காலத்தின் தேவை

சென்னையில் ஆங்கில நாடகங்களை நிகழ்த்துவதற்கெனத் தனியான நாடகக்குழுக்கள் இயங்குகின்றன. The Madras Players போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுக்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்களின் நாடகங்களை ம்யூசியம் தியேட்டர்களில் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். சில சமயம் ம்யூசிக் அகாதமி போன்ற பெரிய அரங்கிலும் இவர்கள் நாடகம் நடத்துவதுண்டு.

இந்த நாடகங்களுக்கு இருநூறு முதல் இரண்டாயிரம் வரை கட்டணம். ஆனால் எந்த நாடகமாக இருந்தாலும் அரங்கு நிரம்பிவிடுவது வழக்கம். சென்னையில் ஆங்கில நாடகங்கள் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கெனத் தனிப் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை பிரிட்டனிலிருந்து வந்த குழுவினர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றைச் சென்னையில் பார்த்தேன். மிகப்பிரம்மாண்டமான மேடை ஒளியமைப்பு. சிறந்த நாடக உருவாக்கம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைக்கம் முகமது பஷீரின் சிறுகதைகளை இணைத்து ஆங்கில நாடகமாக்கியிருந்தார்கள். சிறந்த தயாரிப்பு. நேர்த்தியான நடிப்பு. இந்த நாடகம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டிருக்கிறது.

முன்பு ஒருமுறை Mahatma vs Gandhi என்ற மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நாடகம் ஒன்றினை காண ம்யூசிக் அகாதமி சென்று டிக்கெட் கிடைக்காமல் திரும்பினேன். இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்களிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. காந்தியாக நஸ்ருதீன் ஷா நடித்திருந்தார். ஆங்கில நாளிதழ்கள் இந்த நாடகத்தைக் கொண்டாடி எழுதியிருந்தார்கள். ஆனால் நவீனத் தமிழ் நாடகங்கள் பற்றி ஆங்கில நாளிதழ்களில் ஒருவரி இடம்பெறாது. இது ஒரு வகைத் தீண்டாமை.

நூறு வருஷங்களுக்கும் மேலாகவே சென்னையில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் அது மேல்தட்டு வர்க்கத்தினருக்கான நாடகமாகக் கருதப்பட்டது. ஆகவே பம்மல் சம்பந்த முதலியார் தமிழ்ப்படுத்தி எளிய மக்களும் பார்க்கும்படி நாடகமாக்கினார்.

பெரும்பான்மை கல்லூரி விழாக்களில் இன்றும் ஆங்கில நாடகம் நிகழ்த்துவது மரபு மீறாமல் நடந்து வருகிறது. அதுவும் இப்சன் அல்லது ஷேக்ஸ்பியர், மார்லோ இவர்களின் நாடகங்களைத் தான் நடத்துகிறார்கள். மதுரைக்கல்லூரி ஒன்று ஒருமுறை கிரீஷ் கர்னாடின் துக்ளக் நாடகத்தை நிகழ்த்தினார்கள். அந்த விழாவில் நான் கலந்து கொண்டேன். ஐந்து நிமிஷங்களுக்கும் மேல் நாடகத்தைப் பார்க்க முடியவில்லை. அந்த நாடகத்தைத் தொடர்ந்து காதலோ காதல் என்ற ஒரு நாடகம் நடத்த இருப்பதாக அறிவிப்புச் செய்தார்கள். நல்லவேளை அதற்குள் கல்லூரியை விட்டு வெளியேறியிருந்தேன்.

சென்னையில் இயங்கும் நாடகக்குழுக்களின் முக்கியப் பிரச்சனை ஒத்திகை பார்க்க இடம் கிடைக்காமல் திண்டாடுவதே. ஒரு மாத கால ஒத்திகை அவசியம் எனும் போது யார் வீட்டிலாவது அல்லது தெரிந்த பள்ளிக்கூட மைதானம், திருமண மண்டபம் எதிலாவது ஒத்திகை செய்வது வழக்கம். நடிகர்கள் பலரும் அலுவலகம் முடிந்து மாலை ஒன்று கூடுவார்கள். சிலர் குழந்தைகளுடன் வருவதும் உண்டு. நாடக ஒத்திகையைக் காணுவது நல்ல அனுபவமாக இருக்கும்.

நாடக ஒத்திகையை மையமாக் கொண்டே Tonight We Improvise என்ற நாடகத்தை லூயி பிராண்டலோ எழுதியிருக்கிறார். அவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். கவிஞர். சிறுகதையாசிரியர். 1934 ஆம் ஆண்டு அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Six Characters in Search of an Author என்ற பிராண்டலோவின் நாடகம் மிகப்புதுமையானது. நாடக ஆசிரியரைத் தேடி வரும் அவரது கதாபாத்திரங்கள் நாடகத்தில் தங்களின் பங்கு பற்றி விவாதிப்பது சுவாரஸ்யமானது.

இந்த நாடகத்தையும் சென்னையில் அரங்கேற்றியிருக்கிறார்கள். அதைப் பார்த்திருக்கிறேன். பிரெக்ட்டின் நாடகங்களை ஒருமுறை மாக்ஸ் முல்லர் பவனில் நிகழ்த்தினார்கள். வித்தியாசமான நாடகமாக்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூடாமணியின் சிறுகதைகளை மையப்படுத்திச் சென்னை ம்யூசியம் தியேட்டரில் நாடகம் நிகழ்த்தினார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடனக்கலைஞர் சந்திரலேகாவின் Spaces என்ற கலைமையம் பெசன்ட் நகரில் உள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள வீடு. அங்கே தொடர்ந்து நாடகங்கள் நடந்து வருகின்றன. மேஜிக் லேண்டன் நாடகக் குழுவின் சார்பில் அல்லயன்ஸ் பிரான்சே அரங்கில் சிறந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

எனது அரவான் நாடகத்தைக் கேரளாவில் ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதை நான் நேரில் பார்க்கவில்லை. ஆனால் ஆங்கில நாளிதழ்களில் அதைப் பாராட்டிய எழுதியிருப்பதை அனுப்பி வைத்திருந்தார்கள்.

அசோகமித்திரன் பரிக்ஷாவின் நவீன நாடகத்தில் நடித்திருக்கிறார். மேடையில் அவர் எப்படியிருந்திருப்பார் என்ற யூகிக்கவே முடியவில்லை. அவரது நாடக அனுபவம் பற்றி எதுவும் எழுதியிருப்பதாகவும் தெரியவில்லை. அவரது நாடக புகைப்படம் எதுவும் கிடைக்கவுமில்லை. இலக்கியக் கூட்டங்களிலே ரகசியம் பேசுவது போல மென்மையாக, தணிந்த குரலில் பேசும் அசோகமித்திரன் நாடகத்தில் எப்படிப் பேசியிருப்பார் என்று தெரியவில்லை.

எழுத்தாளர் கோணங்கி வீதி நாடகங்களில் நடித்திருக்கிறார். கோவில்பட்டியில் நடந்த நாடகம் ஒன்றில் அவர் நடிப்பதைக் கண்டிருக்கிறேன். எழுத்தாளர் வேல. ராமமூர்த்திச் சிறந்த நாடக நடிகர். நிறைய வீதி நாடகங்களில் நடித்திருக்கிறார். இன்று சினிமாவிலும் தனித்துவமிக்க நடிகராக விளங்குகிறார்.

மு.ராமசாமி மிகச்சிறந்த நாடக நடிகர். இயக்குநர். மதுரையில் இவர் நிகழ்த்திய நாடகங்கள் மிகச்சிறப்பானவை. இவரது துர்க்கிர அவலம் மறக்கமுடியாத நாடகமாக்கம். திரையுலகிலும் தனியிடம் பிடித்துள்ளார்.

கல்கத்தா விஸ்வநாதன் என்ற திரைப்பட நடிகரை ஒருமுறை படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது அவர் வங்காள நாடகங்களில் நடித்த அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார். தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பதை அவரது உரையாடலில் அறிந்து கொள்ள முடிந்தது. மூன்றுமுடிச்சுப் படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தை இன்றும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

75 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ராஜதானியில் 250 நாடக நிறுவனங்கள் இருந்தன. ஊர் ஊராகச் சென்று நாடகங்கள் நிகழ்த்தினார்கள். புதிது புதிதாக நிரந்தர நாடக அரங்குகள் கட்டப்பட்டன. சென்னை மிண்ட் பகுதியில் இருந்த ஒத்த வாடை நாடக அரங்கு முக்கியமான செயல்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

அறிவொளி இயக்கம் தமிழகம் முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த போது நிறைய வீதி நாடக இயக்கங்கள் உருவாகின. அறிவொளி இயக்கத்திற்காக நாடகங்களை எழுதி நடித்தார்கள். இது போலவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பிலும் நாடகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன

எனது நண்பர் வெளி ரங்கராஜன் நாடகத்திற்கென்றே நாடக வெளி என்ற இதழைக் கொண்டுவந்தார். அதில் நிறைய நாடகப்பிரதிகள் வெளியாகின. நாடக நிகழ்வுகள் குறித்தும். நாடக அனுபவம் குறித்தும் நிறையக் கட்டுரைகளும் வெளியாகியிருக்கின்றன. நாடக வெளி இதழில் நிறைய எழுதியிருக்கிறேன். தற்போது வெளி ரங்கராஜன் தொடர்ந்து நவீன நாடகங்களை இயக்கி வருகிறார்.

திருப்பத்தூர் கல்லூரியில் பணியாற்றிவரும் பார்த்திப ராஜா தொடர்ந்து நவீன நாடகங்களைச் சிறப்பாக நடத்தி வருகிறார். அத்தோடு ஆண்டுதோறும் ஒரு நாடகவிழா ஒன்றினையும் மிகப்பெரியதாக நடத்திவருகிறார். அவரது நாடகப்பங்களிப்பு மிகுந்த பாராட்டிற்குரியது

இது போலவே தியேட்டர் லேப் சார்பில் ஜெயராவ் தொடர்ந்து நடிப்புப் பயிற்சி அளித்து வருவதுடன் புதுமையான நாடகங்களைத் தனது மாணவர்களைக் கொண்டு நடத்தி வருகிறார். எனது நான்கு நாடகங்களை இவர்கள் மேடையேற்றியிருக்கிறார்கள்.

சிறுவர்களுக்கான நாடகங்களை உருவாக்கித் தொடர்ந்து மேடையேற்றி வருவதில் வேலு சரவணன், ரவி, காந்திமேரி மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள். முருகபூபதி அரூபமும் குறியீடுகளும் சங்கேதங்களும் கொண்ட புதிய நாடக மொழியைக் கொண்ட நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

தற்போது கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி தனது தந்தையின் நாடகங்களைத் திரும்ப மேடையேற்றி வருவதுடன் சுஜாதாவின் சிறுகதைகள். ஜானகிராமன் சிறுகதைகளையும் நாடகமாக்கிச் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். அவருக்கும் என் வாழ்த்துகள்.

சென்னை மதுரை கோவை போன்ற பெரிய நகரங்களில் நவீன நாடகங்கள் அவ்வப்போது நடக்கின்றன. சிறிய நகரங்கள் எதிலும் நாடகம் நிகழ்த்தப்படுவதில்லை. அவர்கள் அறிந்ததெல்லாம் திருவிழாக்களில் நடத்தப்படும் மேடை நாடகங்கள் மட்டுமே.

எனது புத்தக வெளியீட்டுவிழாவினை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒருமணி நேரமாகத் தியேட்டர் லேப் நடித்தார்கள். நானே அதன் நாடகப்பிரதியை எழுதிக் கொடுத்தேன். நான் அறிந்தவரை தமிழில் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்க்கையை விவரிக்கும் முதல் நாடகம் அதுவே. ஆனால் அந்த நாடகத்தை நிகழ்த்தும் படி வேறு எவரும் அழைக்கவேயில்லை. அது போன்ற நாடகங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும்.

நண்பன் கருணா பிரசாத் சிறந்த நடிகர். எனது அரவான் என்ற தனிநபர் நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றினான். ஒரு நடிகர் மேடையில் ஒரு மணி நேரம் தொடர்ந்து நடித்துப் பல்வேறு உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துவது சவாலான விஷயம். அதை மிகச்சிறப்பாகச் செய்து காட்டினார். அந்த நாடகம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.

சென்னை புத்தகக் கண்காட்சி போன்ற பெரிய நிகழ்வுகளில் தினசரி மாலை ஒரு நவீன நாடகத்தை நிகழ்த்தச் செய்யலாம். மதுரை, கோவை ஈரோடு போன்ற நகரங்களில் இனிமேல் தான் புத்தகக் கண்காட்சிகள் நடத்த இருக்கிறார்கள். அவர்கள் நவீன நாடகத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

ந.முத்துசாமி மிக உறுதியான நம்பிக்கையோடு, தீவிரமான கலைவேட்கையோடு கூத்துப்பட்டறையின் மூலம் நவீன நாடகங்களை நிகழ்த்தினார். சிறந்த நடிகர்களை உருவாக்கினார். மிக முக்கியமான நாடகங்களை மேடையேற்றினார். இன்றும் கூத்துப்பட்டறை அந்த முன்னெடுப்புகளைத் தொடரவே செய்கிறது. பிரளயன். ஞாநி, மங்கை மூவரும் சமூகப்பிரச்சினைகளை மையமாக் கொண்ட வீதி நாடகங்களைச் சிறப்பாக நிகழ்த்தினார்கள். இன்றும் அந்த மேடையேற்றங்கள் தொடர்கின்றன.

புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை மூலம் சிறந்த நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. புதிய நாடக இயக்குநர்கள் நடிகர்கள் உருவாகி வருகிறார்கள். சுகுமார் போன்ற இளம் இயக்குநர்கள் மிகச்சிறப்பான நாடகங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த ஆண்டுத் தேசிய நாடக விழாவிலும் சுகுமாரின் நாடகம் இடம்பெற்றிருந்தது. நல்ல வரவேற்பினைப் பெற்றது

நவீன தமிழ் நாடக வளர்ச்சியில் சங்கீத நாடக அகாதமியின் ஊக்குவிப்பு திட்டங்களும் நிதி உதவியும் முக்கியமானது. அதில் எனது உருளும் பாறைகள் போன்ற நாடகம் தேர்வு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் செ.ரவீந்திரன், புது டெல்லியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன நாடகங்களுக்கு ஒளியமைப்பு செய்வதில், அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார். நாடக ஒளியமைப்பு குறித்த விவரங்களை ஒன்றுதிரட்டி அவர் தொகுத்த ‘ஒளியின் வெளி’ என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது

கோமல் சுவாமிநாதன் தமிழகம் முழுவதும் நாடக விழாக்களைச் சுபமங்களா சார்பில் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தினார். இது போலவே சென்னையில் நாரத கான சபா , ம்யூசிக் அகாதமி மினி ஹாலில் நிறைய நவீன நாடகவிழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்றும் அது போல ஒரு நாடகவிழாவிற்கான தேவையிருக்கிறது. இதைத் தி இந்து தமிழ் நாளிதழ் போன்றவர்கள் முன்னெடுப்புச் செய்ய வேண்டும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2021 00:40
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.