’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்

ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்

முதல் சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்று ஆசிரியருக்கும் வாசகருக்கும்.ஆசிரியன் தன்னை முதன்முதலாக வாசகன் முன் வைக்கும் தருணம் அவன் வாழ்வில் என்றும் இனிமையாக நினைவில் இருக்கும்.ஆசிரியன் தன் வாசகனையும்,வாசகன் ஒரு ஆசிரியனையும் கண்டுகொள்ளும் நிகழ்வு இதன்மூலம் நடக்கிறது.பின்னாளில் அவன் அடையும் உச்சங்களும்   கண்டடைதல்களும்   விதையாக இங்கே உறங்குகின்றன.தமிழில் மகத்தான படைப்பாளிகளின் முதல் தொகுப்புகளில்  அவர்களின் ஆளுமை திரண்டு வருவதை காணலாம்.

அசோகமித்திரனின் அவருக்கே உரிய கறாரான யதார்த்தவாதம் அவ்வெதார்த்ததிலிருந்து மெலெழும் அழகியல்,இனிமையும் கறிப்புமாக அவர் அளிக்கும் வாழ்க்கை அவரின் முதல் தொகுப்புகளில் நாம் அடையலாம். ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” என்னும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில்,அவர் பின்னால் விரிந்து பரவிய நாட்டாரியல், காவியவாதம்,மாயாவாதம்,கேரள கன்னியாகுமரி வரலாறு கதைகள் என   அனைத்திற்கும் தொடக்கத்தை அங்கே காணலாம்.

அவ்வகையில் ஆர்.காளிப்ரஸாத்தின் “ஆள்தலும் அளத்தலும்” முதல் சிறுகதைத் தொகுப்பு யதார்த்தவாதத்தில் ஆரம்பித்து கதைகளின் வழியே அதை மீறி மேலெழ முயற்சிக்கின்றன. இத்தொகுப்பை வாசிக்கும் பொழுது அசோகமித்திரன் இந்திரா பார்த்தசாரதி கதைகள்

நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை, பெரும் முன்னோடிகளின் கதைகளை நினைவூட்டுவது சாதகமே தவிர எதிர்மறை அம்சம் இல்லை. இம்முன்னோடிகள் போல

நகர் சார் வாழ்க்கையை எழுதியதால் அல்ல நினைவிற்கு வருவது அகச்சித்தரிப்பினூடே புறச்சித்தரிப்பும் பின்னி அதன் வழியே கதைகள் செல்கின்றன. உதாரணமாக “விடிவு” “ஆர்வலர்” “ஆள்தலும் அளத்தலும்” கதைகளைக் கூறலாம். குத்தூஸ் தன் வீடு மதம்

சார்ந்து கட்டுப்பட்டவராயின் பன்றிகளிடம் அன்புடன் இருக்கவே முயற்சி செய்கிறார்  தாய் பன்றி ஒரு சரடெனில் குத்தூஸ் இப்பக்கம் இன்னொரு சரடு, பேரனுக்காக பன்றிக் குட்டியை குத்தூஸ் தூக்கியதால் தாய் பன்றி குத்தூஸ் இருக்கும் இடத்தை விட்டு தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்கிறது, பன்றிக்கு, மனிதன் தீண்டத்தகாத சேர்ந்து வாழ தகுதியற்றவனாக ஆகும் இடம் கதை முடிகிறது.

ஆசிரியரின் பலம் கதாப்பாத்திரங்களை நம் மனதில் பதியவைப்பது தான்,கதைகளை விட ஆசிரியர் கதாப்பத்திரங்களை சொல்வதில் தான்  அதிக மகிழ்ச்சி அடைகிறார் போலும், அது மனதில் நிற்கவும் செய்கிறது.”பூதம்” கதையில் கதை என்று எதுவும் இல்லை நீலகண்டனின்  அகச்சித்தரிப்பின் மூலம் புறம் விவரிக்கப்படுகிறது.

சென்ற தலைமுறையில் தந்தையின் நகையையும் வீட்டையும்  பங்கிட்டுக் கொள்கிறார்கள் சகோதரர்கள்,வீட்டின் மதிப்பு உயர்கிறது, நகை வீடு அளவிற்கு லாபம் தரக் கூடியதாக இல்லை, மனைவி மகளின் நச்சரிப்புக்கு ஆளாகும் நீலகண்டன்,யதார்த்தமாக கோயிலுக்குச் செல்கிறார். அர்ச்சகர் சிவ சந்நிதியில் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்,வேறொரு சந்நிதியில் வரும் மற்றொரு அர்ச்சகர் பிரசாதத்தையும் மாலைகளையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்,பார்வதி பரமேஸ்வரனை எள்ளி நகையாடும் இடத்தில் கதை தன்னை, பகடியின் மூலம் நிகழ்த்திக் கொள்கிறது.

இத்தொகுப்பின் ஆசிரியரை முழுமையாகக் அடையாளம்  காட்டும் கதை “ஆள்தலும் அளத்தலும்”.வேலைத் தேடி அலையும் “நான்” சமூக பெரியவர்களைக் கண்டு வெறும் பரிசுப் பொருளுடன் திரும்பும் பொழுது வேசியுடன் இருக்கும் தன் சக ஊழியர்களை கண்டு திடுக்கிடுகிறான், பின் சகஜமாக அதை எடுத்துக் கொள்கிறான் .நாஞ்சில் நாடன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல எதையோ ஒன்றை தேடி மற்றொன்றை கண்டுகொள்வதோடு கதை முடிவடைகிறது. அவன் கண்டடைந்த ஒன்று முழுமையாக வாசகனிடமே உள்ளது. அதே போல் “பழனி” கதையில் பழனியின் மீறல்கள் நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தது.அவனின் மீறல்கள் மூலமாகவே கதை நம்மை வந்தடைகிறது.

“கரி” நம் அன்றாட தருணங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் காமத்தை நுட்பமாக வாசகனுக்கு உணர்த்துகிறது.

“ஶ்ரீஜீ” “விடிவு” போன்ற கதைகளில்  திருப்பத்தை ஆசிரியர் உண்டு பண்ணுவது போல் இருக்கிறது. வடிவ சிதறலும் அநேக கதைகளில் வாசகனின் கவனத்தை சிதைப்பதாக இருக்கிறது.

இக் கதைகளின் வழியே ஆசிரியரின் கண்டடைதல்களையும் பயணத்தையும்   நம்மால் அறிய முடிகிறது. இத்தொகுப்பில் கடைசி கதையான “பராசக்தி” யில் ஆசிரியர் தன்னுடையதான எழுத்தை வந்தடைகிறார் நம் கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தை

அச்சக்தியை , பெரும் பிரபஞ்சத்தியில் ஒன்றாக காணும் போது கதையும் இத்தொகுப்பும் நிறைவடைகிறது,  பின் நாட்களில் மகத்தான படைப்புகளை ஆசிரியர் தருவார் என்னும் நம்பிக்கையை தருகிறது.

– அனங்கன்

ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.