காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம். நலமா ?. மீண்டும் உங்களை கடிதம் மூலம் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த மாதம் "இன்றைய காந்தி " படித்து முடித்தேன். உடனே கடிதம் எழுதவேண்டும் என்று எண்ணினேன் . இருந்தாலும் ஒரு அவரசநிலையில் எழுதவேண்டாம் , ஆறப்போட்டு எனக்குள் அப்புத்தகத்தின் கருத்துக்கள் என்ன செய்கின்றன என்று பார்த்த பின் எழுதலாம் என்று எண்ணத்தில் இப்பொழுது எழுதுகிறேன்.


பொதுவாக எனக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இப்புத்தகம் என்னை அதற்குள் வாரி, சுருட்டி எடுத்துக்கொண்டது. இப்புத்தகத்திற்கு முன்னால் காந்தியைப் பற்றி எனக்குத் தாக்கம் ஏற்படுத்திய விஷயங்கள் இரண்டே இரண்டு . 1 . Kettle நிகழ்ச்சி 2. பகத் சிங்கை காந்தி காப்பாற்றவில்லை என்ற வாதம் .


ஆனால் இந்தப் புத்தகம் எனக்கு அளித்தவைகள் வார்த்தைகளால் கூற முடியாதவை. இப்படி ஒரு சிறந்த புத்தகம் என்னைப் போன்ற இளம் வாசர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய ஒன்று ( 2 நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பிறந்தநாள் பரிசாக அளித்தேன் ). நீங்கள் இந்த புத்தகத்தை ஒரு ஆராய்ச்சி அன்று என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் பகத் சிங், அம்பேத்கர், பெரியார் பற்றி நீங்கள் கூறிய விஷயங்களில் மிக ஆழ்த்த ஆராய்ச்சி இருப்பதாகவே கருதுகிறேன்.


காந்தியுடன் , சமணத்தின் மீதும் எனக்கு ஓர் ஆர்வத்தை ஊட்டியது. அறியாதவை இன்னும் எவ்வளவு விஷயங்கள்?காந்தியைப் பற்றி நல்ல விஷயங்களை விட அவதூறுகளே என் போன்ற இளைஞர்கள் மத்தியில் உலவுகிறது. இரண்டாம் முறை இப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பாகத்தை (கேள்விகள்) முடிக்கும் போதும் 25 வருடம் இந்த உலகத்தில் காந்தி பற்றியும் , பெரியார்,போஸ், அம்பேத்கர் பற்றியும் ,எனக்குப் பள்ளிப்புத்தகங்களும் , நான் கேட்ட அறிந்த விஷயங்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதைப் போல ஒரு உணர்வு.


நீங்கள் ஒரு கட்டுரையில் எழுதிய ஒரு வாக்கியம் " வரலாற்று நிகழ்வுகளை , நடப்பவற்றைத் திரிப்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்" (சரியாக வார்த்தைகள் நினைவில் இல்லை ) மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது . அவ்வாக்கியத்தின் உண்மையான உணர்வை , பாதிப்பை உணர்கிறேன் . மிகுந்த மன உளச்சலுக்கு ஆளானேன்.


எந்த ஒரு நிகழ்வுக்கும் பலவகை கோணங்களில் அவரவர் கண்ட , ஆராய்ந்த , உணர்த்த கருத்துக்களை மட்டுமே சொல்லமுடியும். அப்படி இருக்க இப்பொழுதெல்லாம் ஏதாவது நிகழ்வு பற்றி என்னைக் கருத்து சொல்லக் கேட்டால் எனக்கு மிகுந்த பயமும் , சந்தேகமும் உண்டாகிறது. நான் புரிந்து கொண்டது சரியா, இந்தக் கருத்துக்கு மாறாக உண்மையான கருத்து ஏதேனும் இருக்கிறதா? என்ற பல கேள்விகள் எழுகிறது . இது இந்தப் புத்தகத்தின் ஒரு விளைவே என்று எண்ணுகிறேன். இது நல்லதா ? கெட்டதா ? என்று ஒரு சந்தேகம் வேறு வாட்டுகிறது .


இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க , காந்தி என்றொரு அரிய மனிதரைப் பற்றி அறிய, உணரச் செய்தமைக்கு நன்றி. இந்த வருடம் Oct 2 தான் காந்தியின் பிறந்தநாளை அவரைப்பற்றி ஓர் அளவேனும் அறிந்து அர்த்தமுள்ள நாளாய்க் கொண்டாடியதாய் ஒரு எண்ணம். இந்தியா உலகிற்கு அளித்த ஒரு மிகச்சிறந்த ஆன்மாவைப் பற்றி விரிவாய் , ஆழமாய் உணரச் செய்தமைக்கு என் மனதார உங்களுக்கு நன்றி கூறுகிறேன் .


இப்படிக்கு உங்கள் வாசகன்,

பிரவின் சி.

http://ninaivilnintravai.blogspot.com/


அன்புள்ள பிரவீன்,


உங்கள் தயக்கத்தைப் புரிந்துகொள்கிறேன். எல்லா வாசகர்களுக்கும் வாசிப்பின் ஆரம்பத்தில் உருவாகும் பிரமிப்பு அல்லது தயக்கமே இது. கருத்துக்கள் அறிவுலகில் கொட்டிக்கிடக்கின்றன. பல்வேறு கோணங்கள். பலநூறு எண்ணங்கள். எல்லாவற்றையும் எங்கே எப்படித் தொகுத்துக்கொள்வது? எதைச்சார்ந்து நிலைப்பாடு எடுப்பது? அந்த நிலைப்பாட்டுக்கு என்ன மதிப்ப்பிருக்க முடியும்?


ஆனால் காலப்போக்கில் இந்தத் தயக்கம் விலகும். எது உண்மை என்பதை அறிவதற்கு உங்களுக்கு மட்டுமேயான ஓர் அளவுகோல் உங்களுக்கு உள்ளது. உங்கள் வாழ்க்கைதான் அது. நீங்கள் மட்டுமே சொல்லக்கூடிய ஒரு கருத்தை உருவாக்குவதும் உங்கள் வாழ்க்கையே. அங்கே நின்றபடி நீங்கள் எவரும் பொருட்படுத்தக்கூடிய ஒன்றைச் சொல்லமுடியும். மண்ணில் கோடிகோடி பேர் பேசியபின்னரும் நீங்களும் பேசமுடியும்.


வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் நீங்கள் சுயம் என ஒன்று இல்லாத நிலையில் நின்று ஒவ்வொரு நூலுக்கும் முழுமையாக உங்களைக் கொடுத்து வாசிக்கிறீர்கள். ஆனால் போகப்போக வாசிப்பு மூலமே உங்களுக்கென ஒரு சுயம் உருவாகிறது. வாசித்தவற்றைக் கொண்டு உங்களுக்கு நிகழும் வாழ்க்கையை மதிப்பிடவும் பரிசீலிக்கவும் முயல்கிறீர்கள். அதனூடாக நீங்கள் உங்கள் வாழ்க்கை சார்ந்து ஒரு பார்வைக்கோணத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்


இது வாசிப்பின் இரண்டாம் நிலை. அந்த நிலையில் வாசிப்பை உங்கள் சொந்த ஆளுமையால், சொந்த வாழ்க்கையால் எதிர்கொள்கிறீர்கள். அப்போது உங்களிடம் தெளிவான மதிப்பீடுகள் இருக்கும். திட்டவட்டமான கருத்துக்களும் இருக்கும்


வாழ்த்துக்கள்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

விவாதத்தின் நெறிமுறைகள்
எப்படி வாசிப்பது?
கடிதங்கள்
கோவை
உங்கள் கதைகள்-கடிதம்
ஒரு கவிதைச்சாதனை
புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?
பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
சுஜாதா
இரு கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.