துயரம்

அன்புள்ள ஜெ,


மானுட துக்கம் பெரும் துக்கம் அல்லவா? மானுடம் தனது பரிணாமத்தின் ஒரு புள்ளியில் தவறான அடி எடுத்து வைத்துவிட்டது. அல்லது இந்த துக்கம் எல்லாம் நம்மால் விளைந்ததுதான் என்று என்ன சொன்னாலும் நமது துக்கம் பெரும்துக்கம் அல்லவா ? அறியாமையின் துக்கம், அறியவவே இயலாதவை அளிக்கும் துக்கம். என்னெனவோ ? உதாரணமாக சீதையின் துக்கம். கிறிஸ்து மானுட பாவத்தால் சிலுவை சுமந்து செல்வதில் உள்ள துக்கம்.


'அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுப்புடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்'. இது மீட்சியின் வரிதான். ஆனால் பின்பும் அந்த துக்கம் எஞ்சுகிறதே?


மானுட துக்கத்தின் மீட்சி பற்றி ஞான மரபு கூறுவது என்ன? நான் ஏதோ எழுத வந்து இந்தக் கேள்வியில் வந்து நிற்கிறேன். மன்னிக்கவும்.


அன்புடன்,

ராஜா.



அன்புள்ள ராஜா,


எல்லா மதங்களும் மானுட துக்கத்தைத் தீர்க்கும் வழி என்றே தங்களை முன்வைக்கின்றன.


மானுட துக்கம் இருவகை. வேதாந்தத்தில் அதை ஆதிதைவிகம் ஆதிலௌகீகம் என இரண்டாகப் பிரிப்பதுண்டு . இந்த உலகில்வாழ்வதற்கான போராட்டம் அளிக்கும் துயரம் ஆதிலௌகீக துக்கம். அன்றாட வாழ்க்கையின் இன்னல்கள். மானுட உறவுகள் அளிக்கும் சிக்கல்கள். இவற்றுக்கு நாம் காரணமாக இருக்கலாம். நம் சமூக அமைப்பு காரணமாக இருக்கலாம். இவை மானுட உருவாக்கங்கள்.


இந்த வாழ்க்கையை முழுமையாக அடைந்தாலும் தீராத துக்கம் உள்ளது மனிதனுக்கு. அதை இறைவனின் அல்லது நியதியின் அல்லது இயற்கையின் ஆக்கம் எனலாம். அதுவே ஆதிதைவிக துக்கம். வாழ்க்கையை அறியமுயன்று முடியாமல் போவதன் துக்கம், வாழ்க்கைக்கு அப்பால் என்ன என்ற தேடலின் துக்கம். 'தேடலின் புனித துக்கம்' என்று சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொல்கிறார்.


இவ்விரு துக்கங்களுக்கும் ஞானம் பதிலாக வரவேண்டும். ஆகவே ஞானம் இருவகை.லௌகீக ஞானம், ஆன்மீக ஞானம். இந்த உலகை விளக்கி இதிலுள்ள துயரத்தை வெல்லும் வழி சொல்லும் ஞானம் லௌகீகமானது. இந்த வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகக் காட்டி இதை அறிந்து கடக்க வழிகாட்டும் ஞானம் ஆன்மீகமானது. இதுவே நம் மரபில் உள்ள பிரிவினை.


இரு நிலையிலும் அறிவே துக்கத்தை நீக்குகிறது. ஆகவே அறியாமையே துக்கம் என்பது. இந்த எண்ணம் வேதாந்தம் ,பௌத்தம் ,சாங்கியம் வைசேஷிகம் என எல்லாத் தரப்புக்கும் பொதுவாக இருப்பதைக் காணலாம்.


அநித்தம், அநாத்தம், துக்கம் என பௌத்தமெய்ப்பொருள் மூன்று. நிலையின்மை , சாரமின்மை ,அறியமுடியாமை. மானுடனால் மானுடனாக இருந்துகொண்டு பிரபஞ்சமெய்மையை அறிய முடியாது. இந்த நிலையே துக்கம். இந்த அறியமுடியாமையையே சூனியம் என்றார்கள் யோகாசார பௌத்தர்கள். முழுமையாக அறிவை அடையும் நிலை என்பது புத்த நிலை. ஆகவே மானுடனுக்கு எந்நிலையிலும் அறியாமை எஞ்சும், ஆகவே துக்கமும் கொஞ்சம் எஞ்சியிருக்கும்.


அறிதல் மூலம் துக்கங்களைக் களைந்தபடி புத்தநிலை நோக்கி மனிதன் செல்கிறான் என்பது பௌத்த தரிசனம். ஆகவே அறிவு என்பது அவனுள் இருக்கும் துக்கத்தை அகற்ற வேண்டும். ஒன்று உண்மையான அறிவா இல்லையா என்பது அது எந்த அளவுக்கு துக்க நீக்கம் செய்கிறது என்பதை ஒட்டியே அமைகிறது என்கிறது பௌத்தம்.


வேதாந்த மரபில் அறியாமை என்பது 'நான் அறிபவன்' என்ற பேதநிலையே. அறிவு அறிபவனை அறிபடுபொருளுடன் கலக்கச் செய்கிறது. பேதமற்ற நிலையை நோக்கிக்கொண்டு செல்கிறது. துக்கம் என்பது பேதநிலை. அறிதல் என்பது பேதம் அறும் நிலை.


மானுட துக்க மீட்சி பற்றி நான் நம்பி ஏற்கக்கூடிய இரு இந்திய மெய்ஞான தரிசனங்கள் இவையே.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

மாசு
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
மதங்களின் தொகுப்புத்தன்மை
தூய அத்வைதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.