ஆனவை.செத்தபெர என சொல்வதுண்டு. வீட்டை சுற்றி சுவர்களும் அந்த ஓலையால் ஆனவை.என் வீட்டு தண்ணீர் தொட்டிக்கு உம்மா இரு ஓலைகளை முடைந்து இணைத்து  மூடி வைத்திருப்பார். எங்கள் வீட்டு ஆட்டுப் பெரை ஓலையால் இருந்தது. கல்யாண வீடுகள் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கும் பந்தல் அமைப்பது ஓலையால்.அந்த பந்தல்களுக்குள் வெப்பம் இருக்காது.இப்போது அமைக்கப்படுகிற சாமியான எனப்படும் துணி பந்தல்களுக்கு கீழே அமர்ந்து மதிய உணவு உண்டால் சட்டை நனைந்திருக்கும்.

விசை கதையில் வருவதுபோல் அன்று பலருக்கு அரிசியும்.உப்பும் ஓலை முடைந்தால் தான்.என்னுடன் பள்ளியில் படித்த பெண்கள் ஓலைமுடைய செல்வதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் ஓலை முடிந்தால்தான் கஞ்சி குடிக்க முடியும்.வாப்பா சொல்வார் “பத்து வயசுலேயே வாப்பாக்ககூட கயறு முறுக்க போவேன் ராத்திரி திரும்பி வந்தா ஒரு வேளை சூடு கஞ்சி”என.

தென்னைநாரில் கயிறு முறுக்கும் தொழில் பெரிய வாழ்வாதாரம்.1800 களில் இங்கிருந்து கப்பல் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியான கயிறுகளில் ஒட்டியிருந்த மண்ணை கண்டு தேடி வந்த ஜெர்மானியர் மூலம் தான் கண்டுபிடிக்கப்பட்டது யுரேனியமும் தோரியமும் வேறு தாதுக்களும் இந்த கடற்கரை மண்ணில் இருக்கிறது என.(இந்திய அபூர்வ மணல் ஆலை.INDIAN RARE EARTHS LTD)

ஓலையை முடைய எடுத்தபின் தென்னை மட்டை, கிலாஞ்சி, சூட்டு, கொதும்பு எல்லாம் அடுப்பெரிக்க.தென்னை தந்ததில் எதுவும் வீணல்ல.வீட்டுக்கு மாசம் தோறும் மட்டைகாரர் வருவார், அடுபெரிக்க மட்டையும் அடுப்பை முதலில் பத்த வைக்க சூட்டும் கொண்டு தருவார்.

ஓலைக்காரிக்கு கணவன் இறந்ததும் ஐம்புலன்களும் அடங்கிவிட்டது.

“தீ தின்னி… தீ தின்னிக்கெளவி…” என்று மேரி சொல்வாள். “அப்டியே வெந்து போவும் உள்ள”

“அவளுக்குள்ள எல்லாம் எப்பமோ வெந்து அடங்கியாச்சு பிள்ளே” என்றாள் வேலைக்காரி குருசம்மை.

ஆனால் விசை மட்டும் குறையவேயில்லை  ஓலைகாரியின் இறுதி நாள் வரை.

“இந்த மட்டுக்கு வலிச்சு முடையுதாளே. இதேமாதிரி பனம்பாயோ பெட்டியோ முடைஞ்சா நல்லா பைசா நிக்கும்லா?” என்று ஒருமுறை அனந்தன் நாடார் சொன்னார். அவன் அம்மையிடம் அதை சொன்னான். அம்மை அதை செவியில் வாங்கவேயில்லை. பிறகு அவனே கண்டுகொண்டான். அம்மைக்கு எந்த தொழில்தேர்ச்சியும் இல்லை. அவளுக்கு கையில் கவனமும் இல்லை. அவளிடமிருந்தது ஒரு விசை மட்டும்தான்.

ஓலைக்காரி முற்றடங்கியதால் வேறு எந்த சுகமும் தேவைப்படவில்லை. உடலை மறைக்க அழுக்கான ஒரு வேட்டியில் இரு துண்டுகள். உயிர் வாழ நான்கைந்து கவளம் உணவு.இரவுறங்க தரையில் விரிக்கவும்.போர்த்தவும் பழைய சாக்குகள்.கையில் விசை இருப்பதுவரை ஒரே வேலை ஓலை முடைதல்.விசை முடிந்ததும் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாள்.

விசை மட்டுமே நித்திரையடைந்தது .ஓலைக்காரி நேசையனில் வாழ்கிறாள் .

“ஓலைய எதுக்கு கொண்டு போறிய?” என்றார் எதிரில் சைக்கிளில் வந்த தங்கையா நாடார்.

”கெடக்கட்டு டீக்கனாரே. நான் ஓலைக்காரிக்க மகன்லா?”என்றான் நேசையன்.

ஓலைக்காரி எப்போதுமிருப்பாள்.முற்றடங்குதலை மிக எளியமையாக சொல்லப்பட்ட கதை.

ஷாகுல் ஹமீது .

 

அன்புள்ள ஷாகுல்

சில கதைகள் அரிய நிகழ்வுகளால் ஆனவை, சில கதைகள் மிகமிகச் சாதாரணமான நிகழ்வுகளாலானவை. விசையின் கதைத்தலைவி போன்ற பெண்மணிகளை மிகச்சாதாரணமாக  இளம் வயதில் கண்டிருக்கிறேன். இந்தக்கதை அத்தனை ஓலைக்காரிகளுக்கும், கயிறுபிரிப்பவர்களுக்கும் ஆகத்தான்

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.