காதல் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு,


நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே?


எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது.


நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் 'இரவு' நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த 'காடு', 'அனல்காற்று' நாவலிலும் சரி, பார்த்த உடன் ஒரு தீவிரமான காதல் அனுபவம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று நான் மிகவும் விரும்பிய பெண் என்னிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.நான் அவளை மிகவும் நேசித்து அவள் என்னை இப்பொழுது என்னை 'இது காதலே அல்ல' என்று நிராகரித்திருக்கிறாள். அவளை நான் நேரில் ஒரு நான்கைந்து முறை சந்தித்திருப்பேன், அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே. என்னை விட 5 வயது இளையவள்.'அண்ணா' என்று கூப்பிட ஆரம்பித்து உருவான உறவு தான் இது. ஆனால் ஆரம்பம் முதலே என் ஆழ்மனதில் நான் உணர்ந்தேன், அவள் தங்கை இல்ல என்று. 'அண்ணா' என்று கூப்பிட்டாளே தவிர எங்கள் இருவரின் இடையேயும் ஒரு ஆழமான நட்பு தான் உருவாகியிருந்தது.


ஆரம்பத்திலேயே சொல்லிவிட முடியவில்லை ஜெயன், அவளை நான் விரும்புகிறேன் என்று. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத பயம். அவள் என்னை விட்டு வெகு தூரம் சென்று விடுவாளோ என்று. நிறையப் பேசினோம் செல்போனில். நிறைய என்றால், அவ்வளவு நிறைய. தொடர்ந்து 7 மணி நேரம் எல்லாம் பேசியிருக்கிறோம்.உங்களுக்குத் தெரியுமா, உங்களது 'அனல் காற்று' நாவலை அவளுக்கு முழுமையாகப் படித்துக் காண்பித்து இருக்கிறேன் செல்போனில். சுமார் 7 மாதங்கள். இனி என்னால் கட்டுபடுத்தவே முடியாது என்ற நிலையில், அவளிடம் சொன்னேன் என் காதலை.


'நேரில் நாம் சந்தித்து, கண் பார்த்து பேசியதே இல்லை நீங்களும் நானும். இது எப்படி காதலாகும்?' என்றாள். 'எனக்கு உங்கள் மேல் காதல் என்ற எண்ணம் வரவே இல்லை. என் வாழ்வில் என்னை மிகவும் புரிந்து கொண்ட ஆண் நீங்கள் தான். ஆனால், இது கண்டிப்பாகக் காதல் அல்ல. ஒரு ஈர்ப்பு மட்டுமே' என்று மிகவும் தர்கபூர்வமாகவே பேசினாள். நேரில் அடிக்கடி சந்தித்துப் பேசிப் பழகிக் கைகள் கோர்த்து, இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தால் மட்டுமே காதல் உருவாகும் என்று எனக்கு விளக்கம் வேறு கூறுகிறாள். Ten steps to fall in love என்பது போல். எனக்கு அவளைப் பார்த்தஉடனே பிடித்தது. அவளின் நினைவுகளைக் கொண்ட கனவுகள் எனக்கு அதிகம் வந்திருக்கிறது, அவளிடம் அதிகம் பழகுவதற்கு முன்பே. எனக்கே தெரியாமல் என் ஆழ்மனதில் தீவிரமாக விரும்ப ஆரம்பித்து இருக்கிறேன்.


அவளை என் நினைவில் இருந்து ஒரு கணமும் பிரிய முடியவில்லை. அதனால், அவளிடம் ஒரு பொய்யைச் சொன்னேன், ஆண்கள் சொல்லும் அற்பமான பொய் தான், 'நான் நண்பனாகவே இருக்கிறேன் இனி ' என்று. எங்கள் இருவருக்குமே தெரியும், இப்படி ஒரு பொய்யான வேடம் எத்தனை நாளுக்கு செல்லும் என்று. மறுபடியும் ஒரு மிக நீண்ட இரவின் பேச்சின் முடிவில், அவளிடம் அழுது விட்டேன். 'உன்னை நான் என் தாயை நேசிப்பது போல் நேசிக்கிறேன்' என்று. அவளும் அழ ஆரம்பித்து விட்டாள். அந்த முனையில் அவள் அழும்போது அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. 'இனி நீங்களும் நானும் பேசவே வேண்டாம். என்னால் நீங்கள் உங்கள் வாழ்வில் மிகவும் துக்கப்படப் போகிறீர்கள்' என்று என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள்.


சூன்யம் பிடித்தது போல் இருந்தது ஜெயன். 40 முறைக்கும் மேல் கால் செய்திருப்பேன். போனை எடுக்கவே இல்லை. என்னால் என் அன்பை எப்படி அவளிடம் புரிய வைப்பது என்றே தெரியாமல், என் மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டேன். 'என்னை நீங்கள் emotional blackmail' செய்கிறீர்கள் என்று, 'இனி உங்களிடம் எந்தக் காரணம் கொண்டும் பேசமாட்டேன். என்னை விட்டு விலகிப் போய்விடுங்கள். நான் உங்கள் வாழ்வில் எதுவும் செய்துவிடவில்லை. ஏன் என் மேல் இப்படி ஒரு காதல்? நீங்கள் என்னைப் புரிந்து கொண்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக என்னால் உங்களைக் காதலித்து விட முடியாது. எனக்கு பயமாகவும் இருக்கிறது. ப்ளீஸ் என்னிடம் இனி பேச வேண்டாம். " என்று என்னை நிராகரிக்க ஆரம்பித்தாள்.


நீங்கள் உங்கள் கதைகளில் எழுதியது போல்தான் எனக்கும், ஒரு காதல் வந்தது. பார்த்த முதல் பார்வையிலேயே அவளிடம் என் அகம் சென்றுவிட்டது.


என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாள் இன்று. இன்றும் என் கனவுகளில் எல்லாம் என்னை அலைக்கழிக்கிறாள். ஆனால் நான் என்னைத் தடுமாறவிடவில்லை. நான் ஒரு ஓவியனும் கூட. அவள் மேல் கொண்ட அன்பை இனி நான் மிகவும் நேசிக்கும் ஓவியத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் ஜெயன். எனக்கு நன்றாகத் தெரியும் அவள் இனி என்னிடம் வரப் போவதில்லை.


வண்ணதாசன் எழுதியிருப்பது போல், 'என்னைப் பொறுத்தவரை குரல்கள் எனக்கு முக்கியமானவை. அவரவர்களைக் காட்டுகிற அவரவர் குரல்கள், முகம் மாதிரி, முகத்தை விடவும் எல்லாம் காட்டவல்லவை.' அவளது குரல் தான் என்னை இப்பொழுது அலைக்கழிக்கிறது. அவளிடம் கூறினேன். உன் குரல் தான் நீ.. நான் விரும்பும் நீ முழுவதும் உன் குரலில் தான் இருக்கிறாய் என்று. முற்றாக என்னை ஒதுக்கிவிட்டாள்.


என்னால் இதைத் தாங்கிக்கொள்ள நிறைய அவகாசம் தேவைப்பட்டது. அற்பமான எண்ணங்கள் எனக்கு அடிக்கடி உதிக்கும். சாலையைக் கடக்கும் எனக்கு ஒரு விபத்து நேர்ந்து, அதன் பின்பு என்னை பார்க்க வரமாட்டாளா? சாவின் தருவாயில், அவள் கைகளைப் பிடித்து அழுது கொண்டிருக்க அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டால் எப்படி இருக்கும்? ஏதோ ஒரு விளிம்பில் என்னை நோக்கி அவளது நிழல் என்னை சேர்ந்து விடாதா?


நான் இறந்து போய்விட்டால் அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள்? இவரை முற்றாக இழந்து போய்விட்டோம் என்று நினைப்பாளோ?


சில நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். 'ஆயிரம் பிகர் மடியும் மச்சி. free a vidu.' என்று சிலர். உற்ற நண்பர்கள் என் நிலையைக் கண்டு, 'நீ அவளைத்தான் டார்ச்சர் செய்கிறாய். அவளை விட்டு விடு' என்றனர்.


ஒரு நண்பன் மிகவும் தர்க்கபூர்வமாகக் கூறினான், 'நான் உனக்கு ஒன்று சொல்கிறேன். நீ இது நாள் வரை அவள் இல்லை என்று துக்கபட்டுக்கொண்டிருப்பதும், அவளின் பிரிவை நீ தாங்கமுடியாமல் இருப்பதும் ஒரு பயம் மட்டுமே. அவள் கிடைக்க மாட்டாள் என்பதை விட அவளைப்போல் ஒருத்தி உன் வாழ்வில் அமைந்துவிடாமல் போய் விடுவாளோ என்ற ஒரு பயம். இதுவே அவளை விட அழகிலும் அறிவிலும் அவளை விட சிறந்த ஒருத்தி உன்னிடம் வந்து 'நான் உங்களை விரும்புகிறேன்' என்றாள் நீ அவளை வேண்டாம் என்பாயா? மாட்டாய்தானே. அதனால் நீ வேண்டும் என்று நினைப்பது, அவளைப் போன்ற உடல்வடிவும், அவளைப் போன்ற ஒரே அலைவரிசை கொண்ட ஒரு பெண் தானே தவிர, அவளே அல்ல.'எனக்கு சட்டென்று தூக்கி வாரிப் போட்டது. அவன் என்னிடம்,'நீ எமோஷனல்-ஆ தின்க் பண்ணாம, யதார்த்தமா யோசி' என்றான்.


ஒரு கணம் சரி என்றும், மறுகணம் 'இல்லை. அவள் தான் என் மனம் முழுதும். அவளைப் போன்று வேறு யாராக இருப்பினும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது' என்பது போல்தான் இருந்தது.


இப்போது நான், நிறைய வரைய ஆரம்பித்திருக்கிறேன் ஜெயன். ஒரு ஓவியரிடம் பயின்று கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். நிறைவாக இருக்கிறது.

ஒவ்வொரு ஓவியமும் நிறைவாக வரும்போது, அவளை நினைத்துக் கொள்கிறேன். சின்னு, இது உனக்காகத்தான்.. உன் மேல் கொண்ட இந்த ப்ரியம் தான், என் ஓவியங்கள் அனைத்தும் என்று அவளிடம் சொல்ல வேண்டும் போல் உள்ளது.


ஒரு விஷயம், ஜெயன். நான் சுயஇன்பம் காணும்போது அவளின் நினைவுகள் என்னைக் கடந்ததே இல்லை. எப்படிச் சொல்வது? எல்லாவற்றையும் தாண்டி, ஒரு உச்சத்தில் நிற்கிறாள், என் மனதில். கிரியின் நீலி போல.. கிரி அய்யரிடம் பேசும் அந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது.


இந்தக் காதலை நான் 'the most painfully beautiful thing that ever happened in my life' என்று சொல்வேன். அதன் அழகையும், உக்கிரத்தையும் அனுபவித்து விட்டேன். என்னை ஏற்றம் புரிய வந்தவளாகத்தான் இருக்கிறாள். அவள் என் வாழ்வில் என்னுடனே இருந்தால் எவ்வளவு பெரிய மனிதனாக, ஓவியனாக உருவாவேன் என்று உணர முடிகிறது.


ஜெயன், நான் ஒரு நல்ல மனிதன். என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் ஏன் நான் நிராகரிக்கப்பட்டேன் அவளால். அது மட்டும் தான் என்னை மிகவும் உறுத்துகிறது.


உங்களிடம் இதையெல்லாம் சொல்லும்போது, ஒரு நிறைவைத் தருகிறது. என்னுடைய நெருங்கிய சிநேகிதனிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு அற்புதமான, கைகளைப் பற்றிக் கொள்ளும் ஒரு தருணம் போல் இருக்கிறது. நான் இருக்கிறேன்டா, நீ ஏன் கவலைப்படற என்பது போல்.


நான் உங்களையும், வண்ணதாசன் அவர்களையும் மிகவும் நேசிப்பவன். உங்கள் எழுத்து என்னை ஒரு நல்ல மனிதனாக மேம்படுத்தியது.


எல்லா மனிதர்களிடமும் பிரியத்துடன் இருக்க முடிகிறது.


உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.


மிக்க அன்புடன்,

கெ


பி.கு: என்னுடைய sketches சில இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன்.


அன்புள்ள கெ,


வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் எனக்குப் பிடித்த ஒருகாட்சித்துளி. ஒரு பெண்ணை அவளைக் காதலிக்கும் ஒருவன் துரத்திச்செல்வான். பதற்றமும் பரவசமும் அழுகையுமாக. அப்போது சுவர் பிடித்து நடந்துசெல்லும் ஒரு 90 வயது பாட்டா பார்த்து சிரித்துக்கொள்வார். பாட்டாவும் அந்த வயதைக் கடந்து வந்திருப்பார், இந்த வயதில் திரும்பிப்பார்க்கையில் அது சிரிப்பாகவே தோன்றும்.


காதலின் உணர்வெழுச்சியை நான் நன்றாக அறிவேன். நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கடிதங்களை இன்று வாசித்தால் அந்த வேகமும் நெகிழ்ச்சியும் புன்னகையை வரவழைக்கின்றன. அது ஒரு பருவம், ஒரு காலம். அவ்வளவுதான். அதுவே முழு வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் மையமும் அது அல்ல. வாழ்க்கைக்கு எதுவுமே மையம் அல்ல. அது ஒரு தொடர்நிகழ்வு. அதன் எல்லாப் புள்ளியும் எல்லாக் கணமும் முக்கியமானதே


அதற்கான பருவத்தில் அது நிகழாது போவதன் வெறுமையை விட எப்படியானாலும் நிகழ்ந்து முடிவதன் நிறைவு மேலானதே. இப்போது நீங்கள் எந்தத் துயரத்தை அனுபவித்தாலும் பின்னர் நினைக்கையில் மகிழ்ச்சியையே அறிவீர்கள். காதல் எல்லாவகையிலும் அழகானதே. இது உங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான ஓர் அத்தியாயம். உங்கள் இளமையின் ஒரு நல்ல நினைவு. வாழ்த்துக்கள்.


உங்கள் வலிக்கான உண்மையான காரணம் என்பது உங்கள் அகங்காரம் அடிபட்டதே. காதல்தோல்வியில் ஆண்கள் பெண்களை விட அதிகமாக பாதிக்கப்படுவதும் இதனால்தான். பெண்களின் அகங்காரம் கொஞ்சம் வளைந்துகொடுப்பது. நிராகரிப்பையும் அவமதிப்பையும் நம் சூழலில் அவர்கள் அறிந்தே வளர்கிறார்கள்.நம் சமூகத்தில் ஆண் அடையும் முதல் நிராகரிப்பு காதல் தோல்வியாகவே இருக்கும். தன்னம்பிக்கை அழிந்து அவன் சுருண்டு விடுகிறான்.


ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் அப்படி தன்னம்பிக்கை அழிய ஏதும் இல்லை. கடந்த இருபதாண்டுகளாக நான் நூற்றுக்கணக்கான வாசகிகளுடன் உரையாடி வருகிறேன். பெண்கள் இச்சந்தர்ப்பத்தில் நடந்துகொள்ளும் முறையில் எந்தவகையான தர்க்க ஒழுங்கும் இல்லை. அவர்களின் சூழலை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் எனப் புரிந்துகொள்ளமுடியும் ,அவ்வளவுதான்


அனேகமாக அத்தனை பெண்களுக்கும் இந்தத் தருணத்தில் என்ன செய்வது, எப்படி நடந்துகொள்வது என்றே தெரிவதில்லை. காரணம் பெரும்பாலும் முடிவெடுக்கும் இடத்தில் நம் குடும்ப அமைப்பு பெண்களை வைத்திருப்பதில்லை. சட்டென்று அப்படி ஒரு தருணம் முன்னால்வந்து நிற்கும்போது மனம் மரத்துவிடுகிறார்கள். வழக்கமாக எல்லா விஷயத்திலும் அவர்கள் என்ன செய்வார்களோ அதைச் செய்வார்கள். அதாவது தீ பட்டால் கையை உதறுவதுபோல ஒரு இயல்பான எதிர்வினையாக.


அது இருவகை. ஒன்று, அப்படியே உடன்படுவது. பாதிப்பங்கு பெண்கள் வழக்கமாக அவர்களுக்கு சொல்லப்படுவனவற்றை எல்லாம் செய்பவர்கள். எப்போதும் எதற்கும் உடன்படுபவர்கள். ஆகவே காதல் வற்புறுத்தப்பட்டால் மிரண்டு விலக முயன்று முடியாமல் திரும்பி வந்து அதை எந்த யோசனையும் இல்லாமல் அப்படியே வாங்கிக்கொள்வார்கள். காதலிப்பவனின் தகுதியோ நேர்மையோகூட அவர்களால் பரிசீலிக்கப்படுவதில்லை. இது உண்மையில் முடிவெடுக்கத் தெரியாமை.


இரண்டாம்வகைப் பெண்கள் அவர்கள் அறியாத, புதிய எதையுமே உடனே அஞ்சி நிராகரித்து விடுவார்கள். காதல் தெரிவிக்கப்பட்டதுமே என்ன ஏது என்று தெரியாமல் நிராகரித்துத் தன் ஓட்டுக்குள் சுருங்கிவிடும் பெண்கள் உண்டு. ஒரு வேலி போல அபாரமான எச்சரிக்கையுணர்ச்சியைத் தன்னைச்சுற்றி வைத்து உள்ளே தன்னை இறுக்கிக் கொண்டிருப்பார்கள். முழுக்கவும் கூட. இது முடிவெடுக்க முடியாமை.


யோசித்து, பரிசீலித்து முடிவெடுக்கும் மிகச்சில பெண்கள்கூடப் பெரும்பாலும் சரியான முடிவை எடுப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்னதான் வேண்டும் என அவர்கள் அப்போது அறிந்திருப்பதில்லை. வாழ்க்கையை அறியாத, அனுபவங்கள் எதற்குள்ளும் நுழையாத காலத்தில் எடுக்கும் முடிவு.


ஆக இங்கே காதல் என்பது ஒரு இனிய, அபாயகரமான பகடையாட்டம் மட்டுமே. அதில் ஏன் பன்னிரண்டு விழுகிறது ஏன் பூஜ்யம் வருகிறது என்பதற்கு எந்தத் தர்க்கமும் இல்லை. அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வாழ்க்கைக் கட்டத்துக்கு நகர்வதே நல்லது.


உங்களுக்குக் கலைமனம் இருந்தால் அந்தக் கலைமனம் மேலும் நெகிழ்ச்சியும் உத்வேகமும் கொள்வதற்காக நிகழ்ந்தது இது என நினைத்துக்கொள்ளுங்கள்.


அன்புடன்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

இளமாறனின் காடு
காடு-ஒருகடிதம்
காடு, களம்-கடிதங்கள்
இரவு ஒரு கடிதம்
காடு,வாசிப்பு – கடிதங்கள்
புதிய புத்தகங்கள்-கடிதங்கள்
இரவு, முன்னுரை
நூல்கள்,கடிதங்கள்
காடு -கடிதம்
அன்பு என்ற நோய்-கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.