ஆகுதி -கடிதங்கள்-3

ஆகுதி-[சிறுகதை] மயிலன் சின்னப்பன்

அன்புள்ள ஜெ

மயிலன் சின்னப்பனின் ஆகுதி வாசித்தேன். நான் வாசிக்கும் இவருடைய முதல் கதை இது. இணையத்திற்குச் சென்று மேலும் சிலகதைகளை வாசித்தேன். சரளமாகக் கதைசொல்ல முடிகிறது. [ஆனால் அந்தச் சரளம் தமிழின் வணிகஎழுத்திலிருந்து வந்தது] எங்கே கதையை உண்மையான ஆழமான பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்துகிறாரோ அங்கே கதை சிறப்பாக அமைய இந்தச் சரளம் உதவுகிறது. அப்படியில்லாமல் வெறும் பொது உண்மைகளையோ சமகாலத்தின் சில வாழ்க்கைச் சித்திரங்களையோ சொல்லும்போது கதை விகடன் கதையாக நின்றுவிடுகிறது.

இந்தக்கதையில் அந்தப்பெண்களின் கொடிய மரணத்தைச் சித்தரித்திருக்கிறார். அதற்கு எந்த செண்டிமெண்ட் வேல்யூவும் கொடுக்காமல் கதையை மதிப்பிடவேண்டும் என்று நினைத்தேன். அப்படி மதிப்பிட்டாலும்கூட முக்கியமான கதை என்பதில் சந்தேகமே இல்லை. அது அந்தப் பெண்ணுக்கும் டாக்டருக்குமான உறவில் இருக்கும் மர்மத்தால்தான் நல்ல கதையாக ஆகிறது. பேசி விரிவாக்கவேண்டிய தேவையில்லாத நுட்பமான உறவு அது

எஸ்.ராமச்சந்திரன்

 

அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்,

மயிலன் சின்னப்பனின் ‘ஆகுதி’ சிறுகதை படித்தேன்.நேர்த்தியான கதை.

தோள்கண்டார் தோளே கண்டார் என்று கட்டுண்டு கிடக்கும் தங்கள் வாசகர்களின் பார்வையை அவ்வப்போது இப்படி பரத லஷ்மணர்களின் அங்கலட்சணங்கள் மீதும் திரும்பவைக்கும் தங்களின் கலியாண குணத்திற்கு முதலில் நன்றி.

ஒரு மருத்துவ வார்டில் நடக்கும் தினப்படி சம்பவங்களையும் கதைசொல்லியான மோகனாவின் உள்ளூடாட்டமான உணர்வுப் போராட்டங்களையும் ஊடு பாவாக ஆக்கி ஒரு கைதேர்ந்த நெசவாளியைப் போல கதையைப் புனைந்திருக்கிறார் எழுத்தாளர் மயிலன் சின்னப்பன்.கதைக்குள்தான் எத்தனை நுணுக்கங்கள்.

வார்டுக்குள் நடக்கும் வர்கப் போராட்டங்களால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அப்படியே உள்ளதை உள்ளபடி தோலுரித்துக் காட்டுகிறார்.அதுவும் இந்தப் பயிற்சி மருத்துவர்கள் படும் பாட்டை சொல்லி மாளாது.

தீயில் ஆகுதியாவது காவ்யாவின் உடல் மட்டுமல்ல,மோகனாவின் மெல்லிய உணர்வுகளும்தான் என்பதே கதையின் மையச் சரடாக நிற்கிறது.அவளது காதல் உணர்வுகள் அடிக்கடி பொசுக்கப்படுகின்றன.ஒரு நொடி சிரிக்க வைத்துவிட்டு அதற்குப் பரிகாரமாக ஒரு நாள் முழுக்க வதைத்தெடுக்கும் அந்த உறவில் இனிமேலும் வெந்து சாகவேண்டாம் என்று மோகனாவிற்குத் தோன்றுவதும், இன்றே அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற விளிம்பிற்கே அவள் வந்தடைவதற்கும் ராஜுவின் நாவிலிருந்து அவ்வப்போது தெறிக்கும் தீப்பொறி போன்ற வார்த்தைகள்தானே காரணம்.தீப்புண்களின் விழுக்காட்டிற்குப் பொருள் கொள்ளமுடிந்த அவளுக்கு தனது மனப்புண்ணின் விழுக்காட்டை வரையறை செய்ய முடியாமல்தான் தவிக்கிறாள்.இப்படியான தவிப்புகளின் ஆகுதிகளுக்கு நெய் வார்க்கும் செயலை ராஜு போன்ற பெருமக்கள் தொடரும் வரை தற்கொலைகள் தொடரத்தானே செய்யும்.

இப்படி தினம் தினம் எத்தனையோ இளம் பெண்களின் தற்கொலை முடிவுகளை இந்த சமூகமும் அரசும் சாதாரணமாகக் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றன.அதனதன் உண்மைக் காரணங்களை பெற்றோர் மட்டுமே அறியவும் சில சமயங்களில் அதுவுமே  அறியப்படாமல் ஆத்மாவுக்குள்ளேயே புதையுண்டும் போகின்றன.

கதையின் இறுதி வரிகளில் மோகனாவின் பார்வையைத் தவிர்த்துவிட்டு வேறெங்கேயோ பார்க்க ஆரம்பித்தாளே அந்தத் தாய், அது அந்த ஆத்மாவின் புனிதத்தைக் கடைசிவரை காப்பாற்றி விட்டோமென்ற நிம்மதிப் பெருமூச்சை மறைக்கத்தான் என்று முத்தாய்ப்பாய் முடித்ததில்தான் கதையின் வெற்றியே நிற்கிறது.

ஆக தங்கள் தளத்தின் சங்கப் பலகை ஏந்திநிற்கத் தகுதியான படைப்புதான்  இது என்பதில் சந்தேகம் இல்லை.

அன்புடன் தங்கள்,

இரா.விஜயன்

புதுச்சேரி-10

ஆகுதி – கடிதங்கள்-2ஆகுதி- கடிதங்கள்-1

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2021 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.