மரணம்

அன்புள்ள ஜெயமோகன்,


இன்று கண்முன்னே ஒரு மரணத்தைக் கண்டேன். பக்கத்துக் கடையில் வேலை செய்யும் பாதுகாவலர், திடீர் என்று நின்ற இடத்திலேயே குப்புற விழுந்தார். சென்று பார்த்தபோது தவளை போல் கால்கள் மடங்கியிருக்க, முகம் தரையில் முட்டிக்கொண்டிருந்தது. தூக்கி உட்கார வைத்தோம், வலிப்பாக இருக்கும் என்று கையில் சாவியை ஒரு நிமிடம் கொடுத்துப்பார்த்தோம். ஒரு நிமிடத்தில், 'ஹூம்' என்ற சத்தத்தோடு உடம்பு லேசாய்த் தூக்கிப்போட்டது. அவர் கண்களைப் பார்த்தேன்… வாயெல்லாம் ரத்தமாக, கண்கள் செம்மண் நிறத்தில், வெடித்து விடும்படி இருந்தது.


நாங்கள் இதன் தீவிரத்தை உணரவே இல்லை. மயங்கிக் கீழே விழுந்துவிட்டார் அதில் அடிபட்டிருக்கிறது. இப்போது தெளிந்து விடுவார் என்றே நினைத்தோம். அவர் கீழே விழுவதற்கு 3 நிமிடங்கள் முன்புதான், எனக்கு காபி கூட வாங்கித் தந்தார். உடனே ஆட்டோ வரவழைத்துப் பக்கத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். டாக்டர் பார்த்துவிட்டு, அவர் இறந்து விட்டார் என்றார். ஹார்ட் அட்டாக் ஆம். வயது நாற்பது தான் இருக்கும். 3 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள். அவர் வீட்டில் தகவல் சொன்னோம். அவர் மனைவி வரவில்லை. வீட்டில் அழுதுகொண்டிருக்கிறாராம்.


செக்யூரிட்டிகளுக்கென்றே ஒரு அமைப்பு இருக்கிறது. அவர்கள் விதிப்படி, சேர்ந்து 240 நாட்கள் தாண்டினால்தான் நஷ்ட ஈடு ஏதாவது வருமாம். ஆம்புலன்சுக்கு 1000 ரூபாயும், செலவுக்கு 5000 ரூபாயும் கொடுத்துக் கணக்கை முடித்துவிட்டார்கள். நிர்வாகம், எக்காரணம் கொண்டும் பெயர் வெளியே வராமல் இருக்க கவனமாய் இருக்கிறது. எல்லாம் இரண்டு  மணி நேரத்தில் முடிந்தது. இப்போது உலகம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருக்கிறது.


மரணங்களே வாழ்வின் அபத்தங்களைத் தோலுரித்துக் காட்டி விடுகின்றன. இந்த இயங்கும் உலகத்தில், இதை எல்லாம் மறந்து விட்டு நானும் எதிலாவது, "பிஸி" ஆக இருக்க வேண்டும் போல. இரண்டு மாதங்கள் எனக்கு நாள் தவறாமல் காபி வாங்கித் தந்த அந்த ஜீவனுக்கு நான் கடமைப் பட்டவனில்லையா


பாலா

கோவில்பட்டி.


அன்புள்ள பாலா


நான் முதன்முதலில் பார்த்த மரணம் ஒரு விளையாட்டுத்தோழி. பீனா என்று பெயர்.  நான் முழுக்கோடு என்ற ஊரில் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டருகே சாந்தா அக்காவின் நாலைந்து பிள்ளைகளில் ஒருத்தி. சாந்தா அக்காவின் கணவர் ஒரு டீக்கடை வைத்திருந்தார்.


அப்போது எனக்குப் பத்துவயது. அவளுக்கு மூன்று வயது. நான் உலகையே ஆராயும் துடிப்புடன் வீட்டைச்சுற்றிய தோட்டத்தில் அலைவேன். என் தங்கையுடன் சேர்ந்து என் பின்னாலேயே வந்துகொண்டிருப்பாள். நான் இடுப்பில் உடைவாள் வைத்திருப்பேன்.அப்போது குமுதத்தில் தொடராக வந்துகொண்டிருந்த சாண்டில்யனின் ராஜமுத்திரையை விரும்பி வாசித்துவந்தேன். அவர்களை இளவரசிகளாக உருவகம் செய்துகொள்வேன். சின்ன இளவரசி இடையில் ஒரு கருப்பு நூல் மட்டுமே கட்டியிருப்பாள் என்பது பெரிதாகப்படவில்லை.


இத்தனை வருடங்களுக்குப் பிறகும் முகம் நினைவிருப்பதை ஆச்சரியம் என்றும் சொல்லமுடியவில்லை.சிவந்த நிறமும் சுருண்ட முடியும் பெரிய கண்களும் கொண்ட குழந்தை. சரியாகப் பேச்சு வராது. 'ச்சேட்ட' என்று திக்கித்திக்கி என்னை அழைப்பாள். நான் கொடுக்கும் அடிகளைப் பொறுமையாக வாங்கிக்கொள்வாள்.

ஒருமுறை அவள் அப்பா கொண்டுவந்த பச்சைத்தவளையைக் கறிவைத்து அவளுக்கு ஒரு கொட்டாங்கச்சியில் கொடுத்திருதார்கள். அதைத் தின்றபடி 'மீம்மி அல்லா மாக்ரி மாக்ரி' [மீன் இல்லை தவளை தவளை] என அவள் பரவசமாகச் சொன்ன காட்சி துல்லியமாக நினைவிருக்கிறது.


அடுத்த காட்சி முந்தையநாள் இரவில் அவள் இறந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு நான் ஓடியதும் அங்கே சாணி மெழுகிய திண்ணையில் ஒரு மரப்பலகையில் மல்லாந்து கிடந்த வெளிறிய சிறு உடலும்.  தலைமுடி குஞ்சியாகக் கட்டப்பட்டிருந்தது, வாழைநாரினால்.


என்னை 'போடா போடா' என துரத்தினார்கள். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் தூங்குகிறாள், விழித்துக்கொள்வாள் என்றே தோன்றியது. கண்ணிமைகள் அசைவதைப்போல மார்பு அசைவதைப்போல.

யாரும் பெரிதாக அழவில்லை. அன்றெல்லாம் குழந்தைகள் சாவது சர்வசாதாரணம். சடலத்தைப் பலகையுடன் கொண்டு சென்றபோது மாட்டேன் என்பது போல தலை மெல்ல ஆடியது. அந்தக்கணம் என் அகம் அதிர்ந்தது, அவள் செத்துவிட்டாள் என நான் அப்போது உள்ளூர அறிந்தேன். ஒரு குளிர்ந்த அலை போல அந்த எண்ணம் எனக்குள் பரவி நான் டிராயரில் சற்று சிறுநீர் கழித்தேன்.


நாற்பது வருடங்கள். செத்துப்போனவர்களுக்கு வயதாவதில்லை -பீனா இன்றும் மூன்று வயதுக்குழந்தை. அவள் அம்மா அப்பா எவரும் இன்றில்லை. ஒருவேளை என் நினைவில் மட்டும் அவள் வாழ்கிறாள் போல

என் வாழ்க்கைநோக்கைத் தீர்மானித்ததில் பீனாவுக்கான பங்கு என்ன என்று சிலசமயம் நான் சிந்திப்பது உண்டு


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.