மெல்லிய பூங்காற்று

இரு தருணங்களிலாக நான் ஒரு திரைப்படத்தைப்பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கிய 'தண்ணீர் தண்ணீர்'. முதல்முறை பார்க்கும்போது எனக்கு 19 வயது. கல்லூரி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பை வெட்டிவிட்டுக் கையில் புத்தகங்களுடன் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்குக்குச் சென்று சொட்டிக்கொண்டிருந்த மழையில் நனைந்துகொண்டு வரிசையில் நின்று ஈரஉடலில் மின்விசிறிக்காற்று குளிரக்குளிர, அரங்கெங்கும் ஈர உடைகள் நீராவியை உமிழ,  தென்தமிழ்நாட்டின் கடும் வறட்சியைப்பற்றிய அந்தப்படத்தைப்பார்த்தேன்.


[image error]

மரோசரித்ரா


ஆரம்பித்த சில கணங்களுக்குள் பாலைநிலம் வழியாக வெக்கையில் உடல் எரியச் சென்றுகொண்டிருந்தேன். தலையில் தண்ணீர்க் குடங்களுடன் வெறும் கால்களுடன் சரிதா அந்த முள்பரவிய வெற்று நிலத்தில் நடந்துகொண்டே இருந்தார். அவர் நடந்து நடந்து கண்முன் விரித்த அந்த நிலத்தில் வெடிப்புகள் வாய்திறந்து தண்ணீர் தண்ணீர் என்று முனகிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். வழியில் ஒருவன் சாக்கடை நீரை அள்ளிக்குடிக்க முற்படுகையில் சரிதா அவனைத் தடுத்து, சின்னமூக்கைச் சுளித்துச் சிரித்து, 'இந்தா குடி' என நீரை அவனுக்கு ஊற்றுவார்.


என்னை நெகிழச்செய்த அந்தக்காட்சியை எத்தனையோ வருடங்களாக நினைவில் வைத்திருக்கிறேன். எந்த வறட்சியிலும் வறளாத கருணை ஒன்றை அது அடையாளம் காட்டியது. உண்மையில் படத்தின் மையமே அதுதான். வறண்ட மண்ணுக்கும் வறட்சியை அறியாத மனங்களுக்கும் இடையேயான போராட்டம். அந்த படம் முழுக்க சரிதா தென்தமிழ்நாட்டின் கிராமத்துப்பெண்ணாகவே தெரிந்துகொண்டிருந்தார். கொசுவத்தைச் சுழற்றிச் செருகும் அழகு, கையைக் கண்மேல் வைத்து வானை நோக்கி ஏங்கும் துயரம், கண்ணீர் படர்ந்த பெரிய கண்களில் தெரிந்த சீற்றம். அன்று சரிதாவுக்காகவே அந்தப்படத்தை ஏழுமுறைக்குமேல் பார்த்தேன்.


இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி ஊடகவியல்துறை கே.பாலசந்தரின் ஆக்கங்கள் பற்றி ஒரு கருத்தரங்கை ஏற்பாடுசெய்தது. அதில் நான் அவரைப்பற்றிப் பேசவேண்டும் என்று நண்பர் வசந்த் கேட்டுக்கொண்டார். நான் மீண்டும் எனக்குப்பிடித்த கே.பாலசந்தரின் படங்களைப்பார்த்தேன். என் மனதில் முதலிடத்தில் இருந்த 'தண்ணீர் தண்ணீர்'தான் முதலில். பழைய குறுவட்டு ஓடி சிவந்த காட்சிகள் தெளிந்து சரிதா அந்தக் காய்ந்த மண்ணில் நடக்க ஆரம்பித்ததும் நான் மீண்டும் அதே உணர்ச்சிகளுக்கு ஆளானேன். அந்தப்படத்தின் எவ்வளவோ விஷயங்கள் பழைமையாகிவிட்டன. இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்புகள்… ஆனால் சரிதாவின் அந்தக் கனிவும் எக்கமும் சீற்றமும் அதே நுட்பங்களுடன் அதே உத்வேகத்துடன் இருந்தது.


அது என் கடந்தகால ஏக்கமா என்ற ஐயம் ஏற்பட்டது. நாற்பது தாண்டும்போது இளமைக்காலகட்டம் தனி ஒளி கொள்ள ஆரம்பிக்கிறது. நான் அருகே அமர்ந்து படம்பார்த்த என் மகனையே பார்த்துக்கொண்டிருந்தேன். பொதுவாகத் தமிழ்ப்படங்களை ரசிக்காதவர்கள் என் பிள்ளைகள். படம் முடிந்ததும் மகன் உணர்வெழுச்சியுடன் சொன்னான் 'நல்ல படமா இல்லையான்னு சொல்லத்தெரியல்ல அப்பா. ஆனா பாத்து முடிக்கிறப்ப ஒரு பயங்கரமான ஆவேசம் வருது' நான் சொன்னேன் 'அதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அது நினைச்ச உணர்ச்சிய உண்டுபண்ணுதே'


அவனே சரிதா பற்றி ஏதாவது சொல்வான் என எதிர்பார்த்தேன். அவன் நல்ல மலையாளப்படங்களில் ஏற்கனவே சரிதாவை பார்த்திருந்தான். படத்தைப்பற்றி மேலும் பேசும்போது அவன் சொன்னான் 'அந்த கிராமத்துப்பொண்ணு நல்லா நடிச்சிருக்கா அப்பா…' நான் புன்னகையுடன் 'அது சரிதா..' என்றேன். 'யாரு? காதோடு காதோரம் படத்திலே நடிச்சாங்களே அவங்களா?' மீண்டும் படத்தின் குறுவட்டை எடுத்துப்பார்த்து 'அட ஆமா' என்றான் 'தெரியவே இல்ல அப்பா…அப்டியே அந்த மண்ணில நிக்கிற முள்ளுச்செடி மாதிரி இருந்தாங்க அவங்களும்'


[image error]

தண்ணீர் தண்ணீர்


கடும் விமர்சனங்கள் கொண்ட அடுத்த தலைமுறையிடமிருந்து வரும் பாராட்டு. ஒருவேளை சரிதாவுக்கு கிடைக்கச் சாத்தியமான அதிகபட்ச அங்கீகாரமும் அதுவாக இருக்கலாம். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் நான் சரிதாவின் ரசிகனாக இருந்தேன் என்று சொன்னேன். தனிப்பட்டமுறையில் நான் இரண்டே நடிகர்களுக்குத்தான் ரசிகன் என்று சொல்லிக்கொள்வேன். அவர்கள் என்ன நடித்தாலும் அது எனக்குப்பிடிக்கும். சரிதாவை விட்டால் மலையாளநடிகர் திலகன். அவர்கள் நடிப்பதையறியாத நடிகர்கள். எந்தக் கதாபாத்திரத்திலும் மிகச்சாதாரணமாக கலந்துவிடும் ஆன்மா கொண்டவர்கள். அக்கதாபாத்திரத்துக்கு வெளியே கொஞ்சம் கூட நீட்டிநிற்கும் அகந்தையோ ஆளுமையோ இல்லாதவர்கள்.


சரிதாவின் முந்தைய படங்களை உண்மையில் நான் அதன்பின்னர்தான் பார்த்தேன். தப்புத்தாளங்கள், பொண்ணு ஊருக்குப் புதுசு, மௌனகீதங்கள், வண்டிச்சக்கரம்,மலையூர் மம்பட்டியான் போன்ற பல படங்களை சரிதாவுக்காகப் பலமுறை பார்த்திருக்கிறேன். பிற்காலப்படங்களில் சரிதாவின் நடிப்பை மிகைப்படுத்தும் காட்சிகளை இயக்குநர்கள் அளித்து மிகையாகவே நடிக்கவும் செய்திருந்தார்கள். ஆனால் அவற்றையும் மீறி அப்படங்களில்கூட அவரது நடிப்பு நுட்பங்களும் மெருகும் கொண்டதாக இருந்தது


நடுவே சில வருடங்கள் நான் திரைப்படங்கள் பார்க்கவில்லை. மீண்டும் எண்பதுகளின் இறுதியில் மலையாளப்படங்களில் புதியதாக சரிதாவின் நடிப்பைக் கண்டுகொண்டேன். இன்னும் முதிர்ச்சியும், இன்னும் அடக்கமும், இன்னும் நுட்பங்களும் செறிந்த சரிதா. இன்னும் ஆழமான, இன்னும் யதார்த்தமான கதாபாத்திரங்கள். ஜோஷி இயக்கிய 'சம்பவம்' சிபி மலையில் இயக்கிய 'தனியாவர்த்தனம்' பரதன் இயக்கிய 'காதோடு காதோரம்' போன்ற படங்களில் தெரிந்த சரிதா நான் மறக்கமுடியாத முகம்.


வழக்கமான பார்வையில் ஒரு கதாநாயகிக்கான தோற்றம் கொண்டவர் அல்ல சரிதா. குள்ளமான, குண்டான, கரிய பெண். நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒத்துவராத சின்ன உதடுகளும் சின்ன மூக்கும் கொண்ட வட்டப் 'பம்ளிபாஸ்' முகம். ஆனால் சரிதா அளவுக்கு எந்த நடிகையும் துல்லியமான முகபாவங்கள் வழியாகக் கதாபாத்திரத்தின் அகத்தைக் காட்சிப்படுத்தியதில்லை.


எந்த அம்சம் சரிதாமேல் அத்தனை பெரிய ஈர்ப்பை உருவாக்கியது? நான் அன்றுவரை திரையில் கண்டிருந்த எல்லா நடிகைகளும் செயற்கையான நளினங்களையும், செயற்கையான உணர்ச்சிகரத்தையும் வெளிப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள். சரிதாவின் அசைவுகளும் சிரிப்பும் பேச்சும் எல்லாமே மிகமிக சகஜமானவையாக இருந்தன. அது உருவாக்கிய ஆச்சரியத்தை இன்று சொல்லிப்புரியவைப்பது கடினம்.


அன்றைய கதைகள் பெண்களைச் சார்ந்தவை. பெண்கள் உணர்ச்சிக்கொந்தளிப்பாக நடிப்பதற்கானவை. சரிதா அத்தகைய கதாபாத்திரங்களைக்கூட மிக அடக்கமாகவும் நுட்பமாகவும்தான் வெளிப்படுத்தியிருந்தார். மிகையாக நடித்தார் என்று அவரைப்பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகமிகக் குறைவானவை. மிக அசட்டுத்தனமான, சம்பிரதாயமான கதாபாத்திரங்களில்கூட முகபாவனைகளின் நுட்பங்கள் வழியாகத் தனி அழகை சரிதாவால் உருவாக்க முடிந்திருக்கிறது என இப்போது தோன்றுகிறது.


பலவகையிலும் சரிதாவை எஸ்.ஜானகியுடன்தான் ஒப்பிடவேண்டும். திரைப்பாடலுக்குரிய கணீர்க்குரல் இல்லாத ஜானகி கடும் முயற்சியால் தனக்கென இனிய குரலை உருவாக்கிக்கொண்டார் என்பார்கள். சரிதாவும் அப்படியே, தோற்றத்தின் எதிர்மறை அம்சத்தை நடிப்பால் வென்றவர் அவர்.


மலையாளத்தின் எல்லா வகையான வட்டார உச்சரிப்புகளையும், சாதிய வேறுபாடுகளையும் துல்லியமாகத் தன் பாடல்களில் கொண்டுவர முடிந்த பாடகி என எஸ்.ஜானகியைச் சொல்லலாம். சரிதாவும் அப்படியே. இந்த அளவுக்கு நுட்பமாக மலையாளப்பெண்களின் வெவ்வேறு வகையான உடல்மொழியை முகபாவனைகளை நடித்துக்காட்ட சரிதாவால் முடிந்ததை சாதனை என்றே சொல்லவேண்டும். அதேசமயம் தமிழில் மலையாளச்சாயலே இல்லாமல் அப்பட்டமான தமிழ்ப்பெண்ணாகவே அவர் காட்சியளித்தார். ஆனால் எஸ்.ஜானகியைப்போலவே சரிதாவும் தெலுங்கர்.


[image error]


வேறெந்தக் கலைஞர்களைவிடவும் தமிழில் திரைக்கலைஞர்கள்தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் சாதனையாளர்கள் எளிதில் மறக்கப்படுவதும் திரைத்துறையிலேயே. சரிதா தமிழ்த்திரையின் சாதனைக்கலைஞர்களில் ஒருவர். அந்த அங்கீகாரத்தை அவருக்கு அளித்து எழுதப்பட்ட குறிப்புகளை நான் கண்டதில்லை.  சரிதாவின் நடிப்பு அவருக்குப்பின்னால் வந்த எல்லா கதாநாயகிகளிலும் ஒரு பாதிப்பைச் செலுத்தியிருக்கிறதென்றே நினைக்கிறேன். இயல்பான சரளமான புழக்கமே உண்மையான நடிப்பு என்பதைத் தமிழ்த் திரைப்படத்தின் திருப்புமுனைக் காலகட்டத்தில் வந்து தமிழ் ரசனைக்கு முன்னால் நிறுவிக்காட்டினவர் அவர். திரைச்சீலைகளை நடனமிடச்செய்தபடி கடந்து செல்லும் மெல்லிய பூங்காற்று போல தமிழ்த் திரைவழியாகக் கடந்து சென்றவர்.


 


காதோடு காதோரம்


http://www.themalayalam.com/viewvideo/kathodu+kathoram-1002/


 


[சண்டே இண்டியன் இதழில் வெளிவந்தது]





சரிதா

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.