கடிதங்கள்

அன்புள்ள ஜெ,


"சாமி தெருவெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது தகப்பன்களாக. பெண் பெற்ற எந்தத் தகப்பனும் சாமிதான். தகப்பன் சாமி." – [தெருவெங்கும் தெய்வங்கள்-கடலூர் சீனு]


இதை வாசிக்கும்போது நான் மனக்கிளர்ச்சியடைந்தேன். உணர்ச்சிவசப்பட்டேன். எவ்வளவு உண்மை. என் கண்கள் நிறைந்தன. ஏனென்றால் ஒரு பெண்குழந்தையின் தந்தையாக இதை என்னால் உணர முடிகிறது.


நாம் எல்லாரும் ஒன்றுதானோ உள்ளூர?


வெங்கடேஷ் சீனிவாசன்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்பு, உங்கள் படைப்பிலேயே மிகவும் உயர்வானது. சோற்றுக் கணக்கு போன்ற கதையை யாராலும் கலங்காமல் படிக்க முடியுமா? கலங்குவது சோகத்தினால் அல்ல நெகிழ்ச்சியால்.

இது உங்களால் மட்டுமே எழுத முடியும் தளம். அறம் – 2 தொகுப்பு வருமா?


உங்கள் அறிவியல் புனைவுக்கு, எங்கள் மென்பொருள் அலுவகத்தில் நிறைய விசிறிகள் உள்ளனர்.


உங்கள் தஞ்சைப் பயணப் பதிவின் அறிமுகத்தால், தஞ்சாவூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் சென்று வந்தோம்.


புகைப்படங்கள்:

http://sankarphoto.blogspot.com/2012/01/thanjavur.html

http://sankarphoto.blogspot.com/2012/01/gangaikonda-cholapuram.html


நன்றி,

சங்கர் வெங்கட்


அன்புள்ள ஜெ,


என் இரண்டாவது தங்கையின் குழந்தை கோமதி 10 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டாள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வாழ்வதற்கு ஒரு பெரும்போராட்டம் நடத்திவிட்டு இறுதியில் மரணத்தைத் தழுவிவிட்டாள். பறிகொடுத்துவிடுவோம் எனத்தெரிந்தே ஒரு குழந்தையை, வேறுபல குடும்பச் சிக்கல்களுக்கிடையே வளர்ப்பதென்பது சாமானிய காரியமல்ல. அதற்கு மிகுந்த மன உறுதியும், வாழ்க்கை குறித்த அவதானிப்பும் அவசியம். என் தங்கையும், அத்தானும் அவ்வகையில் பாராட்டுக்குரியவர்கள். இதையெல்லாம்விட என் பெற்றோர், மூளை தவிர பிற முக்கிய அவயவங்கள் பழுதுபட்ட ஒரு குழந்தையை, மூளை தவிர பிற அவயவங்கள் நன்றாக வேலை செய்யும் 38 வயதான என் முதல் தங்கையை வைத்துக்கொண்டே, சதா சர்வகாலமும் பராமரிப்பது என்பது உடல், மன அளவில் மிகுந்த வேதனையளிக்கும் ஒரு செயல். அவர்களது மன உளைச்சலை என்னால் புரிந்துகொள்ளக்கூட முடியாது. இதுவே வேறு ஒருவராக இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக வேறு ஒரு முடிவைத் தேர்ந்தெடுத்திருப்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எவ்வளவு பெரிய தரிசனம். அதைவிடவும் 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது…' என்ற பாடல் எங்கள் குடுமபத்தில் கடந்த 38 வருடங்களாய் நாங்கள் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் பாடல். எனக்கு நல்ல வருடம், கெட்ட வருடம் என்பதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆயினும் கடந்த வருடப் பொங்கல் முதல் டிசம்பர் 24 வரை நடந்த நிகழ்வுகள் (கிட்டத்தட்ட 10 நிகழ்வுகள்) ஒரு வகையில் எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கின.


என் தங்கை குழந்தையின் மரணம் குறித்த நிகழ்வினை எழுதி எனது புளியமரம் பிளாக்கில் வெளியிட்டுள்ளேன். இதை எழுத வேண்டுமா என்று என்னுள் ஒரு பெரிய மனப் போராட்டம் இருந்தது. (எனக்கு விளம்பர மோகமோ என்ற ரீதியில்கூட நான் சிந்தித்தேன்) கடைசியில் ஒரு கணத்தில் எழுத ஆரம்பித்தேன். இதை உங்களுக்கு எழுதும் இக்கணத்தில் கூட அதே எண்ணங்கள் மீண்டும் அலைமோதுகின்றன. இவ்வாறு எழுத வேண்டும் என்ற எண்ணம் முதலில் துளிர் விட்டது கோமதிப் பாப்பாவின் உடலை எரியூட்டியபின் நாங்கள் காவிரியில் இறங்கியபோதுதான். அப்போது உங்களின் 'நதி' சிறுகதைதான் எனக்கு சட்டென்று ஞாபகத்தில் வந்தது. அப்போதுதான் இந்நிகழ்வை எழுதினாலென்ன என்ற எண்ணம் முதலில் தோன்றியது. ஆயினும் முதலில் அதை எழுதியபோது அத்தூண்டுதலைப் பதிய மறந்துவிட்டேன். இப்போது இவ்வஞ்சலை எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் மீண்டும் 'நதி' கதை என்னைத் தூண்டியது ஞாபகத்தில் வந்தது. அந்த நேரத்தில் என்னுள் என்னென்னவோ எண்ணங்கள். இதை ஒரு சிறுகதையாக எழுதலாமே என்ற பேராசையும் என்னுள் எழுந்தது. ஆயினும் என்னால் அது முடியாது என்று என் புத்தி சொன்னது. ஏனெனில் நான் பெரிதும் தருக்க சிந்தனையால் இயக்கப்படுபவன்; எனக்குக் கலையை மன எழுச்சியுடன் புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வோ, உள்ளொளியோ கிடையாது என்ற என்னைப் பற்றிய அவதானிப்பு உண்டு. ஆகவே என்னால் கலையைப் படைக்கவும் முடியாது என்ற எண்ணத்தால் ஒரு கட்டுரையாக ஆக்கலாம் என்று எழுத ஆரம்பித்தேன். ஆயினும் பல கதைகளைப் படித்தவன் என்பதால் கதை நடக்கும் சூழல் போன்ற ஒன்றைக் கட்டமைத்தால் என்ன என்ற ஒரு யோசனை தோன்றியது. எனவே முதலிரண்டு பாராக்களை அங்ஙனம் அமைத்தேன். மேலும் ஒரு நிகழ்விலிருந்து பின்னோக்கிச் சென்று விவரிப்பது என்ற உத்தியையும் கையாண்டுள்ளேன். இவ்வகையில் இது என் முதல் முயற்சி. நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைச் சொல்லவும்.


அன்புடன்,

தங்கவேல்

தொடர்புடைய பதிவுகள்

இலட்சியவாதம்-கடிதங்கள்
கடிதங்கள்
கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2012 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.