பூமணியை ருசித்தல்-கடிதம்

அன்புள்ள ஜெ


பூமணியின் புனைவுலகத்தைப்பற்றிய உங்களுடைய கட்டுரைகளை விரும்பி வாசித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் நான் பொதுவாக இலக்கிய விமர்சனக்கட்டுரைகளைத் தவிர்த்துவிடுவேன். அதற்குக்காரணம் நம்முடைய அமைப்பியல் பிதாமகர் ஒருவர் எழுதிய சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததுதான். 'உனக்கெல்லாம் எதுக்குடா இலக்கியம்' என்று கத்தியபடி பஸ்ஸிலேயே புத்தகத்தை தூக்கி வீசியிருக்கிறேன்.


என்னைக்கேட்டால் கதை எழுதாதவர்கள் எழுதிய ஒரு விமர்சனத்துக்கும் வாசகனிடம் எந்த மதிப்பும் இல்லை. இதில் வெங்கட் சாமிநாதன் தமிழவன் எல்லாரும் ஒரே கணக்குதான். இவர்களை வாசிக்காமலிருப்பதே மேல். இவர்களுடைய தரமற்ற உரைநடையை வாசித்தால் நம்முடைய மொழிரசனையே அழிந்துபோகும்.


என்னென்னவோ எழுதி வைப்பார்கள். ஒரு இலக்கியத்தில் அவர்கள் வாசித்த சகல குப்பைகளையும் கொண்டு கொட்டி வைப்பார்கள். அந்த இலக்கியத்தை நாம் வாசித்திருந்தால் நாம் வாசித்தறிந்ததைவிட மேலாக ஒருவரி கூட இவர்களால் சொல்ல முடியாது. நம்முடைய வாசிப்பைவிடப் பலபடிகள் கீழே நிற்கக்கூடிய அப்பாவித்தனமான [நாகரீகமாகச் சொல்கிறேன். மொண்ணைத்தனமாக என்றுதான் சொல்லவேண்டும்] வாசிப்பு. எங்காவது எதையாவது பிடித்துக்கொண்டு எதையாவது சொல்லி வைப்பது.


தமிழில் இலக்கியவிமர்சனத்தை நம்முடைய கோட்பாட்டுப் பிலாக்கணக்காரர்கள் கெடுத்து நாசமாக்கிவிட்டார்கள். நல்லவேளை இப்போது அவர்களும் எழுதுவதில்லை. இலக்கியப்படைப்பை சாதாரணமாக வாசித்துப்புரிந்துகொள்ளத் திராணியற்றவர்கள்தான் இங்கே இலக்கியவிமர்சனம் எழுதுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கிருந்தது.


இலக்கியவிமர்சனமென்பது ஒரு வகை இலக்கியம். இலக்கியம் அளிக்கக்கூடிய அதே அழகனுபவத்தை அது அளிக்கவேண்டும். அதே மாதிரி மொழிநுட்பம் அதற்கும் தேவை. அதேமாதிரி வாசகன் கற்பனைசெய்துகொள்ளவும் ஊகித்து மேலேசெல்லவும் அதில் உள்ளடக்கம் இருக்கவேண்டும்.


அந்தவகையான விமர்சனமாக இருந்தது பூமணி பற்றிய உங்கள் விமர்சனக்கட்டுரைகள். 'இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடந்த மேடுபள்ளம் அற்ற விரிந்த பொட்டல் அது. தேவதச்சனின் கவிதைபோலக் குனிந்து நாற்று நடும் பெண்ணுடன் தானும் குனிந்திருக்கும் பிரம்மாண்டமான வானம். உண்மையில் நிலத்தை மட்டுமல்ல, வானத்தையும் அன்று நான் புத்தம் புதியதாகக் கண்டுகொண்டேன்.அன்றுவரை நானறிந்திருந்த வானம் எப்போதும் பச்சை மரக்கூட்டங்களின் வழியாகவே காணக்கிடைப்பது. செறிந்த மேகங்கள் கரை கண்டு நகர்வது. இந்த வானம் ஒளிக்கடலாக இருந்தது. வானம் அத்தனை துல்லியமாக நீலம் கொண்டிருக்கும் என்று அப்போதுதான் அறிந்தேன். கீழே பசுமையே இல்லாத செம்மண் நிலம். தொலைவில் அது சிறிய மேடுகளாக எழுந்து வானில் இணைந்தது. உடைமுள் பரப்புகள் வெயிலில் உலர்ந்து கிளைபின்னிக் கிடந்தன. பனைமரக் கூட்டங்கள் வானத்தின் தூண்கள் போல, யானைக்கால்கள் போல, பொட்டலில் முளைத்த மயிர்கற்றைகள் போல நின்றன' என்ற வர்ணனை ஒரு இலக்கியவிமர்சனத்தில் வருவதை அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும் [பூமணியின் நிலம்]


'இல்லாமலிருக்கும் ஆசிரியன் இருப்பவனை விட வல்லமை கொள்ள முடியும் என்று கண்டுகொண்டேன். கூறப்பட்டவற்றை விடக் கூறப்படாதவைக்கு அழகும் வீச்சும் அதிகம் என்று புரிந்துகொண்டேன்'.


'தன்னுடைய உடம்பில் முதுகைப்பார்ப்பதற்கு ஒருவன் கண்ணாடியைப் பயன்படுத்துவதைப் போலத்தான் இந்திய சமூகம் இயல்புவாதத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம்'.


என்ற இருவரிகள் கொடுக்கும் சிந்தனையை ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரை நல்ல இலக்கிய வாசகனுக்கு கொடுக்காது என்று தெரிந்தது. நாச்சுரலிசத்தை இதற்குமேல் விளக்கவேண்டிய தேவை இல்லை


உங்கள் கட்டுரையின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால் நல்ல வாசகனை நம்பி எழுதியிருக்கிறீர்கள். ஒரு வாசகன் பூமணியை வாசிப்பதற்குத் தடையாக ஆகுமளவுக்கு எதுவும் சொல்லிவிடக்கூடாதென்ற கவனத்துடன் எழுதியிருக்கிறீர்கள். வாசித்தபின்பு சிந்திக்கும்போது நினைவுக்கு வரும் ஏராளமான வரிகளை எழுதியிருக்கிறீர்கள்


நன்றி


சரவணன் எம்



ஆசிரியருக்கு ,


நுகர்வதல்ல ரசிப்பது, தின்பதல்ல ருசிப்பது. பூமணி பற்றிய கரிசலின் ருசி …. இலக்கியத்தில் துவங்கி பூமணியின் அகத்துக்குள் சென்று முடிகிறது. ஒரு வாசகனாக ஒருவன் உணர்வதும் நம்புவதும் உண்டு . ஏன் எதற்கு என்ற காரணம் தெரிவதில்லை, படைப்பின் போதை தரும் மிதப்பில் அக்கேள்வி அர்த்தமிழந்து போகிறது (இலக்கியம் கூறும் உண்மை என்பது,நிரூபிக்கப்படாமல் நிறுவப்படும் ஒன்று)


ஆனால் இக்கட்டுரையைப் படிக்கும் போது நோயறிகுறியும், நோய்மீட்பின் தடமும், மருந்தின் கலவையும் தெளிவாகிறது. படிக்கப் படிக்க இதுவும் ஒரு அபுனைவு போலத் தோற்றம் கொள்கிறது.


(சுவைகள் மனதில் மொழியினூடாக வளர்கின்றன. நுண்வடிவம் கொள்கின்றன. மொழி,சுவைகளினாலான ஒரு பெரும்பரப்பு. சுவைகளின் ஒலிக்குறிகளின் தொகை அது.ஒரு சாக்லேட் என்பது ஒரு குறியீட்டுப் பொருள்.ஒரு கவிதைப்படிமம் போல. நாக்கை ஊடகமாகக் கொண்டு மனதில் விரிந்து அனுபவத்தை உருவாக்குகிறது சாக்லேட். படிமமும் மொழிப்புலத்தை ஊடகமாகக் கொண்டு அதையே நிகழ்த்துகிறது)


தர்க்கம்-ரசனை-ஆன்மிகம் // எலும்பு-சதை/சாறு – உயிர் என ஒவ்வொன்றையும் பிரித்து ஒவ்வொன்றாக ஆராயும் அனுபவமும் வியப்பும் உங்கள் 'பாதைகள்' சிறுகதையை நினைவுபடுத்துகிறது. எது நிஜ வாசல் ? எது ஓவிய வாசல் ? தெரியாமல் பார்த்து ரசிப்பது ஒரு ரசம், அறிந்து உள் நுழைவது இன்னொரு ரசம். இதுவரை முதலாவது மட்டுமே அனுபவமான எனக்கு இரண்டாவதை இக்கட்டுரை சாத்தியமாக்கியது .


(இட்லி வாழையிலையில் பரிமாறப்படும்போதுதான் நமக்கு அழகியல் திருப்தி கிடைக்கிறது. ஒரு ருசிக்குப் பின்னால் ஒரு பண்பாட்டின் நீண்ட இறந்தகாலமே நின்று செயல்படுகிறது. குங்குமம் போட்ட முகம் நமக்கு அமைதியானதாகத் தெரிகிறது. ஏதோ ஒரு பொட்டு இல்லாவிடில் முகம் காலியான ஒன்றாகத் தெரிகிறது. புடவை அடக்கமான உடையாகத் தோன்றுகிறது. நாம் ரசிக்கும் அனைத்துமே இவ்வாறு காலப்போக்கில் நம்முள் ஊறிக்குடியேறியவைதான்.) அழகுணர்வுடன் ஒரு சடலக்கூராய்வு.


நிச்சயம் இக்கட்டுரை தர்க்கத்தை உள்ளுணர்வாலும் , உள்ளுணர்வைத் தர்கத்தாலும் பரிசீலிக்கிறது


(ஒரு வெறும் பிரசாரப் படைப்பு 'சதைப்பற்றில்லாதது' என்று கூறப்படுகிறது. வெற்று ஆன்மீகக் கற்பனை 'அந்தரத்தில் நிற்கும் புகை' என்று கூறப்படுகிறது)


இரண்டும் உரசும் இடத்தை ஆன்மீகமாக உணர்த்துகிறது. சிவப்பு வைனின் நிறத்தை ரசித்து, வாசனையை முகர்ந்து பின் நாவால் சுவைக்கும் மூன்றும் ஒன்றாகும் அனுபவம்.


மொழி-கலாசாரம்-சிந்தனை ஆகியவை ஒரு முப்புரிக் கயிறு. சில சமயம் சாட்டையாகச் சொடுக்கும், சில வேளை மூக்கணாங்கயிறாகத் தடுக்கும். எப்பொழுதும் திமிறிக் கொண்டிருக்கும் ஆதி மனம்.ஆம் மணம் நூறு நாவாகத் துடித்துக்கொண்டிருக்கிறது அகத்தில், எல்லாப் புலன்களாலும் தீண்டி ருசிக்கும் வெறியுடன். பழமைப் பிடிப்பும் புது வேட்கையும் ஒரு கொக்கிப் புழுவின் நகர்வு போல, வளைவாக எழுந்து மடிந்து இழந்து அடையும். அப்பட்டமான 100 % புதுமை ஆரம்ப கவர்ச்சியை விரைவில் இழந்து கணப்போதில் முதுமை எய்தி வெளியே துப்பப்படும். மரபின் சாயலோ, ஏற்போ புதுமைக்கு எப்பொழுதும் தேவை , பின் அது மரபின் பகுதியாக ஒட்டும்.




(ஒரு நாக்கு மரபுக்குப் பணிகிறது. இன்னொன்று புதுமைக்கு ஏங்குகிறது. ஒன்று தன்னுள் அமிழ்கிறது, தன்னுள் அடங்குகிறது. இன்னொன்று தேடியலைகிறது. ஒரு நாக்கு மரபுக்குப் பணிகிறது. இன்னொன்று புதுமைக்கு ஏங்குகிறது. ஒன்று தன்னுள் அமிழ்கிறது, தன்னுள் அடங்குகிறது. இன்னொன்று தேடியலைகிறது
)


பொதுவாக ஒரு கட்டுரையை அல்லது படைப்பைப் படிக்கும் நான் பொருள் தட்டுப்படாத வரிகளில், இது ஆசிரியரின் படைப்பு விசை காரணமாக உபரியாகத் தெறித்து விழுந்த வரிகள் (redundant) என்றும் அதை ஊன்றி கவனிக்க வேண்டியதில்லை என எண்ணுவேன். சில படைப்புகள் இன்னுமொருமுறை என்னைப் படிக்க அழைக்கும், ஆனால் இது இன்னொருமுறை என்னை படிக்கக் கட்டளையிட்டது , அவ்வாறு பின் படித்துணர்ந்த வரிகள் :



(படைப்பின் விதை அதன் ஆன்மிக அம்சம்,அதுவே முளைத்தெழும் வல்லமை கொண்டது. அதைப் பரவச் செய்வதே படைப்பின் நோக்கம். படிமமும் மொழிப்புலத்தை ஊடகமாகக் கொண்டு அதையே நிகழ்த்துகிறது)


இது முன் சொன்ன சாக்லேட் உவமையின் இறங்கு வரிசையே. ஒரு மாபெரும் படைப்பாளியால் ஒரு வரியும் , எத்தனை வரிகளை நான் உதாசீனம் செய்து வீணடித்திருக்கிறேனோ எனக் குற்றம் சாட்டுகிறது இக்கட்டுரையின் பல்வேறு வரிகள். மலைப் படியேறி ஒரு தெய்வ தரிசனம். இக்கட்டுரை தந்த வாக்குறுதியால் இனி ஒவ்வொரு முறையும் மலை ஏறத் துணிவேன்.



கீ.ரா பூமணி ஒப்பீடும், அதைக் கவித்துவமாகச் சொன்ன விதமும் (அவர்களின் படைப்புகள் வாசகன் மலர் வெளியில் பறந்தலையும் தேனீ போல அந்தப் புனைவு வெளியில் அலைகின்றான். வண்ணங்களின் முடிவில்லாத இனிமையை அந்தப் புனைவுலகில் சுவைக்கிறான்….


.இங்கே சுவைகள் எல்லாமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உக்கிரமான கொடும் வெயில் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த வெயில் எல்லாத் தாவரங்களையும் சருகாக்குகிறது. ஈரங்களை வற்றச் செய்கிறது. மணங்களை ஆவியாக்கிவிடுகிறது. எஞ்சுவது அங்கும் உயிர் இருந்ததைச் சொல்லும் மெல்லிய ஒரு வாசனைதான்). ஒரு விமர்சன ஆய்வு இலக்கியமாகிறது. என்றாலும் ஒரு கட்டுரைக்குள் இத்தனை வேர்நுனிகளா?ஆற ஆராய்ந்து உள்வாங்கி விவாதிக்க வேண்டிய நவரத்தின பொற்கிரீடம். வண்ணமயமாகத் துவங்கி, கவித்துவமாக நகர்ந்து ("மண்ணில் ததும்பும் உயிர்த்துடிப்புள்ள வாழ்வில் இருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட ரசனையின் துளிகள் நிரம்பிய தேன்கூடுதான்" … "நீர்வண்ண ஒவியத்தை நீர் கழுவி மென்மையாக்கும் ஜப்பானிய ஓவிய முறையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்"). படைப்புக்கூறுடன் முடிகிறது இக்கட்டுரை (கடைசியில் ஒரு குவளை நீரில் கரிசல் மண்ணை ஒரு சிட்டிகை எடுத்துக் கலக்கிக் கொடுப்பார்கள். ஆன்மா நிறைந்து அவர் உயிர்விடுவார். வீரிய மணமும் தீவிரச் சுவையும் உடைய எந்தப் பானத்திற்கும் இல்லாத வேகம் அந்தச் சிட்டிகை மண்ணில் இருந்த உப்புக்கும் மணத்திற்கும் இருந்தது. பூமணி படைப்புகளில் உள்ள ருசி அவ்வளவுதான். அந்த அளவு. அந்த வீச்சு.)


கரிசலின் ருசி – உள் நாவால் ருசித்து அந்நாவாலேயே சுவை அறிவிக்க வேண்டிய நள போஜனம்.


கிருஷ்ணன்.




பூமணி-கரிசலின் ருசி




பூமணியின் நிலம்


தொடர்புடைய பதிவுகள்

சிறுகதைகளும் படிமங்களும்
பூமணியின் சிறுகதைகள்
அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் அழகியல்
பூமணியின் நிலம்
பூமணி சந்திப்பு — செந்தில்குமார் தேவன்
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
கரிசலின் ருசி — பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.