துறவு-கடிதம்

அன்பு ஜெயமோஹன்,


வணக்கம். ஆன்மீகம் பற்றிய தங்கள் கேள்வி பதிலில் ஒரு பாரம்பரியம் பற்றிய அதாவது இந்திய ஆன்மீகத்தின் வழி முறைகள் மீது தங்களுக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் படியான ஒரு பதிவைக் கண்டேன். இது இந்த மண்ணில் பிறந்தவருள் நடக்கும் உரையாடல் என்னும் அளவில் வேண்டுமென்றால் பொருந்தும். ஆனால் ஆன்மீகம் இந்த அணுகுமுறைக்குள் அடங்காத அளவு ஆழ்ந்தது. ஆன்மீகம் ஒரு தாயின் ஒவ்வொரு குழந்தையும் தாயன்பை தனக்கு என்ற ஒரு அந்தரங்க, தனித்த பேறாகக் கருதி வளருவது போன்றது. எனவே எந்தப் பாரம்பரியத்தில் பிறந்திருந்தாலும் முன்னோடிகள் எத்தனை பேர் இருந்தாலும் தானே விண்டு தானே கண்டு உணர வேண்டியதே அது. புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கும், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்னும் மூன்றும் இந்திய மண்ணின் ஆன்மீக அணுகு முறைக்கான புரிதலுக்கு உதவும். ஆனால் ஆன்மீகம் ஐன்ஸ்டீனுக்கும் வாய்த்தது. இந்த மண்ணிலிருந்து துவங்குபவருக்கு சாத்திரங்கள் இந்தப் புரிதலுக்கு அன்னியாமானவற்றையும் அடக்கியவையே. சாத்திரங்களை ஒப்பிடுகையில் உபநிடதங்களில் பகவத் கீதையும் கடோபநிஷதமும் வாதப் பிரதிவாதமாக அமைந்தமையால் புரிதலுக்கான துவக்கதுக்கு மிக ஏற்றவை.


தங்களுடைய பதிவில் பலரும் விட்டுவிடும் தேடலுக்கான அவசியமான மனப்பாங்கு விடு பட்டுள்ளது. துறவு மன நிலையே அது. துறவு (மனதளவில்) நிகழும் தாகமும் அதற்கான போராட்டமும் இல்லாது ஒரு தேடல் நிகழ சாத்தியமே இல்லை. இந்த மனநிலையின் அதி உச்சக் கொதி நிலையில் எந்தச் சொல்லும் எந்த நிகழ்வும் எந்தச் சூழலும் கதவுகளைத் திறந்து விடும். ஜென் பாரம்பரியத்தில் கோன் (Koan) என்னும் படிமங்கள் நிறைந்த உரையாடல்கள், தரிசனங்கள் சரியான உதாரணம். ஜென் குரு பாரம்பரியத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. குரு சிஷ்ய பரம்பரை என்பது ஆன்மீகத்துக்கு மட்டுமே உரித்தானது போல ஏகதேசமாக உள்ளது தங்கள் பதிவு. கலைகள் தொடர்பானவை, கல்வி மற்றும் வித்தைகள் தொடர்பானவை அனைத்துமே குருவிடமிருந்தே பெறப் பட்டன. ஆனால் வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் துரோணர் போன்றோரும் குருவாகவே இருந்தனர். இசையையும் நாட்டியத்தையும் எடுத்துக் கொள்வோம். பழங்குடியினர் ஆப்பிரிக்காவிலோ இந்தியாவிலோ அபூர்வமான உச்சங்களை இத்துறைகளில் நிகழ்த்தினர். குரு சிஷ்ய பாரம்பரியத்திற்கு வெளியே தான் அவர்கள் இருந்தனர். ரமணர், ராம கிருஷ்ண பரமஹம்ஸர், வள்ளலார், பட்டினத்தார் போன்ற சித்தர்கள், நந்தனார், கண்ணப்ப நாயனார் போன்ற பழங்குடியினர் இவர்கள் எந்த குருவிடம் தீட்சை வாங்கினார்கள்? சம காலத்தில் ஒரு பண்பட்ட குருவைத் தாங்கள் குறிப்பிட இயலுமா?


ஒவ்வொரு குழந்தையும் தட்டுத் தடுமாறி நடை பயிலுவது போல அப்போது சிறிய பெரிய காய்ங்களைக் கொள்வது போல ஒவ்வொரு தேடலும் தேடுபவனைப் பதம் பார்க்கும். துறவு மனநிலை வாய்க்கும் பேறு பெற்றோன் மேற் செல்கிறான். ஏனையர் உழல்வர். அவ்வளவே. இந்தியப் பாரம்பரியம் மிக வளமானது. ஆனால் மானுடம் புதிய சிகரங்களைச் சென்றடையும் சாத்தியங்களும் செறிவும் கொண்டது. விஞானத்தில் மட்டுமல்ல மெய் ஞானத்திலும் காலம் புதிய தடங்களைக் கண்டெடுக்கும். ஏற்கனவே வெற்றிக்கு வழி வகுத்தவையோடு நாம் தேங்க வேண்டிய தேவை இல்லை.


அன்புடன் சத்யானந்தன்


அன்புள்ள சத்யானந்தன்


துறவு இந்த குறிப்பிட்ட விவாதச்சூழலுக்குள் வரவில்லை என்பதனால் பேசப்படவில்லை. ஆனால் துறவைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறேன். துறவு என்பது காவிகட்டி திருவோடு ஏந்தி தெருவோடு செல்வது மட்டுமல்ல என்பதே என் எண்ணம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் இருக்கும் துறவுமனநிலை என ஒன்று உள்ளது


அதை யாதெனின் யாதெனின் என்ற இந்தக்கட்டுரையில் பேசியிருக்கிறேன்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.