ரசனைவிமர்சனத்தின் வழி- எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு

அன்புள்ள எம்.டி.எம்,


உங்கள் கட்டுரை கண்டேன்


நீங்கள் பேச ஆரம்பித்தபோது என்னை உங்கள் வசதிப்படி , சிந்தனைத்துறை சாராத மொழியில், முதலில் வகுத்துக்கொண்டீர்கள். நான் என்னுடைய கட்டுரையில் செய்திருப்பது உங்களுடைய அந்த வரையறைப்படி என் எழுத்துக்கள் அமைந்திருக்கவில்லை என்பதை நிலைநாட்டுவதையே. அதை ஆரம்பத்திலேயே செய்யாவிட்டால் நீங்கள் அந்த திசையிலேயே என்னை உறுதிப்படுத்தி, அதன் மேல் விமர்சனங்களைக் கட்டமைத்து, முடிக்கமுடியும். அதன்மூலம் எனக்கு எந்தப் பயனும் இல்லை. நான் இங்கே பேசிக்கொண்டிருப்பதே இந்த விவாதம் மூலம் உங்களிடமிருந்து ஒரு சரியான, கறாரான எதிர்விமர்சனத்தை சிந்தனைத்துறை மொழியில் பெற்றுக்கொள்வதற்காகத்தான். அது எனக்கு இப்போது மிகவும் தேவைப்படுகிறது.


நீங்கள் போகிறபோக்கில் எனக்களித்த ஒவ்வொரு முத்திரையையும் என்னுடைய எழுத்துக்களை எடுத்துக்காட்டிக்கொண்டு திட்டவட்டமாக மறுப்பதையே நான் செய்திருக்கிறேன். நீங்கள் அவற்றை ஒற்றைவரிகளில் சொல்லலாம். நான் அதேபோல ஒற்றை வரியில் 'அதெல்லாமில்லை' என்று சொல்ல முடியாது. என் அணுகுமுறையை விளக்கியாகவேண்டும்.


உங்கள் சொற்களையே பாருங்கள். 1.காலாவதியான ரசனைவிமர்சனத்தை முன்வைப்பவர். 2. சந்தைப்பொருளியலுக்கு ஆதரவான விமர்சனத்தைக் கட்டமைக்கிறவர் 3. இந்திய தேசியத்தை ஒற்றைப்படையாக உருவகிப்பவர். அதனடிப்படையில் எல்லாவற்றையும் ஒற்றைப்படையாக்குபவர் 4. பன்மைச்சமூகத்தில் ஒற்றைப்படையான இறுதி மதிப்பீடுகளைக் கட்டமைத்து வன்முறையை செலுத்துபவர். 5 கழிசடை சினிமா என்ற வணிகதளத்தில் செயல்படுபவர் 6 . பகவத்கீதை போன்ற பழைமைவாத நூல்களை முன்வைப்பவர் 7 . நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம்தட்டுபவர். 8.வலதுசாரி


இவை ஒவ்வொன்றையும் நான் மறுத்திருக்கிறேன். அதுதான் எனது அக் கட்டுரையின் நோக்கம். விவாதத்தின் தொடக்கத்திலேயே அதை நான் செய்தாகவேண்டும் இல்லையா? அக்கட்டுரையில் 1. நான் முன்வைக்கும் ரசனைவிமர்சனம் எப்படி எப்போதுமே விமர்சனமரபின் இன்றியமையாத மைய ஓட்டமாக உள்ளது என்கிறேன். 2. அது எப்படி சந்தைப்பொருளியலுக்கு எதிரானது என்கிறேன். 3. நான் முன்வைக்கும் இந்தியதேசிய உருவகம் என்பது பன்மைத்தன்மையைக் கொண்டது என்றும் இறந்தகாலப்புனிதங்களில் இருந்து உருவாக்கிக்கொண்ட ஒற்றைத்தேசியம் அல்ல என்றும் சொல்கிறேன். 4. இந்தியாவின் பன்மைத்தன்மையை அங்கீகரித்து அதன் மையத்தில் நிகழும் தொடர்விவாதத்தின் ஒருபகுதியாகவே பேசுகிறேன், ஒற்றைப்படையாக்கத்தை எதிர்க்கிறேன் என விளக்குகிறேன். 5. நான் செயல்படும் சினிமா கழிசடை சினிமா அல்ல,தமிழில் உருவாகிவரும் மாற்று சினிமா என்கிறேன் . 6. பகவத்கீதையை நான் சம்பிரதாயமான மதநூலாக விளகவில்லை, அதன்மீதான விளிம்புநிலை வாசிப்பின் ஒரு பகுதியாக எழுதுகிறேன் என்று காட்டுகிறேன் . 7.நவீனத்துவத்தின் குரல்களை மட்டம்தட்டவில்லை, அவற்றை உள்வாங்கிக்கொள்ள முயல்கிறேன். அதுவே என் விவாதத்தின் அடிப்படை என்கிறேன் 8. வலதுசாரி என்ற எளிய முத்திரை எனக்குச் செல்லுபடியாகாது. அப்படி ஒரு நிலைப்பாடெல்லாம் எனக்குக் கிடையாது என்கிறேன்


இதற்காகவே என் பொதுநோக்கை விரிவாகப் பேசுகிறேன். நீங்கள் உருவாக்கும் இருமையைச் சுட்டிக்காட்டுகிறேன். அந்த இருமையை நீங்கள் செய்யவில்லை, அல்லது கைவிட்டுவிட்டீர்கள் என்றால் அதுதான் எனக்கும் தேவை. உங்களுடையது ஒரு மாற்றுப்பார்வைதான் என்றால் அதில் எனக்கு மறுப்பே இல்லை.


இதெல்லாமே நீங்கள் தமிழ்ச்சூழலில் எப்போதும் ஒலிக்கும் அந்த ரெடிமேட் பதில்களைச் சொல்லவேண்டாம் என்பதற்காக. அவற்றை நான் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் அந்த முத்திரைகளுக்கும் என் எழுத்துக்கும் சம்பந்தமில்லை. என் அணுகுமுறைக்கு எல்லைகளும் போதாமைகளும் இருக்குமென்றால் அதன் தளங்களே வேறு. நீங்கள் அங்கே வந்து என் தரப்பை ஆக்கபூர்வமாக மறுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அது அல்லாதவற்றை மறுத்துக் களத்தைக் குறிப்பானதாக ஆக்குகிறேன், அவ்வளவுதான். மற்றபடி நானே என்னைப்பற்றி எதையும் கட்டமைக்கவில்லை. எதையும் உரிமைகொண்டாடவுமில்லை.


அந்த மதிப்பீடுகளைப் போகிறபோக்கில் வைத்த நீங்கள் அவற்றுக்கான என் மறுப்புகளை மறுக்காதநிலையில் என் தரப்பை ஏற்றுக்கொண்டதாகவே எடுத்துக்கொள்கிறேன். ஆகவே சந்தைப்பொருளியலுக்கு ஆதரவான, இந்திய ஒற்றைத்தேசியத்தை நிலைநாட்டும் நோக்கு கொண்ட, மரபார்ந்த பார்வையில் ஒற்றைப்படை அதிகாரத்தைக் கட்டமைக்கும் விமர்சகனுக்கான பதிலை எனக்கு சொல்லவேண்டாம். என் உண்மையான தரப்பை எதிர்கொள்ளுங்கள்.


ஐந்தும் ஆறும் ஏழும் குற்றச்சாட்டுகளை உங்களைப்பற்றி நீங்களே சொல்லிக்கொண்டது என்கிறீர்கள். நல்லது, நீங்கள் நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம்தட்டுபவர் என நீங்கள் நினைக்கலாம்.நான் அப்படி நினைக்கவில்லை.நீங்கள் நவீனச்சிந்தனைகளை அறிந்து முன்வைப்பவர். ஆகவேதான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.


ஒருவழியாக நீங்கள் உண்மையிலேயே நான் எதிர்பார்த்த மறுதரப்பு விவாதங்களுக்குள் வந்துவிட்டீர்கள். கொஞ்சம் நீளமாக எழுதினாலும் அதை சாதித்ததில் எனக்கு நிறைவுதான்


*


இனி நீங்கள் வைக்கும் விமர்சனம். நான் பாரதியை 'demystify செய்யும் நோக்கம் எனக்கில்லை' என்றே அக்கட்டுரையில் தெளிவாகச் சொல்கிறேன். அவரது கவித்துவ உள்ளடக்கத்தை எவ்வகையிலும் மறுக்கவோ உடைக்கவோ நான் முனையவில்லை. கட்டுடைப்பு என் விமர்சனமுறையும் அல்ல. எங்கும் எப்போதும் நான் demystification, கட்டுடைப்பு போன்றவற்றைச் செய்வதாகச் சொல்லிக்கொண்டதே இல்லை. அந்த வழிமுறைகளுக்கு நேர் எதிரானவன் என்றே சொல்லிக்கொள்வேன்.


சொல்லப்போனால், ரசனை விமர்சனத்தின் வழியே mystify செய்வதுதான். இலக்கியப்படைப்பை மேலும் மேலும் நுட்பங்களும் ஆழங்களும் கொண்டதாகக் கண்டடைவதன் மூலம் ரசனைவாசிப்பு படைப்பை இன்னும் மர்மங்களும் பூடகங்களும் கொண்டதாகவே கட்டமைக்கிறது. நான் பாரதியை விமர்சனம் செய்தேனென்றால் அவரை வைதிகமரபுக்கும், சித்தர்மரபுக்கும், மேலைநாட்டு ஜனநாயகமரபுக்கும் நடுவே உள்ள ஒரு புள்ளியில் நிறுத்தி முடிந்தவரை மர்மத்தின் செறிவை ஏற்றித்தான் காட்டுவேன். பாரதி பற்றிய கட்டுரையில் குமரகுருபரர் பாடல் ஒன்றைப்பற்றி எழுதியிருக்கிறேன். அப்பாடல் கட்டுடைக்கப்படவில்லை, மேலும் செறிவேற்றப்பட்டுள்ளது. பாரதியின் மழை போன்ற கவிதைகளை நான் அக்கட்டுரைகளில் கட்டுடைக்கவில்லை புதிரவிழ்ப்பும் செய்யவில்லை. இன்னும் புதிரானவையாக ஆக்குகிறேன்.


நீங்கள் சொல்வது போல பாரதியில் உள்ள ' metaphysical claims-ஐயும், பரிபூரண உண்மை (ultimate truth) என்று கூறப்படுவதையும் அணுக்கவாசிப்பின் மூலம் கட்டவிழ்ப்பதை செய்யவேண்டுமெ'ன்றால் அதை நீங்கள்தான் செய்யவேண்டும். அது உங்கள் விமர்சனத்தின் வழிமுறை. அதன்மூலம் நீங்கள் என்ன அடைகிறீர்கள் ,எதைக் காட்டுகிறீர்கள் என நான் கவனித்துக்கொள்வேன்; அவ்வளவுதான்.


ஒரு படைப்பு குறிகளாலான கட்டமைப்பு என்றோ அல்லது சொற்களனில் மொழிக்குறிகள் கொள்ளும் தொடர் அர்த்தஉருவாக்கம் என்றோ எடுத்துக்கொண்டால்தான் கட்டுடைப்பு வழிமுறைக்கு செல்லமுடியும். நான் அதை ஏற்பதில்லை. அது கோட்பாட்டு ரீதியான எளிமைப்படுத்தல் என்றே நினைக்கிறேன். ரசனை விமர்சனம் படைப்பு-வாசிப்பு இரண்டையும் அந்தரங்கமான செயல்பாடாகவே எடுத்துக்கொள்வது வழக்கம். ஆகவேதான் படைப்பு, ஆக்கம் போன்ற சொற்களைக் கையாள்கிறேன். வாசிப்பு என்ற செயலை அப்படிப் புறவயமாக நிகழ்த்தவோ ஒரு புள்ளியில் நிறுத்தி அலசி விவாதிக்கவோ முடியாது என்றே நினைக்கிறேன்.


நவீன ரசனை விமர்சனத்தின் வழிகள் வேறு. முந்நூறாண்டுகளுக்கும் மேலாகப் பல தளங்களாக அது வளர்ந்து வந்துள்ளது. உங்கள் மொழியியல் அணுகுமுறைகளுடன் விவாதித்துக்கொண்டு இன்றும் உலகமெங்கும் வலுவாகவே நீடிக்கிறது. அது இயல்பான முதல் வழிமுறை என்பதனால் எப்போதும் இருந்துகொண்டுமிருக்கும்.


ரசனைவிமர்சனம் வாசிப்பை மிக அந்தரங்கமாக நிகழும் ஒன்றாகவே கொள்கிறது. அதைப் புறவயமாக விவரிக்க, விவாதிக்க முடியாது என நம்புகிறது. ஆகவே அது அந்த படைப்பை வாசித்த வாசகனிடம் மட்டும் பேசமுயல்கிறது. வாசிப்பு என்ற அகநிகழ்வைப் பகிர்ந்துகொள்ள அது சில வழிமுறைகளைக் கண்டுகொண்டுள்ளது. அதில் முக்கியமானது அந்த மொழி, பண்பாட்டுச்சூழலில் முதற்பேரிலக்கியத்தொகை [canon] ஒன்றை உருவாக்கிக் கொள்வது. அது எல்லா வாசகர்களுக்கும் பொதுவானது. அந்தப் பேரிலக்கியத்தொகையை முன்வைத்து அந்தரங்க ரசனையின் அடிப்படைகளைப் புறவயமாக விவாதிக்கமுயல்வதும், அதனுடன் படைப்புகளை ஒப்பிடுவதும் அதன் பாணி.


ரசனை விமர்சனம் படைப்புக்கு அர்த்தமளிக்கும் புறக்காரணிகள் என நினைப்பவற்றை மட்டுமே விவாதிக்கிறது. 1. அப்படைப்பு உருவான வரலாற்று, பண்பாட்டுச் சூழல். 2.அப்படைப்பாளியின் தனிவாழ்க்கைக்கும் படைப்புக்குமான உறவு. 3. அப்படைப்பின் மொழி, வடிவம் 4. அப்படைப்பு பிறபடைப்புகளுடன் கொண்டுள்ள உறவு . அதன்பின் வாசிப்பை வாசகனிடமே விட்டுவிடுகிறது. 'இவ்வளவையும் கணக்கில்கொண்டபின் நீயே வாசித்துப்பார்' என்பதே அதன் அணுகுமுறை. வாசகன் அந்த சுட்டு மூலம் இன்னொரு வாசிப்பை நிகழ்த்த முடியும் என்றால் விமர்சனம் சொல்வதைப் புரிந்துகொள்வான்.


பாரதியைப்பற்றிய என் விமர்சனமும் இவ்வழிகளிலேயே அமைந்திருந்தது என்பதை நீங்கள் காணலாம். அவை பெரும்பாலும் எனக்குச் சொல்லப்பட்டவற்றுக்கான பதில்கள். பாரதியின் ஆன்மீக நோக்கு அவனுக்கே உரிய தனிப்பட்ட சாதனை என்பதே மையமான வாதமாக இருந்தது. அதற்குப் பதிலாக அந்த ஆன்மீகநோக்கு தமிழின் மரபிலும் அன்றைய நவவேதாந்த எழுச்சியிலும் இருந்து உருவானது என்று வரலாற்றுப்பின்புலத்தைச் சுட்டுகிறேன். பாரதியின் கவிதைகளின் அழகியலை மதிப்பிட்டு அவற்றில் பெரும்பாலானவை சம்பிரதாயமானவை, பெரும்பாலும் அப்பட்டமான குரல்கொண்ட பிரச்சாரக்கவிதைகள் என்று சுட்டுகிறேன். அவரது கவிதைகளில் எவை முக்கியமானவை, அவை எவ்வளவு என சுட்டிக்காட்டுகிறேன். எங்கும் ரசனைவிமர்சனம் செய்வது அதையே.


இன்னும்கூட தெளிவாகச் சொல்கிறேனே. நீங்கள் சொல்லும் பாரதியின் மீபொருண்மை சாரத்தையும் இறுதிஉண்மை என்ற கூற்றையும் எதையும் நான் மறுக்கவில்லை. ஆகவே உடைக்கவும் நினைக்கவில்லை. ரசனை விமர்சனம் அவற்றைக் கவிதைக்குள் நிகழும் பாவனைகள் என்றே எடுத்துக்கொள்ளும். கருத்துக்கள் படைப்பின் சாராம்சமல்ல, படைப்பு உருவாக்கும் வாசிப்பனுபவம் கருத்துக்களைச் சார்ந்ததும் அல்ல. அவை அழகியலுடன் வெளிப்பாடுகொண்டிருந்தால் எனக்குப் போதுமானது. நான் அவை நவீன அழகியலுடன் பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படவில்லை என்பதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன். அதை வாசகன் அவனுடைய வாசிப்பு வழியாகப் புரிந்துகொள்ளச்செய்ய முயல்கிறேன்.


தமிழ் விமர்சனத்தின் தொடக்கக் கட்டுரையிலேயே வ.வே.சு அய்யர் அதைத்தான் செய்திருக்கிறார். பாரதியின் கண்ணன் பாடல்களை அவற்றின் வரலாற்றுச்சூழலில் பொருத்துகிறார், அவற்றை ஆழ்வார்களுடனும் அஷ்டபதியுடனும் இணைத்துப்பார்க்கிறார். அவற்றின் வடிவ ஒழுங்கைச் சுட்டிக்காட்டுகிறார். அவற்றின் சிறந்த வரிகளை உதாரணம் காட்டுகிறார். அதன்பின் வாசித்துப்பாருங்கள் என விட்டுவிடுகிறார். க.நா.சு ,சுந்தர ராமசாமி வரை செய்தது அதையே.


நான் அதில் என்ன சேர்த்திருக்கிறேன் என்றால் அமெரிக்க புதுத்திறனாய்வின் textual criticism வழிமுறையைத்தான். அதாவது படைப்பை மீளமீளக் கூர்ந்து வாசித்து அதை வைத்து விவாதிப்பது. படைப்பைக் கூர்ந்து வாசிக்கும் ரசனை விமர்சனம் அதன் எல்லா சொற்களையும் எல்லாக் குறியீடுகளையும் கணக்கில் கொள்ள முயல்கிறது. ஒன்றில் நிலைக்கும் தன்னிச்சையான கவனம் காரணமாக இன்னொன்று விடப்பட்டுவிடக்கூடாது என நினைக்கிறது. சாத்தியமான எல்லா வாசிப்புகளையும் நிகழ்த்திக்கொள்கிறது. அதற்காக விவாதிக்கிறது. கம்பனையும் பாரதியையும் சு.வேணுகோபாலையும் நான் வாசிப்பது அவ்வகையிலேயே.


அத்துடன் கூடவே ஒரு தனி வழிமுறையும் ரசனைவிமர்சனத்துக்கு உண்டு. அசாதாரண வாசிப்புகளை நிகழ்த்திப்பார்ப்பதும் தன்னிச்சையான வாசிப்புக்கு இடமளிப்பதும். அதை ஹரால்ட் ப்ளூம் குறிப்பிடும் பிறழ்வாசிப்பு என்று சொல்லலாம்.


ஆகவே என்னுடைய விமர்சனமுறையை நான் உங்கள் விமர்சனமுறைக்கு மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சொல்லவேண்டாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் என் ரசனைவிமர்சனமுறையைத் தவறான கட்டுடைப்புவிமர்சன முறை என்கிறீர்கள். பனியனை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அது தப்பாகத் தைக்கப்பட்ட ஜட்டி என்று சொல்வதைப்போல.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

எம்.டி.முத்துக்குமாரசாமி-ஒரு கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
எம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2011 01:13
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.