கோயிலுக்குச் செல்வது ஏன்?

திரு ஜெமோ


தங்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய பதில் (அதியமானுக்கு) படித்தேன்.


இந்த பக்தி- ஞான – கர்ம வழிகள் தனித்தனியா ? அவைகளுக்குள் பிணைவுகள் ஒரு எல்லை வரை உண்டே ? 13 ஆம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் ஞானம் என்றால் என்ன என்று கூறும்போது " என்மீது மாறாத அனன்ய பக்தி வைத்து " (மயி சானன்ய யோகேன பக்தி அவ்யபிசாரிணீ ") என்று ஒரு தகுதி கொடுக்கிறார். (பல தகுதிகளில் இதுவும் ஒன்று ). முடிவில் இவை மட்டுமே ஞானம் . மற்றவை எல்லால் அஞ்ஞானமே என்று சொல்லி விடுகிறார். (ஏதத் ஞானம் இதி ப்ரோக்தம் அஞ்ஞானம் யத தோன்யதா )


பத்தாம் அத்தியாயத்தில் தன் மீது பக்தி வைத்தவர்களுக்கு புத்தி யோகம் தருவதாக உறுதியளிக்கிறார். இன்னொரு இடத்தில் ' எல்லாக் கர்மங்களும் ஞானத்தில் தான் நிறைவடைகின்றன " (சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே ) என்கிறார்.


பதின்மூன்றில் தொடங்கி குணம், சரத்தை தெய்வ அசுர சம்பத்துகள் விளக்குதல் ஆகிய எல்லா இடங்களிலும், முத்தாய்ப்பு ஸ்லோகம் பக்தியைப் பற்றியே வருகிறது. கீதையை மேற்கோள் காட்டி விட்டால் பிறகு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்வது பெரிய முரண் அல்லவா ? கீதை மட்டும் தானே கர்மத்தையும் சாங்கியத்தையும், பக்தியையும் ஒன்றெனக் காட்டி விவாதித்தது ? கீதை அல்லவா உருவ வழிபாட்டை முதன் முதலில் நியாயப் படுத்தியது ? கீதை அல்லவா கூறுபவனை புருஷோத்தமனென்று தன்னிலையில் கூறுகிறது ?


ஞான மார்க்கி என்பவன் பக்தி அற்றவனா ? இல்லை. ஆயினும் ஒரு எல்லைக்கு மேல் அவனுக்கு பக்தி தேவை இல்லை.


கர்ம மார்க்கி ஞானம் அற்றவனா ?- இல்லை. ஆயினும் கர்ம பல தியாகம் செய்ய ஞானம் ஒன்றும் பெரிதாக தேவை இல்லை.


பக்தி மார்க்கி ஞானம் அற்றவனா ? சொல்ல முடியாது. ஞான மார்க்கம் விவேகத்தைத் துணையாக உடையது. பக்தி சுதந்திரமாக அடைபடு பொருளையே துணையாக கொண்டது. இதன் காரணமாகவே " என்னை இடைவிடாது அன்போடு பூசிப்பவர்களுக்கு நான புதியோகத்தை நல்குகிறேன் " என்று கிருஷ்ணன் உறுதி கூறுகிறான்.


தாங்கள் கோவிலுக்கும் செல்கிறீர்கள். அங்கே நீங்கள் உணர்வது என்ன ? கோவில் ஒரு தாந்திரீக சூக்கும வளாகம். அதில் பக்தியை விட உருவக ஏற்றலும் (symbolism ), மற்றும் பக்தியின் பிரயோகமான உபாசனையின் வெளிப்பாடும் அல்லவா அதிகம் ?


வெங்கட்


அன்புள்ள வெங்கட்


கீதையை நீங்கள் அணுகும் முறை வழக்கமாக பக்தி மரபில் இருந்து செய்யப்படுவது. கீதையை ஒட்டுமொத்தமாக ஒரே உபதேசமாக, கடவுளின் நேரடி வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்வது. நான் முன்வைக்கும் அணுகுமுறை யோகாத்ம இயங்கியல் கொண்டது — அதாவது முரணியக்கமுறை [dialectics ] அது வேதாந்தத்தின் வழி. அதை நடராஜகுரு விரிவாக எழுதியிருக்கிறார். நான் தமிழில் அதை விரிவாகவே எழுதியிருக்கிறேன்.


அதன்படி கீதை ஒரு உபதேசமஞ்சரி அல்ல. ஒரு விவாதம். ஒரு முரணியக்க தர்க்கப்போக்கு, அதன் அத்தியாயங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்று வளரவில்லை. ஒன்றைப் பரபக்கமாகக் கொண்டு இன்னொன்று உருவாகிறது. கீதையில் உலகியல்வெற்றி பற்றியும் வருகிறது. உலகியல் துறப்பு பற்றியும் வருகிறது. பக்தி மற்றும் சரணாகதி பற்றியும் வருகிறது, தூய ஞானமார்க்கம் பற்றியும் வருகிறது. அதைப்பற்றிப் புரிந்துகொள்ள சிறந்த வழி இதுவே. கீதையின் எல்லா அத்தியாயங்களும் கீதை யோகாத்ம மார்க்கத்தை முன்வைப்பது என்றே முடிகின்றன


கோயிலுக்கு நான் ஒரு கலைரசிகனாக மட்டுமே செல்கிறேன்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

நான் இந்துவா?
உணவும் விதியும்
கடிதங்கள்
கடிதங்கள்
கீதை கடிதங்கள்
கீதை கடிதங்கள்
கீதையும் யோகமும்
கர்ம யோகம் 10
கர்மயோகம் 9
கர்மயோகம் 8

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.