பூமணியின் வழியில்

இந்தியமொழிகளில் நவீனத்துவம் ஆரம்பத்திலேயே உருவானது தமிழில் என்று தோன்றுகிறது. 1930களிலேயே தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிசிறுகளுடன்தான் அமைந்துள்ளது. உதாரணமாக மகா ஸ்வேதா தேவியின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் சிறுகதைகளையோ சுட்டிக்காட்டலாம்.



பிற இந்திய மொழிகளில் தமிழ்ச்சிறுகதைக்கு உள்ள கச்சிதமான வடிவத்தை அபூர்வமாகவே காணமுடிகிறது. காரணம் தமிழ் நவீனத்துவத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாகத் தமிழ் விமரிசன யதார்த்தவாதப் படைப்புகள் கூடக் கச்சிதமான வடிவத்தை அடைந்துள்ளன. தமிழின் இயல்புவாதப் படைப்புகள் எல்லாமே மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம். முதல் உதாரணமான 'நாகம்மாள்' கூட அப்படிப்பட்ட கச்சிதமான ஒரு படைப்புதான். முக்கியமான கலைப் படைப்புகளைக் கொண்டே இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். தோல்விகளை இங்கே சுட்டவில்லை. இயல்புவாத ஆக்கங்கள் நவீனத்துவத்திற்குரிய கச்சிதமான அவ்வடிவ ஒருமையுடன் அமைந்தது தமிழிலக்கியத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. பூமணியின் படைப்புகளை அதற்கான முதன்மை உதாரணங்களாகச் சுட்டிக்காட்டலாம்.


பூமணியின் நாவல்கள் இயல்பாகவே கச்சிதமானவை. அவற்றின் முக்கியமான பிரச்சினையே அவற்றின் அப்பட்டமான இயல்புவாதத் தன்மைதான். கனவுகளுக்கோ நெகிழ்வுகளுக்கோ இடமற்ற 'வறண்ட' இப்பரப்பில் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே இடம் பெற முடிகிறது. அது யதார்த்தம் என்று சொல்லும்போது புறவய யதார்த்ததை மட்டுமே உத்தேசிக்கிறது. அழகிரிப்பகடையின் வாழ்க்கையில் அவர் அருகே வாழும் ஒருவருக்கு என்னென்ன தெரியுமோ அவ்வளவுதான் நாவலில் சொல்லப்படுகிறது. இந்த வகை அழகியல், மானுட மனதின் ஆழ்நிலைகளை ஐயப்படுகிறது. உணர்ச்சிக்கொந்தளிப்புகளைத் திட்டமிட்டுத் தவிர்க்கிறது. மானுட இருப்பின் உச்சங்களை நிராகரிக்கிறது.


ஆனால் மனிதன் எந்த நிலையிலும் ஆழ்நிலை யதார்த்தம் ஒன்றில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவனுடைய யதார்த்தம் என்பது சூழலுக்கு ஏற்ப அவன் கட்டமைத்துக்கொள்ளும் ஒரு சமரசநிலை மட்டுமே. அத்தகைய ஆழ்நிலை அடித்தள மக்களுக்கு உண்டா என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். ஆழ்நிலை என்பது மூளை சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கு, வயிற்றுக்கு அப்பால் யோசிக்கக்கூடியவர்களுக்குரியது என்று மார்க்ஸியர் எழுதியிருக்கிறார்கள். உண்மையில் அந்தக்கருத்துதான் வெறுமே க்லோட்பாட்டில் இருந்து பெறப்பட்ட மூளைத்துண்டு. நேரடியாக அடித்தள மக்களைக் காணும் எவரும் அவர்களின் வாழ்க்கை மிகத்தீவிரமான ஆழ்நிலைகளால் ஆனதென்பதை உணரமுடியும். அவர்களின் தெய்வங்களை அவர்கள் வழிபடும் முறை, அவர்களின் கலைகள், அவர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்பான தருணங்கள் எல்லாமே உக்கிரமான ஆழ்நிலைத்தன்மை கொண்டவை. அவர்களை மீறிய 'பித்து' வெளிப்படக்கூடியவை. நம்முடைய நாட்டார் கலைகளின் அழகியலே அந்தப் பித்துதான். இயல்புவாதத்தின் கறாரான புறவயத்தன்மை ஒட்டுமொத்தமாக அந்த ஆழ்நிலைகளைத் தவிர்த்துவிடுகிறதென்பது மிகப்பெரிய குறை.


மாற்கு எழுதிய 'அருந்ததியர் வாழும் வரலாறு' என்ற ஆய்வுநூல் அருந்ததிய மக்களின் வாழ்க்கையில் சாமிகளும் சடங்குகளும் எவ்வாறு இரண்டறக்கலந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. சாமிகளும் சடங்குகளும் தொன்மங்களும் அவர்களுக்கு இயல்பான யதார்த்தமாகவே உள்ளன. அவர்களின் குலதெய்வங்கள் கூடவே வாழும் மனிதர்கள் அளவுக்கே யதார்த்தங்கள். ஆனால் பூமணி முன்வைக்கும் இயல்புவாதம், உடல்சார்ந்த யதார்த்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது. பூமணியின் பகடைகளின் உலகில் சாமிகளே இல்லை. அழகிரிப்பகடைக்குக் குலதெய்வமிருந்ததா, அவற்றுடன் அவர் கொண்ட உறவென்ன, அவர் கலைகளில் ஈடுபடுவதுண்டா, நாட்டுப்புறக்கலைகளின் பித்துநிலைகளுடன் அவரது தொடர்பென்ன, அவர் சாமியாடுவாரா- எந்தத் தகவலையும் நாம் பூமணியின் உலகில் பார்க்கமுடியாது. வாழ்க்கை வெறும் நிகழ்ச்சிகளாக, தகவல்களாக மட்டுமே அவருடைய படைப்புலகில் தெரிகின்றது. இதன் மூலம் வெளியே தள்ளப்படும் ஆழத்தில்தான் இம்மக்களின் சமூக, அந்தரங்க பழக்கவழக்கங்களின், நம்பிக்கைகளின் ஊற்றுக் கண் இருக்க முடியும்.


பலவகையிலும் உளவியல்பூர்வமாக அடக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தரப்பை நுட்பமான இடக்கரக்கல்கள் மூலமும், குறியீடுகள் மூலமும் மறைமுகமாக இந்த ஐதீக, புராணிகங்களில் பதிவு செய்துள்னர். அவ்வம்சங்கள் தவிர்க்கப்பட்டதும் ஓர் முக்கியமான அகத்தளம் விடுபடுகிறது.இவ்வம்சத்தை முழுமைப்படுத்தவே பிற்பாடு வந்த மிகுபுனைவுசார்ந்த, மீமெய்வாத [fantacy & surrealism] படைப்பாளிகள் முயன்றனர். ஒரு உதாரணம் கூறலாம். பூமணியின் 'வெக்கை' கதையின் அகவய நீட்சியே கோணங்கியின் 'கருப்பன் போன பாதை' என்ற முக்கியமான கதை. பூமணியின் கதையில் ஆண்டையை வெட்டியபிறகு ஓடும் சிதம்பரத்தின் ரத்தம் பரவிய ஆடைகளும், அரிவாளும் யதார்த்தமாக சித்தரிக்கப்படுகையில் கோணங்கியின் கதையில் அவை குறியீடுகளாக மாறி, தலைமுறை தலைமுறையாக உலராத ரத்தத்துடன் அக்குடிகளிடம் எஞ்சுகிறது. இக்கதையை தான் பூமணியின் கதையின் தொடர்ச்சியாகவே உருவகிப்பதாக அதை எழுதுவதற்கு முன்பே கோணங்கி என்னிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த ரத்தம் எளிதில் உலராதது, அதைக் கழுவ முடியாது என்று அவர் சொன்னார். இக்கதை நாட்டார் வாய்மொழிக் கதைகளின் புராணிக, ஐதீக அம்சத்தை சேர்த்துக் கொண்டு பூமணி தொடாத அடுத்த இடத்தைத் தொடுவது முக்கியமானது.


இயல்புவாதம் செவ்வியலுக்கு மிக நெருக்கமானது. செவ்வியல்பண்புகளாகச் சொல்லப்படும் நிதானம், மிகையின்மை,சமநிலை, தேர்ந்த வாசகனை நம்பி இயங்கும் தன்மை ஆகியவை இயல்புவாதத்துக்கும் உரியவையே. பூமணியின் நாவல்களில், குறிப்பாகப் 'பிறகு'வில், இந்த செவ்வியல்பண்பு மேலோங்கியிருக்கிறது. ஆனால் செவ்வியல் நீண்ட மரபுத்தொடர்ச்சியை, அந்த மரபில் சென்று தொட்டிருக்கும் ஆழ்மன நீட்சியைக் கருத்தில் கொள்கிறது. அதற்காக அது தொன்மங்களுக்கும் படிமங்களுக்கும் செல்கிறது. மானுட உச்சநிலைகளைச் சொல்லமுயல்கிறது அது. ஆகவே மொழியைக் கொந்தளிக்கவும் சிறகடிக்கவும் விடுகிறது. எல்லா வகையான மீறல்களையும் அனுமதித்தபின்னரும் அடையப்படும் சமநிலையையே உண்மையான செவ்வியல்பண்பு எனலாம். இந்த அம்சம் இயல்புவாத அழகியலில் விடுபட்டுவிடுகிறது.


[image error]


பூமணியின் 'பிறகு' நாவலை காரந்தின் 'சோமனதுடி' நாவலுடன் ஒப்பிடுவதன் வழியாக இந்த வேறுபாட்டை நாம் அறியலாம். 'சோமனதுடி' மிக நேரடியான உணர்ச்சிகரமான ஒரு நாவல். ஆனால் கற்பனாவாதப்பண்பு ஏதுமில்லாமல் முதல் தளத்தில் இயல்புவாதமோ எனத் தோற்றம்தரும் தகவலடுக்குகளுடன் உள்ளது. ஆனால் சோமனின் அந்தத் துடி அந்நாவலை நாம் ஒருபோதும் அன்றாட வாழ்க்கையின் சித்திரங்களால் அறியமுடியாத ஆழங்களை நோக்கிக் கொண்டுசெல்கிறது. அது சோமனின் துடி மட்டும் அல்ல, பல்லாயிரமாண்டு பழைமை உள்ள அவர் மரபின் துடி கூட. அந்த ஆழமே செவ்வியலின் அடிப்படை இயல்பு. இயல்புவாதம் தவறவிடும் கூறு அதுவே.


பூமணியின் படைப்புலகில் உள்ள அடுத்த இடைவெளி அதன் இயல்புவாதப் பண்பு காரணமாக அது அங்கத அம்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டிருக்கிறது என்பதே. அருந்ததியர் போன்ற அடித்தள மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் அங்கதம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கசப்பை, கோபத்தை, ஏமாற்றத்தை, ஆங்காரத்தை எல்லாம் இம்மக்கள் அங்கதமாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களிடம் ஒரு களியாட்ட அம்சம் எப்போதும் உள்ளது, அது ஒரு பழங்குடித்தன்மையும்கூட! மற்ற 'உயர்' சாதியினரின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தை, ஒழுங்குகளை, பாவனைகளை இந்தக் களியாட்டம் மூலம் அவர்கள் நக்கல் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கை 'முற்போக்கு' இலக்கியத்தால் காட்டப்பட்டது போல 'அழுவாச்சி' யால் நிரம்பியது அல்ல. அது ஒரு களியாட்டவெளியும் கூட. நோயும் வறுமையும் அதைத் தகர்ப்பதில்லை. இந்த அம்சம் பூமணியின் படைப்புக்ளில் சுத்தமாகக் காணப்படுவதில்லை. ஒரே விதிவிலக்கு என்பது 'பிறகு' நாவலில் வரும் கருப்பன். அவன் அந்த கிராமத்தில் அன்னியனாக, தனக்குள் தன்னை நிறைத்துக்கொண்டு வாழும் மனிதனாக வருகிறான்



உயர்சாதியினரை நுட்பமான கிண்டல் மூலம் எதிர்கொள்ளும் அடித்தளமக்களின் அங்கதத்துக்கு சிறந்த உதாரணம் சோ. தருமனின் காடுவெட்டி முத்தையா [தூர்வை.]. அவனது 'இங்கிலீசும் ' அவன் போடும் அவசர அடிமுறைப் பிரகடனங்களும் எல்லாமே ஒரு வகை சாதிய எதிர்ப்புகளும் கூடத்தான். அடித்தள மக்களின் யதார்த்தமென்பது அவர்கள் தங்களைத்தாங்களே கேலிசெய்வது வழியாக, அதிகாரத்தைக் கேலிப்பொருளாக சித்தரித்துக்கொள்வது வழியாக, புனிதங்களை ஆபாசங்களாக உருமாற்றிக்கொள்வதன் வழியாக நிகழ்வது. அடித்தள மக்களின் கலைகளில் இந்த அம்சத்தைத் தெளிவாகவே காணமுடியும். அடித்தள மக்கள் நிகழ்த்தும் பல தெருக்கூத்துகளில் கிட்டத்தட்ட ஆபாசக்கூத்தாகவே இந்த எதிர்ப்பு வெளியாவதை நான் கண்டிருக்கிறேன். பல்வேறு ஆய்வாளர்கள் அதைப் பதிவும் செய்திருக்கிறார்கள். பூமணியின் படைப்புகள் இந்தப் பகுதியை நோக்கிச் செல்வதில்லை.


கி.ராஜநாராயணனின் புனைவுலகின் இடைவெளிகளை நிரப்பியபடி பூமணியின் புனைவுலகு உருவானது போலப் பூமணியின் இடைவெளிகளை நிரப்பியபடி அவரது நீட்சியாக அடுத்த தலைமுறையினரின் புனைவுலகு உருவாகி வந்திருக்கிறதெனச் சொல்லமுடியும். அறுபடாத ஒரு ஓட்டமாக மூன்று தலைமுறைக்காலமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் வாழ்வும் வரலாறும் இலக்கியமாவதை ஓர் அதிசயமென்றே சொல்லவேண்டும். வளமிக்க தஞ்சை மண் கூட இந்த அளவுக்குப் 'பாடல்' பெறவில்லை. முடிவில்லா விதைகள் உறங்கும் கரிசலுக்கு வணக்கம்.

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
பூமணியின் நாவல்கள்
பூமணியை ருசித்தல்-கடிதம்
சிறுகதைகளும் படிமங்களும்
பூமணியின் சிறுகதைகள்
அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் அழகியல்
பூமணியின் நிலம்
பூமணி சந்திப்பு — செந்தில்குமார் தேவன்
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.