அசிங்கமான மார்க்ஸியம்

திருவாளர் ஜெ,


எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். தெளிவான மொழியிலே உங்களால் எழுதமுடிகிறதென்பதனை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எதற்காக எழுதுகிறீர்கள்? இன்றைக்கு ஹாப்ஸ்பாமை முன்வைப்பதன் வழியாக நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்? நீங்கள் மர்க்ஸியசிந்தனைகளை கூர்ந்து வாசிக்கிறீர்கள் என்று இங்குள்ள மார்க்ஸியர்கள் நம்பவேண்டும் என்பதுமட்டும்தானே உங்கள் நோக்கம் இல்லையா? மற்றபடி இதுவரை இங்குள்ள மார்க்ஸிய சிந்தனையாளர்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? அவர்களை எப்போதாவது பேசியிருக்கிறீர்களா? மேற்கோள் காட்டியிருக்கிறீர்களா? மார்க்ஸியத்தில் உங்களுக்கு என்ன ஆர்வம்? மார்க்ஸியத்தை நீங்கள் எதற்குப் பயன்படுத்துகிறீர்கள்? சும்மா மூளை விளையாட்டுக்காகவா?


சரவணக்குமார்.எம்.



அன்புள்ள சரவணக்குமார்,


திருவாளர் என்பது ஓர் அவமரியாதைச் சொல் என்பதை இப்போதுதான் புரிந்துகொண்டேன்.


நான் தமிழக மார்க்ஸிய சிந்தனையாளர்களில் முக்கியமானவர்களாக எண்ணுபவர்களைப்பற்றி எப்போதுமே பேசிவந்திருக்கிறேன். எஸ்.என்.நாகராஜன், ஞானி முதலியவர்களைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன்-ஏற்றும் மறுத்தும். அவர்கள் என்னுடைய சிந்தனையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர்கள்.


ஆனால் எல்லா மார்க்ஸியர்களைப்பற்றியும் நான் எழுதமுடியாது. தமிழில் எழுதுபவர்களில் நான் கொஞ்சம்கூட உடன்பட மறுக்கும் மார்க்ஸியர்களே அதிகம். ஏன்? எந்தச்சிந்தனையானாலும் நம்முடைய ஆதார மனநிலை மதம் சார்ந்ததே. ஆழமான நம்பிக்கையாக, உறுதியான சுயதரப்பாக நாம் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறோம். அதை எளிய வாய்ப்பாடுகளாக ஆக்கிக்கொண்டு ஓங்கிச்சொல்கிறோம். மாற்றுத்தரப்பைக் கண்டுபிடித்து அதை வசைபாடுகிறோம். தமிழகத்தில் சிந்தனைத்தள விவாதம் என்ற ஒன்று அனேகமாக இல்லை. இங்கே வசைபாடுபவர்களே பெரும்பாலும் சிந்தனையாளர்கள் என அறியப்படுகிறார்கள்.


எதையும் அதன் மிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் எடுத்துக்கொள்பவர்களே நம்மிடையே அதிகம். நம் சூழலில் மார்க்ஸியமே கூட சிக்கலற்ற ஒரு நவீன மதநம்பிக்கையாகவே வந்து புழங்கிக்கொண்டிருக்கிறது. படைப்பூக்கம் கொண்ட எதையும் இந்த எளிமையான வாய்ப்பாடுகளைக்கொண்டு நம் 'சிந்தனையாளர்கள்' நிராகரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு. ஓரு படைப்பிலக்கியவாதி என்ற முறையில் ஒருபோதும் நான் அவர்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.


தமிழில் மார்க்ஸியம் வந்தபோது வர்க்கப்பார்வை, சோஷலிசயதார்த்தம் என்றெல்லாம் கலைச்சொற்கள் போடப்பட்டு தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகள் நிராகரிக்கப்பட்டனர், வசைபாடப்பட்டனர், எள்ளிநகையாடப்பட்டனர். படைப்பூக்கமே இல்லாத வெற்று ஜோடனைகள் பேரிலக்கியங்களாக முன்வைக்கப்பட்டன. இன்று அவையெல்லாம் எங்கே என்றே தெரியவில்லை. தமிழில் மார்க்ஸியர்களால் முன்னுதாரண இலக்கியவாதியாகச் சுட்டிக்காட்டப்பட்டவர் 'செவ்வானம்' போன்ற வறண்ட நாவல்களை எழுதிய செ.கணேசலிங்கன் என்று கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.


அதன் பின் வந்த ஒவ்வொரு சிந்தனை அலையும் படைப்பிலக்கியத்தை நிராகரிக்கும் வெற்றுக் கோட்பாட்டாளர்களுக்குப் படைப்பியக்கம் மீது வசைகளையும் திரிபுகளையும் கொட்டவே பயன்பட்டுள்ளது. விளிம்புநிலை சிந்தனைக்கோட்பாடுகளைப்பேசியவர்கள் முன்னிறுத்திய எழுத்தாளர்,பஞ்சமர் போன்ற துண்டுப்பிரசுர பிரச்சார எழுத்துக்களை எழுதிய கெ.டானியல். அதன் பின்னர் வந்த அமைப்பியலாளர்கள் தாங்கள் எழுதிய அசட்டு சோதனை முயற்சிகளையே முன்னிறுத்தினார்கள் – தமிழவனின் நாவல்கள் போல. வாழ்க்கைக்கும் கலைக்குமான உறவு ஒருபோதும் அவர்களுக்குப் பிடிகிடைத்ததில்லை.


ஆகவே என்னுடைய கருத்தில் இத்தகைய வெற்றுக் கோட்பாடுகளை ஒருவகை ஆபாச எழுத்துக்களாகவே கண்டுவருகிறேன். அவற்றில் பெரும்பகுதி சுயசிந்தனை இல்லாமல் வெறுமே மனப்பாடம் செய்து திருப்பிச்சொல்லும் ஆசாமிகளால் எழுதப்படுவது. அவர்களால் மேற்கோள் காட்ட மட்டுமே முடியும், ஒருவரி கூட சிந்திக்க முடியாது. அவர்களுக்கு எப்போதுமே உண்மையான இலக்கிய ஆக்கத்தை பயம். அந்த ஆக்கத்தின் உட்சிக்கலையும் நுட்பத்தையும் அவர்களின் கோட்பாடுகளைக்கொண்டு விளக்க முடியாது. ஏனென்றால் இலக்கியப்படைப்பு ஒவ்வொரு முறையும் அவற்றைப் புதியதாகவே அடைகிறது.


ஆகவே எப்போதும் ஒட்டுமொத்தமாக படைப்பூக்கத்தை நிராகரிக்கிறார்கள். 'வர்க்கநலனுக்கான எழுத்து' என்றோ 'அழகியலுக்குப்பதில் அரசியல்' என்றோ 'இனி இலக்கியம் இல்லை வாசிப்பு மட்டுமே உள்ளது' என்றோ இவர்கள் சொல்லும்போது செய்ய நினைப்பது இலக்கியத்தை நிராகரிப்பதைத்தான் .அதை நான் ஏற்கமுடியாது


எரிக் ஹாப்ஸ்பாமுக்கே வருகிறேன். ஹாப்ஸ்பாம் அசிங்கமான மார்க்ஸியம் என்ற ஒன்றைச் சொல்கிறார். அதற்கு ஏழு இயல்புகள் உண்டு என்கிறார்


1. வரலாறு மீதான எளிய பொருளியல் விளக்கம். மிக எளிமையான பொருளியல் விளக்கத்தை எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் அளித்துக்கொண்டே இருப்பது, பண்பாட்டுக்காரணிகளை, தனிப்பட்ட ஆளுமையின் விளைவுகளை எல்லாம் முழுமையாக நிராகரிப்பது அசிங்கமான மார்க்ஸியம்.


2 பொருளியல் அடித்தளம்-மேல்கட்டுமானம் என்ற எளிமைப்படுத்தல்.சமூகத்தின் பொருளியல்சார்ந்த இயங்குமுறையை விளக்க உற்பத்திவிசைகளும் உற்பத்தி உறவுகளும் அடங்கிய பொருளியல் கட்டுமானத்தை அடித்தளமாகவும் பண்பாடு, அரசு போன்ற அனைத்தையும் மேற்கட்டுமானமாகவும் பார்க்கும் அணுகுமுறை உதவிகரமானதே. ஆனால் எல்லாவகையான அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளையும் விளக்க அதை ஒரு வாய்ய்பாடு போல கையாள்வது இந்த மார்க்ஸியர்களின் வழக்கம்.


3 வர்க்க நலன், வர்க்கப்போராட்டம் என்ற விளக்கம். மார்க்ஸியத்தின் இறுதி இலக்கு வர்க்கப்போராட்டமே. ஆனால் மாற்றுத்தரப்புகள் அனைத்தையுமே வர்க்க எதிரிகளின் கருத்தாகக் காண்பது அசிங்கமான மார்க்ஸியம்.


4 வரலாற்றுவிதிகள், வரலாற்றுப்போக்கின் தவிர்க்கமுடியாமை பற்றிய பேச்சு. வரலாற்றில் உள்ளுறைந்து சில விதிகள் உள்ளன என்றும் அவற்றை எந்த ஆற்றலும் மாற்றமுடியாது என்றும் நினைப்பது மார்க்ஸிய அடிப்படைவாதம்.


5 மார்க்ஸ் அவரது தனிப்பட்ட ஆர்வத்தால் கூறிய சாதாரண கருத்துக்களைக்கூட விதிகளாக எடுத்துக்கொள்ளுதல் . உதாரணமாக ஐரோப்பியப் பொருளியல் வளர்ச்சிபற்றிய அவரது சாதாரண ஊகங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறை பற்றி கூறிய முதிர்ச்சியில்லாத கருத்துக்களை கிட்டத்தட்ட மதநூல் வரிகளாகவே இங்குள்ளவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்


6 மார்க்ஸை ஆதர்சமாகக் கொண்டு எழுந்த இயக்கங்களில் இருந்து பெறும் விதிகளையும் கருத்துக்களயும் மார்க்ஸியக் கருத்துக்களாக அவர்மேல் ஏற்றிக்கொள்ளுதல். லெனின் அல்லது ஸ்டாலினின் கூற்றுக்களைக்கூட நம்மவர்களில் பலர் மார்க்ஸின் சிந்தனைகளின் பகுதிகளாக, அவற்றில் இருந்து பிரிக்கவே முடியாதவையாகக் கருதுகிறார்கள்.


7 வரலாற்றெழுத்த்தின் எல்லைகளை வர்க்கநலன் சார்ந்ததாக விளக்குதல். வரலாற்றெழுத்து பல்வேறு கோணங்களில், பல்வேறு கருவிகளைக்கொண்டு நிகழ்த்தப்படலாம். எல்லா வரலாற்றெழுத்தும் எப்போதும் வர்க்கநலன்களுக்காக எழுதப்படும் ஜோடனைகள் அல்லது சதிகள் மட்டுமே என்ற எண்ணம் அடிப்படைவாத மார்க்ஸியர்களிடம் உண்டு. ஹாப்ஸ்பாம் அதை அசிங்கமான மார்க்ஸியம் என்கிறார்


யோசித்துப்பாருங்கள். நம்மிடையே மார்க்ஸியம் பேசுபவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று. அசிங்கமான மார்க்ஸியர் என்று மட்டுமே அவர்களைப்பற்றிச் சொல்லமுடியும் இல்லையா? எரிக் ஹாப்ஸ்பாமை ஏற்றுக்கொள்வதனாலேயே அவர்களை நிராகரிக்கவேண்டியிருக்கிறதல்லவா?


நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் வரலாற்றாய்விலும் சமூகவியல் ஆய்விலும் மார்க்ஸிய முரணியக்கப் பொருள்முதல்வாத ஆய்வுமுறையை மிக நவீனமான மிகவும் பயனுள்ள ஒரு ஆய்வுமுறைமையாக எண்ணுகிறேன். சமூகப்பரிணாமத்தின் , பண்பாட்டு வளர்ச்சியின் சித்திரத்தை அது உருவாக்குமளவுக்கு வேறெந்த சிந்தனைமுறையும் உருவாக்குவதில்லை. அக்காரணத்தாலேயே எரிக் ஹாப்ஸ்பாம் முதல் ஞானி வரையிலான மார்க்ஸியர்கள் எனக்கு முக்கியமானவர்கள்


ஆனால் அந்த ஆய்வுமுறையைக்கொண்டு வர்க்கப்போரை உடனடியாக உருவாக்கவேண்டும் என்று சொல்லமாட்டேன். மார்க்ஸிய அரசியல் செயல்திட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. சமூகத்தை எளிதாக வர்க்கங்களாகப் பிரிக்கமுடியாதென்றும், சமூகத்தைக் கருத்தியல் அடிப்படையில் செயற்கையாக உடைத்து மறுகட்டுமானம் செய்யமுடியாதென்றும், அவ்வாறு செய்தால் அழிவை மட்டுமே உருவாக்கமுடியும் என்று உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது என்றும் நம்புகிறேன்.


சமூகத்தைப் புரிந்துகொள்ள மார்க்ஸிய முரணியக்கப் பொருள்முதல்வாதம் பெருமளவு உதவிகரமானது. ஆனால் அந்தப் புரிதல் முழுமையானதல்ல. ஆகவே அந்தப் புரிதலின் அடிப்படையில் சமூகத்தை உடைத்துவார்க்க முயல்வது சரியல்ல என்பதே என் எண்ணம். நான் தொடர்ச்சியான கருத்தியல் முரணியக்கம் மூலம் நிகழும் படிப்படியான சமூக மாற்றத்தை நம்புகிறேன். அதை வளர்சிதை மாற்றம் என்றோ பரிணாமம் என்றோதான் சொல்வேன். ஆகவே எனக்கு காந்தி இன்னும் ஏற்புடையவராக இருக்கிறார். மார்க்ஸிய ஆய்வுமுறைக்கும் காந்தியச் செயல்திட்டத்திற்கும் நடுவே ஓர் அர்த்தபூர்வமான இணைப்பு நிகழமுடியுமா என்றே நான் எப்போதும் பார்க்கிறேன்.


ஜெ


[On History. Eric Hobsbawm. ABACUS London]




எரிக் ஹாப்ஸ்பாம் -வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை


வரலாற்றெழுத்தில் நான்கு மாற்றங்கள்




இடதுசாரிகளிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?




உலகத்தொழிலாளர்களே




மார்க்ஸியம் இன்று தேவையா?


கலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாத கருதுகோள்கள்


மார்க்ஸ் கண்ட இந்தியா


வெறுப்புடன் உரையாடுதல்



சேகுவேராவும் காந்தியும்


மாவோயிச வன்முறை ஒன்று, இரண்டு, மூன்று நான்கு


இந்த ஊழல் ஜனநாயகம் போதுமா?



கலைச்சொற்களை அறிய




1.கலைச்சொற்கள்




கலைச்சொற்களை அறிய ஒரு தளம்


தொடர்புடைய பதிவுகள்

இலட்சியவாதம் அழிகிறதா?
எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை
கனவுபூமியும் கால்தளையும்
அண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.
அயோத்திதாசர் என்ற முதற்சிந்தனையாளர்-3
பின் தொடரும் நிழலின் குரல் பற்றி
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
மார்க்ஸியம் இன்று தேவையா?
மார்க்ஸ் கண்ட இந்தியா
கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.