சமணம் வைணவம் குரு – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம். உங்களுடைய சிறுகதைத் தொகுப்பு, விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். ப்ளாக்-ஐ நான்கு வருடங்களுக்கும் மேலாகப் படித்தும் வருகிறேன். நீங்கள் அமெரிக்கா வந்தபோது உங்களை கலிபோர்னியாவில் (Fremont) சந்தித்துப் பேசிய அனுபவமும் உண்டு. உங்களுக்கு நன்றி கூறி எழுத வேண்டும் என நிறைய நாள், பல முறை யோசித்தது உண்டு, ஆனால் என் சோம்பேறித்தனமே ஒவ்வொரு முறையும் வென்றது.


"அருகர்களின் பாதை" ஒரு அபாரமான விறுவிறுப்புடன் எழுதப்பட்ட ஒரு பயணக் கட்டுரை (குறிப்பு !!!) என்றே எண்ணுகிறேன். இந்தப் பயணத்தில் நீங்கள் கூறிய பல இடங்களை நான் பார்த்தது இல்லை. நீங்கள் எழுதிய பல சரித்திர, கலை சார்ந்த செய்திகள் எல்லாம் அருமை. இவ்வளவு சமணக்கோவில்கள் இருப்பது பலருக்குத் தெரியாத ஒன்றே. இதில் என்னை ஆகக் கவர்ந்தது, சமணர்கள் மற்றும் பௌத்தத் துறவிகள் அமைத்து, பராமரித்த கல்விச்சாலைகள் பற்றிய செய்திகள். நான் மூன்று வருடம் புனே, மகாராஷ்டிரத்தில் வாழும் பொழுது அங்கு "trekking spot" களாக இருக்கும் பல இடங்களுக்குச் சென்றதுண்டு. அப்படிப்பட்ட ஒரு இடம்தான் ராஜமாச்சி (சிவாஜியின் கோட்டை உள்ள இடம்). அந்தக் கோட்டை செல்லும் வழித்தடத்தில் ஒரு இடம் என்னை மிகக் கவர்ந்த இடம். ஒரு சின்ன அருவி, அதற்குப் பின்னால் ஒரு சமண மடம். மடத்திற்கு வழி, அருவிக்குப் பக்கவாட்டில்;இருபக்கமும் நீரும் உண்டு.அதே நேரத்தில் மிருகங்களின் பார்வை படாமல் இருக்குமாறு வடிவமைக்கப்பட்ட ஒன்று. நண்பர்களிடமிருந்து அந்த இடம் பற்றிய தகவல்கள் பெற முடியவில்லை. புனேவைச் சுற்றி இது போன்று பல மடங்கள் உண்டு என்பது மட்டுமே அவர்கள் அறிந்தது. இப்போது உங்கள் பயணக்குறிப்பின் மூலமாக அது ஒரு சமணப் பள்ளியாக இருக்க வேண்டும் என்ற ஒரு யூகம் உருவானது. மீண்டும் அவ்விடங்களுக்குச் செல்ல மனதைத் தூண்டிவிட்டுவிட்டீர்கள். பல ஆயிரம் மைல்கள் பயணம், அலுவலக லீவு என்று பல தடைகளைக் கடக்க வேண்டும்!!! இப்பள்ளிகள் என்ன விதமான பணிகளை ஆற்றிக் கொண்டிருந்திருக்கும் என்று என்னால் ஒரு கற்பனை செய்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில், இது போன்ற ஒரு பள்ளியில், ஆனால் தற்கால நவீன மாறுதல்களைக்கொண்ட ஒரு பள்ளியில் சில நாட்கள் தங்கிப் பயின்ற ஒரு அனுபவம் எனக்குண்டு.


நீங்கள் கலிபோர்னியா வந்திருந்த போது, உங்கள் உரை மற்றும் கேள்வி நேரம் முடிந்து பேசிக்கொண்டிருந்த சமயம், நான் உங்களிடம் பலவிதத்தில், பலவாறு ஒரு கேள்வியை முன்வைத்தேன். உங்களுக்கும் நித்யசைதன்ய யதிக்கும் உண்டான தொடர்பும், உறவும், எழுத்தாளனான உங்களுக்கு அவரின் தாக்கம், அவரிடம் நீங்கள் செய்த தர்க்கம் என்பதாகக் கேட்க நினைத்த எனக்கு, முதலில் நான் கேட்ட சில கேள்விகளியிலேயே மழுப்பலும், சலிப்பும் தெரிந்ததால் நான் தொடரவில்லை. ஆனால் அதற்கான மிகச்சிறந்த விடை உங்களின் "அருகர்களின் பாதை – 28″-ல் இருந்தது. அது நித்யசைதன்ய யதியைப் பற்றிய உங்கள் கனவு. காலம் கடந்து கிடைத்தாலும் அது ஒரு அற்புதம். அதைப் படித்தபோது ஒரு உணர்வற்ற அமைதி. நன்றி, ஒரு வார்த்தையில், உணர்வால் பல.


அன்புடன்,

வேதன்


சமணப்பாதங்கள்


அன்புள்ள வேதன்,


ஆம், கலிஃபோர்னியாவில் சந்தித்தது நினைவுள்ளது. ராஜன் வீட்டு மாதாந்தர இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிக்குச் செல்கிறீர்கள் என நினைக்கிறேன்.


பொதுவாக நித்யாவுக்கும் எனக்குமான உறவை ஒரு பொதுவெளியில் சாதாரணமான பேச்சாக நிகழ்த்துவது எனக்குச் சங்கடம் அளிப்பது. புரிந்துகொள்ளாத ஒருவர் இருந்தால்கூட அந்த உறவைச் சிறுமைசெய்யும் ஒரு தருணமாக அது ஆகியிருக்கும். அவரைப்பற்றிப் பேச ஒரு தருணம் அமையவேண்டுமென நினைப்பேன்.


நீங்கள் சொல்லும் இடம் ஒரு சமணப்படுக்கை என நினைக்கிறேன். இந்தியா முழுக்க அப்படி அற்புதமான பல இடங்கள் இருக்கின்றன. குமரிமாவட்டத்திலேயே சிதறால் மலை உள்ளது.


ஜெ


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,


வணக்கம்.


தங்கள் இந்தியப்பயணம் நல்லபடியாக முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களுடன் சேர்ந்து பயணம் செய்ய வாய்ப்பு இல்லாவிட்டாலும், மிகவும் பயனுள்ள பயணக் குறிப்புகளை தினம் படிக்கும்போது, தங்களுடன் கூடச் செல்லும் உணர்வு ஏற்பட்டது. 11 .02 .12 அன்று உங்கள் வலைத்தளத்தில் வந்த 'பாதங்கள் ' பற்றிய கட்டுரை என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக:


"நம் மரபில் பாதங்கள் ஒரு பெரும் குறியீடு. மாணவன் குருவின் முன் தன்னுடைய எல்லா அகங்காரங்களையும் கழற்றிவைத்துச் சரணடைவதன் அடையாளம் அடிபணிவது. அடியேன் அடியவர் என்ற சொல்லாட்சிகள் அவ்வாறு உருவானவையே. அத்துடன் அவை குரு நடந்து கடந்த தொலைவுகளின் அடையாளங்களும் கூட."


"அடிமைத்தனம் என்பது பரிபூரணமான ஒப்புக்கொடுத்தல். சொல்லும்போது அது எளிதாக இருக்கிறது, உண்மையில் அது சாதாரணமானதல்ல. நம் ஆளுமையில் எப்போதுமே எச்சரிக்கை உணர்வும் எதிர்ப்புணர்வும் இருக்கிறது. அது நமக்கு இயற்கை அளித்த கொடை. நம் பாதுகாப்புக்காக, நம்முடைய உயிர்வாழ்தலுக்காக உள்ள ஆதார உணர்ச்சி அது. திசைப்பிரக்ஞை போல. அதை இழப்பதென்பது இயல்பாக நிகழாது. திட்டமிட்டு, பயின்று, உளப்பூர்வமாக மெல்லமெல்ல நாம் நம்மிடமிருந்து அவற்றைக் கரைத்தழிக்கவேண்டும். அதன்பின்னரே உண்மையான ஒப்புக்கொடுத்தல் நிகழமுடியும்.அது நிகழ்ந்தபின்னர் நாம் ஒன்றை உணர்வோம், ஒப்புக்கொடுத்தல் என்பது ஒரு பிரம்மாண்டமான சுதந்திரத்தை அளிக்கிறது. நாம் எப்போதும் சுமந்தலையும் நம் சுயத்தை, நம் ஆளுமை என்ற பாரத்தை நம்மிடமிருந்து நாம் இறக்கிவைத்து இலகுவாகிறோம். பறக்க ஆரம்பிக்கிறோம். இந்த அடிமைத்தனத்தை, அதன் சுதந்திரத்தை நாம் மீண்டும் மீண்டும் ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் காண்கிறோம். அவை அடிமையின் பெரும் சுதந்திரத்தின் களிப்புக்கொண்டாடல்கள்"


மேலே சொன்ன அனைத்தும் எங்களின் வைணவ சம்பிரதாயத்தில் வலியுறுத்தபடுகிற "சரணாகதி நிலையை" மிகவும் ஒத்து இருக்கிறது.


எனக்குத் தெரிந்தவரை பாதங்களின் மேன்மையை அது ஆண்டவனின் திருப்பாதமாக இருந்தாலும் சரி அல்லது ஆச்சாரியர்களின்(குருக்கள்) திருப்பாதமாக இருந்தாலும் சரி வைணவத்தைப் போல் வேறு எங்கும் கொண்டாடப்படுவதில்லை .ஆண்டவனின் பாதங்களை (நாமத்தை) தலையால் தாங்கும் ஒரு குறியீடாகத்தான் வைணவர்கள் தினமும் நெற்றியில் 'திருமண்' அணிந்து கொள்கிறார்கள்.


ஆனால் அதன் மேன்மையை உணராத விபரம் தெரிந்த திரு.சோ போன்ற சிலர் கூட , யாரேனும் தங்களுக்கு உரிய பொருளைத் தராமல் ஏமாற்றி விட்டால் அதைக் குறிப்பதற்குக் கொச்சையாக அவன் எனக்கு 'நாமம்' போட்டுவிட்டான் என்று சொல்கிறார்கள்/எழுதுகிறார்கள். இன்று (15 .02 .12) கூட செய்தித்தாளில் (ஹிந்து மற்றும் தினமலரில்) சித்த மருத்துவம் பயிலும் மாணவ மாணவிகள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்த திருமண்,அதுவும் ஸ்ரீ சூர்ணம் அணியாமல் (அது அமங்கலமாகவே கருதப்படும்), அணிந்து போராடும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.அவர்களின் அறியாமையை எண்ணி வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை .


http://www.dinamalar.com/News_Detail....


அன்புடன்,

அ.சேஷகிரி,

ஆழ்வார்திருநகரி.


அன்புள்ள சேஷகிரி,


ஆம் வைணவ மரபில் குரு, சரணாகதி என இரு கருத்தோட்டங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த மரபிலும் இல்லை. அதற்கு இணையான முக்கியத்துவம் சேவை [கைங்கரியம்] என்ற கருத்தோட்டத்துக்கும் உண்டு.


அதற்கு முன்னோடியாக அமைந்த மதம் சமணம். இந்தியா முழுக்க சமணம் வைணவத்துக்கு மிக நெருக்கமான மதமாக உள்ளது. கிட்டத்தட்ட இரட்டை மதங்கள் எனச் சொல்லலாம். சமண ஆலயங்கள் அனைத்திலும் விஷ்ணு திருவுருவங்கள், வைணவத் தொன்மங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


நீங்கள் குறிப்பிட்ட செய்தியை நானும் கண்டேன், வருத்தம் அடைந்தேன். அந்தப் பிள்ளைகள் பொதுச்சூழலில் இருந்து நாமத்தை அப்படித் தவறாகப் பயன்படுத்துவதை கற்றுக்கொண்டிருக்கவேண்டும். உண்மையில் முன்னரே பல இடதுசாரி தொழிற்சங்கங்கள் இதைச் செய்திருக்கின்றன. அறியாமையால்தான். விஷயம் தெரிந்தால் சொல்லமாட்டார்கள். எங்கள் தொழிற்சங்கம் சார்பில் ஒரு போராட்டத்தில் இதைச்செய்ய முற்பட்டபோது நான் கண்டனம் தெரிவித்தேன். விளக்கம் அளித்தபோது உடனே அதை நிறுத்திக்கொண்டு வருத்தமும் தெரிவித்தார்கள்.


ஒரு குறிப்பிட்ட விழுமியம்தான் ஒரு குறியீடாக உள்ளது. அந்த விழுமியத்தை நினைவில் நிறுத்த, பரப்ப அது ஒரு வழி. அந்தக் குறியீட்டை வேறுவேறு பொருளில் கையாண்டு பொருளிழக்கச் செய்வது அந்த விழுமியத்தை அழிப்பதுதான். அதை அனுமதிக்கலாகாது. உலகில் எங்கும் அனுமதிக்கப்படுவதுமில்லை. தேசியக்கொடியோ, செங்கொடியோ, சிலுவையோ, பிறையோ, நாமமோ எதுவானாலும். இதில் கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் என விளக்கங்கள் ஏதுமில்லை.


இந்த விஷயங்களில் வைணவர்கள் ஒருங்குதிரண்டு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும். முடிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சித்த மருத்துவப் பள்ளிக்குச் சென்று ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கப் பத்து வைணவர்கள் சேர முடியாதது வருத்தத்தையே அளிக்கிறது. அதற்கான அமைப்பு ஒன்றுகூட இல்லை என்பது சங்கடமானது.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தமிழ்நாட்டில் சமணத்தலங்கள்
அருகர்களின் பாதை 1 — கனககிரி, சிரவண பெலகொலா
நவீனகுருக்கள்,மிஷனரிகள்
ஆன்மீகம் தேவையா?
தத்துவம், தியானம்-கடிதம்
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
தீராநதி நேர்காணல்- 2006
கடிதங்கள்
தீபாவளியும் சமணமும்:கடிதம்
சமணம்,பிரமிள்: கடிதங்கள்
தமிழ்ச் சமணம்
சமணம் ஒரு கடிதம்
நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2012 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.